கடைசி அரசன்

1206ல் நார்வேயின் அரசர் கொல்லப்படுகிறார். அவரது வாரிசான குழந்தையைக் காப்பாற்றும் விசுவாசமான வீரர்கள் பனிப்பிரதேசத்தினுள் தப்பிஒளிகிறார்கள். ஒருபுறம் சதி செய்து அரசனைக் கொன்று அரியணையில் அமர முயற்சிப்பவர்கள். மறுபக்கம் Baglers எனப்படும் திருச்சபை படைவீரர்கள் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பி Torstein, Skjervald என்ற இரண்டு படைவீரர்கள் எப்படிக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது The Last King திரைப்படம். 2016ல் வெளியாகியுள்ளது

பனிப்பிரதேசத்தில் குழந்தையைச் சறுக்குவண்டியில் கொண்டு செல்பவர்களை எதிரிகள் துரத்துவதும், பனிப்புயலுக்குள் குழந்தை சிக்கிக் கொள்வதும். கொட்டும் பனியின் ஊடாகக் கணப்பு அடுப்பின் முன்அமர்ந்து அக்குழந்தைக்குக் குதிரை பொம்மையை வேடிக்கை காட்டுவதும், Skjervald குடும்பத்தினரை எதிரிகள் மடக்கிக் கொல்வதும் மறக்கமுடியாத காட்சிகள்

பெரும்பான்மை காட்சிகள் பனிப்பிரதேசத்தினுள் நடைபெறுகின்றன. அதைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜவிசுவாசம் தான் படத்தின் மையக்கரு.ஒரு குழந்தையைக் காப்பாற்ற எத்தனை பேர் உயிர் துறக்கிறார்கள். அரியணைக்காக என்னவெல்லாம் சதி நடக்கிறது என்பதை அற்புதமாகச் சித்தரித்துள்ளார்கள்.

இந்தியாவிலும் அரியணையைக் கைப்பற்ற நடந்த சதிகளும் படுகொலைகளும் ஏராளமிருக்கின்றன. அவற்றை யாரும் இப்படித் திரைப்படமாக்கியதில்லை. பொன்னியின் செல்வன் இது போன்று அரியணைக்காக மேற்கொள்ளப்பட்ட சதிச்செயலை சுற்றிப்பின்னப்பட்ட கதையே. ஆனால் இத்தனை பின்னல்கள் சிக்கல்கள் கொண்டதில்லை.

நாம் இறந்து போகக்கூடும். ஆனால் நமது தீரச்செயல் என்றும் நினைவிலிருக்கும் என ஒரு காட்சியில் Torstein கூறுகிறான். மன்னர்காலத்தில் இது போன்ற விசுவாசிகள் அதிகமிருந்தார்கள். இன்றைய அரசியலில் இல்லாத அம்சம் விசுவாசம் மட்டுமே.

படத்தின் இறுதியில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போரிடச்செய்கிறார்கள். அப்போது Skjervald விவசாயிகள் எப்போதும் தனது மண்ணிற்காகப் பேராடகூடியவர்கள் என்பதை நினைவுபடுத்திச் சொல்கிறான். அவர்கள் கிளர்ந்தெழுந்து சண்டையிடுகிறார்கள். உயிர்தியாகம் செய்கிறார்கள்.

வரலாற்றைத் திரைப்படமாக்குவது எளிதானதில்லை.  அதற்கு மிகப்பெரிய கூட்டுமுயற்சி தேவை.

வரலாற்றின் இருண்ட பக்கங்களிலிருந்து ஒரு நிகழ்வை எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்கி உணர்ச்சிப்பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவே இப்படத்தைத் தனித்துவமாக்குகிறது

••

0Shares
0