To collect photographs is to collect the world. Photographs really are experience captured, and the camera is the ideal arm of consciousness in its acquisitive mood. – Susan Sontag
ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் புகைப்படக்கலைஞர். நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வரும் அவரைப்பற்றி Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன்,
இந்த ஆவணப்படம் ஆனியின் புகழ்பெற்ற புகைப்படங்களையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் விவரிக்கிறது. ரோலிங் ஸ்டோன் இதழில் புகைப்படக்கலைஞராகப் பணியாற்ற துவங்கிய ஆனி எப்படித் தனித்துவமிக்கப் புகைப்படக்கலைஞராக வளர்ச்சியடைந்தார் என்பதை அவருடன் பழகிய நண்பர்கள், விமர்சகர்கள், பத்திரிக்கை ஆசிரியர்களின் நேர்காணல்கள் வழியாக விவரிக்கிறது
தமிழகத்தின் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள் பற்றி இப்படி ஏதேனும் ஆணவப்படங்கள் உருவாக்கபட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இப்படத்தைக் காணும் போது முழுமையாக உணர்ந்தேன்.
ஆனி புகைப்படக்கலையை நேசிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்த இரண்டு புகைப்படக்கலைஞர்கள், Robert Frank மற்றும் Henri Cartier-Bresson. இருவருமே உலகப்புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள். இவர்களின் புகைப்படங்கள் தந்த உந்துதலே ஆனிக்குப் புகைப்படக்கலையில் ஆர்வத்தை உருவாக்கியது.
ராபர்ட் பிராங்க் அமெரிக்காவின் மிக முக்கியப் புகைப்படக்கலைஞர், அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அற்புதமானவை, பிராங்கின் புகைப்படத் தொகுப்பு நூலாக வெளியான The Americans உலகப் புகழ்பெற்ற புத்ததகம். ஒட்டுமொத்த அமெரிக்க வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அதில் நாம் காணமுடியும் இதில் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிபூர்வமான காட்சிகள், தருணங்கள், ராபர்ட் பிராங்கின் நேர்த்தியே இயற்கையான ஒளியை அவர் பயன்படுத்துகிற விதம், மற்றும் அவரது மாறுபட்ட பார்வைக்கோணமாகும். அபூர்வமான தருணங்களை அவர் தனது கேமிராவால் பதிவு செய்திருக்கிறார். ஆனியின் புகைப்படங்களில் பிராங்கின் கோணங்கள் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
புகழ்பெற்ற பாடகர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சாலையோர மனிதர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளை ஆனி கவித்துவமாகப் படமாக்கியிருக்கிறார். அவரது சிறப்பே தீவிரமாக உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் ஒளியமைப்பும் அடர்வண்ணங்களை முதன்மைபடுத்துவதுமாகும். புறத்தோற்றத்தை பதிவு செய்வதை விடவும் அக உணர்ச்சிகளுடன் ஒரு மனிதரை, காட்சியை பதிவு செய்வது முக்கியம் என்கிறார் ஆனி. இதற்காக அவர் புகைப்படம் எடுக்கப் போகிற நபரை இறுக்கமின்றி. சுதந்திரமாக, இயல்பாக, அவரது தனித்துவத்துடன் படம் எடுத்திருக்கிறார்.
குறிப்பாக ஒவியரான பிரைடா காலோவை பற்றிய திரைப்படத்திற்காகச் சல்மா ஹைக்கை ஆனி ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார், இதே கோணத்தில் இதே உணர்ச்சிகளுடன் பிரைடா சுயஒவியம் ஒன்றை வரைந்திருக்கிறார், ஒவியத்தில் இருந்த அதே துல்லியம், வண்ணம், முகபாவம் அப்படியே ஆனியின் புகைப்படத்திலும் இடம் பெற்றிருப்பது அவரது கலைமேதமையின் அடையாளம்.
எலிசபெத் ராணியின் பகட்டான உடைகளைக் குறைத்து அவரை ஆனி படமாக்கியுள்ளது அவரது தனித்துவம். பிபிசி தொலைக்காட்சிக்காக இந்த ஆவணப்படுத்துதலை ஆனி மேற்கொண்டார். எழுத்தாள ர்சூசன் சோன்டாக்கின் நெருக்கமான தோழியாக விளங்கிய ஆனி புகைப்படக்கலை குறித்துச் சூசன் சோன்டாக் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார். அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள், தான் சூசனின் காதலி எனத் தன்னை அழைத்துக் கொண்டார் ஆனி. சூசன் சோன்டாக் பற்றிய நினைவுகளைக் காட்சிப்படிமங்களாகவே சூனி விவரிக்கிறார்.
தனது புகைப்படங்களின் வழியே பெரும் செல்வத்தைச் சம்பாதித்த ஆனி 2009ல் கடன்சுமையின் காரணமாகத் தான் எடுத்த புகைப்படங்கள், வீடு, சேமிப்புகள் அத்தனையும் அடமானம் வைத்துப் பணம் பெற்று தனது கடனை அடைக்க வேண்டிய நிலை உருவானது.
படத்தில் ஆனியின் காணப்படும் உற்சாகமும் துடிப்பும், நேர்த்திக்காக அவர் மேற்கொள்ளும் கடும் உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன.
••