கங்கா தின்

ருடியார்ட் கிப்ளிங்கின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டபடம் கங்கா தின் (Gunga Din). ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் இயக்கிய இந்தப்படத்தில் கேரி கிராண்ட், விக்டர் மெக்லாக்லன் மற்றும் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் ஜூனியர் ஆகியோர் நடித்துள்ளனர். 1939 ஆம் ஆண்டு வெளியானது. Sam Jaffe கங்கா தினாக நடித்திருக்கிறார்.

1830 களில் இந்தியாவில் தக்கீ(Thuggee) எனப்படும் வழிப்பறிக் கொள்ளையர்கள் செயல்பட்டனர். வணிகர்களுடன் இணைந்து பயணித்து அவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் இந்தத் தக்கீகள். காளியின் புதல்வர்களாகத் தங்களைக் கருதிக் கொண்ட இந்த வழிப்பறிக் கொள்ளையர்களை ஒடுக்குவதற்காகப் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி நிறையப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. The Deceivers, The Stranglers of Bombay ஆகிய இரண்டு படங்களும் இந்த வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றியதே.

கங்கா தீன் படத்தின் துவக்கத்திலே இது போன்ற வழிப்பறிக் கொள்ளையர்களின் தாக்குதல் நடக்கிறது.

1880 ஆம் ஆண்டில் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்திலுள்ள தந்திராபூரில் ஒரு பிரிட்டிஷ் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இந்தக் காவல்நிலையத்தில் பணிபுரிகிறவர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையாள் தான் கங்கா தின். அவனுக்குத் தானும் ராணுவ வீரன் போலச் சண்டையிட வேண்டும் என்ற ஆசை. அவர்களைப் போலவே உடற்பயிற்சிகள் செய்கிறான். ராணுவ நடைபோடுகிறான். அவனிடம் ஒரு எக்காளம் உள்ளது. எப்போதும் அதை வாசித்துக் கொண்டேயிருக்கிறான்.

ஒருநாள் தக்கீகள் புறக்காவல் நிலையத்தைத் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சார்ஜென்ட் கட்டர் மற்றும் மச்செஸ்னி தனது வீரர்களுடன் தப்பியோடுகிறார்கள். பின்பு ராணுவத்தின் உதவியோடு வழிப்பறிக் கொள்ளையர்களைக் கண்டறிந்து ஒடுக்குவதற்காகத் தனிப்படை அமைக்கப்படுகிறது. இந்தப் படையிலிருந்த பாலன்டைன் என்ற இளம் அதிகாரி திருமணம் செய்து கொண்டு ராணுவப்பணியை விட்டு விலகிப் போக நினைக்கிறான். அவனைத் தடுத்து நிறுத்தி எப்படியாவது தங்கள் குழுவில் இணைத்துக் கொள்ள மச்செஸ்னி முயல்கிறார். அது வேடிக்கையான நிகழ்வாக உள்ளது

ஒரு நாள் தங்கக் கோவிலைத் தேடிப் போன இடத்தில் கட்டர் தக்கீகளின் கூட்டத்தைக் கண்டறிகிறார். அங்கே மாட்டிக் கொள்ளும் கட்டரை எப்படிக் கங்காதின் தனது உதவியால் காப்பாற்றுகிறான். தக்கீகளை எதிர்த்துச் சண்டையிடுகிறான் என்பதையே படம் விவரிக்கிறது

ஆப்பிரிக்கப் பழங்குடிகள் போலவே உடையணிந்து தக்கீகள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கோவிலும் அங்கே நடக்கும் கூட்டமும் விசித்திரமாகக் காட்டப்படுகிறது. தண்ணீர் விநியோகம் செய்யும் கங்காதினின் வீரத்தை விவரிக்கும் விதமாகக் கிப்ளிங் ஒரு கவிதையை எழுதியிருந்த போதும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் பெருந்தன்மையை விளக்கும் விதமாகவே உள்ளது.

கங்காதின் அசட்டுத்தனமான மனிதனாகவே சித்தரிக்கப்படுகிறான். புறக்காவல் நிலையத்தில் உள்ள வீரர்களுக்குக் கங்காதின் தண்ணீர் விநியோகம் செய்கிறான். அங்கே சார்ஜென்ட் கட்டர் ஒருவர் தான் அவனது ஆசைகளைப் புரிந்து கொள்கிறார். கங்காதினையும் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் போலவே நடத்துகிறார். அவனது உதவியால் ரகசிய தங்கக் கோயில் மறைந்திருக்கும் தங்கத்தை எடுக்கவே உதவி செய்கிறார்.

கங்காதின் ஏன் பிரிட்டிஷ் அரசிற்கு இத்தனை விசுவாசமாக இருக்கிறான் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அவன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர விரும்புகிறான். தக்கீகளுடன் நடந்த சண்டையின் முடிவில் அவனும் ஒரு ராணுவ வீரனாக அங்கீகரிக்கப்படுகிறான். இது பிரிட்டிஷ் ராணுவம் இந்தியர்களை மதித்துக் கொண்டாடியது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பயன்பட்டிருக்கிறது. மற்றபடி இன்னொரு பிரிட்டிஷ் விசுவாசப்படமே.

கட்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாகக் கேரி கிராண்ட் நடித்திருக்கிறார். சிறப்பாக ஒன்றுமேயில்லை. தக்கீகளின் கோவில் மற்றும் அங்கே நடக்கும் கூட்டம் தொடர்பான காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

வழிப்பறிக் கொள்ளையர்களை ஒடுக்கும் கதை என்ற போதும் ராணுவத்திலிருந்து விலகி திருமணம் செய்து கொள்ளப்போகும் பாலன்டைனை தடுத்து நிறுத்த எப்படி வேடிக்கையாகத் திட்டமிடுகிறார்கள் என்பதே அதிகம் சித்தரிக்கப்பட்டுள்ளது

படத்தின் ஒரு காட்சி கூட இந்தியாவில் படமாக்கப்படவில்லை. அலபாமா ஹில்ஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் கைபர் கணவாய் வழியாகக் காட்டுகிறார்கள். கடுமையான விமர்சனங்களின் காரணமாக இந்தப்படம் மும்பை மற்றும் கல்கத்தாவில் திரையிட தடைவிதிக்கப்பட்டது. ஜப்பானிலும் இந்தத் தடை நீடித்தது.

••

0Shares
0