ஓவியங்களை எரித்தவர்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ராணுவம் திட்டமிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. குறிப்பாகப் பாரீஸ் ம்யூசியங்களிலிருந்த அரிய ஓவியங்களைத் கொள்ளையடித்தார்கள்.

இக் கொள்ளைக்குப் பயந்து கலைப்பொருள் சேகரிப்பவர்கள் வங்கியின் பாதுகாப்பு அறையில் தங்கள் அரிய கலைப்பொருட்களை ஒளித்து வைத்தார்கள். அப்படியும் அவர்களால் ஓவியங்களைக் காப்பாற்ற முடியவில்லை.

வங்கியின் பாதுகாப்பு அறைகளை உடைத்து ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஐம்பதாயிரத்திற்கும் மேலான அரிய ஓவியங்கள் சிற்பங்கள். கொள்ளை போயின. இதில் மீட்கப்பட்டது வெறும் அறுபது சதவீதம் மட்டுமே என்கிறார்கள்.

நாஜிகளால் மலினமான கலைப்படைப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டவை வீதியில் வீசி எறியப்பட்டன. ஹில்டெபிரான்ட் குர்லிட் மற்றும் அவரது சகாக்கள் மலினமான கலைப்படைப்புகள் என்று முத்திரை குத்தி பெர்லினில் 1,004 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மற்றும் 3,825 நீர் வண்ண ஓவியங்களுக்குத் தீ வைத்தார்கள்.

பல்வேறு ம்யூசியங்களில் அங்கு பணியாற்றியவர்கள் உதவியோடு அரிய ஓவியங்கள் குகையினுள் மறைத்து வைக்கப்பட்டன. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அந்த ஓவியங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பிறகே இந்த ஓவியங்கள் மீண்டும் ம்யூசியத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

1940களில் மறைக்கப்பட்ட, திருடப்பட்ட கலைப்பொருட்களைத் தேடும்பணி இன்றும் நடந்து வருகிறது. பெர்லினில் பழைய குடியிருப்பு ஒன்றினை இடித்துக் கட்டுவதற்காக நடைபெற்ற கட்டுமானப்பணியின் போது வீட்டுச்சுவர் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.

ஹிட்லரின் மறைவிற்குப் பிறகுக் கலைப்பொருட்கள் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தால் தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவர்கள் உலகின் கண்ணில் படாமல் இக்கலைப்பொக்கிஷங்களை ஒளித்துப் பாதுகாத்து வந்தனர். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் இதனை விற்பனை செய்ய முற்படும் போது தான் அது திருடப்பட்ட ஓவியம் என்று உலகிற்குத் தெரிய வந்தது.

1972ல் சுவிட்சர்லாந்திலுள்ள ஒருவரது வீட்டின் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜார்ஜ் பரோக்கின் ஓவியம் ஒன்றினை அவர்களின் குடும்பம் தேவையற்றது என்று நினைத்து வீதியில் தூக்கி எறிந்தார்கள். அதைத் தற்செயலாகக் கண்டெடுத்த ஒரு பேராசிரியர் பாரீஸிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்த ஓவியம் என்ற உண்மையை ஆராய்ந்து, ஏலத்தில் விற்பனை செய்தார். ஐம்பது கோடிக்கும் அதிகமான விலைக்குப் போனது.

இப்படிப் புகழ்பெற்ற ஓவியர்களின் காணாமல் போன  ஓவியங்களில் சில இன்றும் தேடப்பட்டு வருகின்றன. இந்தச் சந்தையைப் பயன்படுத்தி நகல் ஓவியங்களை மூல ஒவியம் போலவே உருவாக்கி விற்பதும் நடந்துவருகிறது

நாஜி ராணுவத்தின் திட்டமிட்ட கலைக்கொள்ளையைப் பற்றிய ஆவணப்படமே Nazi Art Thieves. யூத கலைசேகரிப்பாளர்கள் மூவரிடமிருந்து திருடப்பட்ட மூன்று முக்கிய ஓவியங்களை அவர்களின் குடும்பம் இன்று எப்படி நீதிமன்றத்தை அணுகி மீட்டார்கள் என்பதை அழகாக விவரிக்கிறது ஆவணப்படம்

நாஜி ராணுவம் பாரீஸில் நுழைவதற்கு முன்பாகவே எந்தெந்த கலைப்பொருட்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற பட்டியலைக் கையில் வைத்திருந்தது. இந்தப் பணியைச் செய்யும் பொறுப்பு தனிப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்படிக் கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்களை பெர்லின் கொண்டு சென்றார்கள். ஹிட்லர் நேரடியாக இவற்றை பார்வையிட்டார்.

இதைப்பற்றி ஜான் ஃபிராங்கன்ஹெய்ம் இயக்கி 1964ல் வெளியான தி டிரைன் என்ற திரைப்படம் விவரிக்கிறது. ஒரு ரயிலின் மூலம் பாரீஸில் இருந்த அரிய ஓவியங்களை பெர்லின் கொண்டு செல்ல முயல்கிறார்கள். அதை எப்படித் தந்திரமாகத் தடுத்து நிறுத்தினார்கள் என்பதைப் படம் சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

கலைப்பொருட்களை கொள்ளை அடித்ததில் முக்கிய நபராகக் கருதப்படுகிறவர் ஹில்டெபிரான்ட் குர்லிட். இவர் ஒரு நாஜி ஆதரவாளர். கலைப் பொருள் விற்பனையாளர், ஆர்ட் கேலரி ஒன்றின் இயக்குநர். இவரது தனிப்பட்ட சேமிப்பில் கிளாட் மோனட், ரெனார், பால் செசான், ஹென்றி மாட்டிஸ், ஹென்றி லாட்ரெக், மார்க் சாகல், காமில் பிஸ்ஸாரோ, ரோடின், கஸ்டேவ் கோர்பெட் மற்றும் பால் க்ளீ, போன்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

வெளிநாடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கலைப் படைப்புகளைச் சந்தைப்படுத்துவதற்காக, நாஜிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தால் விற்பனையாளராக அங்கீகரிக்கப்பட்டவர் குர்லிட். ஐரோப்பா முழுவதுமிருந்து 16,000 ஓவியங்கள், கலைப்படைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஏலத்தில் விற்றுப் பணம் திரட்ட நாஜி முடிவு செய்தது. அதற்குக் குர்லிட் முக்கியப் பொறுப்பாளராக விளங்கினார்.

1945 இல் குர்லிட் தனது மனைவி மற்றும் இருபது பெட்டிகள் நிறையக் கலைப் பொருட்களுடன் தப்பியோட முற்பட்ட போது அமெரிக்க ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். ராணுவ விசாரணையின் போது அந்தக் கலைப்பொருட்கள் தனக்குச் சொந்தமானவை. அவற்றை முறையாக விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கான சான்றுகளை அவரால் தர இயலவில்லை. அவரிடமிருந்து 115 கலைப்பொருட்களைப் பறிமுதல் செய்தார்கள். முறையான விசாரணையின் பிறகு அவை திருடப்பட்ட கலைப்பொருட்கள் எனக் கண்டறியப்பட்டன.

புகழ்பெற்ற ஓவியங்களை முக்கிய நாஜி தலைவரும் ராணுவத்தளபதியுமான வில்ஹெம் கோரிங் தனது சேமிப்பிற்காகக் கொண்டு சென்றார்.  இரண்டாம் உலகப்போரின் பிறகு நடைபெற்ற நூரென்பெர்க் விசாரணையில் இவரும் விசாரிக்கப்பட்டார். தண்டனைக்கு முன்பாகத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் கோரிங்.

கலைப்பொருட்களைக் கொள்ளையடித்ததில் கோரிங்கின் பங்கு மிக முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் அதை நாம் ஆதாரத்துடன் காணமுடிகிறது. ம்யூசியத்தின் பெயரால் எப்படிக் கோரிங் ஓவியங்களைக் தனதாக்கிக் கொண்டார் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள்.

தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான ஓவியங்கள். கலைப்பொருட்களை இழந்தவர்கள் இன்று அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கிறார்கள். இதற்காகத் தனியே ஒரு சர்வதேசப் பதிவேடு செயல்படுகிறது. அதில் எந்த ஓவியம் எங்கே, எப்போது கொள்ளை போனது என்ற தகவல் இடம் பெற்றிருக்கிறது. மீட்கப்படும் ஒவியங்களை இந்தப் பதிவேட்டினைக் கொண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் வழி காட்டுகிறது. சில நேரம் இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டுகள் காட்சிப் படுத்தியதற்காக ம்யூசியம் இழப்பீடும் வழங்குகிறது.

Nazi Art Thieves. ஆவணப்படத்தில் மூன்று ஓவியங்கள் திருடுபோன வரலாறு விவரிக்கப்படுகிறது. முதலாவது ஓவியம் க்யூபிச ஓவியரான ஜார்ஜ் பரோக்கின் Man with a Guitar. இரண்டாவது ஓவியம் இகோன் சீலேயின் Herbstsonne, மூன்றாவது ஓவியம் ஹென்றி மாட்டிஸ் வரைந்த Sitting Woman. மூன்றும் யூத கலைச்சேகரிப்பாளர் வசமிருந்தவை.

தற்போது மேன் வித் எக் கிதார் ஓவியம் நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் (MoMA) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் கண்டிருக்கிறேன்.

கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான பால் ரோசன்பெர்க்கிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்களை அவரது வழித்தோன்றல்கள் இன்று உரிமை கொண்டாடுகிறார்கள். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடி தங்கள் உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

ரோசன்பெர்க்கின் பேத்தி மரியான் இந்த ஆவணப்படத்தில் தாங்கள் எவ்வாறு திருடுபோன ஓவியங்களைக் கண்டறிந்தோம் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்.

பால் ரோசன்பெர்க், ஒவியர்களான ஹென்றி மாட்டிஸ் மற்றும் பிகாசோவிற்கு நெருக்கமானவராக இருந்தார். அவரது காட்சியகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட படைப்புகளில், 65 மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை

ரோசன்பெர்க் குடும்பத்தால் கலைப்பொருட்கள் குறித்த தகவல்களை அறிய புலனாய்வாவார்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் முடிவில்லாத தேடலின் காரணமாக டென்மார்க், ஜெர்மனி, கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வெனிஸ் நாடுகளில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் ஓவியம் எங்கேயிருக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது.

ஜெர்மன் அரசாங்கம் நாஜிகளால் திருடப்பட்ட கலைப்படைப்புகளை அவர்களின் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறது. அதன் காரணமாகவே ரோசன்பெர்க் குடும்பம் இழந்த தங்கள் ஒவியத்தை மீட்டிருக்கிறார்கள். இன்று அது குடும்ப சொத்தாக கருதப்படுகிறது.

சூசன் ரொனால்ட் Hitler’s Art Thief என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதில் இந்தக் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்தவர்களின் பின்னுள்ள வரலாற்று உண்மையைத் துல்லியமாக விவரித்துள்ளார்

இந்த ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஓவியம் மெல்லக் கதையாவதை உணர்ந்தேன். அது கைமாறிக் கைமாறி சென்று கொண்டேயிருப்பதும் எங்கோ மறைத்து வைக்கப்படுவதும். பின்பு நீண்ட இடைவெளியின் பின்பு கண்டறியப்படுவதும்,அதற்கான உரிமை கோரி குடும்பத்தினர் வழக்காடுவதும் அப்படியே ஒரு நாவல் போலிருக்கிறது.

இந்த ஒவியங்களைப் பற்றி தெரியாத யாரோ ஒருவரின் வீட்டில் அது மாட்டப்பட்டிருக்கும் விசித்திரத்தை நினைத்துப் பாருங்கள். அல்லது எங்கோ ஒரு நிலவறையில் இன்றும் அந்த ஒவியம் மரப்பெட்டியினுள் மறைந்து கிடப்பதை நினைத்துப் பாருங்கள். ஒவியர்களின் வாழ்க்கை மட்டுமில்லை அவர்கள் வரைந்த ஒவியங்களும் விசித்திரமான விதியைக் கொண்டிருக்கின்றன.

கலையை அழிப்பதன் மூலம் சுதந்திர சிந்தனைகளை அழிக்கவே நாஜிகள் முற்பட்டார்கள். புத்தகங்களுக்கு தீவைத்து எரித்தவர்கள் அதன் அடுத்த கட்டமாக ஒவியங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். ஆயுதங்களைக் கண்டு பயப்படாத நாஜிகள் ஏன் கலையைக் கண்டு பயந்தார்கள். காரணம் அது தனிமனிதனை விழிப்படையச் செய்துவிடும். சிந்தனை செய்ய தூண்டும். புதிய மாற்றங்களை உருவாக்க வைக்கும். கொடுங்கோன்மையின் முதற்செயல் கலைகளை அழிப்பதே

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களை காலம் புறந்தள்ளிவிட்டது.  ஆனால் அவர்களால் அழித்துவிட முயன்ற கலைகளும் கலைஞர்களும் தான் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள். காலம் இந்த உண்மையை தான் உலகிற்கு சொல்கிறது. அதன் அடையாளமாகவே ஒவியங்கள் மீட்கப்படுவதை நினைக்கிறேன்.  

••

0Shares
0