ஓவியம் சொல்லும் கதை

லண்டனிலுள்ள நேஷனல் கேலரி பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஃபிரடெரிக் வைஸ்மேன் இயக்கியுள்ளார்

இந்தக் கேலரியில் 2400 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் சிறப்பு மற்றும் அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் ஓவியங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்கள்

லியனார்டோ டா வின்சியைப் பற்றிய சிறப்புக் கண்காட்சிதான் படத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது.

ரெம்ப்ரான்ட்டின் உருவப்படத்தை மீட்டெடுப்பவர்கள் காட்டும் கவனமும் அக்கறையும் வியப்பளிக்கிறது.

பார்வையற்றவர்கள் எவ்வாறு ஓவியத்தை ரசிப்பது என்பதற்கான சிறப்புப் பயிற்சி பற்றி ஒரு பகுதியில் விவரிக்கிறார்கள்.

கலைவழிகாட்டிகள் உதவியோடு ஓவியத்தின் மாதிரியை உருவாக்கி அதைக் கையால் தொட்டு உணர்ந்து புரிய வைப்பது பற்றி விளக்கிக் காட்டுகிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி ஓவியத்திற்கும் கதை சொல்லலுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.

புகழ்பெற்ற எல்லா ஓவியங்களுக்குப் பின்னும் கதையிருக்கிறது. அந்தக் கதை உலகம் அறியாதது. ஓவியத்தில் இடம்பெற்றவர்கள் பற்றியோ ஓவியர் வாழ்க்கை பற்றியோ உள்ள அக்கதையைப் பார்வையாளர்களுக்குக் கலைவிமர்சகர்களும் வழிகாட்டிகளும் எடுத்துச் சொல்கிறார்கள். குறிப்பாக ரூபன்ஸின் Samson and Delilah ஓவியத்தின் தனித்துவத்தையும் அதன் பின்னுள்ள  கதையினையும் விளக்குவது சிறப்பாக உள்ளது.

அருங்காட்சியகத்தின் செலவுகளைச் சமாளிக்க அதை எவ்வாறு வணிக நிறுவனங்களோடு இணைந்து சந்தைப்படுத்துவது, நிர்வாகச் செலவுகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றிய விவாதங்களும் காட்டப்படுகின்றன.

இந்த ஆவணப்படத்திற்காக 12 வாரங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 170 மணிநேரக் காட்சிகளைப் படமாக்கி அதிலிருந்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்குள் நேஷனல் கேலரியை முழுமையாகச் சுற்றி வந்த அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது இந்த ஆவணப்படம்.

0Shares
0