கதைகள் செல்லும் பாதை -8

அந்திச்சூரியன்.

காசிநாத் சிங் என்ற ஹிந்தி எழுத்தாளரின் சுகம் என்றொரு சிறுகதையை இன்று வாசித்தேன்.

காசிநாத் சிங் வாரணாசியில் வசித்து வருகிறார். வயது 81. காசியில் பிறந்து வளர்ந்தவர். அன்றாடம் மாலையில் இலக்கியம் பேசுவதற்கு கங்கையின் படித்துறைக்கு வந்துவிடுகிறார். சக எழுத்தாளர்கள். வாசகர்கள் என்று ஒரு குழுவே அங்கே கூடிவிடுகிறார்கள். ஒன்றாகத் தேநீர் அருந்தியபடி உலக விஷயங்கள் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.

காசி நகரின் தொன்மையையும் அதன் மாற்றங்களையும் பற்றி விரிவான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். இவரது கதைகள் தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கின்றன.

சுகம் என்ற இச்சிறுகதை அற்பவிஷயம் என உலகம் நினைக்கும் ஒன்றைப் பற்றியது. மற்றவர்களுக்குப் பொருட்படுத்த தக்கவிஷயமில்லை என்பது எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே உதாரணம்.

போலோ பாபு தந்தி அலுவலகக் குமாஸ்தா. அவர் பணியில் இருந்து ஒய்வு பெற்று சில நாட்களே ஆகிறது. ஆகவே பகல் முழுவதும் வீட்டிலே இருக்கிறார். ஒரு நாள் தற்செயலாகப் பின்வாசற்கதவு வழியாக அஸ்தமனச் சூரியனைக் காண்கிறார். தூரத்து மலை. அதன் மேல் மிதக்கும் மேகங்கள். அதனுள் சென்று மறையும் சூரியன். எத்தனையோ முறை சூரியனைப் பார்த்திருந்தாலும் தகதகவென உருகியோடும் தங்கமாக ஒளிரும் சூரியனைக் காணும் போது பரவசமாகயிக்கிறது.

இந்தச் சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். யாரிடம் சொல்வது என யோசிக்கிறார். சமையற்கட்டில் வேலையாக இருக்கும் மனைவியை அவசரமாக வெளியே வா என அழைக்கிறார். அவளும் உடனே வெளியே வந்து என்ன ஆயிற்று எனக்கேட்கிறாள்.

அங்கே பார் எனக் கையைக் காட்டுகிறார்.

அவள் தொலைவைப் பார்த்துவிட்டு இதில் என்ன இருக்கிறது எனக்கேட்கிறாள். என்ன தான் பார்த்தாய் சொல் எனக்கேட்கிறார்.

அவள் கோவேறு கழுதைகள் போய்க் கொண்டிருக்கின்றன. அதைத் தானே சொல்கிறீர்கள் என்கிறாள். அவருக்குக் கோபம் பீறிடுகிறது.

நான் சொன்னது கழுதையை இல்லை. வானத்தைப் பார் என்கிறார்

அவள் வானத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் ஒன்றுமில்லையே என முகம் சுழிக்கிறாள்

சூரியன் அழகாக இருக்கிறது என்கிறார் போலோ பாபு.

நீங்கள் இன்றைக்குத் தான் பார்க்கிறீர்கள். நான் தினமும் இதே சூரியனை தானே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சலித்துக் கொள்கிறாள்

அவருக்கு ஆத்திரம் பீறிடுகிறது. எல்லா நாள் சூரியனும் இதுவும் ஒன்றில்லை. இந்த அழகை ஏன் இவளுக்கு ரசிக்கத் தெரியவில்லை என்று அவளைத் திட்டிவிட்டுச் செருப்பு போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே கிளம்பிப் போகிறார்.

யாரிடம் சந்தோஷத்தை சொல்வது எனத் தடுமாறுகிறார். வீதியில் சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் காட்டலாம் என நினைக்கிறார். அவர்களோ அவரைக் கண்டுகொள்ளவேயில்லை

தெரிந்த நபர் யாராவது வரமாட்டாரா எனத்தேடி போகிறார். வழியில் ஒருவன் ஒட்டகத்தின் மீது அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனிடம் ஏய் அந்தச் சூரியன் அழகாகயிருப்பதைப் பார்த்தாயா எனக்கேட்கிறார். அவன் பதில் சொல்லாமல் போய்விடுகிறான். அது அவரது கோபத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அருகிலுள்ள தானியக்குடோனுக்குப் போகிறார். தெரிந்தவர்கள் உள்ள இடம். அங்கே அவரை வரவேற்று அமரச் சொல்கிறார்கள்

எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை. அங்கிருந்த ஒருவன் மீன்பிடிப்பது பற்றிப் பேச துவங்குகிறான். உடனே போலோ பாபு மாலை நேரத்தில் வானம் எப்படியிருக்கிறது எனப் பேச்சை ஆரம்பிக்கிறார். அதில் ஒருவருக்கும் விருப்பம் வரவில்லை. அவர்கள் மீன்பிடிப்பது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த அவரது நண்பரான அதிகாரியை தனியே அழைத்துக் கொண்டு போய் இன்று மாலை சூரியன் மிக அழகாக இருப்பதைக் கவனித்தீர்களா எனக்கேட்கிறார்.

இதைச் சொல்லவா தனியே அழைத்தீர்கள் என்பது போல முறைத்த நண்பர் இது எப்போதும் இருப்பது தானே என்கிறார்.

அதற்கு மேல் என்ன பேசுவது என மனம் உடைந்து அவர் தெருவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

மாலை வெளிச்சம் மறைந்து இரவாகிறது. தெருவில் ஆட்கள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஒருவருக்குக் கூடவா சூரியனின் அழகு பிடிக்கவில்லை. தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் கூடவா இல்லை என்று  அவரது மன வேதனை அதிகமாகிறது.

இது சாதாரணமாகப் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் தானே, ஏன் புரியாதது போல நடிக்கிறார்கள் என்று கோபமும் ஆத்திரமும் மேலோங்குகிறது.

கசந்த மனதுடன் வீடு வந்து சேருகிறார். நாளைக்கும் இது போல மாலை நேரம் வரும் அப்போதும் சூரியனின் ஒளிரும் அழகு வெளிப்படும். அதை அனைவருக்கும் காட்டுவோம் என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறார். ஆனால் இதைக் கூடப் புரிந்து கொள்ளாத மனிதர்களாக இருக்கிறார்களே. உலகம் ஏன் இப்படி ஆகிவிட்டது என யோசிக்க யோசிக்க மனவேதனை அதிகமாகவே செய்கிறது.

இதே யோசனையில் வருத்தமுற்றவராக  சாய்வுநாற்காலியில் கிடந்த அவரை மனைவி சாப்பிட அழைக்கிறாள்.

எனக்கென யாருமே இல்லை.. என்னை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை.. எனக்குச் சாப்பாடு வேண்டாம் என்று கோபமாகச் சொல்கிறார்.

ஏன் இப்படிப் பேசுகிறீர்கள். உங்களுக்கு என்ன ஆகிவிட்டது என மனைவி குழப்பத்துடன் கண்ணீர் விட ஆரம்பிக்கிறாள்.

ஏன் அழுகிறாய்,, என்னவாகி விட்டது என்று மனைவியை மேலும் திட்டுகிறார். அது அவளது அழுகையை அதிகப்படுத்துகிறது.

அவள் அழுவதைக் கண்டு பிள்ளைகளும் அழுகிறார்கள். அவர்கள் அழுகிறார்களே என்று போலோ பாபுவும் சேர்ந்து அழுகிறார்.

அந்த அழுகை குரல்களில் கருணை நிரம்பியதாக ஒலித்த ஒரே குரல் போலோ பாபுவுடையது மட்டுமே எனக் கதை முடிகிறது

••

யோசித்துப் பார்த்தால் வேடிக்கையான விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் இது வெறும் வேடிக்கையில்லை. ஒய்வு பெற்ற பிறகு தான் போலோபாபு உலகை தரிசிக்கத் துவங்குகிறார். எத்தனையோ அந்திச் சூரியனை அவர் கடந்திருக்கிறார். அதன் அழகை கூடக் கண்டிருக்கிறார். ஆனால் தன்னைப் போலவே அதுவும் தன் முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதை அன்று தான் காணுகிறார். மேலும் ஒவ்வொரு நாளும் சூரியன் புதியது. அதன் வண்ணமும் வசீகரமும் புதியது என்று அப்போது தான் புரிகிறது.

அதுவரை சூரியனோடு ஒரு உறவும் அவருக்குக் கிடையாது. ஆனால் அந்த நாளில் சூரியன் அவரைச் சந்தோஷப்படுத்துகிறான். அடிவானம். தூரத்து மலை. மேகம். என யாவும் அவரை வசீகரப்படுத்துகின்றன.

தனது மகிழ்ச்சியை மனைவி புரிந்து கொள்வாள் என அவளை அழைத்துக் காட்டுகிறார். அவளுக்கோ கோவேறு கழுதையில் செல்லும் பொதி தான் கண்ணிற்குத் தெரிகிறது. அவள் பார்த்த சூரியனை அவர் கண்டதேயில்லை. அது போலத் தான் அன்றும் அவர் பார்த்த சூரியன் அவளுக்கு வசீகரமாகயில்லை

அவள் மட்டுமில்லை உலகில் ஒருவருக்கும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு கிடையாது என்பதைக் கண்டுகொள்கிறார்.

சூரிய கிரகணம் அன்று தான் சூரியனைப் பற்றி நாம் நினைத்துக் கொள்கிறோம். மற்றநாட்களில் வானத்தை நேர் கொண்டு பார்ப்பது கூடக் கிடையாது. எல்லோருக்கும் வாழ்க்கை பிரச்சனைகள், கவலைகள். யாருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் பேரழகு மிக்கக் காட்சிகளை ரசிக்க விருப்பமும் இல்லை. கவனமும் இல்லை.

போலோ பாபு ஏன் அழுகிறார். அது அவரது மனைவியின் அழுகை உருவாக்கிய எதிர்வினையா இல்லை. அவர் இத்தனை நாட்கள் எதையும் அறிந்து கொள்ளாத மனிதனாக வாழ்ந்திருக்கிறேனே என நினைத்து தான் அழுகிறார். பணமும் பரிசுப் பொருட்களும் தான் சந்தோஷமா என்ன. இயற்கை தரும் மகிழ்ச்சியை வேறு எதுவும் தந்துவிட முடியாது.

ஒருவகையில் அன்று தான் போலோ பாபு தன்னைக் கண்டுகொள்கிறார். தன்னைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறார். தான் ஒரு தந்தி அலுவலகக் குமாஸ்தா இல்லை. தனித்துவமிக்க மனிதன். உலகை ஆராதிக்க வேண்டிய மனிதன் என்பதை உணருகிறார்.

உலகம் அவரது மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாது. அவரைப் புரிந்து கொள்ளாது. தினமும் வருகிறது என்பது தான் சூரியனின் மீதான சலிப்பிற்குக் காரணம். ஆனால் ஒவ்வொரு நாளும் சூரியன் புதியது என பெரும்பான்மையோர் உணருவதேயில்லை.

கதையில் வரும் சிறுவர்கள். கடந்து செல்லும் ஆட்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். அவர்களின் செயல் அவரை அதிகம் வருத்தபட வைக்கிறது. ஒருவேளை பணியில் இருந்த நாட்களில் யாராவது ஒருவர் போலோ பாபுவிடம் வந்து மாலை சூரியனைப் பற்றிப் பேசியிருந்தால் அவரும் இப்படித் தான் நடந்து கொண்டிருப்பார்.

இன்றைக்குச் சூரியன் அழகாக இருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா என்று கேட்க பாபு கூச்சப்படுகிறார். தயக்கத்தைத் தாண்டி கேட்கும் போது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதைக் கண்டு சங்கடம் கொள்கிறார். உலகம் அப்படிபட்டது தான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கதை. சொல்முறை, உரையாடல் எல்லாமும் பழையதாக இருக்கின்றன. ஆனால் கதை பேசும் விஷயம் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

போலோ பாபுவிற்குச் சூரியன் போல இன்றைய மனிதனுக்கு ஒரு அலையோ, மழைமேகமோ, குருவியோ, நிலவோ ஏதோவொன்று சந்தோஷம் அளிக்கலாம். அப்போதும் உலகம் இப்படியே நடந்து கொள்ளும்

ஒரே வேறுபாடு போலோ பாபு கண்ணீர் விட்டு அழுகிறார். இன்றைய மனிதன் அழமாட்டான். தன்னைப் புரிந்து கொள்ளமறுக்கிறார்களே என மௌனமாகி விடுவான். பிறகு அவன் எந்தச் சந்தோஷம் பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டான்.

காசிநாத் சிங்கின் கதை வாழ்க்கையை உண்மையில் நாம் ரசித்து வாழ்ந்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.

••

0Shares
0