கதைகள் செல்லும் பாதை- 10

இரண்டு குற்றங்கள்

போர்ஹேயின் சிறுகதைகள் சவாலானவை. குற்றவாளிகளின் உலகைப்பற்றிப் போர்ஹே நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியும் இவ்வளவு குற்றப்பின்புல கதைகளை எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.

A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது. அவர்களின் பெயர்கள். இடங்களை மாற்றிக் கதையாகப் போர்ஹே எழுதியிருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி. போதை மருந்து கடத்தல் போன்றவற்றை முதன்மையாக்கி பொழுது போக்கு எழுத்தாளர்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் போர்ஹே அதே குற்றவுலகினை முற்றிலும் புதிய தளத்தில் விசித்திரக் கதையாக உருமாற்றுகிறார்.

அவரது ரோசென்டோவின் கதை, (Story of Rosendo Juarez) ஒரே சம்பவம் இரண்டு முறை நடக்கும் போது எவ்வாறு உருமாறிப் போகிறது என்பதை விவரிக்கிறது. இந்தச் சிறுகதையைப் பௌத்த விழிப்புணர்வு கொண்ட கதை எனக் கூறுகிறார்கள். போர்ஹே பௌத்த சமயப் பற்றுக் கொண்டிருந்தார். பௌத்தம் குறித்து விரிவான உரை ஒன்றினை ஆற்றியிருக்கிறார்.

போர்ஹே  சிறுகதையைக் கலைடாஸ்கோப்பில் துண்டுச்சில்லுகள் இணைந்து விசித்திரமான தோற்றத்தை உருவாக்குவதைப் போலவே உருவாக்குகிறார். ஒரு கதைக்குள் நிறையக் கதைகள் இருக்கின்றன. அதாவது நிகழ்வுகளை விவரிப்பதற்குப் பதிலாக பல்வேறுவிதமான கதைகளை ஒன்று சேர்த்து ஒரு சிறுகதையை உருவாக்குகிறார்.

காலத்தின் முன்பின்னாக நகர்ந்து கதைசொல்வது அவரது பாணி. போர்ஹேயின் கதையில் உரையாடல்கள் குறைவு. இரவின் மடிப்புகளுக்குள் விசித்திரமான மனிதர்கள் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களின் மீது வெளிச்சம் படரச் செய்கிறார் போர்ஹே.

இக்கதை மதுவிடுதி ஒன்றின் இரவில் நடைபெறுகிறது.

காலியான மதுக்கோப்பையின் முன்பாக ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவன் தன்னிடம் சொன்ன கதையைத் தான் நினைவுபடுத்தி எழுதுவதாகக் கதைசொல்லி கூறுகிறார்.

கதையை நேரடியாக ரோசென்டாவே விவரிக்கலாம் தானே. அப்படிச் செய்திருந்தால் சுயசரிதை கொண்டது போலாகியிருக்கும். போர்ஹே புனைவின் முடிவற்ற சாத்தியங்களை உருவாக்க முனைபவர். ஆகவே அவர் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளைக் கதையில் உருவாக்க முனைகிறார்.

நான் தான் ரோசென்டோ யூவாரஸ் என அந்த மனிதன் தன்னுடைய கதையைச் சொல்லத் துவங்குகிறான்.

அடுத்தவரியிலே. இறந்து போய்விட்ட பாரதெஸ் என்னைப் பற்றி உங்களிடம் சொல்லி இருக்கலாம். அந்தக் கிழவனுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அல்லது செய்தியை நீட்டிக் கொண்டே போவது பிடிக்கும். அது பொழுது போக்காகத் தானே தவிர யாரையும் ஏமாற்றுவதற்காக அல்ல எனக் கூறுகிறான்.

இதன் மூலம் பாரதெஸ் என்ற இன்னொரு கதாபாத்திரம் அறிமுகமாகிறார். அவரிடமே ரோசென்டோ அடியாளாக வேலை செய்திருக்கிறான் என்பது பின்னால் விவரிக்கபடுகிறது.

குற்றவாளிகளின் சாகசக்கதைகளில் பெரும்பான்மை இப்படி ஊதி பெருக்கப்பட்டதே. அவற்றின் நோக்கம் சுவாரஸ்யம் மட்டுமே. ரோசென்டோ தன்னைப் பற்றி ஜோடிக்கபட்ட கதைகள் உலவுவதை அறிந்திருக்கிறான். அது உண்மையில்லை என மறுக்கிறான்.

நிஜமும் ஜோடிக்கபட்ட விஷயமும் ஒன்று சேர்ந்தே குற்றவாளியின் பிம்பம் கட்டமைக்கபடுகிறது. அதைப் போர்ஹே ஆராய்கிறார்.

ஒரு சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெறும் போது தான் அது குறித்த கவனத்தை, விழிப்புணர்வை நாம் அடைகிறோம். முதன்முறையாக நடைபெறும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதே குழப்பமாக இருக்கிறது.

ஒரு கொலையைப் பற்றிய செய்தியை துவக்கிய ரோசென்டோ யூவாரஸ் அதிலிருந்து நழுவி தனது கடந்த காலத்தை நினைவு கொள்கிறான்.

மால்டொனாடோ நதியின் சுற்றுப்புறங்களில் தான் வளர்ந்த விதம் பற்றியும். அது சாக்கடை போலக் கழிவு நீரால் ஒடிக் கொண்டிருந்த விஷயத்தையும் கூறுகிறான்.

சட்டெனக் கதையில் ஒரு வரி மின்னல்வெட்டு போல வெளிச்சமிட்டுப் போகிறது

ஒரு மனிதன் பிறந்த இடத்தினை மாற்றவே முடியாது.

குற்றவாளிகள் தனது பிறந்த இடம், பெற்றோர் பற்றி எப்போதுமே உண்மையைத் தெரிவிக்க விரும்புவதில்லை. பிறந்த இடம் என்பது மாறாத ஒன்றின் அடையாளம். இந்த விபரம் சட்டென விதியின் விசித்திரத்தை அறிந்து கொள்வது போல வாசகனை ஈர்க்கிறது.

தான் ஒரு களைச் செடியைப் போல வளர்ந்தேன் என்கிறான் ரோசென்டோ. களைச்செடிகளை யார் கவனிக்கப் போகிறார்கள்.

ரோசென்டோ யூவாரஸிற்குத் தந்தை யாரெனத் தெரியாது- அவனது தாய் ஒரு சலவைத்தொழிலாளி. ரோசென்டோ கத்தியைப் பயன்படுத்திச் சண்டையிடுவதை சிறுவயதிலே கற்றுக் கொள்கிறான் . முரட்டு சிறுவனாக வளர்கிறான்.

இளமையில் ஒரு நாள் மதுவிடுதி ஒன்றில் கார்மென்டியா என்ற இளைஞன் அவனைப் பரிகாசம் செய்கிறான். இவருக்கும் சண்டை வருகிறது. கத்தியை எடுத்துக் கொண்டு வெளியேறி ஒருவர் மீது மற்றவர் பாய்கிறார்கள். இதில் கார்மென்டியாவை கொன்றுவிடுகிறான் ரோசென்டோ. அவனுக்கும் கையில் காயம். ரத்தம் வடிய மதுவிடுதிக்கு வந்து குடிக்கிறான்.

இறந்து போன கார்மென்டியாவின் மோதிரத்தை கழட்டி தான் அணிந்து கொள்கிறான். அவனை வென்றதன் அடையாளமது. மறுநாள் அவனைக் காவலர்கள் கைது செய்கிறார்கள். விசாரணைக்கு அழைத்துப் போகிறார்கள். குற்றத்தை ஒத்துக் கொண்டால் தப்பிக்க வழிகாட்டுவதாகச் சொல்கிறார்கள்.

டான் நிக்கோலஸ் பாரதெஸ் அவன் சிறையில் இருந்து விடுவிக்க உதவிகள் செய்கிறார். தேர்தல் களத்தில் வேலை செய்ய அவனை அனுப்பி வைக்கிறார். அடிதடி சண்டைகளுக்கான களமது. தற்செயலாக ஒருவனைக் கொலை செய்த ரோசென்டோ இப்போது அடியாளாக உருமாறுகிறான். இனி அவன் வாழ்க்கை முழுவதுமே குற்றவாளி தான்

கட்சிக்குப் பயனற்றுப் போய்விட்டால் தன்னைத் திரும்ப ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் ரோசென்டோ தொடர்ந்து அடிதடிகளில் ஈடுபடுகிறான். பணமும் புகழும் கிடைக்கிறது. காதலி, குடி, போதை மருந்து என வாழ்க்கையினைச் சந்தோஷமாகக் கழிக்கிறான்.

ஒரு நாள் இராலா என்ற தச்சன் அவனைப் பார்க்க வருகிறான். தன் மனைவி தன்னை விட்டு ஒடிப்போய்விட்டாள். அவளை இழுத்துக் கொண்டு போன  ரூஃபினோ என்பவனைத் தான் கொல்லப் போவதாகக் கூறுகிறான்.

இராலா ஒரு அப்பாவி. அமைதியான மனிதன்.

உன்னைப் பிடிக்காமல் போன பெண்ணை நினைத்து எதற்காக இவ்வளவு கவலை கொள்கிறாய். அவளை மறந்துவிடு என ரோசென்டோ அறிவுரை சொல்கிறான்.

தச்சன் அதைக் கேட்டுக் கொள்ளாமல் மதுக்கடையில் இருந்த ரூஃபினோவிடம் சண்டைக்கு வரும்படி சவால்விடுகிறான். இருவரும் மோதிக் கொள்கிறார்கள். அதில் தச்சன் கொல்லப்படுகிறான்

தன்னை விட்டு மனைவி பிரிந்து போன பிறகு ஏன் உயிர்வாழ வேண்டும் என தச்சன் வேண்டுமேன்றே ரூஃபினோவிடம் மோதி உயிரைவிட்டது போலவே  தோன்றுகிறது.

அன்பின் பொருட்டு ஒருவன் தன்னை மாய்த்துக் கொள்வானா என ரோசென்டோ குழப்பமடைகிறான். அந்த நிகழ்வை அவனால் புரிந்து கொள்ள முடியவேயில்லை.

இதன் சில நாட்களுக்குப் பிறகு புட்ச்சர் என்ற ஒருவனை மதுவிடுதியில் சந்திக்கிறான் . புட்ச்சர் அதிகம் குடித்துவிட்டு ரோசென்டோவை சண்டைக்கு அழைக்கிறான். அவனது கோபம். ஆவேசத்தினைக் கண்ட போது தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல ரோசென்டோ உணருகிறான். புட்ச்சருடன் சண்டை போட விரும்பாமல் விலகுகிறான் . புட்ச்சர் அவனை விடவில்லை.

நீ ஒரு கோழை. ஒன்றும் செய்ய இயலாதவன் எனக் கேலி செய்கிறான்

ரோசென்டோவின் காதலி லா லூஜனேரா சண்டையிடும்படி சொல்லி கத்தியை அவனது கையில் திணிக்கிறாள். ஆனால் அவன் கத்தியைக் கீழே நழுவ விட்டு வெளியில் நடக்கிறான்.

எதனால் ரோசென்டோ சண்டையிட விரும்பவில்லை.

ஏன் அவன் ஒரு கோழையைப் போல வெளியேறிப் போனான் என ஒருவருக்கும் புரியவில்லை.

ஆனால் அந்த நிகழ்விற்குப் பிறகு ரோசென்டோ அடியாளாக வாழவில்லை.

உருகுவேயிற்குச் சென்று மாடு மேய்க்க ஆரம்பிக்கிறான்.

சில காலத்தின் பின்பு ஊர் திரும்பி அமைதியான வாழ்வினை மேற்கொள்ள ஆரம்பிப்பதுடன் கதை நிறைவு பெறுகிறது

ரோசென்டோ, ஒரே நிகழ்வை இருமுறை எதிர்கொள்கிறான். முதன்முறை தன்னை மதுவிடுதியில் கேலி செய்தவனுடன் கத்தி சண்டையிட்டு அவனைக் கொன்றுவிடுகிறான். இரண்டாம் முறை தன்னைக் கேலி செய்தால் செய்து கொள்ளட்டும் எனக் கத்தியை கிழே நழுவ விட்டுப் போகிறான்.

வன்முறை துரதிருஷ்டத்தையே கொண்டுவருகிறது என்பதை ரோசென்டோ தன் வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறான்.

இந்த விழிப்புணர்விற்குப் பிறகு அவன் எளிய மனிதனாக உருமாறுகிறான்.

ஒருவன் எப்போது கத்தியை உயர்த்திப்பிடிப்பான் என்று தெரியாதது போலவே எப்போது கைநழுவ விடுவான் என்றும் தெரியாதது தானே

இக்கதையில் ரோசென்டோ தேர்தலின் போது ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் அடியாளாக இருக்கிறான். அந்த வகையில் அவன் ஒரு தனித்துவமிக்கக் கதாபாத்திரம். சிறை தண்டனைக்குப் பயந்தே அவன் இந்த வழியைத் தேர்வு செய்கிறான். குற்றவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அவனை விழிப்புணர்வு கொள்ளச் செய்பவன் ஒரு தச்சன். அந்த நிகழ்வு கதையின் ஊடாடிச் செல்லும் சிறுசம்பவம் போலவே இடம்பெறுகிறது. ஆனால் அது தான் கதையின் மையம்.

போர்ஹேயின் கதை குற்றவாளியின் மன சஞ்சலத்தைத் துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. ஒரு சூழல் அவனைக் குற்றவாளியாக்குகிறது. அந்தச் சூழலை எதிர்த்து ஒருநாள் அவன் வெளியேறுகிறான். அதன்பிறகு அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவனைப் பற்றிக் கதைகள் மட்டுமே உலவுகின்றன.

ரோசென்டோவின் கதை ,தன்னை உணர்ந்து கொள்ளும் ஒரு மனிதனின் கதை. அதைச் சாகசப் பின்னலுடன் உருவாக்கியிருப்பதே போர்ஹேயின் சாதனை.

**

0Shares
0