தூண்டிலில் சிக்கிய நினைவுகள்
தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது.
தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். தாத்தாவின் மௌனம் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உடலுக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் அவர்கள் மனதளவில் இளமையின் கரையிலே நின்று கொண்டிருக்கிறார்கள்.
என் பால்ய காலத்தில் கோடை முழுவதும் விளையாடிக் கொண்டேதானிருப்பேன். அதிலும் தூண்டிலை எடுத்துக் கொண்டு மீன்பிடிக்கக் கண்மாயிற்கோ, குளத்திற்கோ செல்வது நாள் தவறாமல் நடக்கும் விஷயம். ஒரு நாள் கூடப் பெரிய மீன் எதையும் பிடித்ததில்லை. ஆனால் நண்பர்களுடன் மீன்புழு தோண்டி எடுத்து சிரட்டையில் போட்டுக் கொண்டு மீன்பிடிக்கப் போகிற உற்சாகம் தனித்துவமானது.
சில நேரம் மீன்தூண்டிலில் தவளை மாட்டும். அந்தத் தவளையைக் கொல்லமாட்டோம். மன்னித்து விடுதலை அளித்துவிடுவோம். அப்படி விடுதலை பெற்ற தவளைகள் தண்ணீருக்குள் போய் மீன்களை அழைத்து வந்து தூண்டிலில் சிக்க வைக்கும் என்பது நம்பிக்கை.
சிறுகதை ஆசிரியனுக்கு நினைவுகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். கதை முழுவதும் வெறும் நினைவுகளாகவே இருந்து விட்டால் சலிப்பாகிவிடும். புனைவும் நினைவும் கலந்து எழுதும் போது தான் கதை சிறப்பாக இருக்கும். நினைவுகளை எழுதுவது எளிதானதில்லை. துல்லியமாக நினைவில் கண்ட காட்சியை ஒருவர் எழுதுவதற்கு அவரது ஐம்புலன்களும் துணை நிற்க வேண்டும். கண்டது, கேட்டது, உணர்ந்த்து. ருசித்தது. நுகர்ந்தது என ஐம்புலன்களின் துணை கொண்டே எழுத வேண்டும். காலத்தைக் கையாளுவது ஒரு சவால். இரண்டு வேறுபட்ட காலங்களில் கதை சஞ்சரிக்கும் போது எழுத்தாளன் கால ஒர்மையைச் சரியாகக் கைக்கொள்ள வேண்டும்.
சீன எழுத்தாளரான காவோ ஸிங் ஜியாங் எழுதிய Buying a Fishing Rod for My Grandfather என்ற சிறுகதையை இன்று காலையில் வாசித்தேன். 1983ல் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது 2000ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபெல் பரிசுபெற்றவர் Gao Xingjian. இவரது நாவல்களான Soul Mountain மற்றும் One Man’s Bible இரண்டும் தனித்துவமானதாகக் கருதப்படுகின்றன
இச்சிறுகதை பெருநகர நவீன வாழ்க்கைக்கும் கடந்தகால வாழ்க்கைக்குமான மாறுபாடுகளைப் பேசுகிறது. குறிப்பாகத் தாத்தாவின் உலகையும் அவரது விருப்பங்களையும் சாகசத்தையும் அழகாகச் சித்தரிக்கிறது. கூடவே இன்று தனது சொந்த ஊர் அடைந்துள்ள மாற்றம்., குறிப்பாக இடங்களும் பேச்சு மொழியும் உணர்வுகளும் மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது
இக்கதையில் வரும் தாத்தாவை போன்றவர்களை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வேட்டையோ, மீன்பிடித்தலோ பொழுதுபோக்கில்லை. அது ஒரு கலை. தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொள்கிற சந்தோஷமே முக்கியம்.
இக்கதையில் வரும் தாத்தாவிற்குத் தூண்டில் தான் உலகம். அவர் தரமான தூண்டிலை விரும்புகிறவர். மீன்பிடி புழுக்களைச் சரியாகத் தேர்வு செய்கிறவர். சிறுவயதில் தாத்தாவின் மூங்கில் தூண்டிலை உடைத்துவிடும் ஒருவன் பின்னாளில் அவர் ஆசைப்பட்டது போன்ற நவீன தூண்டில் ஒன்றை விலைக்கு வாங்குகிறான். காலம் தூண்டிலை கூட எவ்வளவு நவீனமயமாக்கிவிட்டது என ஆச்சரியப்படுகிறான். அவன் ஒரு தேர்ந்த வாடிக்கையாளன் என்பதற்குத் தூண்டில் முழுவதும் பைபர் தானா எனச் சந்தேகத்துடன் பரிசோதிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.
நகரவாசிகளுக்கு மீன்பிடித்தல். வேட்டை என்பதால் காலாவதியான விஷயங்கள். அதிலும் டிவி, வீடியோ கேம்ஸ், கணிணி வந்துவிட்ட தலைமுறைக்கு வெளியுலகம் என்பதே தேவையற்ற விஷயம். வீட்டிற்குள்ளாகவே உலகம் சுருங்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
காவோ ஸிங் ஜியாங்கின் இச்சிறுகதை முழுவதும் தொலைக்காட்சியில் கால்பந்தாட்டம் பார்க்கும் ஒருவனின் நினைவுகளே. அவன் நினைவுகளின் வழியே தனது ஊருக்குப் போகிறான். தாத்தா வீட்டினைத் தேடுகிறான். அழிந்து போன நதியைக் காண்கிறான்.. அலை போல மடிப்பு மடிப்பாக அமைந்துள்ள சிறுகதையிது. ஒரு சிறுகதையில் இவ்வளவு நீண்ட காலத்தை விவரிக்க முடிகிறதே என்று வியப்பாக இருந்தது.
காவோ ஸிங் ஜியாங் ஒரு ஒவியர். ஆகவே காட்சிகளை ஒவியம் போலத் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார். கதையின் பலம் நிகழ்விடத்தை துல்லியமாக விவரிப்பது. தாத்தாவின் வீட்டை தேடிச் செல்பவனின் நிழலைப் போல வாசகனும் கதை முழுவதும் பின்தொடருகிறான்.
சீனப்பெயர்களை நீக்கிவிட்டால் இக்கதை இந்தியாவிற்கும் பொருத்தமானதே. என் கிராமத்திலும் இன்று ஒருவரின் வீட்டை தேடி கண்டுபிடிப்பது எளிதானதில்லை. ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது என்னோடு படித்த ஒருவர் கூட ஊரில் இல்லை என்பதைக் கண்டறிந்தேன். வியப்பாக இருந்தது. எனது ஊர் எனக்கும் அந்நியமாக இருப்பது தான் காலத்தின் கோலமா.
தாத்தாவோடு ஆற்றிற்குக் குளிக்கப் போன நினைவும் தாத்தா முயலும் பூனையும் தவிர வேறு ஒன்றையும் வேட்டையாடியதில்லை என்று அறிந்து கொள்வதும், பாட்டி தாத்தாவை திட்டும் போது அவர் மௌனமாக அதை ஏற்றுக் கொள்வதும், தமிழ் வாழ்க்கையின் காட்சிகளாகவே உள்ளன.
சுவாரஸ்யமாக நீளும் கதை பாதிக்கும் மேல் தடுமாற்றம் கொண்டுவிடுகிறது விடுகிறது.
மனிதர்கள் தங்கள் அகத்தினுள் வாழ்பவர்கள். புறவுலகமும் அதன் மாற்றங்களும் அகத்தை முற்றிலும் மாற்றிவிட முடியாது என்கிறது இக்கதை.. கவித்துவமான வரிகளும் ஒற்றை வார்த்தைகள் கொண்ட உரையாடல்களும் இக்கதையின் தனிச்சிறப்பு. தாத்தா எப்போதோ இறந்துவிட்டார். ஆனால் அவரது நினைவுகள். ஆசைகள் அழிவதில்லை என்பதே.
கதையில் எனக்குப் பிடித்தமான இடம் மீன்தூண்டிலை அவன் டாய்லெட்டின் உயரமான இடத்தில் ஒளித்து வைத்திருப்பது. தனது மகன் கையில் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகக் கவனமாக ஒளித்து வைத்திருக்கிறான். கதை சொல்லி சிறுவனாக இருந்த போது தாத்தாவின் மூங்கில் தூண்டிலை உடைத்திருக்கிறான். அது போலத் தன் மகன் தூண்டிலை உடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். தாத்தாவின் மனது அவனுக்கில்லை. அவன் நகரவாசி. எல்லாவற்றையும் தொலைக்காட்சி வழியாகப் பார்க்கும் மனிதர்களில் ஒருவன்.
கதைசொல்லியின் மனைவி கதையின் ஊடாக வந்து போகிறாள். அவளுக்குப் பழைய உலகின் மீது நம்பிக்கையில்லை. இந்தக் காலத்தில் யாராவது இவ்வளவு விலை கொடுத்துத் தூண்டில் வாங்குவார்களா எனக் கோவித்துக் கொள்கிறாள். மீன்பிடித்தல் என்பது இப்போது ஆடம்பரமான பொழுதுபோக்காகி விட்டது என அவனும் குறிப்பிடுகிறான்.
அந்த மீன்பிடி தூண்டில் ஒரு குறியீடு. கடந்த காலத்திற்கும் இன்றைய வாழ்க்கைக்குமான இணைப்பை குறிக்கும் குறியீடு. அந்தத் தூண்டில் தூக்கி எறியப்பட்டுவிட்டால் கடந்தகால நினைவுகளும் உடன் தூக்கி எறியப்பட்டுவிடும்.
கதையில் தூண்டிலை வாங்கியதற்கும் அதைப் பாதுகாத்து வைத்திருப்பதற்கும் தாத்தாவே காரணமாக இருக்கிறார். இறப்பிற்குப் பின்பும் அவரது அன்பு ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. உறவின் முக்கியத்துவத்தையும் அதன் அடையாளமான பொருட்களையும் அழகாகச் சொல்கிறது என்பதாலே இக்கதை முக்கியமானதாகயிருக்கிறது.
•••