குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள் குறித்த விமர்சனம், எஸ்.வி,வேணுகோபாலன் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
**
கதைகளின் உலகிற்குக் குழந்தைகளை மீட்டெடுக்கும் அற்புதக் கற்பனைக் கொத்துக்கள்…
எஸ் வி வேணுகோபாலன்
ஏய், சிப்பு, குப்பு, பப்பு, திப்பு, கப்பு,லப்பு, மப்பு. ….எல்லாம் இங்க பக்கத்திலே வந்து உக்காருங்க. முதல்ல எல்லாரும் கண்களை மூடிக்கணும். நான் சொல்ற வரைக்கும் திறக்கக் கூடாது. சுவாரசியமா சில விஷயங்களைக் காட்டப் போறேன்…ஏய், பப்பு திருட்டுத்தனமா ஓரக் கண்ணுல பாக்கறே…மூடு கண்ணை.
உம்…இப்போ அப்படியே கண்ணைத் திறக்காம நான் கேக்குற கேள்விக்கு ஒவ்வொருவரா பதிலைச் சொல்லிட்டே வரணும்..என்ன சரியா..
மந்திரவாதி கதையில அவன் உசிரு எங்கே இருக்கும்…?
ஒரு கிளி கிட்ட.
அந்தக் கிளி எங்க இருக்கும்?
தொலை தூரத்துல.
அங்க போகணும்னா எதையெல்லாம் தாண்டிப் போகணும்?
ஏழு மலை…..ஓ!
ஏழு கடல்…. ஓ!
ஏழு காடு… ஓ!
அப்புறம் அங்க ஏழு வீடு…ஓ!
ஏழாவது வீட்டுக்குள்ள ஏழு குளம்..ஓ!
ஏழாவது குளத்துல தாமரைப் பூ…ஓ!
அதுல உக்கார்ந்திருக்கும் மந்திரவாதியோட உசிர் இருக்கும் கிளி!
அடேங்கப்பா, சரியாய்ச் சொல்லிட்டீங்களே…இந்த மாதிரி இன்னும் அற்புத உலகங்களை, அதிசய விலங்குகளை, அதிசய ஆட்களை எல்லாம் இருக்கற இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்கணும்னா நமக்கு என்ன வேணும்?
ஏழு…..ஏழு…..ஏழு..
சொல்லுங்க, ஏழு என்ன வேணும், ஏழு கப்பலா, ஏழு விமானமா, ஏழு பஸ்ஸா?
இல்ல, இருக்கற இடத்துலன்னு தானே சொன்னீங்க, ஏழு புத்தகங்கள் வேணும்!
அப்படிப் போடு…..இந்தா, கண்ணைத் தொறங்க எல்லாம்…ஆளுக்கு ஒண்ணாப் பிடிங்க இந்த புத்தம் புது புத்தகங்களை…எல்லாம் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவங்க எழுதினது…அவரும், அவரோட நான்காவது வகுப்பு படிக்கும் மகன் ஆகாஷும் சேர்ந்து தயாரிச்சது..
ஹி ஹி ஹி…சிரிக்கிற கழுதைப் படம் போட்டு எனக்கு சூப்பராக் கிடைச்சிருக்கு “தலையில்லாப் பையன்” புத்தகம்…ஹையா… அதுக்குள்ளே ஒன்பது கதை…ம்..ம்..நான் தான் வேக வேகமாப் படிப்பேனே…சொல்றேன். கதையைப் பத்திச் சொல்றேன்..அதுக்கு முன்னே, அம்சமாப் படம் எல்லாம் போட்டுச் சின்ன பசங்க படிக்கிற மாதிரி நல்ல எழுத்துல வந்திருக்கே அதைச் சொல்லணும். தலையில்லாமலே ஒரு பையன் பொறந்திருவானாம். …பாவம், அவங்க அம்மா சாமியார் கிட்டப் போய்க் கேட்டா அவரு ஏதோ மந்திரம் போட்டு வேர் ஒண்ணு எடுத்துக் கொடுப்பாராம். பன்றித் தலை கிடைக்குமாம். பார்க்கிற இளவரசி கோபப்பட்டுப் பிச்சிப் போடுங்கடா அவன் தலைய அப்படீனு சொல்லிடுவாளாம்.. அப்புறம் கழுதைத் தலை கிடைக்குமாம். பதினைந்து வயதாகும்போது இளவரசி கண்ணில் பட்டு, அந்தத் தலையும் போயிருமாம். அப்புறம் சாமியார், சரி, மனுஷன் தலையே கிடைக்க வைக்கிறேன், ஆனா அழகான முகம் இருந்தா அறிவு இருக்காது, அறிவு வேணும்னா அசிங்கமான மூஞ்சி தான் கிடைக்கும் என்ன சொல்லு அப்படீனு கேப்பாராம். அவங்க அம்மா, சாமி அழகான முகமே இருக்கட்டும்னுடுவாளாம். இப்ப கேளுங்க கூத்தை…இளவரசி இவனைப் பாத்து மயங்கி இவனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லிடுவாளாம். அறிவில்லாத ராஜா தன்னை மாதிரியே இருக்கும் இவனையே இளவரசிக்குக் கட்டி வச்சி ராஜா ஆக்கிடுவாராம்…ஹா ஹா ஹா…ஜோரா இருக்குல்ல.
இன்னும், அறிவுக்குத் தீனி போடுற கதை. உயிர்க்காட்சி சாலையில் கூண்டுக்குள்ளே தவிக்கும் ஒட்டகத்தோட, சிவிங்கியோட சோகக் கதை, சுயநலமும், சந்தேக புத்தியும், அடுத்தவங்கள மதிக்காத தன்மையும் கொண்ட மனிதர்களிடையே வாழப் பொறுக்காத மனிதக் குரங்கின் கதை….அப்புறம் வெட்டிச் சண்டைக்கு உயிரை விடும் அண்டை வீட்டுக்காரங்க கதை…ரொம்ப நன்றி எனக்கு நல்ல புத்தகம் கிடைச்சுது. பப்பு, உன் கிட்ட வந்த புத்தகத்தைப் பத்திச் சொல்லு..
சொல்றேன், சிப்பு! எனக்கு ஏன் கனவு வருது?
தெரியலையே…எனக்குக் கூடத் தான் வருது..
அட, உன்னைப் பத்தி யாரு கேட்டா! அது என்னோட புத்தகத்தோட பேரு! நம்ம மீன் குஞ்சு ‘குபுக்’ இருக்குல்ல…அதுக்குத் திடீர்னு ஒரு நாள் கனவு வந்திருது. மனுஷங்களைக் கடலில் இழுத்து வச்சி ரெண்டு அடி கொடுக்கிற மாதிரி…ஆனா, கடலில் வேற யாருக்குமே கனவுன்னா என்னன்னு தெரியிறதில்ல…அதோட அம்மா, அக்கா யாருக்குமே !அதனால், அந்தப் பெரிய கடல் முழுக்க இருக்கிற ஒவ்வொரு உயிரினமாப் போய்ப் பார்த்துக் கனவு பற்றித் தெரிஞ்சுக்க முயற்சி செய்யுது குபுக். அதுங்களோட பேரும், அதுங்க கனவு பற்றித் தெரியாம உளறிக் கொட்டி ‘குபுக்’ கிட்ட மாட்டிக் கிட்டு முழிக்கிறதும் ஒரே தமாஷ் தான் போ! ஆனால் எத்தனை பெயர்களை நான் இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்…கடல் குதிரை, கடல் பசு, கடல் ஆமை, கடல் பாம்பு, கடல் நாய், அப்புறம் கோபமாய்த் துடிக்கும் திமிங்கிலம் இவங்களை நம்ம குபுக் சமாளிக்கிற சாகசம்..வெந்நீர் ஊற்றுல தப்பிச்சி கனவு விதைகள் இருக்கும் கோளத்தை எடுத்து உடைச்சே போட்டுடுது குபுக். அப்புறம் என்ன, அடுத்த நிமிஷத்தில் இருந்து கடல் வாழ் உயிரினங்கள் எல்லாமும் கனவு காண ஆரம்பிச்சிடுது..என்ன கற்பனை, என்ன அழகான பேச்சுக்கள், என்ன மாதிரி வித விதமான அனுபவங்கள் குபுக் சுட்டிப் பயலுக்கு! குப்பு உன்னோட புத்தகத்தைக் கொடுத்தா வேணா இதை நான் காட்டுவேன்..
சரிடா பப்பு, காசுக் கள்ளன்!
ஏய், யாரடா சொல்றே அப்படி!
டேய், உன்னைச் சொல்லலடா. எனக்கு வந்திருக்கும் நூலோட தலைப்புடா. அடேங்கப்பா, நம்ம ஹீரோ திவா ஸ்டைலா ரோலர் ஓட்டிட்டுப் போகும்போது தன்னோட ஐந்து ரூபாய் நாணயத்தைக் கீழே தவற விட்ருவானா.. அவ்வளவுதான். அதைத் தேடி எங்கோ பாதாள உலகத்துக்கே போயிடுவான்..அங்கே போனா, பழைய காலத்து நாணயங்கள், இப்போ நாம உபயோகிக்காத தாயக்கட்டை, பல்லாங்குழி போன்ற விளையாட்டுப் பொருள்கள், மரப்பாச்சிப் பொம்மையைப் பார்த்தாக் கண்ணுல நீர் வருதுடா…ஆனா, வாய்ப்பாடு புத்தகத்தைக் கூட இப்போ யாரும் படிக்கறதில்லன்னு காசு கள்ளன் சொல்றது தப்புதானே, எங்க ஸ்கூலில் இப்பவும் வாய்ப்பாடு படிக்கிறோம், எழுதிப் பார்க்கறோமே..ஆனா, நிறைய அந்தக் காலப் பொருளை எல்லாம் திரும்பப் பாக்கும்போது சுவாரசியமா இருந்தது. அப்புறம், நாணயங்கள் எப்படி தயாராகத் தொடங்கிச்சு…இப்போ எங்கே செய்யுறாங்க என்ற விவரம் எல்லாம் நல்ல இருந்துச்சுடா. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, சுதந்திரப் போராட்ட காலத்துல நேதாஜி அவராகவே தேசிய வங்கி அமைச்சு லட்ச ரூபாய் நோட்டு கூட கொண்டு வந்தாராம். அருமையான சேதிகள்..
ஏய், நான் இன்னும் சொல்லி முடிக்கலடா..இன்னும் மூன்று அழகான கதைகள் வேற இருக்கு இதுல. திப்பு உன் கதை என்னடா…ஏய் என்ன டான்ஸ் ஆடிக்கிட்டிருக்க ..கதையைச் சொல்லு.
லா….லி…லாலாலா..லிலிலி…லா…லி…லாலி பாலே! அதுவா, நம்ம லாலியோட பாலே டான்ஸ் இது..யாரு தெரியுமா லாலி, மண் புழு தான்! அல்ப சொல்பமா நினைக்காதே..யாரோ கீழே போட்டுட்டுப் போன பேப்பர்ல பாலே டான்சர் படத்தைப் பாத்ததோ இல்லையோ, ஒரே வெறியா அலைஞ்சு திரிஞ்சு நடனம் கத்துக்கிட்டு ரஷ்யா வரை போய் பெரிய டான்சர் ஆயிருச்சு தெரியுமா..ஆனால் அது பட்ட கஷ்டமும் நஷ்டமும்..யாருக்குமே லாலி மேல நம்பிக்கை இல்ல. ஆனா விடாப்பிடியாப் போய் நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப் படிச்சு, நம்ம அக்சூ அக்சூ தும்மல் போடும் காபி குரங்கு ஸ்டூடியோவில போட்டோ பிடிச்சு, ரஷ்யாவுக்கு விண்ணப்பம் அனுப்பி, சிலந்தி கிட்ட மெலிசு துணி வாங்கி கண்ணு தெரியாத வெட்டுக் கிளி டெய்லர் கிட்ட டிரஸ் தச்சி, சிங்க ராஜ முன்னாடிப் போய் நடனம் ஆடி அசத்தி அவரோட ஸ்பான்சர்ல ரஷ்யா போய் பெரிய பெரிய டான்சரை எல்லாம் தோக்கடிச்சு, மரத்தோட இலை உதிர்ந்து விழுற மாதிரியும், நீர்ப் பூச்சி நடப்பது மாதிரியும் நடனம் ஆடி முதல் பரிசத் தட்டி வந்திருச்சு…ருசியான கதை….அழகு அழகு.. அதோட, இன்னும் அஞ்சு கதைங்க தினுசு தினுசா…உன்னோட புத்தகம் என்ன கப்பு?
சொல்றேன்..எனக்குத் தான் நீள நாக்கு!
தெரிஞ்சது தானே!
ஏய், புத்தகத்தைச் சொன்னேன். அடேங்கப்பா, கதையில் வர அப்புவுக்கும் என்னை மாதிரி தலை முடி எத்தனை வாரினாலும் அப்படி ரெண்டு முடி குச்சி மாதிரி நிக்குமாம்..கேள்வி கேள்வி ஓயாத கேள்வி…பாவம், குட்டிப்பய. நம்ம செட்ல சேர்ந்திருந்தா நாமே எல்லாத்துக்கும் அவனுக்கு இட்டுக் கட்டி ஒரு பதிலைச் சொல்லியிருப்போம். அவங்க அம்மாவுக்கோ, வேலைக்கார ஆயாவுக்கோ, யாருக்குமே பொறுமை இருக்கறதில்ல. ஒரே தொல்லையாப் போச்சுன்னு நினைக்கிறாங்க…ஆனா, அவன் என்னமா அறிவாய்க் கேக்குறான்..கண்ணாடி பேசுமா, கொசு இட்லி சாப்பிடுமா, இட்லி சதுரமா இருந்தா அதுக்குப் பேரு சட்லியா, ஏன் முடி முளைக்குது, ஒவ்வொருத்தருக்கும் எத்தனை முடி…கேள்வியாக் கேட்டு வீட்டை நாஸ்தி பண்றான்..அம்மா சாயந்திரம் திரும்பி வந்து பார்த்தா, பாத்ரூம் குழாய் திறந்திருக்கு, தண்ணி ஓடிக்கிட்டிருக்கு, தண்ணிக்குள்ள சோப்பு குழ குழன்னு கிடக்கு, பேஸ்டு மொத்தம் பிதுக்கிப் போட்டிருக்கு….இதெல்லாம் ஏன் அப்படி இருக்குன்னு அம்மா எட்டு கேள்வி கேக்குறாங்க…அவங்க மட்டும் கேள்வி கேக்கலாமா அப்படின்னு அப்பு யோசிப்பான் பாரு..டாப் டக்கர்டா. கதை..
அவ்வளவு தானா..
ஆசை தோசை அப்பளம் வடை, ஆளைப் பாரு, ங்கொய் அப்படின்னு ஒரு ஓணானோட கதை, விக்கோ நாய் கதை…எல்லாம் செம கதை…லப்பு உன் புத்தகத்தைத் தந்தா வேணா மாத்திக்கலாம்..
எழுதத் தெரிந்த புலி..டா!
யாரு, ஆசிரியரைப் பாராட்டுறியா
அப்படியும் வச்சுக்கோ..ஆனா புத்தகத்தின் பேரே இது தான்! பத்து கதைங்களில் எவ்வளவு தத்துவம்..எவ்வளவு வாழ்வின் உண்மைகள்…எத்தனை எத்தனை விஷயத்தில நாம் அவசரப் பட்டு தவறாய்ப் புரிஞ்சுக்கிறோம்.நமக்கு என்ன தேவைன்னு தெரியறதில்ல, பூச்சி, புழு, பல்லியைத் தேவையில்லாம துன்புறுத்துறோம், அடுத்தவங்களைக் காயப்படுத்தறோம், அல்பமாச் சண்டை போட்டுக்கறோம்…சிரிக்கிறோம், அழுகிறோம்..எல்லாவற்றையும் பற்றி அருமையான கதைகள் டா. வாழ்க்கையை அருமையா வாழ வழி இருக்கும்போது ஏன் வெட்டியா தலையை உருட்டிக்கிறோம் அப்படீனு யோசிக்க வைக்கிற கதைகள்டா..நீ சொல்லுடா, மப்பு!
பம்பழாபம்…
என்னடா, பெரிய ஏப்பமா விடுற! எங்கேயாவது பெரிசா தீனி கட்டு கட்டிட்டு வந்தியா..
அட யாருடா நீ வேற. இனிமேல், தேவையில்லாமல் பேக்கரி பக்கம் போய் நொறுக்குத் தீனி தின்னு உடம்பக் கெடுத்துக்கிறதா இல்லடா , , தக்காளி தனக்குத் தானே வச்சிக்கிட்ட பேருடா பம்பழாபம்..பள்ளிக் கூடத்தில மாணவ மாணவியர் ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு காய்கறி, பழம் பற்றி அது எங்கே இருந்து நம்ம நாட்டுக்கு வந்தது, அதோட ஆங்கிலப் பேர் என்ன, தமிழ்ப் பேர் என்ன, அதில் என்ன சத்து, உடலுக்கு எவ்வளவு கலோரி வெப்பம் தேவை, அதுக்கு என்னென்ன சாப்பிடணும், எது ஆரோக்கியமான உணவுன்னு வரைபடம், பட்டியல் எல்லாம் போட்டுக் கலக்கிட்டாங்கடா..எங்க தாத்தா வீட்டுல அந்தக் காலத்து லிப்கோ டிக்ஷனரி, அப்புறம் ஏதேதோ புத்தங்களில் பார்த்த ஞாபகம். சாந்தன் இணையதளத்தில் இருந்து எடுத்து வகை வகையான பூ, பழம், காய், மீன்கள் எல்லாவற்றுக்கும் தமிழ் அருஞ்சொற்கள் பட்டியல் வேற போட்டிருக்காங்கடா….அருமை. அருமை.
பசங்களா…எங்கே எனக்கு ஒரு நன்றியும் சொல்லாம, நீங்க ஏழு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கிட்டிருக்கீங்க..
ஸாரி மாமா! உங்களுக்கு மட்டும் இல்ல, 48 பக்கங்கள், அழகான வடிவமைப்பு, ஈர்க்கிற மாதிரி அட்டைப் படங்கள் எல்லாம் இருந்தும் ஒவ்வொரு புத்தகமும் இருபத்தைந்து ரூபாய்க்கே கிடைக்க வச்சிருக்காங்களே, அந்த பாரதி புத்தகாலயத்துக்கும் நன்றி.
கேள்வி ஞானக் கதைகள், அரபு, உருது, துருக்கி, பர்மிய, கொரிய, ஜப்பானிய, ஆந்திர நாட்டுப்புறக் கதைகள், கற்பனை கலந்த உண்மைக் கதைகள், தாத்தா பாட்டி சொன்ன கதைகள்…என எல்லாவற்றையும் தன்னுடைய பையனோடு ஆர்வத்தோட விவாதிச்சு அவனோட கருத்தையும், கற்பனையும் சேர்த்துப் பிசைந்து இத்தனை கதைகளை மீண்டும் வாசிப்பு உலகத்துக்கு வழங்கி இருக்கிற எஸ் ராமகிருஷ்ணன் அவங்களுக்கும், சுட்டிப்பயல் ஆகாஷுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும் சொல்லணும்…எனக்குக் கூட நான் சிந்திக்கிற கதைகளை ஏன் எழுதிப் பார்க்கக் கூடாதுன்னு தோணுது,
ஆமாம்..எஸ் ரா விரும்புறதும் அது தான்..கொலம்பஸை விடவும், யுவான் சுவாங்கை விடவும் அதிகமாக உலகம் சுற்றிய பயணி கதைகள் தான்னு சொல்றார். கற்பனை வளர்க்கவும், அறிவுத்திறன் மேம்படவும் கதைகள் தேவை என்று முன்னுரையில் அவர் சொல்றதை நானும் வழி மொழிகிறேன். புத்தங்களைப் பகிர்ந்து படிங்க..காசு கிடைச்சா புத்தகத்திற்காகச் சேமிச்சு வையுங்க…அடுத்த சந்திப்புல பாக்கலாம்..
***************
நன்றி: புதிய புத்தகம் பேசுது: செப்டம்பர் 2011