கண்களை மூடிப் பார்க்கிறேன்.

 “The Wonderful Story of Henry Sugar.” என்ற வெஸ் ஆண்டர்சனின் 40 நிமிஷக் குறும்படம் கதைக்குள் கதை என விரியும் அழகான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் ரோல்ட் டாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சன் கதை சொல்லும் பாணியில் ஒரு விசித்திரத்தன்மை வெளிப்படுவது வழக்கம். இதில் அந்தப் பாணி புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

சினிமாவை பல்வேறு கலைகளின் கூட்டு வடிவம் என்பதை ஆண்டர்சன் நன்கு உணர்ந்தவர். நாடகம், மேஜிக், கதை சொல்வது, இசைநிகழ்ச்சி. பொம்மலாட்டம், அனிமேஷன் எனப் பல்வேறு கலைகளின் ஒன்று கலந்த வடிவமாக, பல அடுக்கு கதைசொல்லல் முறையில் அமைந்த படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வெஸ் ஆண்டர்சன் தேர்ந்த இலக்கிய வாசகர். சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளைச் சினிமாவாக உருவாக்கியவர். இவர் ரோல்ட் டாலின் “ஃபென்டாஸ்டிக் மிஸ்டர். ஃபாக்ஸ்” கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார். அது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஸ்டீபன் ஸ்வேக்கின் நாவலை The Grand Budapest Hotel என்ற படமாக எடுத்திருக்கிறார்.

படம் ரோல்ட் டாலின் எழுதும் அறையில் துவங்குகிறது. அவரது வீட்டின் மாதிரியை அசலாக அப்படியே உருவாக்கியிருக்கிறார்கள். அவர் புதிய கதை ஒன்றை எழுதுகிறார். அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரம் பற்றி விவரிக்கிறார். இது ஒரு சரடு.

ஹென்றி சுகர் ஒரு நாள் தனது வீட்டு நூலகத்தில் ஒரு புத்தகத்தைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசிக்கிறார். அவர் வாசிக்கும் புத்தகமே இரண்டாவது சரடு

அவர் படிக்கும் புத்தகம் வழி இம்தாத் கான் பற்றிய காட்சிகள் விரிவடைகின்றன. இது மூன்றாவது சரடு. கிளைவிடும் கதைவழிகள் தான் படத்தின் சிறப்பே. அதை வெஸ் ஆண்டர்சன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். பலநேரங்களில் பொம்மலாட்ட பொம்மைகள் போலக் கதாபாத்திரங்கள் நடத்தப்படுகிறார்கள். நாடக அரங்கில் மாறுவது போலக் காட்சிகள் மாறுகின்றன. கதையிலே மேஜிக் காட்சிகள் வருகின்றன. பிறாண்டலோ, பிரெக்ட்டின் நாடகம் போலவே நிஜமும் கதையும் ஒன்று கலக்கின்றன.

ஹென்றி சுகர் வழியாகக் குறுக்குவழியில் பணம் தேடும் பேராசையும் அதன் உச்சநிலையில் ஏற்படும் அபத்தமும் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக இம்தாத் கானுக்குக் கிடைத்த சக்தியைத் தானும் பெறுவதற்காக ஹென்றி மேற்கொள்ளும் முயற்சிகள். சூதாட்ட விடுதியில் அவன் நடந்து கொள்ளும் விதம், கிடைத்த பணத்தைக் காற்றில் பறக்கவிடுவது போன்றவை அழகான காட்சிகள்.

எழுத்தாளர், கதை சொல்பவர், கதாபாத்திரங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையிலான உறவு படம் முழுவதும் குடை ராட்டினம் போலச் சுழலுகிறது..

1930களின் கல்கத்தாவில் நடக்கும் பகுதி சுவாரஸ்யமானது. அதில் இம்தாத் கான் தனது கதையைச் சொல்கிறார். அவருக்குக் கண்களை மூடிக்கொண்டு பொருட்களைப் பார்க்கும் திறனிருக்கிறது.

அதைக் கேட்டு மருத்துவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களிடம் தனது கண்களைக் கட்டிவிடச் சொல்கிறார் இம்தாத். கண்கள் மூடப்பட்ட நிலையில் அவர் காட்சிகளைத் துல்லியமாகக் காணுகிறார். அது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவருக்கு இந்த அபூர்வ சக்தி எப்படிக் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள டாக்டர் சட்டர்ஜி ஆர்வம் காட்டுகிறார். அந்த ரகசியத்தை இம்தாத் விளக்குகிறார்

கண்கள் இல்லாமல் எந்த ஒன்றையும் பார்க்க முடியாது என்று உலகம் நினைக்கிறது. ஆனால் யோகசாதனைகள் மூலம் கண்களை மூடிக்கொண்டு பொருட்களைப் பார்க்கலாம் என்று இம்தாத் கண்டறிகிறார். ஒரு யோகியின் துணை கொண்டு அதில் வெற்றி பெறுகிறார்.

மருத்துவர் அவரிடம் கண்ணாக உடலின் வேறு எந்த உறுப்புச் செயல்படுகிறது என்று கேட்கும் போது தெரியவில்லை என்றே இம்தாத் பதில் சொல்கிறார்.

பெனடிக்ட் கம்பெர்பாட்ச், தேவ் படேல், பென் கிங்ஸ்லி மற்றும் ரிச்சர்ட் அயோடே எனத் தேர்ந்த நடிகர்கள். வியப்பூட்டும் அரங்க அமைப்பு. காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் எனப் புதிய திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார் வெஸ் ஆண்டர்சன்.

இந்தப் படத்தைக் காணும் போது புதுமைப்பித்தன் ஹடயோகி பற்றி எழுதிய உபதேசம் என்ற சிறுகதை நினைவிற்கு வந்தது. அதில் வரும் மருத்துவர் டாக்டர் சட்டர்ஜி போன்றே நடந்து கொள்கிறார்.

தனது அபூர்வ சக்தியைக் கொண்டு இம்தாத் பணம் சம்பாதிக்க முயலவில்லை. குற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் அதே சக்தியைத் தனதாக்கிக் கொள்ளும் ஹென்றி சுகர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். கேசினோவில் வெற்றிபெறுகிறான். ஆனாலும் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. முடிவில் லண்டன் தெருக்களில் பணத்தை வீசி எறிகிறான். இருவரின் வாழ்க்கையும் எதிர்பாராத முடிவைக் கொண்டிருக்கிறது.

வெஸ் ஆண்டர்சன் படங்களின் ஒளிப்பதிவு தனித்து பாராட்டபட வேண்டியது. குறிப்பாக அவர் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம். கேமிரா நகர்வு. காட்சிகளை அடுக்கும் முறை. கோணங்கள், என தனித்துவமான பாணியைக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு காட்சித்துணுக்கைக் கண்டாலும் இது வெஸ் ஆண்டர்சன் படம் என எளிதாகச் சொல்லிவிடலாம். அப்படி அவரது முத்திரை எல்லாக் காட்சிகளிலும் இடம்பெறுகிறது.

சினிமா எனும் கலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இது போன்ற படைப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை. படம் பார்க்கும் நாற்பது நிமிஷங்களும் தேர்ந்த கதைசொல்லியின் முன்பாக அமர்ந்து கதை கேட்பது போல வியப்போடிருக்கிறோம். நம் கண்முன்னே கதை சொல்பவன் மாயத்தை நிகழ்த்துகிறான். நடிகர்கள் நேரடியாகக் கேமராவை பார்த்துப் பேசுகிறார்கள். அவர்களே கதை சொல்பவர்களாகவும் கதாபாத்திரங்களாகவும் மாறுகிறார்கள். ஹென்றி சுகர் நல்லவனுமில்லை. கெட்டவனுமில்லை. நாம் ஹென்றி சுகர்களின் காலத்தில் வாழுகிறோம். அதையே வெஸ் ஆண்டர்சன் நினைவூட்டுகிறார்.

0Shares
0