கடைசி சாட்சியம்.

GORBACHEV. HEAVEN என்ற மிகையில் கோர்பசேவ் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது கடைசி வருஷங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆவணப்படம் உலகிற்குத் தேவை என்று ஒரு காட்சியில் அவரே குறிப்பிடுகிறார்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்பசேவ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போனது என்றார்கள். இந்த ஆவணப்படத்தில் அவர் குறித்த விமர்சனங்களை நேரடியாகக் கேட்கிறார்கள். மிகவும் வெளிப்படையாகக் கோர்பசேவ் பதில் சொல்கிறார். அதில் வெளிப்படும் உறுதி மற்றும் தனது நிலைப்பாடு மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறப்பாக வெளிப்படுகிறது.

சோவியத் காலத்தில் கோர்பசேவ் பற்றிச் சித்தரிக்கப்பட்ட பிம்பத்திற்கும் இந்த ஆவணப்படத்திற்கும் நிறைய இடைவெளியிருக்கிறது. மாஸ்கோவிற்கு வெளியே பாதுகாப்பு வேலிகளுக்கு நடுவே உள்ள தனி வீட்டில் சில பணியாளர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பேத்திகள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். ஒன்றிரண்டு உறவினர்கள் மட்டும் தன்னோடு இந்த வீட்டில் இருப்பதாகச் சொல்கிறார். அவரது தோற்றம் கைவிடப்பட்ட கிங் லியரை நினைவுபடுத்துகிறது.

89 வயதான கோர்பசேவ் நடப்பதற்குச் சிரமப்படுகிறார். நிறைய மாத்திரைகளை விழுங்குகிறார். தனது மனைவியின் கல்லறைக்கு அருகே தனக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அவரது தைரியம் மற்றும் உறுதியான குரல் ஆச்சரியமளிக்கிறது. படத்தின் ஒரு இடத்திலும் அவர் சுய இரக்கத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகக் கட்டளையிடுகிறார். வேடிக்கையாகப் பேசுகிறார். ருசித்து உண்ணுகிறார். உடற்சிரமங்களைத் தாங்கிக் கொண்டு பயணம் செய்கிறார்.

இயக்குநர் விட்டலி மான்ஸ்கியின் குழுவினர் சிறப்பாக அவரது தினசரி வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் கோபத்தில் கெட்டவார்த்தை பேசுகிறார் கோர்பசேவ். அதை அவர்கள் நீக்கவில்லை. அவரே அதை அடுத்த காட்சியில் உணர்ந்து கொண்டும் விடுகிறார்.

கோர்பசேவ் தன் மனதிலிருந்து கவிதைகளைச் சொல்லுவது அழகான காட்சி. இளமை முதலே தனக்குக் கவிதையில் தீவிரமான ஈடுபாடு எனச் சொல்லும் அவர் அன்றாடம் காலையில் முகச்சவரம் செய்து கொள்ளும் போது பாடுவேன் என்று சொல்லி தனக்குப் பிடித்த கவிதைகளைப் பாடுகிறார். கவிதைகளை அவர் உணர்ந்து சொல்லும் விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

படத்தில் அவர் தனது மனைவி ரைசா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உணர்ச்சிப்பூர்வமானது. இன்னொரு காட்சியில் அவரது வாழ்க்கையை நாடகமாக நிகழ்த்த விரும்பிய குழுவினர் அவரைச் சந்தித்து உண்மை நிகழ்வுகளைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள். அப்போது அவர் தனது கடந்தகாலத்தைச் சுவைபட விவரிக்கிறார். குறிப்பாக அவரது காதல் மற்றும் முதல் முத்தம் பற்றிச் சொல்கிறார்.

கோர்பசேவ் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், 1953-ல் தன்னுடன் பயின்ற மாணவியான ரைசாவைத் திருமணம் செய்துகொண்டார். ரைசா தன்னை விட்டு ஒரு நாள் கூடப் பிரிந்தது கிடையாது. அவரது மறைவிற்குப் பிறகு தான் மிகவும் தனிமையாக உணருவதாகச் சொல்கிறார் கோர்பசேவ்.

தனது எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கும் போது கோபம் கொள்வதில்லை. அழுத்தமான தனது நிலைப்பாட்டினை முன்வைக்கிறார்.

லிதுவேனியா நிகழ்வு பற்றிய கேள்விக்கு அவரது பதிலை ஏற்றுக் கொள்ள முடியாமல் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்பவர் சொல்கிறார். “நான் செய்தது சரிதான் என்று நினைக்கிறேன்… நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்புகிறீர்களா?” எனக் கேட்கிறார் கோர்பசேவ்.

2020ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மிகையில் கோர்பசேவ் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே தொலைக்காட்சியில் ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதைக் காணுகிறார். விருந்து நடைபெறுகிறது. தனது பழைய நாட்களைப் பற்றியும் மாறிவிட்ட இன்றைய சூழல் பற்றியும் விவரிக்கிறார்.

மான்ஸ்கி பழைய புகைப்படங்கள். ஆவணக்காட்சிகள் எதையும் படத்தின் பயன்படுத்தவில்லை. அது தான் இந்தப் படத்தினைத் தனித்துவமாக்குகிறது. கடந்தகாலத்தின் நேரடி சாட்சியாகக் கோர்பசேவை அடையாளம் காட்டுகிறார். சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கோர்பசேவ் தவிர்த்துவிடுகிறார். அதை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பானது.

இந்த ஆவணப்படத்தைக் கனடாவில் வசிக்கும் எனது நண்பர் மூர்த்தியைக் காணும்படி சொன்னேன். அவர் ரஷ்யாவில் படித்தவர். ஒருமுறை கோர்பசேவைச் சந்தித்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தபோது கண்ணீர் வந்துவிட்டது என்று மூர்த்தித் தொலைபேசியில் தெரிவித்தார். எனக்கு இந்த ஆவணப்படம் பார்க்கும் போது கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நாவலான The General in His Labyrinth நினைவிற்கு வந்தபடியே இருந்தது.

0Shares
0