கதைகள் செல்லும் பாதை 5

நினைவில் கேட்கும் சங்கீதம்

கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான லீலை என்ற மலையாளச் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. சமகாலச் சிறுகதைகளில் பனிரெண்டைத் தேர்வு செய்து சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தலைப்பு கதையான லீலை மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது.

இந்தத் தொகுப்பிலுள்ள கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற மாதவிக்குட்டியின் கதை மிகச்சிறப்பானது.

புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸ் தான் இந்த மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆமி என்ற மலையாளப் படத்தைச் சில மாதங்களில் முன்பாகப் பார்த்தேன். மிக அழகாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆமி என்றழைக்கப்படும் கமலா தனது ஐந்து வயது வரை புன்னையூர் குளத்திலும், நாலப்பாட்டு வீட்டிலும் வளருகிறார், இவரது அம்மா புகழ்பெற்ற கவிஞர் பாலாமணி. 1939 பெற்றோருடன் கல்கத்தா செல்கிறார். கல்கத்தாவில் வெள்ளைக்கார குழந்தைகள் பயிலும் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்.

அப்பா வி எம் நாயர் மிகப்பெரிய ஆங்கில நிறுவனத்தின் உயர் அதிகாரி. பருவ வயதில் கமலாவுக்கு ஒவியம் கற்பிக்க வரும் ஹுசைன் அன்ஸாரியிடம் காதல் உருவாகிறது. இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது எனப் புரியாமல் கனவு நிலைப்படுகிறார். கனவில் கிருஷ்ணன் வந்து அவளை மயக்குகிறார்.

1947ல் கல்கத்தாவில் ஏற்படும் மதக்கலவரத்தின் காரணமாக அன்ஸாரி டாக்கா சென்று விடுகிறான். பின்பு பெற்றோரின் விருப்பத்தின்படி தன் பதினைந்தாவது வயதில் 35 வயதுள்ள மாதவதாஸை மணக்கிறாள். அவர்களின்  இல்லற உறவு இணக்கமாகயில்லை. கணவனின் காமப்பித்தும் ஒருபாலுறவு விருப்பமும் அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்த பிரசவத்தில் நிலைகுலைந்து போகிறாள். மனக்குழப்பமும் உடல் நலிவும் ஏற்படுகிறது. அவளது நிலையைப் புரிந்து கொண்ட தாஸ் அவளைப் பழையபடி ஒவியம் வரையவும் எழுதவும் தூண்டுகிறார். கமலா மீண்டும் எழுதத் துவங்குகிறார். பெயரும் புகழும் அவரை வந்து சேருகிறது

கமலா தாஸ் கவிதையால் கவரப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த கார்லோன் கமலாவைத் தேடி வந்து பழகுகிறான். அவள் இல்லாமல் தன்னால் வாழமுடியாது தன்னோடு வந்துவிடும்படி கெஞ்சுகிறான். அவள் மறுக்கிறாள்.

அதன்பிறகு அவள். எண்டெ கதா (என் கதை) எனும் தனது சுயசரிதையைத் தொடராக எழுதுகிறார். அது புத்தகமாகவும் வெளிவருகிறது. ஒளிவு மறைவற்ற அவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அந்த நூல் கடுமையான விமர்சனத்தையும் விளைவுகளையும் உருவாக்குகிறது.

இதனிடையில் அவரைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும்படி பலரும் தூண்டுகிறார்கள் திருவனந்தபுரம் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கமலாதாஸ் 1786 வாக்குகள் மட்டும் பெற்று டெபாஸிட் இழக்கிறார், இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் கமலாவின் கணவர் மாதவ தாஸ் மரணமடைகிறார். போக்கிடமின்றிக் கமலா தாஸ் தடுமாறுகிறார். இறுதியில் தான் ஒருத்தி மட்டும் எர்ணாகுளத்தில் தனியே வாழ்வது என முடிவு எடுக்கிறார்.

1999ல் அக்பர் அலி என்ற எழுத்தாளர் கமலாதாஸைச் சந்திக்கிறார். சூபி இசை அவர்களை ஒன்று சேர்க்கிறது. ஒத்த ரசனை காரணமாக அக்பர் அலியோடு நெருங்கிப் பழகுகிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள பின்பு இஸ்லாத்திற்கு மதமும் மாறுகிறார்.

அவரது மதமாற்றம் பெரும் சூறாவளியை உருவாக்குகிறது. மதக்கலவரம் ஏற்படும் நிலை உருவாகிறது. பிள்ளைகளும் அவரைக் கண்டிக்கிறார்கள். ஆனால் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவேயில்லை. இசையும் தனிமையுமாக அவரது வாழ்வு நீள்கிறது.  முதுமையில் நோயுற்று அவர் மறைந்து போகிறார். அவரது உடல் திருவனந்தபுரம் பாளையம் மசூதிக்கான அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. படத்தில் மாதவிக்குட்டியாக மஞ்சுவாரியர் சிறப்பாக நடித்திருக்கிறார். கமல் படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தைக் காணும் போது தமிழின் நவீன கவிஞர் எவருக்கும் இப்படியொரு திரைப்படம் உருவாக்கபடும் பாக்கியம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உருவானது.. கவிஞர் பிரமிள், ஆத்மநாம் இருவரையும் பற்றி இது போன்ற திரைப்படத்தை உருவாக்கலாம். ஆனால் யார் செய்யப்போகிறார்கள்.

••

கமலா தாஸின் கவிதைகள் உலகப்புகழ்பெற்றவை. மாதவிக்குட்டியாக அவர் எழுதிய சிறுகதைகளும் கவித்துவமானவை.

கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற தலைப்பு எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள். கதையின் தலைப்பு என்பது கதையின் திறவுகோல். அல்லது வழிகாட்டும் வெளிச்சம்.

மூன்றே பக்கமுள்ள சிறிய கதை. ஆனால் அது தருவதே ஒரு முழு வாழ்க்கையின் அனுபவம்.

கதை கேரளாவில் நடைபெறுகிறது. ஆனால் கதையின் நாயகன் ஆறுமுகம். தமிழன். தமிழர்களை. தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களை முதன்மைப்படுத்தி மலையாளத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் கூட டி. பத்மநாபன் எழுதிய கடையநல்லூரில் ஒரு பெண் என்றொரு சிறுகதையுள்ளது. இதுவும் ஒரு சிறந்த கதையே.

மாதவிக்குட்டி கதையில் வரும் ஆறுமுகம் மொட்டை அடித்திருக்கிறான். அவனுக்கு வீடு கிடையாது. கடற்கரை ஒட்டிய பார்க் ஒன்றில் வசிக்கிறான். ஒரு காலத்தில் அவன் பாக்டரி ஒன்றின் காவலாளி. ஒரு இரவு முதலாளி அவனை முழுக் குடியனாகக் கண்டதும் வேலை பறிபோய்விடுகிறது. ஆறுமாச காலம் அலைந்து திரிந்து வழியில்லாமல் கடற்கரையை ஒட்டிய பூங்காவிற்கு வசிக்க வந்துவிட்டான். அருகிலுள்ள உணவகத்தில் மீந்து போன உணவினை பெற்றுச் சாப்பிட்டு அவனும் அவனது மனைவியும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களை ஒரு இளைஞன் தற்செயலாகச் சந்திக்கிறான். அந்த இளைஞன் அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து உங்களைப் பார்த்தால் வீடில்லாதவர்கள் போலத் தெரியவில்லை. நீங்கள் உணவு பரிமாறும் விதம் கிரகலட்சுமி போலுள்ளது எனப் பாராட்டுகிறான்.

அதைக்கேட்ட ஆறுமுகத்தின் மனைவி என்ன செய்வது போறாத காலம் எனச் சலித்துக் கொள்கிறாள்.

ஒரு பணக்கார குடும்பத்துல உங்களுக்கு வேலை கிடைக்காமலா. போய்விடும். என் அம்மா கூட ஒரு பார்சிவீட்ல குழந்தைகளைப் பாத்துகிடுகிற ஆயாவாக வேலை பார்த்தார். வேலை குறைவு. மூணு வேளையும் கறிச்சோறு என்கிறான் அந்த இளைஞன்

அதைக் கேட்ட ஆறுமுகம் அப்படியொரு வேலை தான் தனக்கு வேண்டும் என்கிறான். அதைக்கேட்ட இளைஞன் அதற்கு நீ பொம்பளையா பிறந்திருக்க வேண்டும் என்று கேலி செய்கிறான்.

அவர்கள் உரையாடலுக்கு நடுவே இரவாகி விடவே பார்க்கின் கேட்டினை இழுத்துப் பூட்டுகிறான் வாட்ச்மேன்.

தனக்கும் ஒரு ஆயா வேலை கிடைத்தால் கூடப் பரவாயில்லை என்கிறாள் ஆறுமுகம் மனைவி

செரமம் தான். மனிதர்கள் இப்போது யாரையும் நம்புவதில்லை. நெடுங்காலமாக நானே ரயிலில் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் வயதுள்ளவர்களை பாடி பிச்சை எடுக்கக் கூடாது என விரட்டியடிக்கிறார்கள் என்கிறான் இளைஞன்

நீங்கள் பாடுவீர்களா, எனக்குப் பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். சின்னவயசில திருநெல்வேலியில வீட்டுப் பக்கம் ஒரு பாகவதர் பாடுவார். காலையில் பாட்டு கேட்டுகிட்டே தான் ஒறக்கம் முழிப்பேன் என்கிறாள் ஆறுமுகத்தின் மனைவி

பாட்டுகேட்டுகிட்டே எந்திரிக்கிறதுக்கும் அதிர்ஷடம் வேணும் என்கிறான் இளைஞன்

என்ன அதிர்ஷடம். இப்படி நடுத்தெருவுல கிடக்கிறோம் என்கிறாள் ஆறுமுகத்தின் மனைவி.

அப்படிச் சொல்லாதீங்க. கடலுக்குப் பக்கத்துல குடியிருக்கீங்க. ராத்திரியில கடலோட பாட்டைக் கேட்டுகிட்டு நட்சத்திரங்களைப் பாத்துகிட்டே படுத்து தூங்குற அதிர்ஷடம் யாருக்கு கிடைக்கும் என்று பாராட்டுகிறான் இளைஞன்.

ஆறுமுகம் மனைவி அது சரியென்பது போல தலையாட்டுகிறாள்

அந்த இளைஞன் அன்று இரவு ரயிலில் மெட்ராஸ் போகவுள்ளதாகத் தெரிவிக்கிறான். முன்பின் தெரியாத அவனுக்காகத் தனது மூட்டையிலிருந்து பழைய கம்பளி ஒன்றை எடுத்து பரிசாகத் தருகிறாள் ஆறுமுகம் மனைவி.

நீங்க மகாலட்சுமியோட அவதாரம் தான் என அவன் பாராட்டுகிறான்.

அந்த இளைஞன் போனபிறகு ஆறுமுகம் தன்னுடைய மனைவியிடம் இருந்த ஒரே கம்பளியை தூக்கி குடுத்துட்டே. மழைக்காலம் வந்தா நாம என்ன செய்கிறது .கம்பளியை ஏன் அவனுக்குத் தூக்கி குடுத்தே எனக் கோபமாக கேட்கிறான்

ஆறுமுகத்தின் மனைவி மெல்லிய புன்னகையோடு அவன் என்கிட்ட சங்கீதத்தைப் பற்றிப் பேசினான். அதான் குடுத்தேன் என்கிறாள்.

அத்தோடு கதை முடிகிறது. வீடில்லாமல் பூங்காவில் வசிக்கும் குடும்பத்தின் கதையிது. ஆனால் கதை அந்தப் பெண் நினைவில் இன்றும் சங்கீதம் மறையாமல் ரீங்கரித்துக் கொண்டேயிருப்பதை நினைவுபடுத்துகிறது. கதையில் வரும் அவளுக்குப் பெயரில்லை. ஊர் திருநெல்வேலி. தன்னை விட வயதில் அதிகமான ஆளை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். வேலையில்லை. சம்பாத்தியமில்லை. ஆனாலும் அவளுக்கு இசையை பற்றி பேச பிடிக்கிறது

இன்னொரு கோணத்தில் இந்தச் சங்கீதம் என்பது அவளது இளமையின் சங்கீதமா. அதைத் தான் அந்த இளைஞன் அறிந்து கொண்டுவிட்டானா

அவர்களுக்குள் நடைபெறும் உரையாடலில் ஆறுமுகம் வெறும் பார்வையாளன் மட்டுமே. அந்த இளைஞன் ஆறுமுகத்தின் மனைவியை ஆரம்பம் முதலே வாய் நிறையப் பாராட்டுகிறான். அவளுடன் அன்போடு பேசுகிறான். வீடில்லாமல் போய்விட்ட துயர வாழ்க்கையைக் கடலுக்கு அருகில் கடலின் பாட்டைக் கேட்டபடியே அதிர்ஷடமாக வாழ்கிறீர்கள் என வேறுபடுத்திக் காட்டுகிறான். அவளது பாடல். அவனது பாடல். கடலின் பாடல் என மூன்று புள்ளிகளும் ஒன்றாக இணைகின்றன.

அந்த இளைஞன் எதையும் யாசிக்கவில்லை. ஆனால் அவளாகவே தன் நினைவாக ஒரு கம்பளியை பரிசாகத் தருகிறாள். அன்பின் அடையாளம் அந்தக் கம்பளி. அதைப் போர்த்திக் கொள்ளும் போது அவள் நினைவை போர்த்திக் கொள்வான் தானே

கதையில் ஆறுமுகத்திற்குக் குடிப்பது. சாப்பிடுவது தவிர எதிலும் ஆர்வமிருப்பதில்லை. ஆகவே அவர்கள் உரையாடலை சலிப்போடு எதிர்கொள்கிறான்.

இளைஞனின் கடந்தகாலம் சொற்ப உரையாடலுக்குள் முழுமையாகக் காட்டப்பட்டுவிடுகிறது. அந்தப் பெண் குழந்தையற்றவளாக இருக்கிறாள். எச்சில் உணவை உண்டே அவர்கள் வாழ்கிறார்கள். காமம் தான் அந்த கறுப்பு கம்பளியா,

ஒரு தளத்தில் அந்த இளைஞன் வாழ்க்கை மீதுள்ள புகார்களைத் தாண்டி இயற்கையின் முடிவில்லாத சங்கீதத்தைக் கேட்கும்படி செய்கிறான். அது ஒரு வழிகாட்டுதல். அதற்குப் பரிசாகவே கம்பளியை அவள் தருகிறாள்

இன்னொரு தளத்தில் தங்கள் வேதனைகள் தங்களோடு போகட்டும். அந்த இளைஞனாவது சுகமாக. பாதுகாப்பாக இருக்கட்டும் என அந்தப் பெண் நினைப்பதன் அடையாளமாகவும் இருக்ககூடும்

தமிழகத்தின் சகல ஊர்களிலும் மலையாளிகளின் டீக்கடைகள். சிப்ஸ் கடைகள் இருக்கின்றன. பல்துறைகளிலும் மலையாளிகள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைப்பாடு பற்றித் தமிழில் இது போலக் கதைகள் எதுவும் எழுதப்படவில்லை. அதை நாம் தான் எழுத வேண்டும் என்பதற்கான தூண்டுதல் போலவே இக்கதையிருக்கிறது

ரயிலில் பாடுகிறவர்களுக்கென்ற தனிக்குரலும் வசீகரமும் இருக்கிறது. தன் வயது ரயிலில் பாடிபிச்சை எடுக்கத் தடையாக உள்ளதாக அந்த இளைஞன் சொல்வது உண்மை.

மதிய நேரம் ராமேஸ்வரம் பாசஸ்சர் ரயிலில் கேட்ட நெஞ்சம் அலைமோதவே கண்கள் குளமாகவே… ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள் என்ற பிச்சைக்காரனின் பாட்டு மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இக்கதையும் அது போன்று  நினைவில் ஒலிக்கும் சங்கீதமே.

•••

0Shares
0