கதைகள் செல்லும் பாதை- 2

கால் நகங்கள்

“காலில் நகங்கள் எதற்காகப் படைக்கபட்டிருக்கின்றன. அதனால் என்ன பிரயோசனம் ?“ என ஒரு சிறுமி தனது தாயிடம் கேட்கிறாள்

“கடவுளின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது. நமக்குத் தான் கால்நகங்களைப் பயன்படுத்த தெரியவில்லை“ என்று அந்தப் பெண்ணின் தாய் சொல்கிறாள்

இப்படியொரு உரையாடலை யூத எழுத்தாளரான வெல்வ் செர்னின் நாவலில் கண்டேன். கால்நகங்களைப் பற்றி நம்மில் பெரும்பான்மையினர் கவனம் கொள்வதேயில்லை ஆனால் தன்னைக் கவனிக்கத் துவங்குவது கால்களில் இருந்தே துவங்குகிறது என்கிறாள் இந்த நாவலில் வரும் தாய்.

அது தான் உண்மை. நாம் கால்களின் மீது கவனம் கொள்வதில்லை. நடனக்கலைஞர்களே கால்களைக் கவனிப்பவர்கள். அழகு நிலையங்களில் கால்கள் அழகுபடுத்தபடுகின்றன. அதில் பெண்களே அதிகமும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்களுக்கு கால்களை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் குறைவே.

நாம் முழுஒய்வாக இருக்கிறோம் என்றால் அப்போது தான் கால்நகங்கள் கவனத்திற்கு வருகின்றன. அந்த நேரத்தில் தான் அவற்றை வெட்டி சீர் செய்கிறோம். மற்றவகையில். கால்களை மறைத்துக் கொள்ளவே பெரும்பாலும் விரும்புகிறோம்.

ஒரு கதை எழுதுவதற்குப் பெரிய நிகழ்ச்சிகள் தேவையில்லை. தேர்ந்த எழுத்தாளரால் கால்நகங்களை வைத்துக் கூடச் சிறப்பாகக் கதை எழுதிவிடமுடியும். அப்படியொரு குறுங்கதையை இன்று காலையில் படித்தேன். அது நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுனாரி கவாபட்டா எழுதிய MORNING’S NAILS குறுங்கதை .

இவரது தூங்கும் அழகிகளின் இல்லம் நாவல் மிகவும் புகழ்பெற்றது. இந்த நாவலின் உந்துதலால் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது கடைசி நாவலான Memories of My Melancholy Whores எழுதினார். Thousand Cranes. Snow country. The Master of Go , The Old Capital போன்றவை அவரது முக்கிய நாவல்கள்.

கடந்த ஒரு வாரமாக தினம் காலையில் ஒரு சிறுகதையை வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு வருகிறேன். இந்த வாசிப்பு அனுபவம் அந்த நாளை புத்துணர்வு கொள்ளச் செய்கிறது .

சிறுகதை எழுத நினைப்பவர்கள் நிறைய சிறுகதைகள் படிக்க வேண்டும்.  எழுத்தின் நுட்பங்களை யாரும் கற்றுத்தந்துவிட முடியாது. வாசிப்பே அவற்றைப் புரிய வைக்கும். கதையின் பின்னல்முறையை எழுத்தின் வழியாகவே அறிந்து கொள்ள முடியும். மொழியும் கதை சொல்லும் முறையும் கைவர நிறையச் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்.

கவாபட்டாவின் இக்கதை ஒரு இளம்பெண்ணைப் பற்றியது. அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வசதியில்லாத வீட்டில் வாழ்கிறாள். அவள் வறுமையின் காரணமாக வேசையாக இருக்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் அவளைத் தேடி வரும் ஆண் வீட்டில் ஒரு கொசுவலை கூட இல்லையே என்பதைப் பற்றிக் குறை கூறுகிறான்.

நீங்கள் உறங்கும் போது நான் விழித்திருந்து கொசுவை விரட்டுவேன் எனச் சமாதானம் சொல்லுகிறாள்.

அது போலவே விளக்கை அணைத்தவுடன் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு அந்த சிறுநெருப்பைப் பார்த்தபடியே தனது சிறுவயது நாட்களை நினைவு கொள்கிறாள்.

ஒரு நாள் ஒரு வயதானவர் அவளைத் தேடி வருகிறார். அவரும் படுக்கையைச் சுற்றி கொசுவலையில்லை என்பதைக் கவனித்துக் கேட்கிறார். எல்லோருக்கும் சொல்லும் அதே பதிலை அந்தக் கிழவருக்கும் சொல்கிறார். கிழவர் இதோ வருகிறேன் என வெளியேறிப் போய்விடுகிறார்

வந்த வாடிக்கையாளரை இப்படி விரட்டிவிட்டோமே எனக் கவலைப்படுகிறாள். அந்தக் கிழவர் அரைமணி நேரத்தின் பின்பு அவளது வீட்டிற்கு வந்து சேருகிறார். அவர் கையில் புதிய வெண்ணிற கொசுவலை. அவளால் நம்பமுடியவில்லை.

அந்தக் கிழவரே அந்தக் கொசுவலையைப் படுக்கையைச் சுற்றிலும் மாட்டுகிறார். கட்டிலின் மீது ஒரு தாமரை மலர்ந்திருப்பது போல இருந்தது அக் கொசுவலை. அவள் ஆசையாகப் படுக்கையில் ஏறி படுத்துக் கொள்கிறாள். கொசுவலைக்குள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்ற அவளது நீண்டநாள் கனவு பலித்துவிட்டதைப் போல அவள் படுத்த சில நிமிசங்களில் உறங்கிப் போகிறாள். அந்தக் கிழவர் எங்கே படுத்தார். எப்போது கிளம்பி போனார் என்று எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. காலையில் அவளது காதலனே அவளை எழுப்புகிறான்.

அழகான புதிய கொசுவலையைக் கண்டு நாளைக்கே திருமணம் செய்து கொள்வோமா எனக்கேட்கிறான். அவளது முகத்தில் கொசுவலை துணி உராய்கிறது. அந்த வெண்ணிற லினன் அவள் மீது படும் போது தன்னை ஒரு மணப்பெண்ணாக அவள் உணருகிறாள். பின்பு அவள் நிதானமாகத் தனது கால்நகங்களை வெட்டத் துவங்குகிறாள். அப்போது தான் நீண்ட நாட்களாக அவள் காலை கவனிக்கவில்லை என்ற நினைப்பே வருகிறது எனக் கதை முடிகிறது.

கால்நகங்களை வெட்டுவது என்பது நிறைவான தருணத்தின் அடையாளம். அந்தப் பெண்ணுக்குக் கிடைத்தது நல்ல உறக்கம். அவள் எத்தனையோ பேரை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள். ஆனால் அவளை ஒரு கிழவரே சந்தோஷப்படுத்துகிறார். உறங்கும் பெண்ணின் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் என அந்தக் கிழவர் நினைத்திருப்பார். போலும் பூக்களைச் செடியில் அப்படித் தானே பார்க்கிறோம். வானவில்லை வேடிக்கை பார்ப்பதே போதுமானதாகத் தானே இருக்கிறது.

கதையின் வழியாக அந்தப் பெண்ணின் வறுமை, பொறுப்புணர்வு. உறக்கமின்மை அழகாக வெளிப்படுத்தப்படுகிறது

அந்தப் பெண்ணின் கட்டிலில் கொசுவலை மாட்டுவதற்காகக் கொக்கிகள் இருக்கின்றன. கிழவர் அதுவாவது இருக்கிறதே எனக் கேலி செய்கிறார். அவளுக்குத் தெரியும் நிச்சயம் ஒரு நாள் தனது கனவை நிறைவேறும் என்று.

இக்கதையில் வரும் பெண் வாடிக்கையாளனை சந்தோஷப்படுத்த இரவெல்லாம் கண்விழித்து விசிறி வீசுவதாகச் சொல்கிறாள். ஒருவேளை அப்படி வீசியிருக்கவும் கூடும். ஆனால் ஒருவரும் அவளது உறக்கத்தைப் பற்றிக் கவலைப்படவேயில்லை.

கவாபட்டா ஜென் கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் கச்சிதமான வடிவத்தில் கவித்துவமான வரிகளைக் கொண்டு எழுதுகிறார். அவரது நாவல்களும் நூறு முதல் இருநூறு பக்கங்களுக்குள் எழுதப்பட்டவையே. இக்கதை வேசையர் வீட்டின் அறியப்படாத பக்கத்தைக் காட்டுகிறது. இக்கதையை 1926ல் எழுதியிருக்கிறார்

28 வரிகள் தான் மொத்த கதையும். ஆனால் அதற்குள் கவாபட்டா இளம் பெண்ணின் அவலநிலையைத் துல்லியமாக அடையாளப்படுத்தி விடுகிறார்..

உறக்கத்தின் அருமை கிழவருக்குத் தான் தெரியும். முதியவர்களுக்கு உறக்கம் குறைவு. அதுவும் ஆழந்த உறக்கம் வாய்ப்பதில்லை. ஆகவே அவர் தூக்கத்தை அவளுக்குப் பரிசாக அளிக்கிறார்.

இதே விஷயம் தான் தூங்கும் அழகிகள் இல்லம் (The House Of Sleeping Beauties )நாவலிலும் வருகிறது. உறங்கும் பெண்களின் அருகே படுத்துக் கொள்ளும் கிழவரின் கதை தான் அது.

ஜப்பானின், ஒசாகாவில் பிறந்த கவாபட்டா நான்கு வயதிலே பெற்றோர்களை இழந்தார். பாட்டி வீட்டில் வளர்க்கபட்ட அவர் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு தாய் வழி உறவினர்களால் வளர்க்கபட்டார். கவாபட்டாவின் கதைகள் இந்த நிராதரவை வெளிப்படுத்துகின்றன. உறவிற்கான ஏக்கத்தையும் அன்பிற்கான தவிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

கவாபட்டா  நாம் தேடி வாசிக்க வேண்டிய முக்கிய எழுத்தாளர். அவரது நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன.

1921 ஆம் ஆண்டில் இவரது தனது முதல் சிறுகதை வெளியானது. 1968 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார் தனது 72வது வயதில் தற்கொலை செய்து கொண்டு கவாபட்டா இறந்து போனார்.

, ​​

0Shares
0