கடக்க முடியாத நிலப்பரப்பு

சமகால ஐஸ்லாந்து  திரைப்படங்கள் மாறுபட்ட கதைக்களன்களுடன் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. Godland என்ற திரைப்படம் 2022ல் வெளியானது. கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. படத்தின் முன்னோட்டக்காட்சியைக் காணும் போது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த The Mission திரைப்படம் நினைவிற்கு வந்தது.. Roland Joffé இயக்கிய அப்படத்தில் ராபர்ட் டி நீரோ நடித்திருப்பார். படத்தில் Ennio Morricone இசை அபாரமானது,. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருது பெற்ற படம்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டேனிஷ் பாதிரியார் லூகாஸ் ஐஸ்லாந்தின் தொலைதூர பகுதிக்கு ஒரு தேவாலயம் கட்டவும், அதன் மக்களைப் புகைப்படம் எடுக்கவும் செல்கிறார். பிரம்மாண்டமான அந்த நிலப்பரப்புக்குள் நீளும் அவரது பயணத்தையும் கனவினையும் Godland திரைப்படம் அற்புதமாகச் சித்தரித்துள்ளது.

ஐஸ்லாந்திய எழுத்தாளர்-இயக்குநர் Hlynur Pálmason இப்படத்தை இயக்கியுள்ளார். டேனிஷ் ஆட்சியிலிருந்த தங்களின் கடந்தகாலத்தை நினைவுகூறும் விதமாகப் படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை மையமாகக் கொண்டே இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களை எடுத்த பாதிரியார் லூகாஸின் நினைவுகளே படமாக விரிவு கொள்கிறது

பிரமிக்கவைக்கும் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளும் படத்தை உன்னத அனுபவமாக்குகின்றன. குறிப்பாகக் கறுப்புக்குத்திரையில் பனிப்பிரதேசத்தினுள் செல்லும் அவர்கள் ஆற்றைக்கடப்பதற்கு முயல்வதும், புகைப்படம் எடுக்கத் தேடி அலையும் பள்ளத்தாக்குகளும் எரிமலை வெடித்துச் செம்குழம்புகள் உருகி ஓடுவதும் நிகரற்ற காட்சியனுபவத்தைத் தருகின்றன.

பனி உருகுவது போல மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. ஐஸ்லாந்தின் கண்கொள்ளாத இயற்கைக் காட்சிகள் அதன் ஊடாகச் செல்லும் கடினமான பயணம். கடந்து செல்லும் பகலிரவுகள். பயணத்தில் இறந்து போகும் மனிதர்கள் என மெல்லப் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. தேவாலயத்தை நிர்மாணிக்கத் துவங்கும் புள்ளியில் கதை மையம் கொண்டுவிடுகிறது. குறிப்பாக இரண்டு பெண்களுடன் பாதிரிக்கு ஏற்படும் நட்பும் அங்கிருந்து அவர் விடைபெறுவதும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன

வழிகாட்டியான ராக்னர் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் முடிவில் தன்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மன்றாடும் போது லூகாஸ் மறுக்கிறார். அப்போது ராக்னர் சொல்லும் கடந்த கால நினைவுகள் அவரைப் புரிந்து கொள்ளவைக்கின்றன.

ஆற்றைக் கடக்க முற்படும் போது ராக்னர் எச்சரிக்கை செய்கிறார். ஆனால் லூகாஸ் அதை ஏற்கவில்லை. அதனால் விபத்து ஏற்படுகிறது. அந்த ஆற்றில் வைக்கோல் சிலுவை மிதந்து செல்வது சிறப்பான காட்சி

விளையாட்டுப் போட்டியில் லூகாஸ் தீவிரமாகப் பங்குகொள்வது, கார்ல் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் முறை. புதிய தேவாலயம் உருவாகும்விதம் இவற்றின் ஊடாக உருமாறும் பருவகாலங்கள் எனக் காலத்தின் திரையினுள் மறைந்து போன வாழ்க்கையைப் படம் துல்லியமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறது.

லூகாஸிற்கு ஐஸ்லாண்டிக் மொழி தெரியாது. ராக்னருக்கு டேனிஷ் மொழி அரைகுறையாக மட்டுமே தெரியும். அவர்களுக்குள் ஏற்படும் விலகலுக்கு இந்த மொழிக்கு பின்னாலுள்ள வரலாறு காரணமாக இருப்பதைப் படம் சுட்டிக்காட்டுகிறது

கார்ல் மற்றும் அவரது மகள்களான அன்னா மற்றும் ஐடா வீட்டில் ஒரு காட்சியில் உணவு மேஜையில் லூகாஸ் பிரார்த்தனை செய்கிறார். அப்போது அவரது முகமும் உடலும் உறைந்து போயிருக்கிறது. அவருடன் அன்னா நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். அதன்பின்பே லூகாஸ் சமநிலை கொள்கிறார். கடவுளுடன் தான் ஒருமுறையாவது பேச வேண்டும் என ஐடா ஆசைப்படுகிறாள். லூகாஸ் ஐடாவுடன் நட்பாகிறார், அவர் அன்னாவை திருமணம் செய்து கொள்வாரா என அவரிடமே கேட்கிறாள். அது சாத்தியமற்றது என்கிறார் கார்ல். ராக்னர் லூகாஸின் குதிரையைக் கொன்றதை வெளிப்படுத்தும் இடம் அதிர்ச்சிகரமானது. இயற்கையின் ஒருபகுதியாக லூகாஸ் மாறுவார் என்று கடைசியில் ஐடா சொல்வது மிகப்பொருத்தமானது

படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. கேமிராக்கோணங்களும் நிறங்களைப் பயன்படுத்திய விதமும் அற்புதம்.

படம் முழுவதும் பாதிரியார் லூகாஸ் கேமிராவைத் தூக்கிக் கொண்டே அலைகிறார். நிறையப் புகைப்படங்களை எடுக்கிறார். இது ஒருவகையான மீட்சி. புகைப்படத்தில் மனிதர்களை நித்தியமானவர்களாக மாறுகிறார்கள்.

நீண்டகாலத்தின் பின்பு மிகப் பரவசமளித்த திரைப்படம் ஒன்றைப் பார்த்த சந்தோஷம் மனதில் நிறைந்துள்ளது.

0Shares
0