யாழினி ஆறுமுகம்
••
தங்களது சிறுகதைகள் தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்தேன்.
ஒவ்வொரு கதையும் அருமை. வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். ஆனால் உருவாக்கியுள்ளீர்கள் என்று தான் கூறுவேன். கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் கதைகள் எல்லாம் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு கதையும் வெகு இயல்பான, சரளமான நடை.
“தரமணியில் கரப்பான் பூச்சிகள்” கதையில் “மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள், ஏமாற்றியதைப் பற்றி பெருமை பேசுகிறார்கள், மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள்” என்று கூறுவதெல்லாம் உண்மையிலும் உண்மை என்றே தோன்றுகிறது.
“ரசவாதியின் எலி”கதையில்”வெளிச்சம் மட்டுமே உலகின் இயல்பாகவும், இருள் விலக்கப்படவும், ஒதுக்கப்படவும் வேண்டியது என்று முடிவு செய்து
விட்டார்கள். ஆனால் உண்மையில் இருளும், வெளிச்சமும் எதிரான இரண்டல்ல, ஒன்றைப் புரிந்து கொள்ள இன்னொன்று அவசியமானது “
மனிதனுடைய எல்லா நடத்தைகளிலும் இதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
” அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ” எங்கோ அதிகாரத்தில் உள்ள ஒருவரின் அற்ப சந்தோசத்திற்காக திரிசடை தீவில் ஒன்பது ஆண்டுகள் கழித்ததன் மூலம் டக்ளஸ் வேறு ஒரு உலகை புரிந்து கொண்டதன் மூலம் , வாழ்க்கை அர்த்தமுள்ளது தான் என்று தெரிந்து கொண்டான் என்றே கருதுகிறேன்.
ஒவ்வொரு கதையையும் படிக்கும் நேரத்தை விட அக்கதையின் சிரத்தன்மையையும், படித்து முடித்தவுடன் ஏற்படும் எண்ண ஓட்டமும், கிளர்ச்சியுமே அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இது தான் படைப்பின், படைப்பாளியின் வெற்றி என்றே கருதுகிறேன்.
••
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
தேசாந்திரி வெளியீடு
Rs 125.00
https://www.desanthiri.com/
CALL :
(044) 236 44947
(+91) 9600034659
D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093