இருவேறு காலங்களில் பயணிக்கிறது மிமோசாஸ் (Mimosas) திரைப்படம். இரண்டினையும் இணைப்பது வியப்பான நிலப்பரப்பு. வாழும் போது நிலத்தோடு ஒருவருக்குள்ள பிணைப்பிற்கு இணையாதே மரணத்தின் பின்பு தனது சொந்த நிலத்தில் புதைக்கபடவேண்டும் என்பதும்.

அந்த ஆசையை நிறைவேற்றுவற்காக இருவர் மேற்கொள்ளும் கடினமான மலைப்பயணத்தையே படம் விவரிக்கிறது. பாதைகள் இல்லாத பயணம் ஒரு தளத்திலும் பாலைவனத்தில் டாக்சி ஒட்டுகளின் அதிவேகப் பயணம் வேறு தளத்திலுமாகப் படம் விரிவடைகிறது.
வயதான ஷேக் தலைமையில் ஒரு சிறிய கேரவன் சிஜில்மாசா நகரத்தை நோக்கி பயணிக்கிறது. அவர் தனது குடும்பத்தை அடைய சிஜில்மாசாவுக்குச் செல்ல முற்படுகிறார், தனது மரணம் தனது அன்புக்குரியவர்களிடையே நடைபெற வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை. கேரவனைக் கொள்ளையடிக்க இரண்டு திருடர்கள் உடன் வருகிறார்கள்
பயண நேரத்தைக் குறைக்க மலைப்பாதை வழியாகப் பயணம் செய்யவேண்டும் என ஷேக் வலியுறுத்துகிறார். மற்றவர்கள் மலையின் குறுக்கே கடந்து போவதை விரும்பவில்லை. ஆனால் அவரோ உறுதியாக மலைப்பாதையில் செல்வது எனத் தீர்மானிக்கிறார். மற்றவர்கள் விருப்பமின்றி அவரைப் பின்தொடருகிறார்கள்..

பாதிவழியில் ஷேக் இறந்துவிடவே அவரது உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. அவர் விரும்பியது போலவே சிஜில்மாசாவில் அடக்கம் செய்யத் தாங்கள் உதவி செய்வதாகச் சயத் மற்றும் அஹ்மத் என்ற இரண்டு திருடர்கள் முன்வருகிறார்கள். இதற்குக் காரணம் அவரது பொருட்களை அபகரித்துக் கொள்ளலாம் என்பதே.
பாதை தெரியாமல் மலையின் ஊடே பயணம் செய்கிறார்கள். கழுதை ஒன்றில் ஷேக்கின் உடல் துணியால் சுற்றி ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் நடுவே ஷாகிப் என்ற இளைஞன் இணைந்து கொள்கிறான்.
மூவரும் செங்குத்தான மலைதொடரைக் கடந்து செல்ல முயலுகிறார்கள். ஒரு நாள் இரவு உடலை சுமந்து செல்லும் கழுதையை அஹ்மத் ரகசியமாக விடுவித்துப் பயணத்தைத் தவிர்க்கலாம் என்று திட்டமிடுகிறான் ஆனால் ஷாகிப் அதைக் கண்டுபிடித்ததாக வேண்டும் வலியுறுத்துகிறான்
முதியவர் முகமது மற்றும் அவரது ஊமை மகள் இக்ராம் உதவியால் உடல் மீட்கப்படுகிறது. அவர்களும் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.
வழியில் ஆற்றைக் கடந்து செல்லும் போது கொள்ளையர்களின் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.
இறந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றச் செல்லும் சயத் மற்றும் அஹ்மத் தங்கள் நம்பிக்கை மற்றும் விருப்பத்திலிருந்து திசைமாறுகிறார்கள். இறை நம்பிக்கை நம்மை வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறது திரைப்படம்.

படம் மூன்று பகுதிகளாக உருவாக்கபட்டிருக்கிறது. இதை ஆன்மாவின் பயணத்திற்கான குறீயீடாகக் கருதுகிறார்கள்.
ஹெர்சாக்கின் Aguirre, the Wrath of God படத்தினை நினைவுபடுத்தும் காட்சிகள். ஆனால் இது வேட்கையின் பயணமில்லை. மீட்சியின் பயணம். தொழில்முறை சாராத நடிகர்களைக் கொண்டு மலை உச்சியினுள் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். மௌரோ ஹெர்ஸ்ஸின் ஒளிப்பதிவு அபாரமானது. அதுவும் மலைப்பாதைகளில் குதிரைகளில் செல்லும் காட்சியும் விரிந்து பரந்த நிலவெளியும் இரவுக்காட்சிகளும் மிக அற்புதமாக உள்ளன
முட்டாள் போலத் தோற்றம் தரும் ஷாகிப் மெல்ல இறையுணர்வின் வழியே அதிசயங்களை உருவாக்க முயலுகிறான். மலையை எப்படிக் கழுதைகளால் கடக்க முடியும் என மற்றவர்கள் கேட்கும் போது அவன் பறந்து செல்லும் என்று பதில் தருகிறான். இது அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் அவனது ஆழமான இறை நம்பிக்கையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்
சில தருணங்களில் ஷாகிப் ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான் உரையாடுகிறான். முழு நம்பிக்கையே வெல்லும் எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
ஜான் போர்ட் படங்களைப் போலவே நிலக்காட்சியை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆலிவர் லாக்ஸ். இது அவரது இரண்டாவது படம்.
ஒரு காட்சியில் ஷாகிப் திருடன் அஹ்மத்தின் தோற்றத்தை ஷேக் போலிருப்பதாகச் சொல்கிறான். அதை ஏற்க மறுக்கும் அஹ்மத் தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்கிறான். ஆனால் அவனும் இந்தப் பயணத்தின் வழியே புரிந்து கொள்ள முடியாத கடவுளின் செயல்களை உணர ஆரம்பிக்கிறான்.

வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இளம்பெண்ணும் பிணமும் மாட்டிக் கொள்வதைக் காணும் அஹ்மத் அவர்களைக் கைவிட்டு ஒளிந்து கொள்கிறான் ஆனால் ஷாகிப் அதை ஏற்கமறுத்து குரல் எழுப்புகிறான். அவனது வாயை அடைத்து உயிர்தப்புகிறான் அஹ்மத். முகமது கொல்லப்படுகிறார். அதன்பிறகு ஷாகிப் ஆத்திரம் தாங்க முடியாமல் நீ மனிதனே இல்லை என்று கூச்சலிடுகிறான் ஷாகிப். அஹ்மத் தன்னை அறியத் துவங்கும் புள்ளியது
வேடிக்கையான காட்சிகளும் வியப்பூட்டும் பயணமும் கொண்ட இப்படம் ஒரு உருவகக் கதை போலவே உருவாக்கபட்டிருக்கிறது. குற்றவுலகினை கொண்டாடும் சமகாலத் திரைப்படங்களுக்கு நடுவே ,வாழ்வின் நோக்கம் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுகிறது இப்படம் .இயற்கையை நெருங்கிச் செல்லும் போது மட்டுமே அதன் பிரம்மாண்டத்தையும் மூர்க்கத்தையும் மனிதன் உணருகிறான் என்கிறது இப்படம்.
சில இடங்களில் Meetings with Remarkable Men என்ற குர்ஜீ பற்றிய படத்தை நினைவுபடுத்தியது.
படத்தின் இறுதியில் கதை சமகாலத்திற்குத் திரும்புகிறது. அங்கே நாம் காண்பது வேறுவிதமான நிஜம். இதுவரை நாம் கண்டது அஹ்மத் கண்ட கனவு தானோ என்றும் தோன்றுகிறது. இந்த நிஜத்தில் ஷாகிப் இக்ராமை மீட்கும் பணிக்கு அஹ்மத்தை அழைத்துக் கொண்டு ஆவேசமாகப் புறப்படுகிறான்.
வெறுப்பும் வன்முறையும் கொண்ட இன்றைய உலகம். மீட்சியும் நம்பிக்கையும் கொண்ட அந்த உலகம் இரண்டுக்கும் நடுவே மனிதர்களின் ஆசைகளும் பெருமுயற்சிகளும் நடந்தேறுகின்றன.
In truth, being made aware of our own solitude can give us insight into the solitude of others. என்று Wind, Sand and Stars நூலில் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி குறிப்பிடுகிறார். இந்த உணர்வே படத்திலிருந்தும் நமக்குக் கிடைக்கிறது
••