கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு சென்றிருந்தேன். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெருவில் உள்ள ராமானுஜம் வாழ்ந்த வீடு தன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. சொருகு ஒடுகள் வேய்ந்த தாழ்வான வீடு. சிறிய திண்ணையும் ரேழியும் தெரு பார்த்த ஜன்னல் கொண்ட படுக்கையறையும் காலத்தின் கறைபடிந்த கட்டிலுமாக உள்ளது
குனிந்து செல்ல வேண்டிய அளவு மிக தாழ்வான கூரையமைப்பு. சிறிய சமையல் அறை, பூஜை அறை. வீட்டில் ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் சிறிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. அதில் ஒன்று 160 ரூபாய்க்கு அவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கிய பத்திரம்.
வீட்டில் யாருமில்லை. ராமானுஜத்தின் மூச்சுகாற்றும் விரல்ரேகைகளும் மட்டுமே மீதமிருக்கின்றன. விஞ்ஞான உலகம் இன்றுவரை வியந்து போற்றிக் கொண்டிருக்கும் மேதையின் வீடு என்பதற்கான எந்த சிறப்பும் அதற்கில்ல். ஒரு எளிய மனிதனின் வாழ்விடம் போலவே உள்ளது.
நுறு வருடங்களுக்கு முன்பு மின்சார வசதி இல்லாமல் அகல் விளக்கின் வெளிச்சத்தில் கையில் பனையோலை விசிறியை வீசிக் கொண்டு இந்த அறையில் ராமானுஜம் படித்துக் கொண்டு இருந்திருப்பார் என்ற காட்சி மனதில் கடந்து போனது.
வாழ்வில் உன்னத நிலைக்கு வந்தவர்கள் பலரும் இப்படி எளிமையான இடத்திலிருந்து தான் துவங்கியிருக்கிறார்கள். ராமானுஜம் 1887ல் ஈரோட்டில் தனது பாட்டியின் வீட்டில் பிறந்தார். அப்போது அவரது அப்பா கும்பகோணத்தில் உள்ள ஒரு ஜவுளிகடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். மிக எளிமையான குடும்பம்.
ராமானுஜத்தின் பள்ளி வாழ்வும் கல்லுரி படிப்பும் இதே வீட்டில் தான் நடந்தேறியிருக்கிறது. இந்த வீதிகளில் அவர் உலவி திரிந்திருக்கிறார். இந்த திண்ணையில் கையில் சிறிய நோட்டுடன் கணித சிக்கல்களுக்குள் முழ்கி கிடந்திருக்கிறார். இதே சாரங்கபாணி கோவிலின் மணியோசை அவர் காதிலும் விழுந்திருக்கும் தானே?
ஒரு மனிதனின் வாழ்விடம் என்பது அவனது நினைவுகள் படிந்திருக்க கூடியது. அந்த வீட்டை இடித்து உருமாற்றாமல் அப்படியே வைத்திருப்பது தான் அதன் சிறப்பாக உள்ளது. ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வீடு கூட இது போல அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது என்றும், கார்க்கி எப்போதும் வீட்டின் பின்வாசலைத் தான் உபயோகிப்பார் என்பதால் இப்போதும் பின்கதவு வழியாக தான் பார்வையாளர்கள் உள்ளே நுழைந்து பார்க்க அனுமதிக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி குறிப்பை வாசித்திருக்கிறேன். வியப்பாக இருந்தது.
ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு தினமும் எவ்வளவு பேர் வந்து போகிறார்கள் என்று அங்குள்ள நிர்வாகியிடம் கேட்டேன். நாலைந்துபேர் வருகிறார்கள். அதுவும் சில நாள் யாரும் வருவதேயில்லை என்றார். நெருக்கடியும் பரபரப்பும் இழுத்து செல்லும் வாழ்வில் இதெற்கெல்லாம் ஏது நேரம் என்று ஒதுங்கிவிட்டார்கள் போலும்.
நம் குழந்தைகள் அறிவாளிகளாக, பெரிய மேதைகளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்காக எவ்வளவோ பணம் செலவழிக்கிறோம். ஆனால் அந்த மேதைகள் எங்கிருந்து எப்படி உருவானார்கள் என்பதை நாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை.
நவகிரக ஸ்தலங்களை தரிசிப்பதற்காக எங்கெங்கிருந்தோ கும்பகோணத்திற்கு தினமும் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். ஆனால் இதே கிரகங்களை பற்றிய விஞ்ஞானத்தையும் கணித நுட்பங்களையும் ஆராய்ந்த கணிதமேதையின் நினைவில்லதை பார்க்க வருபவர்கள் ஐந்து பேர்.
இன்றைய அறிவியல் வளர்ச்சியின் அடிப்படைகள் இந்திய சமூகத்தில் பல ஆயிரம் வருடத்திற்கு முன்னதாகவே சிந்திக்கபட்டிருக்கின்றன. ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. வானவியலிலும் கணிதத்திலும் இந்தியா மிக பாரம்பரியமான அறிவுத்திறன் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அல்பெரூனி என்ற யாத்ரீகர் இந்த உண்மையை தனது பதிவேடுகளில் முழுமையாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கிரணகங்கள் ஏற்படுவதை பற்றிய இந்தியர்களின் கணிப்பு மிக துல்லியமானது என்று வியந்து பாராட்டுகிறார்.
கணிதம் பெரும்பாலோருக்கு தடுமாற்றம் தரக்கூடியது. பள்ளியில் கணிதத்தை கண்டு பயந்து ஒடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னை தவிர வீட்டில் மற்ற யாவரும் கணிதத்தில் மிகசிறப்பாக திறன் பெற்றிருந்தார்கள். கணிதம் ஏன் இத்தனை கடினமாக இருந்தது என்று இன்று யோசிக்கையில் கணிதம் முறையாகவும் எளிமையாகவும் பரிச்சயமாகவில்லை என்று தான் தோன்றுகிறது. கணிதம் ஒரு வகையில் இசையை போல உயர்கற்பனை திறன் கொண்டது. இசையை போல தொடர்ந்த பயிற்சி அதற்கு தேவை.
கணிதத்தின் அடிப்படைகள் ஒரு மனிதனுக்குள் முறையாக பதிந்து விட்டால் பிறகு கணிதருசி அவனை இழுத்து கொண்டு போய்விடும். கல்லுரி நாட்களுக்கு பிறகு கணிதத்தின் வரலாறு பற்றிய ஒரு நுலை வாசித்த போது தான் கணிதம் மீதான விருப்பம் உண்டானது. தேடித் தேடி ஒவ்வொரு சிறு விஷயமாக தெரிந்து கொள்ள துவங்கினேன்.
எண்கள் இன்று எளிமையாக எல்லோராலும் பயன்படுத்தபட்டுவருகிறது. ஆனால் எண்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள். எப்படி ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யோசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆதிவாசிகள் வேட்டைக்கு செல்லும் போது தொலைவில் மான்கள் வருவதை கண்டால் ஒருமான் இரண்டு மான், மூன்று மான் என்று வகைப்படுத்துவார்கள். அதற்கு மேல் மான்கள் வரத்துவங்கினால் உடனே கூட்டமாக வருகிறது என்று பொதுமைபடுத்திவிடுவார்கள். அவர்களிடம் துல்லியமாக எண்களை பகுத்து சொல்லும் முறை கிடையாது என்பார்கள். நாமும் அப்படி தான் ஒரு காலத்தில் இருந்திருப்போம். எண்களின் வருகையும் பயன்பாடுமே நம் அன்றாட வாழ்வை எளிமையாக்கி வைத்திருக்கிறது.
தமிழ் கணிதம் என்று ஒரு முறையிருக்கிறது. இதில் தமிழ் எழுத்துக்களே எண்களாகவும் மதிப்பிடப்படுகின்றன. இன்றைக்கும் அந்த முறை ஜவுளிகடைகளிலும் சில்லறை வணிகர்களாலும் பயன்படுத்தபட்டுவருகிறது. ஒருகாலத்தில் வட்டி தொழில் நடத்தியவர்கள் யாவரும் இந்த கணித முறையை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவான எண்முறை நடைமுறைக்கு வந்தபிறகு இந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது.
எண்களை பற்றிய ராமானுஜத்தின் பார்வையும் ஆய்வும் மிக முக்கியமானது. அவர் மூவாயிரத்திற்கும் அதிகமான தியரம்களை உருவாக்கியிருக்கிறார். 1900களிலே கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திற்கு சென்று கணிதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். கணிதத்தில் அதுவரை தீர்க்கபடாத முக்கிய சிக்கல்களை ராமானுஜம் மிக எளிதாக தீர்த்து வைத்திருக்கிறார்.
முடிவின்மை பற்றிய ராமானுஜத்தின் பார்வைகள் மிகவும் வியப்பளிக்க கூடியவை. எண்களை பற்றிய அவரது குறிப்புகள் யாவும் மிகுந்த கவித்துமானவை. அவர் எண்களை உயிருள்ளவைகளாக கருதினார். எண்களுக்குள் ஏற்படும் இணக்கமும் உறவும் மிக ஆழமான அர்த்தம் கொண்டது என்று வெளிப்படுத்தினார். அவரது குறிப்பேட்டினையும் கடிதங்களையும் வாசிக்கும் போது ராமானுஜம் எந்த அளவு ஆவேசத்துடன் தனது மனவோட்டங்களை பதிவு செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்திய கணிதம் ஒருவகையில் தத்துவ சார்பு கொண்டது. அதை வெறும் விஞ்ஞானமாக மட்டும் கருதமுடியாது. அதன் தத்துவசார்பும் ஆழ்ந்த மெய்தேடலும் மேற்கத்திய விஞ்ஞான உலகிற்கு அறிமுகமில்லாதது.
இந்திய தத்துவங்கள் இன்மையை பற்றி மிக விரிவாக பேசுகின்றன. ஒரு பௌத்த நீதிக்கதையில் காலியான கோப்பை ஒன்றை சீடன் கையில் கொடுத்து இதில் உள்ள பழரசத்தை அருந்தும்படியாக குரு சொல்கிறார். சீடன் காலியாக உள்ள கோப்பையில் பழரசம் இல்லையே எப்படி அருந்துவது என்று திகைத்து போய் கோப்பையில் ஒன்றுமில்லை என்று சொல்கிறான்.
உடனே குரு ஒன்றுமில்லாததை குடி என்கிறார். அவனும் குருவை சமாதானப்படுத்துவதற்காக ஒன்றுமில்லாததை குடித்துவிட்டேன் என்று சொல்கிறான். அதை கேட்ட குரு அப்படியானால் உன் கோப்பையில் ஒன்றுமில்லாததில் கொஞ்சமாவது மீதமிருக்கிறதா என்று மறுபடியும் கேட்கிறார். அந்த நிமிடமே சீடனுக்கு ஞானம் கிடைத்துவிட்டது
இந்த கதையின் தேடுதல் போன்றது தான் இந்திய மனது. ஆகவே இந்திய கணிதமும் அதன் முறைகளும் ஒருவகையில் விஞ்ஞானம் தாண்டியவை. ராமானுஜம் இந்த நிலைகளை விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தி நிரூபிக்க விரும்பினார்.
உலகமே மெச்சும் அறிவு திறனும் கூர்ந்த பார்வையும் கொண்டிருந்த போதும் லண்டன் வாழ்க்கை ராமானுஜத்திற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. குறிப்பாக லண்டன் குளிரும் அந்த கலாச்சாரமும் மனதில் சொந்த ஊரை பற்றிய ஏக்கத்தை உருவாக்கி கொண்டேயிருந்தது. குளிர் அதிகமாகி அதனால் நோய்வுற்று நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானார். தொடர்ந்து சில ஆண்டுகள் காசநோய்க்கான சிறப்பு சிகிட்சைகள் எடுத்துக் கொண்ட போதும் பலனிற்றி 1920ல் தனது முப்பத்தி மூன்றாவது வயதில் மரணமடைந்தார்.
ராமானுஜம் முன்வைத்த கணித ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. தமிழில் ராமானுஜம் வாழ்க்கை வரலாறு சிறிய நுலாக வெளிவந்திருக்கிறது. தற்போது அவரது வாழ்வு முழுநீள திரைப்படமாக பிரிட்டீஷ் இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. என்றாலும் எளிய மனிதர்கள் அவரை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ளவேயில்லை.
இந்த நினைவில்லம் சாஸ்திரா என்ற தனியார் கல்லுரி ஒன்றின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. வீட்டை அவர்கள் பராமரித்து வரும் பாங்கு மிகுந்த பாராட்டுக்கு உரியது.
ராமானுஜம் வீட்டில் இரண்டு மூன்று மணிநேரம் இருந்தேன். அந்தவீடு சொல்லும் பாடம் ஒன்று தான். அது வாழ்வின் எளிய நிலையில் கூட, அறிவும் தொடர்ந்த உழைப்பும் கட்டாயம் நம்மை உலகின் உச்சிக்கு கொண்டு சென்றுவிடும் என்பதே.