கதைகள் செல்லும் பாதை- 4

முடிவடையாத பந்தயம்

அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce )அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது சிறுகதைகளில் ஒன்றான “An Occurrence at Owl Creek Bridge” குறும்படமாகத் தயாரிக்கபட்டு உலகப்புகழ்பெற்றுள்ளது. 1890ல் இக்கதை தமிழில் பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பியர்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர். சில காலம் பத்திரிக்கையாளராக இருந்திருக்கிறார். தீவிரமான சமூக விமர்சனக்கட்டுரைகளை எழுதியதற்காக இவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

1913 இல் தனது 71 வயதில் பியர்ஸ் லூசியானா மற்றும் டெக்சாஸ் வழியாகக் கடந்து, எல் பாஸோவின் வழியாக மெக்ஸிகோவிற்குள் சென்றார்.  இந்தப் பயணத்தின் பாதியில் அவர் காணாமல் போய்விட்டார். கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்கிறார்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டார் என்றொரு கதையுமிருக்கிறது. இவரது கடைசிகடிதத்தில் தான் கண்காணத தூரத்திற்குப் போக விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பியர்ஸின் கதைகளைப் போலவே அவரது வாழ்க்கையும் எதிர்பாராமையாக முடிந்துவிட்டது. கார்லோஸ் புயெந்தஸ் இவரது வாழ்க்கையை The Old Gringo என்ற நாவலாக எழுதியிருக்கிறார்.

அம்புரோஸ் பியர்ஸின் வாழ்க்கையை முன்னறிவிப்பது போல அவரே ஒரு கதை எழுதியிருக்கிறார். 1888ல் வெளியான An Unfinished Race என்ற இக்கதை மூன்று பத்திகள் கொண்டது. ஆன்டன் செகாவின் பந்தயம் (The Bet )கதையை நினைவூட்டுகிறது. செகாவின் கதை பின்னாளில் (1891) வெளியானது. அக்கதை அடைந்த புகழை பியர்ஸின் கதை  அடையவில்லை.  நேரடியாக இரண்டு கதைகளுக்கும் தொடர்பில்லை. ஆனால் மையக் கதாபாத்திரங்கள் ஒன்று போலிருக்கின்றன.

••

அம்புரோஸ் பியர்ஸின் கதையின் நாயகன் ஜேம்ஸ் பெர்ன் வொர்சன் என்ற செருப்புத் தைப்பவர். வார்விக் போகும் வழியில் அவரது கடையிருந்தது. குடிகாரரான அவர் போதையில் முட்டாள்தனமான விஷயங்களுக்குச் சண்டையிடுவார். தான் ஒரு சிறந்த நடைவீரர், விளையாட்டில் தன்னை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது என்று பெருமை பேசுவார். ஒரு நாள் இப்படி அவர் பெருமை பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் அவரைச் சவாலுக்கு அழைக்கிறார்.

ஒரு சவரன் பணம் தருகிறேன் நாற்பது மைலுக்கு அப்பாலுள்ள கோவன்ட்ரிக்கு ஒடிப்போய் வர முடியுமா எனக்கேட்கிறார். உடனே ஜேம்ஸ் பெர்ன் ஒத்துக் கொள்கிறார்

1873 செப்டம்பர் 3 அன்று இந்தப் பந்தயம் நடந்தது. அவரது நடைபயணத்தைக் கண்காணிக்க மூன்று பேர் ஒரு குதிரைவண்டியில் பின்தொடர்ந்தார்கள். ஜேம்ஸ் பெர்ன் வொர்சன் ஒடத்துவங்கினார். களைப்படையாமல் துள்ளலுடன் அவர் ஒடிக் கொண்டிருந்தார். சாரட்டில் பின்தொடர்ந்த மூவரும் அவருக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்கள். பல் மைல்களை அவர் எளிதாகக் கடந்துவிட்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் அவர் எதன்மீதோ தடுக்கி விழுந்தவரை போல அலறியபடியே கிழே விழுந்தார். உடல் தரையைத் தொடவில்லை. அவர்கள் கண்முன்னே அவர் புகையென மறைந்து போய்விடுகிறார்.=

எங்கே போனார். எப்படி மறைந்தார் எனத் தெரியவில்லை. அந்தச் சாலை முழுவதும் அவர்கள் தேடி சலித்தார்கள். முடிவில் கண்டுபிடிக்கமுடியாமல் ஊர் திரும்பி நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். இதை நம்பாமல் காவல்துறை அவர்களைக் கைது செய்து விசாரணை செய்த்து. அதில் அந்த மூவரும் நல்லவர்கள் , அவர்கள் சொல்வது நிஜம் என விடுவிக்கபட்டார்கள்.

உண்மையில் என்ன தான் நடந்தது. ஒடிக்கொண்டிருந்த மனிதன் எப்படிச் சாலை நடுவே மர்மமாக மறைய முடியும். மக்களில் ஒரு பாதியினர் இந்தக் கதையை நம்பினார்கள். ஒரு பாதி நம்பவில்லை. இந்த நிகழ்வு குறித்து இருவேறு கருத்துகள் நாடு முழுவதும் பரவின. உண்மையில் அந்த மூவரும் எதையோ மறைக்கிறார்கள் என மக்கள் சந்தேகப்பட்டார்கள். ஒருவேளை அவர்கள் ஏதோவொரு உண்மையை மறைக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சொன்ன பொய் இதுவரை யாராலும் நினைத்து பார்க்கமுடியாத ஒன்றாகவே இருந்தது என்பதுடன் கதை முடிகிறது

••

ஜேம்ஸ் பெர்ன் வொர்சனின் பந்தயம் மட்டும் பாதியில் நின்றுவிடவில்லை. நாம் வாசிக்கும் கதையும் பாதியில் நின்றுவிடுகிறது. இரண்டிலுமே முடிவு தெரியவில்லை. கதையில் வரும் ஜேம்ஸ் பெர்ன் வொர்சன் கொல்லப்பட்டரா. இருக்கலாம் என்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. காரணம் யார் இந்தச் சவாலுக்கு அழைத்தாரோ அவரது பெயரே கதையில் இடம்பெறவில்லை. அவர் ஜேம்ஸ் பெர்ன் வொர்சனின் வெற்றியை விரும்பாமல் அவரைக் கொன்றிருக்கக் கூடும். மற்றொன்று கதையில் குதிரைவண்டியில் உடன் வரும் இருவரில் ஒருவர் சவத்துணி செய்பவர். மற்றவர் புகைப்படக்கலைஞர். அவர்கள் மூவரும் திட்டமிட்டால் ஒரு கொலையை எளிதாகச் செய்துவிட முடியும்.

இல்லை.. இது கொலையில்லை. விசித்திரம் எனக்கொண்டால் சாலையில் தடுக்கி விழுந்த மனிதன் எங்கே மறைந்திருப்பான். எப்படி மறைந்திருப்பான். இது கடவுளின் வேலையா. இல்லை சாத்தானின் வேலையா. இன்னொரு பரிமாணத்திற்குள் சென்றுவிட்டானா. புகை மறைந்து போவது போல ஜேம்ஸ் எப்படி மறைந்துவிட முடியும் இல்லை அவன் தனது அர்த்தமற்ற பந்தயத்தின் வழியே தனது முட்டாள்தனத்தைப் புரிந்து தப்பியோடி விட்டானா.

••

சாலையின் நடுவே நடக்கும் இந்த மர்மசம்பவம் ஒரு மாயத்தை முன்வைக்கிறது. தர்க்க அறிவு இந்தச் சம்பவத்தின் நிஜத்தன்மையைக் கேள்வி கேட்கிறது. புனைவோ ஏன் இப்படி நடக்ககூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறது. ஒரு கதையில் வாசகனின் பங்கு எழுத்தாளனுக்கு இணையானது என்பதை இக்கதை நிரூபிக்கிறது.

மூன்று பத்திகளுக்கு ஜேம்ஸ் பெர்ன் வொர்சனின் கதாபாத்திரம் முழுமையாக உருவாகிவிடுகிறது. அவரது இயல்பு. சவால். அதில் அவர் மேற்கொள்ளும் சாகசம். எதிர்பாராத முடிவு என இக்கதை சிறந்த கதையாடல் வழியாகத் தேர்ந்த குறுங்கதைகளில் ஒன்றாகிவிடுகிறது.

சவாலுக்காகச் சிலர் எதையும் செய்வார்கள். அதிலும் தனது அறிவாற்றலை, திறமையை நிரூபணம் செய்ய எந்தச் சவாலையும் நேர்கொள்வார்கள். சவாலில் இறங்கிய பிறகே அது எவ்வளவு கடினமானது என்பது அவர்களுக்குப் புரியும். வெற்றி தோல்வியல்ல கதையின் மையம். தானே விரும்பி சவாலில் ஈடுபடுவதும். அதற்காகத் தன்னை வருத்திக் கொள்வதும் தான் கதையின் மையம்.

கதையும் நிஜவாழ்க்கையும் ஒன்று போலாகிவிடுகின்றன. உலகம் இன்றைக்கும் அம்புரோஸ் பியர்ஸ் எங்கே போனார். என்ன ஆனார் என்பதைப் பற்றி விவாதிக் கொண்டேயிருக்கிறது. வேறு ஒரு சிறுகதை ஆசிரியன் யதார்த்தமாக இக்கதையை எழுதியிருந்தால் ஜேம்ஸ் பெர்ன் வெற்றிபெற்றிருப்பான். பரிசுப் பணம் கிடைத்திருக்கும். அப்படி எழுதப்பட்டிருந்தால் இன்னொரு கதையாகவே இது முடிந்திருக்கும். கதை படிப்பவரும் இதில் என்ன இருக்கிறது என விலகிப் போயிருப்பார்கள். ஆனால் இக்கதை சிறிய மாயத்தின் வழியே கதையை நாம் யூகிக்க முடியாத களத்திற்குக் கொண்டு போய்விடுகிறது.

கதை வெளியான நாளில் இருந்து இன்று வரை ஜேம்ஸ் பெர்ன் வொர்சனுக்கு என்ன ஆயிற்று என்று வாசகர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கதையின் வெற்றி அந்த மாயம் தானே.

ஒரு சிறுகதை ஆசிரியன் இப்படி ஒரு வித்தையை ஒரு கதையிடம் இருந்து கற்றுக் கொண்டால் போதும். பின்பு அதைத் தனது எழுத்தில் பயன்படுத்திப் பார்க்கலாம்.

இணைப்பு :

An Occurrence at Owl Creek Bridge குறும்படம்

https://vimeo.com/163730099

••

0Shares
0