குறுங்கதை
தனது வீட்டுக்கதவைத் தட்டிய கதையைப் பற்றி அந்தக் கவிஞன் எழுதியிருந்தான்.
புதுடெல்லியின் குளிர்கால இரவு ஒன்றில் அவனது வீட்டினைக் கதை தட்டியது. தொலைதூரத்திலிருந்து வந்த விருந்தாளியை வரவேற்பது போலக் கதையை வரவேற்றான். கதை ஒரு முதியவரின் தோற்றத்திலிருந்தது. கிழிந்த சட்டை, கவலை படிந்த முகம், கதைக்கு உறுதியான கால்களும் கைகளும் இருந்தன. கதை மூச்சுவிட்டுக் கொண்டுமிருந்தது. கதையின் கண்கள் மட்டும் தொல்சுடரென ஜொலித்தன.

“நீண்ட தூரம் பயணம் செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே“ என்று கேட்டான்
“கதைகள் நடந்த தூரத்தை கணக்கிட முடியாது“ என்றது கதை
“நான் ஒரு கவிஞன். நீங்கள் முகவரி மாறி வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்“ என்றான்
“ஒரு காலத்தில் கவிஞர்கள் கதையோடு நெருக்கமாக இருந்தார்கள். இப்போது ஏன் கதைகளைக் கைவிட்டீர்கள்“ என்று கேட்டது அக் கதை
“அதற்குத் தான் நிறையக் கதாசிரியர்கள் வந்துவிட்டார்களே“ என்றான் கவிஞன்.
“கவிதையில் வசிப்பது குகையில் வசிப்பதைப் போலப் புராதனமானது, பாதுகாப்பானது“ என்றது கதை.
“இந்த நகரில் அன்றாடம் நான் சில கதைகளைக் காணுகிறேன். கதாபாத்திரமாக நடந்து கொள்பவர்களுடன் உரையாடுகிறேன். சண்டையிடுகிறேன் ,ஆனால் கதைகளோடு நான் நெருக்கமாகயில்லை. கதைகளைக் கையாளுவது எனக்குச் சிரமமானது“ என்றான் கவிஞன்.
“நீ ஒரு கதையாக மாறிக் கொண்டேயிருக்கிறாய். அதனால் தான் உன்னைத் தேடி வந்தேன்“ என்றது கதை.
“நானே அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். முடிவில்லாத கதை ஒன்றைப் போலிருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக நான் வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது“.
“நீ பிறந்ததே ஒரு கதை. அன்னையைப் பறி கொடுத்து மாமா வீட்டில் வளர்ந்தது ஒரு கதை. தந்தையை வெறுத்தது ஒரு கதை. ஊரைவிட்டு ஒடிவந்தது, காதலித்தது. கைவிட்டது. தற்கொலைக்கு முயன்றது என நீ கதைகளால் ஆனவன். “
“நான் கதைகளிலிருந்து விடுபட விரும்புகிறேன். கதையாகிவிட்டால் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கவிதைகள் அப்படியில்லை. ஒரு வரியைக் கூட உலகம் எளிதாக ஏற்றுக் கொள்ளாது. கவிதை என்பது எதிர்ப்பின் வடிவம்“ .
“நான் உனது பால்ய ஸ்நேகிதன், அதை மறந்துவிடாதே. நாம் ஒரு கோப்பை தேநீரையாவது பகிர்ந்து கொள்வோம்“ என்றது கதை
அவன் கதைக்காகத் தேநீர் தயாரிக்கச் சமையலறைக்குச் சென்றான். கெட்டிலில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கும் நேரத்தில் அவன் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டான்
அவனது அலுவலகத்தில் எவரும் அவனைக் கவிஞன் என்று அறிந்திருக்கவில்லை. அவனது மனைவி, பிள்ளைகள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொந்த கிராமத்தில் வசித்தார்கள். ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ ஊருக்குப் போய்வருவதுண்டு.
அவன் தனது குக்கிராமத்தை கவிதை எழுதுவதற்கான இடமாகக் கருதவில்லை. அங்கேயே வசித்தால் தான் கவிஞனாக இருக்க முடியாது என்று நம்பினான். அவனது கவிதைகளில் ஒருவரியை கூட அவனது மகளோ, மகனோ அறிந்திருக்கவில்லை. அவனுக்கு நண்பர்கள் குறைவு. அவனது அறைத்தேடி வந்து குடிப்பவர்கள் மனதில் அவனைப் பற்றி நல்ல அபிப்ராயமில்லை.
நகரமும் அதன் அலைக்கழிப்பும் உதிரி மனிதர்களும் தனிமையும் துயரமும் தான் கவிதை எழுதும் சூழலைத் தருவதாக நம்பினான். அவனது கவிதைகளில் எரியும் சுடர் கறுப்பு நிறத்திலிருந்தது. நம் காலத்தில் கவிஞனாக வாழுவது சாபம் என்று அவன் நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தான்.
அவனால் சொற்களுக்குள் ஒளிந்து கொள்வதைத் தவிர உலகை நேர் கொள்ள முடியவில்லை.அவன் உண்மையில் ஒரு ஒவியனாக இருக்கவே ஆசைப்பட்டான். கவிதை எழுதும் போது தான் ஓவியனாகிவிடுவதாக நம்பினான்.
உலகின் சகல பொருட்களின் மீதும் தூசி படிவதைப் போலத் தன்மீதும் காலத்தின் தூசி படிவதை உணர்ந்திருந்தான். உண்மையில் தூசி என்பது நிசப்தத்தின் அடையாளம். அது புறக்கணிப்பினை உணர்த்துகிறது என்பதையும் அறிந்திருந்தான்
முப்பது ஆண்டுகளில் அவன் ஐந்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருந்தான். அதுவும் சின்னஞ்சிறிய புத்தகங்கள். எந்தப் புத்தகமும் இரண்டாம் பதிப்பு வரவில்லை. அவன் பென்சிலால் கவிதைகள் எழுதும் கவிஞன். உலகம் அதிநவீனமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது அவன் ரகசியமான துளை ஒன்றின் வழியே கடந்தகாலத்தின் ஆரவராமில்லாத பொழுதுகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். பள்ளி வயது புகைப்படங்களுக்குப் பதிலாகப் பள்ளி வயதில் அணிந்த சட்டையை இப்போதும் பாதுகாத்து வைத்திருந்தான். நட்சத்திரங்களை விடவும் அதன்பின்னுள்ள இருளை அதிகம் நேசித்தான். பொருட்களின் மீது நினைவுபடிந்து எடைகூடிவிடுவதை அறிந்திருந்தான். தான் ஒரு நகரும் படிக்கட்டு என்பது போல உணர்ந்தான். தனது வாழ்க்கை பிரிட்ஜிற்குள் எரியும் சிறுவிளக்கைப் போல அமைதியானது. குளிர்ச்சியானது. அநாதியானது என்று நம்பினான்.
தேநீர் கெட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. இரண்டு கோப்பைகளில் அவன் தேநீரை நிரப்பி எடுத்துக் கொண்டு நடந்தான். வரவேற்பறையில் கதையில்லை. அது வந்து போனதன் அடையாளமாகத் தான் அணிந்திருந்த கிழிந்த சட்டையை விட்டுச் சென்றிருந்தது.
பழைய துணிகள் எதைத் தொட்டாலும் அது கதை சொல்லத் துவங்கிவிடுவதை அவன் உணர்ந்தான்.
கிழிந்த சட்டை உலகின் அபூர்வமான மலர் ஒன்றைப் போல அவன் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.
••