ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன.

1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி நியூயார்க்கிலுள்ள புத்தகக் கடைகளில் தேடுகிறார். அவர் படிக்க விரும்பிய புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் Saturday Review of Literature இதழில் லண்டனிலுள்ள மார்க்ஸ் அண்ட் கோ என்ற பழைய புத்தகக் கடை ஒன்றின் விளம்பரத்தைக் காணுகிறார். அதில் கிடைக்காத அரிய புத்தகங்களை அவர்கள் விற்பனை செய்வதாகவும் உலகின் எங்கேயிருந்து ஆர்டர் செய்தாலும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆகவே 1949ல் அவர்களுக்குத் தனது புத்தகத் தேவை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அரிய புத்தகங்கள் என்றாலே விலை மிக அதிகமாக இருக்கும், என்னைப் போன்ற தீவிரவாசகர்களால் அவ்வளவு விலை கொடுத்துப் புத்தகத்தை வாங்க முடியாது- ஆகவே ஐந்து டாலர்களுக்குள் விலையுள்ள புத்தகமாக இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று ஒரு புத்தகப் பட்டியலை இணைத்துக் கடிதம் அனுப்புகிறார். அப்போது ஹெலனின் வயது 33. திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வருகிறார்.
ஒரு மாத காலத்தில் அந்தக் கடையிலிருந்து அவள் கேட்ட ஸ்டீவன்சன் கட்டுரைகளின் தொகுதி மற்றும் லத்தீன் பைபிளுக்குப் பதிலாகக் கிரேக்க புதிய ஏற்பாடு பிரதி அனுப்பி வைக்கப்படுகிறது. கூடவே FPD எனக் கையெழுத்துப் போட்ட கடிதமும் வந்து சேருகிறது. அது கடை உரிமையாளர் பிராங் டோயலின் கையெழுத்து.
மிக அழகாக அச்சிடப்பட்ட, நேர்த்தியான பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் என்பதால் ஆசையாக அதைத் தொட்டு தொட்டு மகிழ்ச்சி அடைகிறாள் ஹெலன் ஹான்ஃப்
மிகக் கவனமாகப் பேக் செய்து அதை அனுப்பி வைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுகிறாள். கூடவே ஆறு டாலர் பணத்தையும் அனுப்பி வைக்கிறாள்.
அவளது பணத்தைப் பெற்றுக் கொண்டு கூடுதலாக அவள் அனுப்பி வைத்துள்ள தொகையைக் கணக்கில் வைத்துக் கொள்வதாகப் பதில் கடிதம் எழுதுகிறார் பிராங்.

அடுத்த முறை அவள் ஈசாப் பற்றிய Landor’s Imaginary Conversations என்ற அரிய நூலின் பிரதி கிடைக்குமா என்று கேட்டுக் கடிதம் எழுதுகிறாள். இதில் பணம் அனுப்புவதற்காகத் தான் அலைந்து திரிய வேண்டிய சூழல் பற்றி எழுதுகிறாள். இதற்கு ஆலோசனையாகத் தபாலில் பணம் அனுப்பி வைக்கும்படி பிராங் பதில் கடிதம் எழுதுகிறார்.
1949ல் இப்படித் துவங்கிய கடித உறவு புத்தகக் கடையின் ஆறு ஊழியர்களுக்கும் ஹெலன் ஹான்ஃப்பிற்கும் இடையில் நெருக்கமான நட்பை உருவாக்குகிறது. கடிதங்கள் வழியாகவே அவள் தான் படிக்க விரும்பிய அரிய புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார். தனது வாசிப்பு குறித்தும் சொந்த வாழ்க்கை பற்றியும் எழுதுகிறார்
அந்தக் கடிதங்களுக்குப் பிராங் நேர்த்தியாகப் பதில் எழுதி அனுப்பி வைப்பதுடன் புத்தகங்கள் குறித்துச் சிறப்பான குறிப்புகளையும் எழுதி அனுப்பி வைக்கிறார். அதில் அவர் எவ்வளவு தேர்ந்து படித்தவர் என்பது வெளிப்படுகிறது..
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை அறிந்த ஹெலன் ஹான்ஃ பழைய புத்தகக் கடை ஊழியர்களுக்குத் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாகக் கிறிஸ்துமஸ் பரிசாக டின்னில் அடைத்த உணவுப்பொருட்களை வாங்கி அனுப்புகிறாள்.
அது மார்க்ஸ் அண்ட் கோ ஊழியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. புத்தகக் கடையோடு உள்ள உறவு என்பது குடும்ப உறவு போல மாறுகிறது. அவளது கடிதத்தை ஊழியர்கள் அன்பின் அடையாளமாகக் கருதுகிறார்கள். தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பி வைக்கிறார்கள்.

அவள் கேட்ட அரிய புத்தகங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து வாங்க வேண்டும் என்பதற்காகப் பிராங் லண்டனின் பல்வேறு இடங்களில் தேடி அலைகிறார்.
பிராங்கின் மனைவி, பிள்ளைகள் பற்றி ஹெலன் ஹான்ஃப் அக்கறையுடன் விசாரிக்கிறார். மார்க்ஸ் அண்ட் கோவில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் அக்கறையுடன் கடிதம் எழுதுகிறாள்.
ஹெலன் ஒருமுறை தங்கள் விருந்தினராக லண்டன் வரும்படி கடை ஊழியர்கள் அழைக்கிறார்கள். சொந்த வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக அவளால் பயணம் கிளம்ப இயலவில்லை.
ஹெலன் ஹான்ஃப் பிரிட்டிஷ் இலக்கியங்களை வாசிப்பதன் வழியே இங்கிலாந்து மக்களை, தேசத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார். இலக்கியமே உண்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் என்கிறார் ஹெலன்
கவிதையின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட அவர் ஜான் டன்னின் கவிதைகளையும் உரைநடையும் கொண்ட தொகுப்பினை ஆர்டர் செய்து வாங்கிப் படித்து மகிழுகிறார். ஜான் டன் மெய்யியல் கவிஞர்களில் முக்கியமானவர். ஹெலன் ஹான்ஃப் வழியாக நாமும் பிரிட்டிஷ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளை அறிந்து கொள்கிறோம்
ஜேன் ஆஸ்டன் நாவல்கள், ஹிலாரி பெலோக் கட்டுரைகள். ஜான் டன் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். சார்லஸ் லேம்ப் கட்டுரைகள். ஸ்டீவன்சன், ராபர்ட் லூயிஸ். ஸ்டெர்ன், லாரன்ஸ் நாவல்கள். பழைய ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு என அவள் விரும்பி வாங்கிய புத்தகங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கடிதங்களின் வழியே நாம் அறிந்து கொள்ள முடிகிறது
புத்தகங்களை ஒருவர் எவ்வளவு தீவிரமாக நேசிக்க முடியும். அந்த நேசம் எப்படிப் புத்தகக் கடை ஊழியர்கள் மீது அன்பு செலுத்த வைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம்.
கடிதங்கள் வழியாகவே ஹெலன் ஹான்ஃப் மற்றும் பிராங் டோயலின் வாழ்க்கை மற்றும் அந்தப் புத்தகக் கடை ஊழியர்களின் நிலை விவரிக்கப்படுகிறது. நேரில் பார்த்துக் கொள்ளாமல் புத்தகங்கள் குறித்த கடிதங்களின் மூலம் ஹெலனுக்கும் பிராங்கிற்கும் இடையில் உருவான நட்பு அபூர்வமானது. சொற்களால் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்கிறார்கள். புத்தகங்களின் வழியே கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள்.
பழைய புத்தகங்கள் விற்கும் கடை என்றாலும் எவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். எவ்வளவு சிரத்தையெடுத்து பேக் செய்து புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். உடனுக்குடன் பதில் எழுதுகிறார்கள் என்பது அவர்கள் செய்வது வெறும் வணிகமில்லை, அது ஒரு தீவிர ஈடுபாடு என்பதைப் புரிய வைக்கிறது.
ஒருமுறையாவது லண்டனுக்குப் பயணம் செய்து தனக்குப் பிடித்தமான புத்தகக் கடைக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். பிராங் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஹெலன் ஹான்ஃப். அந்த ஆசை நிறைவேறுவதற்குள் பிராங் இறந்துவிடுகிறார்

1968 இல் பிராங் இறந்துவிடவே புத்தகக் கடை 1970 டிசம்பர் இறுதியில் மூடப்படுகிறது.
1971ல் ஹான்ஃப் லண்டன் சென்று சேரிங் கிராஸ் சாலையிலிருந்த மூடப்பட்ட புத்த கடைக்குச் சென்றார். அவருக்குள் பிராங்கின் நினைவுகளும் அந்தக் கடையின் வழியே தனக்குக் கிடைத்த புத்தகங்கள் பற்றிய எண்ணங்களும் வந்து போகின்றன. தனது பயண நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக The Duchess of Bloomsbury Street என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்
84, சேரிங் கிராஸ் ரோடு மறக்கமுடியாத புத்தகம். புத்தகங்களின் தோழமையை இதைவிடச் சிறப்பாக வெளிப்படுத்தமுடியாது.
••