கண்காணிப்பின் நிழல்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்

பாரதியை எப்படியெல்லாம் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும்.

இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரையும் கண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வளவு பயப்படவில்லை.

காவல்துறை அதிகாரிகள் பாரதியை நிழல் போலப் பின்தொடர்ந்தார்கள். அவரது பாடல்கள். கேலிச்சித்திரங்கள். சொற்பொழிவுகளை உடனுக்குடன் அறிக்கையாகத் தயாரித்து அரசிற்கு அனுப்பி வைத்தார்கள்.

பாரதியின் ஸ்வதேச கீதங்கள் 1908ல் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூல் அச்சாவதற்கு முன்பாகவே காவலர்கள் ரகசியமாகப் பதிப்பகத்திலிருந்த பிழை திருத்தப் பயன்படுத்தப்பட்ட பிரதியைக் கைப்பற்றினார்கள். அத்தோடு ஆட்சேபகரமான பகுதிகள் என்று கருதியதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தலைமைச் செயலரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது போலவே சென்னை மூர் மார்க்கெட்டில் நடைபெறும் கூட்டங்களில் பாரதியும் சுரேந்திரநாத் ஆர்யாவும் ஆற்றும் சொற்பொழிவுகள் அரசுக்கு எதிராக இருப்பதாகவும் சட்டத்தை மீறும் செயலென்றும் சென்னை நகரக் காவல்துறை ஆணையர் அன்றைய தலைமைச் செயலர் அட்கின்சனுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதற்குப் பதில் அளித்த அட்கின்சன் அவர்களால் பொது அமைதிக்கு கேடு உருவாகிறது என்பதற்குப் போதிய சான்றுகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தியா இதழில் வெளியான ஒரு கருத்துப்படத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வின்ச் வெடிமருந்துக் குவியல் அருகில் நின்று சுருட்டுப் புகைப்பது போல வரையப்பட்டிருந்தது. இதைக் கண்ட போலீஸார் இக் கருத்துப்படம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் வெடிமருந்து போன்றவர்கள் அதை அறியாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் நடந்து கொள்கிறார் என்பதைக் குறிப்பதாக அறிக்கை அனுப்பி வைத்தார்கள். மேலும் இந்தக் கருத்துப்படத்தை வெளியிட்டதற்காக இந்தியா பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதினார்கள்.

திருநெல்வேலியில் வ.உ.சி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் 1908ல் பாரதி திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் யாரைச் சந்திக்கிறார். என்ன பேசுகிறார் என்பதைக் கண்காணிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரயில் நிலையத்திலிருந்து பின்தொடர்ந்தார்கள்.

அவர்கள் கொடுத்த அறிக்கையில் பாரதி சிறைக்குச் சென்று வ.உ.சியைச் சந்தித்த விபரமும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் பங்குபெறவே அவர் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

காவல்துறை தன்னையும் தேசபக்தர்களையும் இடைவிடாமல் கண்காணிப்பதைக் கண்டு கோபமுற்ற பாரதி 1908ல் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கூட்டத்தில் அதைக் கண்டித்து உரையாற்றினார்.

அந்த உரையில் “நேர்மையான மனிதர்களை நிழல்போலப் பின்தொடர்ந்து கண்காணிப்பது ஈனமான, காட்டுமிராண்டித்தனம் அல்லவா“ எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கண்டன உரையின் காரணமாகப் பாரதியாரைக் கைது செய்யக் காவல்துறை முனைப்புக் காட்டியது. அத்தோடு அவர் கடற்கரையில் நடத்த இருந்த பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதித்தது.

இத்தோடு நிற்காமல் காவல்துறையே கடற்கரையில் சுதந்திர எழுச்சிப் பொதுக்கூட்டம் நடக்க இருப்பதாகப் பொய்யாக ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு விநியோகம் செய்தது. கடற்கரையில் மக்கள் ஒன்று திரண்டவுடன் அங்கே கலகம் உருவாக்கவும் காவல்துறை திட்டமிட்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறார் பாரதியார்.

திலகர் கைது செய்யப்பட்டதை அறிந்து பாரதி, ஆர்யா மற்றும் முத்தையா தாஸ் மூவரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலிருந்து வந்தேமாதரம் என்று முழக்கம் செய்து கொண்டு ஊர்வலம் வந்தார்கள். இரவு பத்துமணிக்குக் கோவில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அன்று கூட்டம் முடிய இரவு 11:45 மணியானது என்கிறது இன்னொரு காவல்துறை அறிக்கை.

இந்தியா பத்திரிக்கையை அச்சிடும் அச்சக உரிமையாளர் காவல் துறையினரால் மிரட்டப்பட்டார். இதழின் ஒட்டுமொத்த பிரதிகளையும் கிழித்து அழித்துவிட்டதாகவும் இனி பாரதியின் பத்திரிக்கையை அச்சிட முடியாது என அச்சக உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும் காவல்துறை அறிக்கை விவரிக்கிறது.

அயர்லாந்தின் விடுதலைக்குத் துணை நின்ற காயலிக் அமெரிக்கன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்குப் பாரதி சந்தா கட்டி பெற்றுவந்தார். அந்த இதழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்து.

பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு பத்திரிக்கையைப் பாரதி வாங்கிப் படித்து வருவதைக் குற்றமாகக் கருதியது காவல்துறை. இதைக் காரணமாக் காட்டி அவரை ஏன் கைது செய்யக்கூடாது என்று காவல்துறையின் இன்னொரு அறிக்கை கூறுகிறது

காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களில் சிலர் நண்பர்களைப் போலப் பாரதியோடு பழகி அவரது வீட்டிற்குச் சென்று உரையாடி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அவர்கள் தன்னைக் காணிக்கிறார்கள் என்பதைப் பாரதி அறிந்தேயிருந்தார்.

அவர்களிடம் வெளிப்படையாகத் தனது அரசியல் செயல்பாடுகளைத் தெரிவித்து இதை அப்படியே ரகசிய அறிக்கையாக அனுப்பி வையுங்கள் என்றும் பாரதி தெரிவித்திருக்கிறார்.

1908 ஆகஸ்ட் 21 அன்று இந்தியா பத்திரிக்கை அலுவலகம் மற்றும் பதிப்பாளர் திருமலாச்சாரியின் வீடு சோதனை செய்யப்பட்டது. பெருநகர நடுவர் உத்தரவின் பேரில் எம்.சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இந்தியா அலுவலகமும் சீல் வைக்கப்பட்டது என்கிறது இன்னொரு காவல்துறை அறிக்கை.

பாரதியாரும் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் அவரும் திருமலாச்சாரியும் மண்டயம் ஸ்ரீஸ்ரீ ஆச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமானார்கள். அங்கிருந்து இந்தியா இதழ் மீண்டும் துவங்கப்பட்டது

அங்கும் பிரிட்டிஷ் இந்திய ஒற்றர்களின் தொல்லை குறையவில்லை. பிரெஞ்சு எல்லைக்குள் சென்று பாரதியைக் கைது செய்வது இயலாது. ஆகவே ஏதாவது ஒரு பொய் வழக்கினை உருவாக்க வேண்டும் என முனைந்த பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அச்சகத்தில் பணியாற்றியவரைக் கட்டாயப்படுத்தி உளவு சொல்பவராக மாற்றினார்கள். 1909ல் இது பற்றிப் பாரதியின் கடிதம் ஒன்று இந்தியா பத்திரிகையில் வெளியாகியுள்ளது

அதில் வரவர காவல்துறையினர் பொய்ச் சாட்சியம் சொல்லுதல். வழக்குகளை ஜோடித்தல் போன்ற அற்ப வேலைகளைச் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கே அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது என்று பாரதியார் குறிப்பிடுகிறார்

1918 ஆம் ஆண்டுப் புதுச்சேரியிலிருந்து பாரதி வெளியேறினார். தமிழக எல்லையான கடலூரில் காலடி வைத்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் அவரது எண் 253. நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 வரை சிறையில் வைக்கப்பட்டார். 25 நாட்களுக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுக் கடையம் சென்றார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதாவை சீலே நாட்டின் காவல்துறை எப்படி கண்காணித்தது. துரத்திச் சென்றது என்பதை முழுநீள திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த காவல்துறை அறிக்கைகளைக் காணும் போது இதை வைத்து அரியதொரு ஆவணப்படத்தை உருவாக்கலாம் என்றே தோன்றுகிறது

.

0Shares
0