ஒவியத்தில் மலர்கள் உதிர்வதில்லை

ஜோர்ஜியா ஒ கீஃப் ( Georgia O’Keeffe ) என்ற அமெரிக்கப் பெண் ஒவியரைப்பற்றிய திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். நேர்த்தியான உருவாக்கம் கொண்ட திரைப்படம். தொலைக்காட்சிக்காக எடுக்கபட்டிருக்கிறது. Joan Allen ஜோர்ஜியாவாக நடித்திருக்கிறார், ஆல்பிரட்டாக நடித்தவர் ஜேரோமி அயர்ன்ஸ். ஜோர்ஜியாவின் New York with Moon எனது விருப்பமான ஒவியங்களில் ஒன்று.

ஒவியரின் வாழ்வை விவரிப்பதால் காட்சிகள் ஒவியத்துல்லியத்துடன் தனித்துவமான கோணங்களில் வண்ணங்களில் படமாக்கபட்டுள்ளன, தேர்ந்த நடிப்பும், சிறந்த இசையும் படத்தொகுப்பும், கலைஇயக்கமும் ஒன்று சேர்ந்து கலைநேர்த்தியான படமாக்குகின்றன.

ஜோர்ஜியா அமெரிக்க நவீன ஒவியங்களின் முன்னோடிக் கலைஞர். சிகாகோ கலைக் கல்லூரி பள்ளியில் படித்தவர். 1910ல் இவர் வரைந்த ஒவியங்களில் சிலவற்றை முறையான அனுமதியின்றிக் கண்காட்சியில் இடம் பெற செய்திருக்கிறார்கள் என அறிந்து கோபத்துடன் காண்பதற்காகச் செல்கிறார் ஜோர்ஜியா.

இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த புகைப்படக்கலைஞர் ஆல்பிரட் ஸ்டீகிளிட்ஸ் தனக்கு ஜோர்ஜியாவின் ஒவியங்களின் வெளிப்படும் அசல்தன்மையும் தனித்துவமும் மிகவும் பிடித்துள்ள காரணத்தால் அவரது ஒவியங்களை உலகப்புகழ்பெற்ற ஒவியர்களுக்கு இணையாகக் காட்சிக்கு வைத்திருப்பதாகச் சமாதானம் சொல்கிறார்,

இந்தச் சந்திப்பு இவருக்குள்ளும் நட்பாக உருமாறுகிறது, அதன் தொடர்ச்சியில் கடிதங்கள் எழுதிக் கொள்கிறார்கள், 1918ம் ஆண்டுத் தன்னோடு நியூயார்க்கில் வந்து தங்கியிருந்து ஒவியம் வரையும்படியாக ஜோர்ஜியாவை அழைக்கிறார் ஆல்பிரட்.

ஒத்துக் கொள்ளும் ஜோர்ஜியா ஆல்பிரட்டின் வீட்டிற்கு வந்து சேர்கிறார், ஜோர்ஜியா தனது படுக்கையை வானில் நட்சத்திரங்கள் கண்ணில்படும்படியாக மாற்றிப்போடச்சொல்லும் காட்சியில் கட்டிலை ஒற்றை ஆளாக இழுத்துப்போட்டு பெருமூச்சுடன் அவளை வியந்து பார்க்கிறார் ஆல்பிரட். அக்காட்சியில் அவளிடம் வெளிப்படும் புன்னகை அபாரமானது. இதுபோலவே புகைப்படம் எடுப்பதற்காக அவளது ஆடையின் பொத்தானை அகற்ற வந்த ஆல்பிரட்டை முறைத்துவிட்டு அவளே உடையைத் தளர்த்தி அவரது விருப்பத்தின் படி அமரும் காட்சி, ஆல்பிரட் தனது சகோதரனிடம் பணம் பெறும் காட்சி, பூட்டிய வீட்டிற்குள் ஒவியம் வரையும் காட்சி. என மறக்கமுடியாத நிறையக் காட்சிகள் படத்திலிருக்கின்றன

ஆல்பிரெட் வீட்டில் தனிஅறை ஒதுக்கபடுகிறது, ஒய்வில்லாமல் சதா ஒவியம் வரையத்துவங்குகிறார். ஆல்பிரட் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர் என்பதால் அவளை விதவிதமாகப் புகைப்படம் எடுக்கிறார், அதை எப்படிப் பிரிண்ட் போடுவது என்றும் கற்றுத்தருகிறார். ஒரு புகைப்படம் எடுப்பதற்கு ஆல்பிரட் எந்த அளவு கவனமும் அக்கறையும் மேற்கொள்வார் என்ற காட்சி அற்புதமானது.

தன்னை விட 23 வயது இளையவரான ஜோர்ஜியாவின் நட்பு ஆல்பிரட்டினை உத்வேகப்படுத்துகிறது, ஆனால் அவரது குடும்பத்தில் இதன்காரணமாகப் பிரச்சனைகள் எழுகின்றன, ஆல்பிரட்டின் மனைவி சண்டையிடுகிறாள்.

ஜோர்ஜியாவைப் போன்று கலையைத் தீவிரமாக நேசிக்கும் பெண்ணை விட்டுவிலகி வரமுடியாது என மறுக்கும் ஆல்பிரட், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்கிறார்.

இவரும் அவரவர் வழியில் தீவிரமாகச் செயல்படத்துவங்குகிறார்கள், ஜோர்ஜியா படம் வரைவதற்காக ஆல்பிரட்டுடன் நிறையப் பயணங்களை மேற்கொள்கிறார். முகடுகளில் அமர்ந்து தன்னை மறந்து இயற்கையை வரைந்து கொண்டிருக்கிறார். அவரது ஈடுபாட்டினை ஆல்பிரட் புகைப்படமாக எடுக்கிறார்.

இரண்டு கலைஞர்கள் ஒருமித்து வாழும் போது அவர்களின் படைப்பு மனம் கொள்ளும் ஆவேசம் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பது அவர்கள் குடும்ப வாழ்விலும் நடந்தேறுகிறது

தனது தனிமையை ஆல்பிரட் பறித்துக் கொள்வதாக எண்ணத்துவங்குகிறார் ஜோர்ஜியா. ஆல்பிரட்டும் தன்னைப் புரிந்து கொள்ளாமல் ஜோர்ஜியா விலகிப்போகிறார் எனத் தவிக்கிறார். அவர்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படுகிறது.

தீவிரமான கலைவேட்கையுடன் செயல்பட்ட ஜோர்ஜியா தனது ஒவியங்களின் வழியே நியூயார் கலைஉலகில் மிகவும் புகழ்பெற்ற கலைஞராகக் கொண்டாடப்படுகிறார்.

ஜோர்ஜியாவின் காதலும் ஒவியஉலகில் அவள் சந்திக்கும் சவால்களுமே இப்படத்தின் மையக்கதையாக உருவாக்கபட்டிருக்கிறது

இவரது 500க்கும் மேற்பட்ட ஒவியங்கள் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு கேலரிகளில், தனியார் சேமிப்புகளில் பாதுகாக்கபட்டு வருகின்றன

1916ல் ஜோர்ஜியாவின் முதல் ஒவியக்கண்காட்சி நியூயார்க்கில் நடைபெற்றது, 98 வயதுவரை வாழ்ந்த ஜோர்ஜியா தன் வாழ்நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒவியங்களை வரைந்திருக்கிறார்

ஆரம்பக் காலங்களில் சிறார்களுக்கான ஒவியவகுப்புகள் எடுத்து வந்த ஜோர்ஜியா பின்னர் முழுநேர ஒவியராகப் பணியாற்ற துவங்கினார்.

1908வரை கரித்துண்டால் ஒவியம் வரைந்து கொண்டிருந்த இவர் பின்னர் நீர்வண்ண ஒவியங்களை வரைவதில் ஈடுபாடு கொண்டார். இயற்கையை அரூபமான ஒவியங்களாக வரைந்திருக்கிறார்.

1918ல் ஒவியம் வரைவதற்காக நியூமெக்சிகோ சென்ற இவர் நிலக்காட்சிகளை நிறைய வரைந்திருக்கிறார், 1919க்கு பிறகு தைல வண்ண ஒவியங்கள் வரைவதில் ஈடுபாடு காட்டத்துவங்கினார்.

குறிப்பாக லென்ஸ் வழியாகக் காண்பது போல இயற்கையை மிகவும் அண்மைப்படுத்தி இவர் வரைந்த ஒவியங்கள் தனித்தன்மை மிக்கதாக இருந்தன,

பூக்களை மிக அண்மையாக ஏன் ஒவியம் வரைகிறீர்கள் எனக்கேட்டதற்கு நகரவாசிகள் தங்களின் பரபரப்பான வாழ்க்கையில் சின்னஞ்சிறு மலர்களை நின்று பார்க்க விரும்புவதேயில்லை, ஒரு மலரை நீங்கள் கையில் எடுத்துப்பாருங்கள், அது தான் நீங்கள், அதன் மௌனம் எத்தனை அர்த்தமுள்ளது, அதன் அழகு எவ்வளவு விசித்திரமானது எனப்புரியும், ஆனால் பெரும்பான்மையினர் அதை அறியவேயில்லை, அதற்காகவே பூக்களைப் பெரிது படுத்தி வரைகிறேன் என்றார் ஜோர்ஜியா, இன்னொரு நேர்காணலில் பூக்களை வரைவது எளிது, மாடல்கள் போல அவை பணம் கேட்பதில்லை என்று கேலியாகவும் கூறியிருக்கிறார்

இது போலவே எலும்புகளை முக்கியக் காட்சிப்படிமமாக்கி இவர் வரைந்த ஒவியங்களும் அரிய கலைப்படைப்பாகக் கொண்டாடப்படுகின்றன,

1946ல் ஆல்பிரட் இறந்தபிறகு தனிமையில் வாழுத்துவங்கிய ஜோர்ஜியா நியூ மெக்சிகோவில் வீடு வாங்கி வசிக்கத் துவங்கினார், முதுமை வரை ஒய்வில்லாமல் பயணம் செய்து ஒவியங்கள் வரைந்து வந்த இவர் விமானத்தின் ஜன்னல் வழியாகத் தெரியும் வானையும் பூமியையும் ஒவியவரிசையாக வரைந்திருக்கிறார், அவை தனிக்கண்காட்சியாக வைக்கபட்டிருக்கின்றன

இவர் வரைந்த நியூமெக்சிகோவின் நிலபரப்பு ஒவியம் அபாரமானது, அதன் வண்ணங்களும் நேர்த்தியும் வான்கோவினை நினைவுபடுத்துகின்றன.

வான்கோ, பிகாசோ, பிரைடா, வெர்மீர், காகின், ரெம்பிராண்ட் என ஒவியர்களின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன, அந்த வரிசையில் இப்படம் ஜோர்ஜியா ஒ கீஃப்பிற்குச் செய்யப்பட்ட சிறந்த மரியாதை என்றே சொல்வேன்.

••

0Shares
0