ஓம் முத்துமாரி

இணையத்தில் தற்செயலாகப் பாவலர் ஓம் முத்துமாரி நடத்திய கிராமிய நிகழ்ச்சி ஒன்றின் காணொளியைப் பார்த்தேன். அவரது பாடல் பழைய நினைவுகளைக் கிளரச் செய்துவிட்டது.

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலை சிந்து பாடினால் உக்கிரம் கொப்பளிக்கும். அவரைச் சந்திப்பதற்காக நானும் கோணங்கி நாலைந்து முறை திருவேங்கடம் சென்றிருக்கிறோம்.

டவுனிலிருந்து தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று ஆசையாக வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பார்.

கல்குதிரை இதழ் ஒன்றில் அவரது பாடல்களைக் கோணங்கி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைத்தேடிப் போகும் போது புதிது புதிதாக நாட்டு நடப்புகளைப் பாடலாகப் புனைந்து பாடுவார். கம்யூனிஸ்ட் இயக்க மேடை தோறும் பாடியவர் ஓம் முத்துமாரி. தோழர் பி. ராமமூர்த்திக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் பாடியிருக்கிறார். இவருக்குப் பாவலர் என்ற பட்டத்தைத் தந்தவர் மூக்கையாத் தேவர். ஒரு காலத்தில் பார்வேர்ட் பிளாக் மேடை தோறும் முத்துமாரி பாடியிருக்கிறார்.

எனது ஆசான் எஸ். ஏ.பெருமாள் தான் அவரை உற்சாகப்படுத்திக் களப்பணியில் வழிகாட்டியவர். கலை இலக்கிய இரவுகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கிழவியாக வேடமணிந்து வந்து முத்துமாரி பேசும் அரசியல் நையாண்டி வெகு சிறப்பானது.

ஒம் முத்துமாரியோடு ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது எஸ்ஏபெருமாள் இருக்கும் திசையைப் பார்த்து கும்பிட்டுகிடுறேன் என்று கையை உயர்த்திக் கும்பிட்டு அவருக்கு நன்றி செலுத்தினார். அந்த அளவு பற்று கொண்டவர்.

ஒம் முத்துமாரி நிகழ்ச்சிகளுக்குக் கிராமங்களில் பெரிய வரவேற்பு இருந்தது. அவரது நவீன கூத்து நிகழ்வுகளை மக்கள் ரசித்துக் கொண்டாடினார்கள். கட்டபொம்மன் நாடகத்தில் அவர் இங்கிலீஷ் பேசி துரையாக நடிப்பது அவ்வளவு இனிமையாக இருக்கும்.

வறுமை நமக்கு மாமன் முறை

சிறுமை நமக்குத் தம்பி முறை

பொறுமை நமக்கு அண்ணன் முறை

பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை

எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்குது பாத்தீகளா

என்ற அவரது பாடல் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கப் போகும் போது அதைப்பாடிக் காட்டும்படி கேட்டுக் கொள்வோம். அவரும் உற்சாகமாகப் பாடுவார். அவரது குரல் தனித்துவமானது.

எவ்வளவு எளிய சொற்களில் வாழ்க்கை யதார்த்தத்தைப் பேசுகிறார் பாருங்கள். ஓம் முத்துமாரி ஏழு வயசிலேயே நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறிப் பாட ஆரம்பித்துவிட்டவர். ஆரம்பக் கல்வியைக் காங்கிரஸ் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முக்கூடல் சொக்கலால் பீடிக் கம்பெனி விளம்பரத்திற்காகக் கிராமம் தோறும் சென்று கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். பீடி கம்பெனி விளம்பரத்திற்கு என்றாலும் புகைபிடிப்பதை ஆதரித்துப் பாடமாட்டார். சமூக விமர்சனம் தான் பாட்டில் வெளிப்படும்.

அருவா வேலு, தங்கையா போன்ற கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட போது அவர்கள் வாழ்க்கையைக் கொலைச் சிந்தாகப் பாடியிருக்கிறார்.

பார்வையாளர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து விருப்பமான பாடலைப் பாடச்சொன்னால் தன்மானத்துடன் மறுத்துவிடுவார். மேடையில் அவரது ஆளுமையின் வீச்சு முழுமையாக வெளிப்படும்.

இந்தக் காணொளியில் பெண் வேடமிட்டிருக்கும் இரண்டு கலைஞர்களையும் பாருங்கள். இவர்களைப் போன்ற அசலான கலைஞர்கள் நம்மிடமிருந்து மறைந்து கொண்டு வருகிறார்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஓம் முத்துமாரி நிகழ்த்தியிருக்கிறார். அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அவரது காணொளிகள் கிடைக்கவில்லை. ஆவணப்படம் எடுக்க விரும்பும் இளைஞர்கள் இவரது வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும். அது இந்தக் கலைஞனுக்குச் செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்

••

0Shares
0