கதைகள் செல்லும் பாதை 1

பயமும் காமமும்

அருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

இவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy Biswas (1973), The Apprentice (1974), The Last Labyrinth (1981) போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். 1979 உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து சிறப்புரையாற்றியிருக்கிறார். 1983ல் இவருக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. The Survivor என்ற இவரது சிறுகதை தொகுப்பில் பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன

••

அருண்ஜோஷியின் குழலூதும் பையன் என்ற சிறுகதையை வாசித்தேன். கதை ஒரு மந்திரத்தில் துவங்குகிறது. சிறுவயதில் எதற்கேனும் பயம் ஏற்பட்டால் சொல்லும்படியாக  அந்த மந்திரத்தை அவனுக்குக் கற்பிக்கிறார்கள் . அந்த மந்திரத்தைப் பல வருஷங்கள் அவன் சொல்லி வந்திருக்கிறான். ஆனால் கடந்த சில வருஷமாக அதைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது எனக் கதையின் நாயகனைப் பற்றி அருண்ஜோஷி அறிமுகம் செய்கிறார்.

நடுத்தர வயதுள்ள பணக்கார தொழில் அதிபர் தான் கதையின் நாயகன். அவனுக்கு ஒரு நாள் விமானத்தில் பறக்கும் போது திடீரென மரணப் பயம் ஏற்படுகிறது. ஒருவேளை இப்படியே விமானம் வெடித்துக் கடலில் விழுந்து தான் செத்துவிடுமோமா எனத் தோன்றுகிறது. தன் மனதில் கட்டிய கோட்டைகள். தனது கனவுகள் எல்லாமும் அழியப்போகிறதா எனப் பதைபதைப்பு அடைகிறான்.

தன்னுடைய பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் விமனாத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறான். விமானம் கடலின் மீது பறந்து கொண்டிருக்கிறது. பயம் அவனது கால்பெருவிரலில் துவங்கி உச்சந்தலைவரை ஏறுகிறது. மரணம் நிச்சயம். இதுவே கடைசிப் பயணம் என மனம் அரற்றுகிறது. அதற்கு ஏற்றார் போல விமானம் தள்ளாடுகிறது. விமானப் பயணிகள் எவரும் அதைப் பொருட்டாகவே கருதவில்லை.

அதன்பிறகு விமானப் பணிப்பெண் தரும் உணவையே, அருகிலிருப்பவர் பேசுவதையோ அவனால் கவனம் கொள்ள முடியவில்லை. மனதில் பயம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதயம் கனத்துப் போகிறது. முகம் வியர்த்து வழிகிறது.

தன்னுடைய கடந்த வாழ்க்கையை அவன் திரும்பி பார்த்துக் கொள்கிறான். செக்ஸ் உள்ளிட்ட எதிலும் அவனுக்குப் பெரிய விருப்பம் கிடையாது. மனைவியை அவன் திருப்திப் படுத்தவில்லை என அவள் குறைபட்டுக் கொள்ளும் போது கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறான். நிறையச் சம்பாதிக்கிறான். வசதியாக வாழ்கிறான். நிறைய நாடுகளுக்கு வணிகப்பயணம் மேற்கொள்கிறான். நிறைய எதிர்காலக் கனவுகளைக் காணுகிறான்.

ஆனால் இன்று திடீரென விமானம் வெடித்துச் சிதறி இந்தக் கனவுகள் நசுங்கப் போகிறதே என்ற எண்ணம் மனதை துன்புறுத்துகிறது . நல்லவேளை விமான விபத்து எதுவும் நடக்கவில்லை. விமானம் பத்திரமாகத் தரை இறங்குகிறது. விமான நிலைய வாசலில் அவனை வரவேற்க ஆட்கள் பூங்கொத்துடன் காத்திருக்கிறார்கள். மரணப் பயம் மனதின் மூலைக்குப் போய் ஒளிந்து கொள்கிறது

பின்பு வழக்கம் போலத் தனது வேலையில் பரபரப்பு அடையத் துவங்குகிறான். சில நாட்களுக்குப் பிறகு கல்கத்தாவிற்கு அலுவலக வேலையாகப் போகிறான். அங்கே நட்சத்திரவிடுதி ஒன்றில் தங்குகிறான். இரவில் திடீரென மரணப் பயம் விழித்துக் கொள்கிறது. மாரடைப்பு வரப்போகிறது. தான் சாகப்போகிறோம் எனப் பயந்து நடுங்குகிறான். இதயம் படபடக்கிறது. கை வலிப்பது போலிருக்கிறது.

விடுதியின் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பயப்படும் படியாக எதுவுமில்லை. பகல் முழுவதும் அறையிலே அடைந்து கிடப்பதால் இப்படி ஆகியிருக்கிறது. காலார நடந்து போய் வாருங்கள் என்கிறார்.

அதன்படி ஹோட்டலை விட்டு வெளியேறி நடக்கிறான். அப்போதும் பயம் விடவில்லை. பாதி வழியில் திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான். இருட்டில் தனியே நடந்து வரும் போது திடீரென ஒரு ஆள் அவனை எதிர்கொண்டு பெண் வேண்டுமா எனக்கேட்கிறான்.

வேண்டாம் போ என ஒதுக்கி தள்ளிவிட்டு அறைக்குத் திரும்புகிறான். ஆனால் அறைக்கு வந்தபிறகு பெண் வேண்டும் என்று மனதில் ஆசை எழுகிறது.

தன்னுடைய பயத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரேயொரு மருந்து தான் இருக்கிறது. அது காமம். ஒரு பெண்ணால் மட்டுமே தன்னைப் பயத்திலிருந்து விடுபடச் செய்யமுடியும் என நினைக்கிறான். அதன்படி கல்கத்தாவில் அழகான பெண் ஒருத்தி ஆசைமனைவியாக வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான். அப்படியொருத்தியும் கிடைக்கிறாள்.

அவளுக்குத் தனியே வீடு எடுத்துத் தருகிறான். அலுவலக வேலையாக வரும் போது அவளுடன் தங்குகிறான். அவளது அழகும் இளமையும் அவனது மரணபயத்தை விலக்கிவிடுகின்றன. பிறகு அவனுக்கு மரணப் பயமே உருவாகவில்லை.

வணிகத்தில் நிறையச் சம்பாதிக்கிறான். ஆசைமனைவியின் அழகில் மயங்கி அடிக்கடி கல்கத்தா போகிறான். ஒருமுறை அப்படிப் பயணம் செய்யும் போது இரவில் அவள் வீட்டிற்கு வருவதாகப் டெலிபோன் செய்கிறான். டெலிபோனை அவள் எடுக்கவில்லை. நேரில் போய்ப் பார்க்கலாம் எனக் கிளம்புகிறான். வாடகை கார் கிடைக்கவில்லை. ஹோட்டலின் விலை உயர்ந்த காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி போகிறான். மனதில் அவளுடன் கூடும் காட்சி படமாக ஒடுகிறது. அவள் வீட்டின் மற்றொரு சாவி அவனிடமிருந்தது. ஆகவே அதை வைத்து திறந்து உள்ளே போகிறான். அங்கே ஆசைமனைவி படுக்கையில் உடையின்றிப் படுத்துகிடக்கிறாள்

எதிர்பாராமல் வந்து நிற்பவனைக் கண்டு அதிர்ச்சியில் கத்துகிறாள்.

ஏன் இந்தக் கோலம் என அவன் கேட்கிறான்

அத்தை வீட்டிற்குப் போய்விட்டு இப்போது தான் திரும்பினேன். மழையில் நன்றாக நனைந்துவிட்டேன். அதான் ஈரஉடைகளைக் களைந்து போட்டிருக்கிறேன் என்கிறாள்

அவளுக்காக வாங்கி வந்த வைர நெக்லெஸ் ஒன்றை எடுத்துக்காட்டுகிறான். அதை ஆசையாக வாங்கி அணிந்து கொள்கிறாள். படுக்கையில் அவளுடன் உறவு கொள்ள முயற்சிக்கும் போது அவனது உடலை தள்ளிவிட்டு தனியே படுத்துக் கொள்கிறாள்

என்ன கோபம் எனக்கேட்க. அத்தைக்குப் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தான் தர வேண்டும் என்கிறாள்

ஏற்கனவே கொடுத்த பணம் என்னவாயிற்று எனக்கேட்கிறான்

வீடு கட்டுகிறாள். அதனால் செலவாகிவிட்டது என்கிறாள்

அவள் கட்டுவது வீடா, அரண்மனையா எனக் கோபத்தில் சப்தமாகக் கேட்கிறான்

ஏன் நாங்கள் அரண்மனை கட்டக்கூடாதா என அவளும் கோபமாகக் கேட்கிறாள்

யார் பணத்தில் யார் அரண்மனை கட்டுவது. உன் அத்தைக்குப் பணம் தர முடியாது என்கிறான்

ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என அவள் முறைக்கிறாள்

உன்னை விட்டால் வேறு பெண் கிடைக்க மாட்டாள் எனப் பணம் பறிக்க நினைக்கிறாயா.. இந்த நிமிசத்தோடு நம் உறவு முறிந்துவிட்டது. நான் பரிசாகக் கொடுத்த நகையைக் கழட்டி குடு.. என்று கத்துகிறான்

அவள் கழுத்தில் இருந்த வைரநகையைக் கழற்றி வீசுகிறாள்

நாளை காலை இந்த வீட்டை காலி செய்ய வேண்டும். இனி நீ யாரோ.. நான் யாரோ என அவளிடமிருந்து விடை பெற்று இருட்டிலே அறைக்குத் திரும்ப நடக்கிறான்

அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நிமிச நேரத்தில் யாவும் முடிந்துவிடுகிறது

இருட்டில் தனியே வரும் அவனை ஒரு வழிப்பறி திருடன் மறித்துக் கத்தியை காட்டி பணம் கேட்கிறான். அவனிடம் தன் கோபத்தைக் காட்டுகிறான் பிசினஸ்மேன். அவனோ கத்திமுனையில் நகை, மோதிரம், வாட்ச்.பணம் எல்லாவற்றையும் பறித்துவிட்டுப் பிசினஸ்மேனை அடித்துப் போட்டுவிட்டுப் போகிறான்

சாலையில் மயங்கி கிடந்தவனை ஒரு சிறுவன் காப்பாற்றுகிறான். மறுநாள் கண்விழித்தபோது அந்தச் சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்கிறது.

அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைக்கிறான் பிசினஸ்மேன். ஆனால் கையில் பணமில்லை. ஆகவே அறைக்குப் போய் எடுத்துத் தருவதாக அவனுடன் சிறுவனையும் அழைத்துப் போகிறான்.

ஹோட்டலுக்குள் போய்ப் பணம் எடுத்துவிட்டு திரும்பி வரும் போது அந்தச் சிறுவனைக் காணவில்லை.

அதன்பிறகு அந்தப் பகுதி முழுவதும் அந்தச் சிறுவனைத் தேடுகிறான். அவன் கிடைக்கவேயில்லை.

துப்பறியும் ஆட்களைக் கொண்டு கூடத் தேடுகிறான். அந்தப் பையன் கிடைக்கவேயில்லை.

அந்தச் சிறுவன் யார். எதற்காகத் தனக்கு உதவி செய்தான் என அந்தப் பிசினெஸ்மேனுக்குப் புரியவேயில்லை எனக் கதை முடிகிறது

••

கதையின் முதற்பாதி மிகச்சிறப்பு. இரண்டாவது பாதியில் கதை வேறுபக்கம் திரும்பிவிடுகிறது. அந்தப் பெண்ணை உதறி பிசினெஸ்மேன் இரவில் தனியே நடப்பதுடன் கதை முடிந்துவிடுகிறது. பிற்பகுதி கதையின் அடுத்தக் கட்டம். அது தனிக்கதை.

இக்கதை பயத்திற்கும் காமத்திற்குமான உறவை பேசுகிறது. அதிலும் குறிப்பாக மரணபயம் தான் காமத்திற்கான ஆதார தூண்டுதல் என்கிறது. உண்மையே. இதே விஷயத்தை மைக்கேல் கிரெக்டன் என்ற அமெரிக்க எழுத்தாளரும் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

காமம் ஒரு வகையில் சிருஷ்டி. இன்னொரு விதத்தில் அடைக்கலம். உடல்கள் ஒன்று சேரும் போது நான் அற்ற நிலை உருவாகிறது. உடல் எடையற்றுப் போகிறது. மிதத்தல் உருவாகிறது. இந்த அந்தர நிலையில் பயம் காணாமல் போய்விடுகிறது.

இக்கதையில் வரும் பிசினெஸ்மேன் வணிகத்தைப் போலவே உறவையும் கையாளுகிறான். எல்லாமும் கொடுக்கல் வாங்கல் என்றே நினைக்கிறான். திட்டமிடுதல். அதைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுதல் என்ற தனது வணிகச் செயல்பாட்டினை போலவே ஆசைமனைவியிடமும் நடந்து கொள்கிறான்.

அந்தப் பெண் தனது அத்தையைப் பார்த்து வந்ததாகச் சொல்வது ஒரு பொய்யாகவும் இருக்கலாம். அவள் மழையில் நனைந்து திரும்பியிருக்கிறாள். எங்கே சென்றிருந்தாள் என்பது கதையில் சொல்லப்படவில்லை.

அவள் தன் உடலைக் கொண்டு அவனை வெல்கிறாள். தன்வசப்படுத்திக் கொள்கிறாள். அவள் போனை எடுக்கவில்லை. தன்னைக் காத்திருக்க வைக்கிறாள் என்ற பதைபதைப்பு அந்த மனிதனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. உடனே அவளைத் தேடி அடைய வேண்டும் என்று உக்கிரமாக நடந்து கொள்கிறான். காமம் மனதிலிருந்து உடலுக்குள் இறங்கும் வழியைக் கதை அழகாகச் சித்தரிக்கிறது.

ஆசை நாயகிக்காகப் புறநகர் பகுதியில் ஒரு வீட்டின் முதற்தளத்தை வாடகைக்குப் பிடித்துத் தந்திருக்கிறான். ஆசை நாயகிகளுக்கு முதல்தளமே சிறப்பானது என்று அவன் கருதுகிறான். தான் வந்து போவதை ரகசியமாக வைத்துக் கொள்கிறான். உண்மையில் அவன் இப்போது நிறையச் சிறிய பயத்தால் பின்னப்பட்டிருக்கிறான்.

தனது கள்ளஉறவு வீட்டிற்குத் தெரிந்து போய்விடுமோ என்ற பயம். தன்னை ஏமாற்றிப் பணம் பறித்துவிடுவார்களோ என்ற பயம். அவளுக்கு வேறு காதலர் யாராவது இருக்ககூடுமோ என்ற பயம். இப்படியாக இந்தச் சிறிய பயங்கள் யாவும் ஒன்று சேர்ந்து அவனது மரணபயத்தை விரட்டியடிக்கின்றன.

கதையில் வரும் புல்லாங்குழல் ஊதும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணன் தான் என்பது போன்ற மயக்கத்தைக் கதை உருவாக்குகிறது.

நடுத்தர வயதுள்ள ஒருவனின் தவிப்பை. காமவேட்கையை இவ்வளவு சிறப்பாக யாரும் சிறுகதையில் எழுதியதில்லை. அது போலவே வணிகனின் மனது எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கும் இக்கதையே சாட்சி.

••

0Shares
0