கதைகள் செல்லும் பாதை- 7

அலையுடன் வாழ்வது

ஆக்டோவியா பாஸ் நோபல் பரிசு பெற்ற கவிஞர். மெக்சிகத் தூதுவராக இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கன்யாகுமரி பற்றி நீள் கவிதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார்.

Alternating Current.,The Bow and the Lyre, The Siren & the Seashell and Other Essays, On Poets and Others போன்ற இவரது கவிதை குறித்த கட்டுரை நூல்கள் மிக முக்கியமானவை.

ஆக்டோவியா பாஸ் சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது கவிதைகளைப் போலவே குறியீட்டுத் தன்மை கொண்ட கதைகளாக இவை அமைந்துள்ளன. நீலப்பூங்கொத்து என்ற அவரது ஒரு பக்கச் சிறுகதை அபாரமானது. பல்வேறு உலகச்சிறுகதைகள் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

••

ஆக்டோவியா பாஸின் உரைநடைகளில் எனக்குப் பிடித்த கதை My Life with the Wave (அலையுடன் எனது வாழ்க்கை) என்பதாகும். கவிதையில் மட்டுமே சாத்தியம் என நினைத்த ஒரு கருப்பொருளைக் கொண்டு சிறுகதையை எழுதியிருக்கிறார். மேஜிகல் ரியலிசக் கதைகளில் இதை ஒரு சாதனைப் படைப்பாகக் கருதுகிறார்கள்.

தமிழின் ஆரம்பக் காலச்சிறுகதைகளில் இயற்கை வர்ணனைகள் அதிகமிருக்கும். காரணம் ஐரோப்பியச் சிறுகதைகளில் சூழலும் இடமும் முக்கியமானவை. ரஷ்யக் கதைகளில் முதல் பத்துப் பக்கங்கள் சூழலின் விவரிப்பாகவே இருக்கும். அதிலும் பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதையென்றால் பனிப்பொழிவு பற்றி விரிவாக எழுதியிருப்பார்கள். இதன் காரணமாகவே ஆரம்பத் தமிழ் கதாசிரியர்களும் இயற்கை குறித்து நீண்ட வர்ணனையை எழுதினார்கள்.

ஆனால் நவீன சிறுகதைகளின் வருகைக்குப் பிறகு கதையின் மைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமான வர்ணனைகள் மட்டுமே போதும் என்றாகியது. உரையாடல்களும் குறைந்து போயின. குரலை உயர்த்திக் கதை சொல்வதோ, நாடகீயமான தருணங்களை உருவாக்குவதோ குறைந்து போனது.

கடற்கரைக்குப் போய் அலையை வேடிக்கை பார்ப்பது பலராலும் எழுதப்பட்ட விஷயம். ஆனால் அலையை ஒரு இளம் பெண்ணாக உருமாறிப் பின்தொடர்ந்து வர ஆரம்பித்தால் என்ன நடக்கும். அது தான் ஆக்டோவியா பாஸின் கதை.

கடற்கரைக்குச் செல்லும் ஒருவன் அலையைப் பார்த்து ரசிக்கிறான். அவன் ரசித்துக் கொண்டிருந்த ஒரு அலை பெண்ணாகி அவனைப் பின்தொடர்கிறது. காதலில் மயங்கிய அவனும் அலையைத் தன்னோடு கூட்டிச் செல்கிறான். பயணம் செல்லும் அவன் அலைப்பெண்ணை எப்படி ரயிலில் கூட்டிப்போவது எனத் தெரியாமல் அதைப் பயணிகளுக்கான குடிநீர்த் தொட்டியினுள் மறைந்து கொள்ளச் சொல்கிறான். அப்படியே அவளும் அடைக்கலமாகிறாள். ஆனால் அந்தத் தண்ணீரை குடித்த பலரும் தண்ணீர் உப்புக் கரிக்கிறது என்று புகார் அளிக்கிறார்கள். அவன் தான் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டான் எனப்புகார் சொல்கிறார்கள். தண்ணீரில் விஷம் கலக்க முயற்சி செய்தான் என அவனைப் போலீஸ் கைது செய்கிறது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் செய்யப்படமுடியாமல் எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பி வைக்கபடுகிறான். வீடு வந்து சேர்ந்தால் அதே அலைப்பெண் காத்திருக்கிறாள்,.

இங்கே எப்படி வந்தாய் எனக்கேட்டிகிறான். ரயில் என்ஜினுக்குள் உப்பு நீராக ஊற்றபட்டேன். அங்கே கொதித்து ஆவியாகி வானிற்குச் சென்று மழைத் துளியாகி மீண்டும் இங்கே வந்துவிட்டேன் என்கிறாள் அலைப்பெண்.

தீராத காதலால் அவளைத் தன்னோடு சேர்த்துக் கொள்கிறான்.. அலைப் பெண் அவனைத் தழுவிக் கொள்கிறாள். அன்புடன் உறவாடுகிறாள். கடலால் சூழப்பட்ட தீவைப் போல உணருகிறான். ஆழம் காணமுடியாத கடலின் இயல்பை அவளிடமும் காண்கிறான். நாளுக்கு நாள் ஆவேசமும் கொந்தளிப்புமாக அவளது இயல்பு மாறிக் கொண்டேயிருக்கிறது. அவளுடனே முயங்கிக் கிடக்கிறார்.

பின்பு ஒரு நாள் அவளை விட்டு விலகிவிட முயன்று பழைய பெண்தோழி ஒருத்தியிடம் ஆலோசனை கேட்கிறான். எந்த யோசனையாலும் அவளை விலக்கிவிட முடியவில்லை.

பனிக்காலத்தில் அலைப்பெண்ணின் இயல்பு மாறிவிடுகிறது. அவள் சீற்றம் கொள்கிறாள். ஆவேசத்துடன் கொந்தளிக்கிறாள். அவளைக் கட்டுக்குள் வைத்திருக்க அவனால் இயலவில்லை. அவளிடமிருந்து தப்பி மலைப்பிரதேசம் நோக்கிப் போகிறான் பின்பு திரும்பி வந்த போது அவள் பனிச் சிற்பம் போலாகி கிடக்கிறாள். அவளை அப்படியே கோணியில் போட்டு தூக்கிக் கொண்டு போய்ப் புறநகர் விடுதி ஒன்றில் பணிபுரிந்த நண்பனிடம் விற்றுவிடுகிறான். அந்தப் பணியாளனும் பனியை உடைத்து குளிரூட்டும் வாளிக்குள் போட்டு வைக்கிறான் என்பதுடன் கதை முடிந்துவிடுகிறது.

••

அலையைக் காதலிக்கும் ஒருவன் பின்னால் அலை வந்துவிடுகிறது என்ற கற்பனை புராதனமானது. நாட்டுபுறக் கதைகளில் இது போன்ற வகைமை கொண்ட கதையிருக்கிறது. ஆக்டோவியா பாஸின் கதையில் அந்த அலைப் பெண் காதலனை எவ்வாறு பின்தொடருகிறாள் என்பதே சுவாரஸ்யம்.

கதை அலைப்பெண்ணைப் பற்றியது போல இருந்தாலும் காதலிக்கும் நிஜப்பெண்ணின் கதையே அலையின் கதையாக உருமாற்றம் கொண்டிருக்கிறது என்பதை உணருகிறோம். ஒரு பெண் ஆணால் தீவிரமாக நேசிக்கப்படுகிறாள். அவனுக்காகத் தன் வீட்டினைத் துறந்து வெளியேறுகிறாள். அவனுக்காகவே வாழ்கிறாள். ஆனால் அந்தக் காதல் ஒரு புள்ளியில் வெறுப்பாக மாறிவிடுகிறது. அவளை விட்டு விலகி ஒடவே அவன் நினைக்கிறான். பிரிவு அவளை உறைந்து போகச் செய்கிறது. முடிவில் அவளை அவனே விற்றுவிடுகிறான்

ஆக்டோவியா பாஸ் சர்ரியலிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் பாதிப்பினை அவரது கவிதைகளில் காண இயலும். இக்கதையும் சர்ரியலிச பாதிப்பில் உருவானது என்கிறார் விமர்சகர் எட்கர் கிரே.

The Double Flame: Love and Eroticism என்றொரு கட்டுரை நூலை ஆக்டோவியா பாஸ் எழுதியிருக்கிறார். இது காமத்தையும் காதலையும் பற்றியது. காமத்தின் வரையறைகளை, இயல்புகளை மிக நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்

Love is the involuntary attraction toward a person and the voluntary acceptance of that attraction என இந்த நூலின் ஒரு கட்டுரையில் பாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தின் விளக்கமாகவே இக்கதையைச் சொல்லலாம்.

The Double Flame நூலில் உலகப்புகழ்பெற்ற காதல்கவிதைகளையும் காதல் மற்றும் காம அனுபவங்கள் எவ்வாறு உலகஇலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார். எப்போதும் விலங்குகள் ஒரே விதமாகவே உடலுறவு கொள்கின்றன. மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதங்களில், நிலைகளில் உடலுறவு கொள்கிறார்கள். காமத்தைக் கலையாக்கியது மனிதனே என்கிறார் ஆக்டோவியா பாஸ். காதல் மற்றும் காமத்தின் பன்முக வெளிப்பாட்டினை இந்நூல் அழகாக எடுத்துக்காட்டுகிறது.

***

ஆக்டோவியோ பாஸின் சிறுகதைக்கும் மெக்சிக பழங்கதை ஒன்றுக்கும் தொடர்புள்ளது

மெக்சிகோ நகரம் உருவானதற்கு ஒரு பழங்கதை சொல்லப்படுகிறது. அதில் சில வேட்டைகாரர்கள் ஒன்று சேர்ந்து காட்டில் வேட்டையாடப் போகிறார்கள். அப்போது காட்டினுள் உள்ள ஏரி ஒன்றில் வசிக்கும் தண்ணீர் உடல் கொண்ட இளம்பெண் ஒருத்தியை காணுகிறார்கள். அவள் நீருனுள் உறங்கிக் கொண்டேயிருக்கிறாள். அவள் அழகின் மீது கொண்ட மோகத்தால் அவளை உடலை சீண்டுகிறார்கள். அவர்களின் தழுவல் மற்றும் சீண்டல்களை அவள் பொருட்படுத்தவேயில்லை. தூக்கத்திலிருந்து விடுபடவுமில்லை. அவளை அடைய முடியாது என நினைத்து அவர்கள் ஏக்கத்திலே விலகிப் போகிறார்கள்.

அங்கிருந்து வேடர்கள் இன்னொரு இடம் நோக்கிப் போனார்கள். அப்படியும் அந்தப் பெண்ணின் நினைவு மறையவேயில்லை.

மலைகளால் சூழப்பட்ட இன்னொரு இடத்திற்கு வேடர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த ஏரியில் அதே பெண்ணை மறுபடி பார்த்தார்கள். அவள் மாயப்பெண் என்பதை உணர்ந்தார்கள். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று ஆசை கொண்டார்கள். உறங்கும் அவளைத் தொடும்போது பனியை தொடுவதைப் போலவே உணர்ந்தார்கள்.

அந்தப் பெண்ணின் பொருட்டு அதே இடத்திலே வசிப்பதென முடிவு செய்தார்கள். அந்த ஏரியை சுற்றியே ஒரு நகரம் ஒன்றை உருவாக்கினார்கள். ஏரிப்பெண்ணுடன் கூடுவதற்காக அவர்கள் மீன்களாக உருமாறினார்கள். அப்படியும் அவளை அடைய முடியவேயில்லை. அவளது நினைவு தீர்க்கமுடியாத தாகமாக நிலைகொண்டு விட்டது. அந்த நகரவாசிகள் இன்றும் அந்தத் தண்ணீர் பெண்ணின் மீதான காதலால் துயருற்றபடியே இருக்கிறார்கள் என்று முடிகிறது பழங்கதை.

ஆசையின் காரணமாக உருவாக்கபட்ட நகரமே மெக்சிகோ. அங்கே பிறந்து வளர்ந்தவர் ஆக்டோவியா பாஸ். ஆகவே இந்தக் கதைக்கும் அலையுடனான எனது வாழ்க்கை கதைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பாஸ் கதையில் வரும் அலைப்பெண் மெக்சிக பழங்குடி கதையில் வரும் தண்ணீர் பெண்ணே தான். அவளை வேட்டைக்காரர்களால் அடைய முடியவில்லை. ஆனால் சிறுகதையில் ஒரு கவிஞனால் அடைந்துவிட முடிகிறது.

நிகரற்ற அழகும் மீளாத்துயிலும் கொண்டவளாக நீர்ப்பெண் சித்தரிக்கபடுகிறாள். அவளைத் தான் பாஸ் உருமாற்றி நகரத்தில் வசிக்க வைக்கிறார். அலையுடன் வாழ விரும்புகிறவன் கட்டுபாட்டுகளை வைத்துக் கொள்ள முடியாது. அலை என்பது ஒரு சுதந்திரம். கதையில் வரும் கைதும் நீதி விசாரணையும் எந்த அளவு நாம் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளம்

ஆக்டோவியா பாஸின் இக்கதையில் அந்தப் பெண்ணுடன் அவன் கொள்ளும் உறவு மிகுந்த கவித்துவமான சொற்களால் வெளிப்படுத்தபடுகிறது. நீள்கவிதை ஒன்றை வாசிப்பதை போலவே இருக்கிறது.

காதலில் இருந்து காமத்திற்குச் செல்லும் வேகமும் காமத்திலிருந்து காதலிற்குத் திரும்பும் வேகமும் எதிரெதிரானது. உடல்களின் ஒன்றிணைவிற்குப் பிறகு காதல் உருமாற்றம் கொண்டுவிடுகிறது. எந்த உடல் அவனுக்குக் கவர்ச்சி அளித்ததோ அதை விட்டு முடிவில் விலகிப் போக நினைக்கிறான். பயம் கொள்கிறான். தனித்துப் போகிறான். அதன் பிறகு அவள் தனிமையில் உறைந்துவிடுகிறாள். காதலற்ற வாழ்க்கை என்பது உறைந்த பனி தானே. காதலின் சந்தோஷத்தில் துவங்கி கசப்பான உறவில் முடிகிறது கதை.

நம் காலத்தின் நிஜமான காதல் கதை என்பது இது தானே. இக்காதலை நேரடியாகக் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் வைத்து உருவாக்காமல் அலையின் வழியாக உருவாக்கியிருப்பதே ஆக்டோவியா பாஸின் சாதனை

.•••

0Shares
0