கடைசி விலங்கு

புதிய குறுங்கதை

மதராஸ் பயத்தால் பீடிக்கபட்டிருந்தது.

ஜப்பானியர்களின் ராணுவம் தாக்குதலுக்கு நெருங்கி வருவதாகவும் நகரின் மீது குண்டுவீசப்போவதாகவும் அறிந்த கவர்னர் ஹோப் மதராஸைக் காலி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அரசு அலுவலகங்களில் பாதி மதனப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. உயர் அலுவலகங்களில் சில ஊட்டிக்கு இடம்பெயர்ந்தன. நீதிமன்றம் கோவைக்கு மாற்றலானது. மருத்துவமனையிலிருந்த நோயாளிகளை வேலூருக்கு மாற்றினார்கள்.. இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் நகரைக் காலி செய்து சொந்த ஊரை நோக்கி போயிருந்தார்கள். எல்லாக் கடைகளும் அடைக்கபட்டிருந்தன. முழுமையாக மின்சாரம் துண்டிக்கபட்டது.

லண்டனை விடவும் உயரியதாகக் கருதப்பட்ட மதராஸ் மிருக காட்சி சாலையில் இருந்த அனைத்து ஆபத்தான விலங்குகளையும் உடனடியாகக் கொல்லும்படியாfக கவர்னர் ஹோப்பின் ஆலோசகர் உத்தரவு பிறப்பித்தார். இதனை நிறைவேற்ற வேண்டிய மதராஸ் கார்ப்பரேஷன் கமிஷனர் ஓ புல்லா ரெட்டி, விலங்குகளைக் கொல்வதற்குப் பதிலாக ரயிலில் ஏற்றி ஈரோடிற்குக் கொண்டு செல்வது எனத் தீர்மானித்தார்

ஆனால் ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்வதில் சிக்கல் உருவானது. அத்தோடு வழியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விலங்குகள் தப்பிபோய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் உருவானது.

மிருககாட்சி சாலையை நோக்கி அதிகாலையில் மலபார் போலீஸ் படை பிரிவு சென்றது.

சில நாட்களாகவே நகரில் கடைகள் அடைக்கபட்டிருந்த காரணத்தால் விலங்குகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவை பசியோடு நாளெல்லாம் சப்தமிட்டபடியே இருந்தன. ஆகவே கூண்டினை நோக்கி வந்த மலபார் போலீஸ் படையினரை தங்களுக்கு உணவு வழங்க வந்தவர்களாக நினைத்துக் கொண்டன .

தங்கள் உத்தரவுகளை நிறைவேற்ற அவர்கள் துப்பாக்கியை உயர்த்தினார்கள்.

நிமிஷத்தில் அவர்கள் கொன்றுகுவித்த சிங்கம், புலி, சிறுத்தை, மலைப்பாம்பு, பனிக்கரடி போன்ற விலங்குகள் குருதிபெருக மண்ணில் விழுந்து கிடந்தன. யானையைக் கொன்றால் புதைக்க எடுத்துச் செல்வது சிரமம் எனக்கருதி அதை மட்டும் உயிரோடு விட்டார்கள். அசைவற்று நின்றிருந்த யானை திடீரெனப் பிளிறியது.

கூண்டின் கதவைத் திறந்து தன்னை நோக்கி வந்த காவலருக்கு வேடிக்கை காட்டுவது போல கரடி கைகளை உயர்த்தி அசைத்துக் காட்டியது. சிறுவர்கள் முன்னால் இப்படி கையசைத்து விளையாடியிருக்கிறது. காவலரின் இறுகிய முகம் அந்த கையசைப்பை ஏற்கவில்லை. தன் முன்னே நீட்டப்பட்ட துப்பாக்கியை பச்சைக்கேரட் என நினைத்துக் கொண்டு கரடி ஆசையாகக் கடிக்க முயன்றது.

காவலர் தனது துப்பாக்கியால் கரடியின் திறந்த வாயினுள் சுட்டார். தாடையைத் துளைத்துச் சென்றது குண்டு.

கரடி  காற்றில் கைகளை அசைத்தபடியே வலியோடு துடித்து விழுந்தது.. அடுத்த குண்டு அதன் நெற்றியை நோக்கிப் பாய்ந்தது.

இனிதே பணி முடிந்ததெனக் காவலர்கள் கொல்லப்பட்ட விலங்குகளின் உடல்களை இழுத்துக் கொண்டு நடந்தனர்.  கொல்லப்பட்ட விலங்குகளின் மதிப்பு ரூபாய் 4,538 என நோட்புக்கில் குறித்துக் கொண்டார் உயரதிகாரி.

துப்பாக்கியை ஏன் தன்னால் தின்ன முடியவில்லை என்ற குழப்பத்துடன் இறந்து போனது அக் கரடி.

0Shares
0