கதைகளின் வரைபடம்

லிடியா டேவிஸ் சிறந்த சிறுகதையாசிரியர். குறிப்பாக அவரது குறுங்கதைகள் புகழ் பெற்றவை. மேடம்பவாரி உள்ளிட்ட சில நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்பு Essays One,

இதில் அவரது எழுத்துலகப் பிரவேசம் மற்றும் அவருக்கு விருப்பமான எழுத்தாளர்கள். கதைகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். லிடியாவின் உரைநடை பனிச்சறுக்கு செல்வது போலச் சறுக்கிக் கொண்டு போவது. அவர் தாவிச்செல்லும் புள்ளிகள் வியப்பளிக்கக் கூடியவை.

கல்லூரி நாட்களிலே அவருக்குச் சிறுகதை ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதுவும் நியூ யார்க்கர் இதழில் தனது கதை வெளியாக வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணம் அவரை எப்படி எழுதுவதில் தீவிரமாகச் செயல்பட வைத்தது. எப்படி அவரது கதைகள் நியூயார்க்கரில் வெளியாகின என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆரம்பக் காலத்தில் சாமுவேல் பெக்கட்டின் எழுத்துகள் வாசிக்கச் சிரமமாக இருந்தன. ஆனாலும் பெக்கட் சொற்களைத் தேர்வு செய்யும் விதமும் அவரது செறிவான மொழிநடையும் பிடிக்கத் துவங்கின எனும் லிடியா அவரிடம் தான் நிறையக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.

அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர் ஐசக் பேபல். அவரது சிறுகதைகள் கச்சிதமாக எழுதப்பட்டவை. அவற்றின் துல்லியம் வியப்பூட்டக்கூடியது எனும் லிடியா Red Cavalry தொகுப்பை மிகவும் பாராட்டுகிறார்

Writers working in very short forms are usually poets என்கிறார் லிடியா டேவிஸ். அதற்கு முக்கியக் காரணம் கவிஞர்கள் சொற்களின் மீது அதிகக் கவனம் கொண்டவர்கள். உரைநடை எழுத்தாளரோ வாக்கியங்களின் மீது தான் அதிகக் கவனம் கொள்வார். அதுவும் நீண்ட வாக்கியங்களை எழுதுவதில் ஆசை கொண்டிருப்பார். துல்லியமாகக் காட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் நுணுக்கமாக எழுதிச் செல்வார். குறுங்கதைகளுக்குக் கச்சிதமான சொற்தேர்வு முக்கியம். ஆகவே கவிஞர்கள் அதைச் சிறப்பாகச் செய்கிறார்கள் எனலாம். ஆனாலும் அதைப் பொதுமைப்படுத்த முடியாது. கவாபத்தா, காப்ஃகா போன்ற கதாசிரியர்கள் குறுங்கதைகளில் நிகழ்த்திய அற்புதம் நிகரற்றதே.

தனது குறுங்கதை ஒன்றை எப்படி எடிட் செய்து அதன் இறுதிவடிவத்தைக் கொண்டு வருகிறார் என்பதைப் பற்றிய அவரது கட்டுரை எளிய பாடம் போலவேயிருக்கிறது.

தமிழில் கடந்த சில ஆண்டுகளாக நிறையக் குறுங்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக வாசித்து அதன் வடிவம் மற்றும் தனித்துவங்கள், நிறைகுறை பற்றி இதுவரை யாரும் விமர்சனம் எழுதவில்லை. மேலும் இந்த வடிவம் குறித்த விவாதங்கள் முன்னெடுக்கபடவில்லை. 

கவிதைக்கும் கதைக்கும் இடையில் உள்ள இலக்கிய வடிவமாக இதனைக் காணுகிறேன். கண்ணாடிச் சிற்பங்கள் செய்வது போல குறுங்கதைகள் எழுதுவது சவாலான வேலை.  

லிடியா டேவிஸ் தனக்குக் குறுங்கதைகள் எழுதுவதில் ஆர்வம் எப்படி உருவானது. இதற்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்கள். அவர்களின் குறுங்கதைகள். அது ஏன் முக்கியமானது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் விரிவாகவே எழுதியிருக்கிறார். குறிப்பாகச் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி குறித்த அவரது புரிதல் சிறப்பானது.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது நாம் படிக்க வேண்டிய ஐம்பது எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகங்கள் பற்றி அறிந்து கொண்டுவிடுகிறோம். அவற்றை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் லிடியா ஏற்படுத்திவிடுகிறார். இது போலவே அவருக்கு ஆதர்சனமான படைப்பாளிகளை எவ்வளவு தீவிரமாக வாசித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்கிறோம். கதைகளைப் போலவே அவரது கட்டுரைகளும் அளவில் சிறியது. கச்சிதமானது.

••

0Shares
0