கதைகளின் வேட்டைக்காரன்.

எடுவர்டோ காலியானோ லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். வரலாற்றாசிரியர். இவரது வரலாறு என்னும் கதை மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரவிக்குமார் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

காலியானோவின் லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் என்ற வரலாற்று நூலும் தமிழில் வெளியாகியுள்ளது.

காலியானோ வரலாற்றின் மையப்புள்ளிகளை, முக்கிய இயக்கங்களை, அறியப்படாத உண்மைகளை, பண்பாட்டு விநோதங்களைச் சிறிய துண்டுகளாகப் பதிவு செய்கிறார். அவை மின்மினிப்பூச்சியிடமிருந்து வெளிப்படும் வெளிச்சம் போன்றது.

சர்வதேச அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு தொகுப்பினை செய்ய இயலும். உடைந்த கண்ணாடி சில்லுகளைப் போன்ற இந்தப் பதிவுகள் தன்னளவில் முழுமையானவை. அவற்றைக் காலியானோ பொருத்திக்காட்டும் விதமும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்வியும் முக்கியமானவை.

கதை சொல்லுதலின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட காலியானோ பல்வேறு நாடுகளின் கதைமரபுகளை, பழங்குடி மக்களின் கதைகளை ஆராய்ந்திருக்கிறார். அவற்றை அவரது பதிவுகளில் நிறையவே காணமுடிகிறது.

இவரது கடைசி நூலாக வெளிவந்துள்ளது Hunter of Stories. காலியானோவின் மறைவிற்குப் பிறகு வெளியான இந்த நூல் அவரது முந்தைய வரலாற்றுச் சுவடுகளைப் போலவே பண்பாடு மற்றும் வரலாற்றின் முக்கியத் தருணங்களை, உண்மைகளை, நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது

கதைசொல்லிகள் அழிந்த நினைவுகளின் காலச்சுவடுகளை கண்டறியக்கூடியவர்கள் காதலும் வலியும் மறைந்து போயிருக்கலாம். ஆனால் ஒரு போதும் அழிந்து போய்விடாது என்றொரு குறிப்பை எழுதியிருக்கிறார்

சீனாவின் பருவகால மாற்றங்களை முன்னறிந்து சொல்கிறவர்களை”காற்றின் கண்ணாடிகள்” என்று அழைத்தார்கள் என்கிறார். காற்றின் கண்ணாடி என்பது அழகான பிரயோகம்.

ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவு. நெல் பயிடுகிறவர்கள் அறுவடைக்குப் பிறகு வைக்கோலைச் சேகரித்துப் பாதுகாத்துக் கொள்வார்கள். அப்படிச் செய்யாவிட்டால் தீவினையின் காற்று நெல்லின் ஆன்மாவைக் கொண்டு போய்விடும் என்றொரு நம்பிக்கையிருக்கிறது என்கிறார்.

சாக்லேட் அறிமுகமான காலத்தில் அது தடைசெய்யப்பட்ட பொருளாக இருந்தது. சாக்லேட் பானத்தைக் குடித்துவிட்டுத் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்றொரு குறிப்பும் காணப்படுகிறது.

அமெரிக்காவின் பூர்வ குடி இந்தியர்களில் ஒருவருக்குக் கூட வழுக்கை கிடையாது என்ற விசித்திர தகவலும் இதில் இருக்கிறது.

எத்தியோப்பியாவில் தான் காபி முதலில் தோன்றியது வக்கா கடவுளின் கண்ணீர் தான் காபியாக மாறியது. என்ற அந்த மக்கள் நம்புகிறார்கள்.

நினைவுகள் தான் பண்பாட்டின் விதை. அதை இழக்க அனுமதிக்கக் கூடாது என்ற குரலை நூல் முழுவதும் கேட்கமுடிகிறது

வரலாற்றை விரிவாகப் பக்கம் பக்கமாக எழுதுவதை விடவும் அதன் சுளைகளை அடையாளப்படுத்தி நாமாக வரலாற்று உண்மைகளை ஆராயச் செய்வதே காலியானோவின் எழுத்துமுறை.

அது கதைகளின் வேட்டைக்காரனிலும் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது.

••

0Shares
0