இயக்குநர் வசந்தபாலன்
(கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள குறிப்பு.)

எஸ்ரா சிறுகதைகளின் கருவைக் கண்டடைவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளைக் கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார். அப்படி இந்த 125 குறுங்கதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன.
உலகின் உயர்ந்த இலக்கியமாகக் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா தனது மகனுக்காக பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள்” என்று எழுதுகிறார் எஸ்.ரா. அதுவும் அந்த என்ன பொம்மையாம் ?
“கடைப்பையன் பொம்மையை இயக்கி காட்டினான். பொம்மையின் இதயப்பகுதியிலிருந்த சிறிய கதவு திறந்து சிவப்புக்குருவி வெளியே எட்டி சப்தமிட்டது. எல்லோர் இதயத்திற்கும் இப்படியொரு சிறு குருவி இருக்கத்தானே செய்கிறது.” என்கிறார் எஸ்.ரா.
என் இதயத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சாலையில் கை ஏந்தும் எத்தனையோ புலம் சார் தொழிலாளர்களைக் கண்டும் காணாதது போலத் தானே முகம் மூடி முகக்கவசத்துடன் கடக்கிறேன். எனக்குள் குருவியும் இல்லை, இதயமும் இல்லை என்று அந்தக் கதையில் வாழும் குருவி என்னை வெட்கிக் கூனி குறுகச் செய்தது.

இந்தத் தொகுப்பில் ஒரு துளிக்கண்ணீர் என்றொரு கதை தான் என்னை உலுக்கியது. இந்தக் கதையைப் படித்த பிறகு தான் உலகில் கண்ணீரை விட எடையுடையது எதுவுமில்லை என்று தெரிய வந்தது.அலுவலக நண்பன் ஒருவன் நாதனை தன் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட அழைக்கிறான். நாதன் அவ்வீட்டிற்குச் சாப்பிடச் செல்லும் வேளையில் கணவன் மனைவியிடையே சின்னச் சண்டை நிகழும் சப்தம், சமையற்கட்டில் இடுக்கின் வழியாகக் கசிகிறது. நாதனுக்கு அந்தப் பெண் சோறு பரிமாறும் போது அவளை அறியாமல் ஒரு துளிக்கண்ணீர் சாப்பாட்டில் விழுந்து விடுகிறது.அதை நாதன் கவனித்து விடுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படிச் சாப்பிடுவது இந்த வரி என்னைக் கொந்தளிக்க வைத்தது. அந்தத் துளிக்கண்ணீர் அவனைத் தூங்கவிடவில்லை. வேலை மாற்றலாகிக் கொண்டு ஓடக்கூடிய துயரத்தை அளித்துவிட்டது. துளிக்கண்ணீர் விழுந்து உணவு என்ற சொற்றொடர் பல்வேறு வினாக்களை இந்தியச் சமூகம் நோக்கி எழுப்புகிறது. இத்தனை வருடங்களாக நாதன் பெண்ணின் கண்ணீரைக் காணாதவனா ?
நம் சமையலறைகள் பெண்ணின் கண்ணீரால் தானே நிரம்பி வழிகிறது. கண்ணீரின் ருசி கலக்காத எந்த உணவும் இல்லை என்பது நாதனுக்குத் தெரியுமா? தெரியாதா? இந்த ஒட்டு மொத்த ஆண்களும் அது தெரியாமல் தான் வக்கணையாகக் குறை கூறியபடி சாப்பிடுகிறார்களா என்று அடுத்தடுத்த கேள்விகளை அந்தக் குறுங்கதை எனக்குள் எழுப்பியவண்ணம் இருக்கிறது.
கானலை அருந்தும் யானையாக இந்தக் கதைகளை அமுதென எண்ணி உண்டு கிறங்கி மயங்கிக் கிடக்கிறேன். இந்தக் குறுங்கதைக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கதைகளைக் கண்டறிவதில் தான் இந்தக் கதையின் வெற்றி இருக்கிறது. சூத்திரங்கள் போல் குறுங்கதைக்குள் பல திறப்புகளை உண்டாக்கிய எஸ்ரா வாசகன் திறந்து கொள்வான் என்று விட்டு வைத்திருக்கிறார். வழியும் கண்ணீரை அவசரமாகத் துடைத்து விட்டுச் செல்வதும் அதை உள்ளங்கையில் ஏந்தியவண்ணம் மனதிற்குள் நுழைவதும் நம் வாசிப்புத் தவம்.
கர்னலின் நாற்காலி போன்ற குறுங்கதைகளுக்குள் பெரும் காப்பியமே ஒளிந்திருக்கின்றது.
பறவைகளின் தையற்காரன் போன்று மாய யதார்த்தவாதம் பேசும் கதைகள் ஒரு கனவைப்போல நம்மை வாழ அழைக்கின்றன.
காதலுற்ற சிற்பங்கள் போன்ற குறுங்கதை தவறவிடக்கூடாத மின்மினிப்பூச்சியின் ஒளியாய்த் தெரிகிறது.
வழி தவறி வீட்டிற்குள் வந்த வண்ணத்துப்பூச்சி நம்மை மனித மலர் என எண்ணி வந்தமருமே அந்தத் தருணத்தைச் சிரிக்கும் நட்சத்திரம் போன்ற சில கதைகள் வழங்குகின்றன.
நூறு வயதைக் கடந்து வாழும் ஒரு கதைசொல்லி குழந்தைகளை அமர வைத்துச் சொல்லும் அழியாக்கதைகளாக இந்தக் குறுங்கதைகளைப் பார்க்கிறேன்.
•••