கதையும் திரையும்

18வது சென்னைத் திரைப்படவிழாவில் நடைபெறும் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் நேற்று மதியம் திரைக்கதை எழுதுவது குறித்து உரை நிகழ்த்தினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். எண்பது சதவீதம் இளைஞர்கள்.

அந்த உரையில் இடம்பெற்ற சில விஷயங்கள் இவையே.

சிட் பீல்டின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் காலாவதியான ஒன்று. நமக்கு அதன் கட்டமைப்பு மற்றும் வடிவாக்க முறை பொருத்தமானதில்லை. சிட் பீல்ட் எந்தப் படத்திற்கும் திரைக்கதை எழுதியவரில்லை. அவர் ஒரு ஆய்வாளர். பயிற்சி வகுப்பு எடுப்பவர். ஹாலிவுட் சினிமா ஒன்றரை மணி நேரம் ஒடக்கூடியது. பாடல் கிடையாது. பண்பாட்டு அம்சங்கள் கிடையாது. ஆனால் நம் சினிமா நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ் வாழ்க்கையின் இயல்பும் வெளிப்பாட்டு முறைகளும் தனித்துவமானவை. சிட்பீல்ட் கதைகளின் அமைப்பை ஆராய்ந்த விதம் மிக பழமையானது. ஆனால் நம் ஆட்கள் சிட் பீல்டினை தனக்கேற்ப பொருத்திக் கொண்டு தேவையில்லாமல் கொண்டாடுகிறார்கள்.

Jean-Claude Carrière . Cesare Zavattini .Guillermo Arriaga. எம்.டி.வாசுதேவன் நாயர். பத்மராஜன் போன்றவர்களே நாம் பயில வேண்டியவர்கள்.

ஹாலிவுட் சினிமாவைத் தவிர வேறு எங்கும் சிட்பீல்ட் மதிக்கப்படுவதில்லை.

இந்தியா கதைகளின் தாயகம். நம் கதைமரபிலிருந்து நமக்கான திரைமொழியை நாம் உருவாக்க வேண்டும். அதற்குத் தேர்ந்த வாசிப்பும் ஆழ்ந்த பயிற்சியும் தேவை.

தமிழின் முக்கியப் படைப்பாளிகளை வாசியுங்கள். நிறைய கவிதைகள் படியுங்கள். தத்துவமும் இசையும் இல்லாமல் நல்ல திரைக்கதைய எழுத முடியாது என்கிறார் ஈரானிய இயக்குநர் மஹ்சன் மக்மல்பஃப்

உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தின் ஒலியைத் துண்டித்துவிட்டு அதன் காட்சிக்கான உரையாடலை எழுதிப்பாருங்கள். அப்போது உங்களுக்கு பலம், பலவீனம் புரியும்.

ஆங்கிலம் தெரியாமல் திரைக்கதை எழுத முடியாது என்ற அச்சம் இளைஞர்கள் பலருக்கும் இருக்கிறது. அது தேவையற்ற கற்பனை. தமிழில் நேரடியாகத் திரைக்கதை எழுதும் மென்பொருட்கள் வந்துவிட்டன. தமிழில் வாசிக்கவும் நிறைய இலக்கியங்கள், திரைக்கலை சார்ந்த நூல்கள் இருக்கின்றன. விருப்பமும் தீவிரமான உழைப்பும் தான் நமக்குத் தேவை.

உலகைச் சொற்களின் வழியே அனுபவமாக்குகிறது கதை. ஆனால் சொற்களை மீண்டும் காட்சிகளாக்கி புதிய அனுபவத்தைத் தருகிறது சினிமா. ஆகவே கதை எழுதுவது வேறு. திரைக்கதை எழுதும் முறை வேறு.

நிகழ்ச்சிகளை நிரப்பி வைத்தால் அது திரைக்கதை ஆகிவிடாது. மரத்துண்டு ஒன்றிலிருந்து சிற்பம் உருவாக்குவது போன்ற பணியது. மரமே சிற்பம் ஆகாது. அதில் நாம் கலைநுட்பத்துடன் உழைக்க வேண்டும். மரச்சிற்பம் செய்வது ஒருவிதக் கலை என்றால் கண்ணாடி சிற்பம் செய்வது வேறு கலை. மண் உருவங்கள் செய்வது வேறு பாணி. இப்படித் திரைக்கதை எழுதுவதிலும் நிறையப் பாணிகள். முறைகள் இருக்கின்றன.

கதை திரைக்கதை இரண்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் உருவாக்கபட வேண்டும். நுண்மையான தகவல்கள் எழுதப்பட வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் தனித்துவமான நிகழ்ச்சிகளும் முக்கியமானது.

ஒரு அறைக்குள் வாழ்ந்து கொண்டு அது மட்டும் தான் உலகம் என நினைப்பவருக்கு என்ன அனுபவம் இருக்கமுடியும். இரவு இரண்டு மணிக்கு அண்ணாசாலை எப்படியிருக்கிறது என்று ஒருமுறையாவது பார்த்திருக்கிறீர்களா. இமயமலை என்பதை வெறும் சொல்லாக அறிந்துள்ள ஒருவரால் எப்படி இமயத்தைப் பற்றி எழுத இயலும். ஜன்னலை மூடி வைத்துள்ள ஒருவனால் பறவைகளின் சங்கீதத்தை எப்படி எழுத்தில் கொண்டு வர இயலும்.

உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள். நிறையப் பயணம் செய்யுங்கள். படியுங்கள். நண்பர்களுடன் கூடி விவாதியுங்கள். ஒன்று சேர்ந்து பணியாற்றுங்கள்.

ஒரு திரைக்கதையை ஐந்து எழுத்தாளர்களுடன் தான் அகிரா குரசோவா எழுதினார். ஸ்பீல்பெர்க் தன் படத்தின் கதையைத் தான் எழுதுவதில்லை. அவர் நாவலை, பிறர் எழுதிய திரைக்கதையைத் தானே பயன்படுத்துகிறார். அந்த மனதும் புரிதலும் உங்களுக்கும் வேண்டும்.

திரைக்கதையை இப்படிதான் எழுத வேண்டும் என்று கறாரான விதிகள் கிடையாது. நீங்கள் யார். என்ன திரைப்படம் உருவாக்க முனைகிறீர்கள். உங்கள் அக்கறை என்ன. எவ்வளவு பொறுப்புணர்வு கொண்டவர் என்பதே உங்கள் திரைக்கதையைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் அடிபட்டு மிதிபட்டு வலியை உணர்ந்த ஒருவன் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமும், சொகுசாகக் காரில் போய்வருகிறவன் தன் கோபத்தைக் காட்டுவதும் ஒன்றாக இருக்காது தானே. அப்படிக் கோபமோ, சந்தோஷமோ, பிரச்சனையோ எப்படி வெளிப்படுகிறது. அதன் தீவிரம் எப்படி வளருகிறது என்பதை யோசியுங்கள்.

திரைக்கதை எழுதுவதும் சமைப்பது போன்றது தான். ருசி எளிதில் பிடிபட்டுவிடாது. ஆனால் கவனமும் அக்கறையும் தொடர்முயற்சியும் கைகூடும் போது ருசி தானே உருவாகிவிடும்.

சென்னை நகரம் நண்பர்களால் நிரம்பியது. வேறு எந்த உறவின் ஆதரவினையும் விட நண்பர்களின் அழைப்பின் பேரில். உதவியின் பெயரில் இந்த நகருக்கு வருகிறவர்கள். வந்தவர்கள், வாழுகிறவர்கள் அதிகம். ஆகவே நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்களுடன் உங்கள் கதையை விவாதியுங்கள்.

புதிய கதைக்களம், புதிய கதை சொல்லும் முறை. நிஜமான காட்சிகள். நிஜமான உணர்வுகள். தனித்துவமிக்க கதாபாத்திரங்கள்  தனித்துவமிக்க நிகழ்வுகள் உங்கள் திரைக்கதையில் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

45 நிமிட எனது உரையினைத் தொடர்ந்து நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். நேரம் குறைவாக இருந்த காரணத்தால் சிலரது கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர முடிந்தது

நேற்றைய மாலையை இனிமையாக்கியதற்காக அனைவருக்கும் எனது நன்றி

சிறப்பான இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சென்னைத் திரைப்படவிழா அமைப்பாளர்களுக்கு அன்பும் நன்றியும்

••

0Shares
0