அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் மார்ஜியானாவின் யோசனைப்படி எண்ணெய் பீப்பாய்க்குள் ஒளிந்துள்ள திருடர்களை மலையுச்சியிலிருந்து அருவியில் தள்ளிவிட்டுக் கொல்லுவார்கள். எண்ணெய் வணிகராக வந்துள்ளது திருடர்களின் தலைவன் அபு ஹுசேன் என அறிந்த அலிபாபா அவனுடன் சண்டையிட்டு வீழ்த்துவான்.

பீப்பாயினுள் ஒளிந்துள்ள திருடர்களைத் தள்ளிவிடுவதற்குப் பதிலாகச் சூடான எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றிக் கொன்றதாகக் கதையில் உள்ளது. அந்தக் காட்சியைப் பாக்தாத் நகரில் ஒரு சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள்.

அந்தச் சிற்பத்தைச் செய்தவர் ஈராக்கிய சிற்பி முகமது கானி ஹிக்மத். இவர் ஆயிரத்தோரு இரவுகளில் மன்னர் ஷாரியார் முன்பு ஷஹ்ராசாத் கதை சொல்வதையும் சிலையாக வடித்திருக்கிறார். இந்தச் சிலையும் பாக்தாத் நகரிலுள்ளது.

ஆயிரத்தோரு இரவுகள் மூலப்புத்தகத்தில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையே கிடையாது. அது பிற்சேர்க்கை என்கிறார்கள்.
குறிப்பாகப் பிரெஞ்சுக்காரரான அந்த்வான் கெலோன் தனது மொழியாக்கத்தின் போது இந்தக் கதையைச் சேர்த்துவிட்டார் என்கிறார்கள். இவரது மொழிபெயர்ப்பு 12 பாகங்கள் கொண்டது. 1704ல் வெளியானது. அதன்பிறகு அலிபாபா கதை உலகெங்கும் பரவிப் புகழ்பெற்றுவிட்டது. ஆகவே இன்றும் 1001 இரவுகளின் ஒரு பகுதியாகவே அறியப்படுகிறது.

சினிமாவில் நடனக்காரி மார்ஜியானாவை அலிபாபா காதலிக்கிறான். அபு ஹுசேன் முன்னால் அவள் நடனமாட விரும்பும் போது அலிபாபா அனுமதிக்க மறுக்கிறான். முடிவில் அவனுக்கு உதவி செய்யவே அவள் அப்படி நடந்து கொண்டாள் என்பதை உணருகிறான். ஆனால் அரபு வடிவத்தில் அலிபாபாவிற்கு ஏற்கனவே மனைவியிருக்கிறாள். மார்ஜியானவை அலிபாபா காதலிப்பதில்லை.
அவர்கள் வீட்டிலிருந்த பணிப்பெண் கஹ்ரமானா. அவள் அலிபாபாவைக் கொல்வதற்காக வந்துள்ள அபு ஹுசேன் திட்டத்தை அறிந்து கொள்கிறாள். அதனை முறியடிக்கப் பீப்பாய்க்குள் ஒளிந்துள்ள திருடர்களைக் கொல்லத் திட்டமிடுகிறாள். இதற்காக எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுகிறாள்.
கஹ்ரமானா நீரூற்று என்று அழைக்கப்படும் அந்தச் சிலையில் அவளைச் சுற்றி நாற்பது ஜாடிகள் காணப்படுகின்றன. அரபு மொழியில் கஹ்ரமானா என்பதற்கு “கதாநாயகி” என்று பொருள்.
கஹ்ரமானா தனது உயிரைக் காப்பாற்றினாள் என்பதற்கு நன்றிக்கடனாகத் தனது மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் அலிபாபா என்கிறது அரபு வடிவம். மார்ஜியானா தான் கஹ்ரமானா என்றும் சொல்கிறார்கள். கஹ்ரமானாவின் தந்தை உணவகம் ஒன்றை நடத்திவந்தவர். இந்தக் கதை அலிபாபாவிற்கு முந்தியது என்றும் சொல்லப்படுகிறது.
கஹ்ரமானா இன்று ஒரு பண்பாட்டு அடையாளம். அவளது கையிலுள்ள ஜாடியிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் வரை கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்கிறார்கள் பாக்தாத்வாசிகள்.