கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்

1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ்.

புதிய நாவலை எழுதுவதற்காக அமர்ந்தால் மனம் வெறுமையாகியிருக்கிறது. அத்தோடு கடன் தொல்லைகள் எழுத விடாமல் செய்கின்றன. செய்வதறியாமல் லண்டனைச் சுற்றி அலைகிறார். அப்போது இறுதிச்சடங்கு ஒன்றினைக் காணுகிறார். அவரது மனதில் ஒரு கதாபாத்திரம் உதயமாகிறது.

டிக்கன்ஸிற்கு விநோதமான பழக்கம் இருந்தது. எங்கே புதிய மனிதர்களைச் சந்தித்தாலும் அவர்கள் பெயரைச் சிறிய நோட்டில் குறித்து வைத்துக் கொள்வார். கல்லறைக்குச் சென்று இறந்தவர்கள் பெயர்களைக் கூட நோட்டில் குறித்து வருவார். பெயர்கள் உண்மையாக இருந்தால் அவர்களைப் பற்றித் தான் எழுதும் கற்பனைக் கதையும் உண்மை என வாசகர்கள் நம்பிவிடுவார்கள் என்பது அவரது எண்ணம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாவல் வெளியாக வேண்டும் என்றுமுடிவு செய்து கொண்டு கிறிஸ்துமஸை மையமாகக் கொண்ட நாவலை எழுத விரும்பினார்.

ஒரு நாள் உணவகத்தில் கேட்ட பெயரைக் கொண்டு புதிய நாவலை எழுத ஆரம்பித்திருந்தார். ஆனால் நினைத்தது போல நாவல் வளரவில்லை. தனது இளமைக்காலத்தில் கேட்ட கிறிஸ்துமஸ் கதைகள். அன்றைய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட முறைகள். நம்பிக்கைகள். இசைபாடல்கள்  இவற்றைக் கொண்டு புதிய நாவலை எழுத முற்பட்ட போது அவரது வீட்டின் பணிப்பெண் வழியாக அது பேய்க்கதையாக மாறியது.

அதன்பின்பு கதாபாத்திரங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கின்றன.

புதிய நாவலை தானே சொந்தமாக வெளியிடுவது என டிக்கன்ஸ் முடிவு செய்கிறார். இந்த முயற்சி எப்படி நடைபெற்றது. அவரது நாவல் எவ்வாறு வெளியானது என்பதை விவரிக்கிறது The Man Who Invented Christmas திரைப்படம். 2017ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பரத் நல்லூரி என்ற இந்தியர். இங்கிலாந்தில் வசிக்கிறார்.

டிக்கன்ஸின் அனைத்து நாவல்களும் திரைப்படமாகியுள்ளன. அவரது வாழ்வை மையமாகக் கொண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஷேக்ஸ்பியருக்குப் பிறகு அதிகம் படமாக்கப்பட்டது டிக்கன்ஸின் நாவல்களே. இந்தத் திரைப்படம் நிஜமும் கற்பனையும் கலந்து எப்படி டிக்கன்ஸ் நாவல் எழுதுகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது

எபினேசர் ஸ்க்ரூஜ் என்ற நாவலின் மையக்கதாபாத்திரம் கிறிஸ்மஸை வெறுக்கும் இரக்கமில்லாத, கூரான மூக்கு கொண்ட கஞ்சனாகச் சித்தரிக்கப்படுகிறார். அவரைச் சந்திக்கும் மூன்று ஆவிகள் வழியாக ஸ்க்ரூஜ் செய்த கடந்த காலத் தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முடிவில் அவர் மனம் மாறுகிறார். கெட்டவன் இறுதியில் நல்லவனாக மாறும் வழக்கமான கதையை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும் தனித்தன்மையுடனும் டிக்கன்ஸ் எழுதியிருக்கிறார்.

பேராசை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை, கஞ்சத்தனம் இவற்றைக் கண்டிக்கும் டிக்கன்ஸ் நாவலின் வழியாகத் தனது தந்தை ஜான் டிக்கன்ஸ் கடனைச் செலுத்தத் தவறியதால் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வையும், தான் அநாதையாக விடப்பட்டுத் தொழிற்சாலையில் கொத்தடிமை போன்று வேலை செய்த இருண்ட நாட்களையும் நினைவு கொண்டிருக்கிறார்

“எழுத்தாளனைப் பொறுத்தவரை நாவல் எழுதுவது என்பது ஆவிகளுடன் உரையாடுவது போன்றது தான்“ என்று விமர்சகர் பிராட்லி கூறியிருப்பது உண்மையே.

டிக்கன்ஸ் காலத்தில் அவரோடு போட்டியிட்ட எழுத்தாளர் தாக்கரே. இப்படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெறுகிறார். தனது நண்பர்கள் மற்றும் பதிப்பாளர்கள் நிச்சயம் இந்த நாவல் தோற்றுப்போய்விடும் என்று சொல்லும் போதும் டிக்கன்ஸ் நாவல் வெற்று பெறும் என உறுதியாக நம்புகிறார்.

1843ல் இந்த நாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகக் கிறிஸ்துமஸ் கதைகளை மக்கள் மத்தியில் டிக்கன்ஸ் வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட முறை டிக்கன்ஸ் மக்கள் மத்தியில் கதை வாசித்திருக்கிறார். இதன் வழியாகப் பெரும் பணம் அவருக்குக் கிடைத்தது. இந்த நாவல் திரைப்படமாகவும் இசை நாடகமாகவும் மேடை நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டிருப்பதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.

••

0Shares
0