கனவினை வடிவமைப்பவர்கள்

“Devrim Arabaları” (Cars of the Revolution) என்ற துருக்கிப்படத்தினைப் பார்த்தேன்

துருக்கியில் 1960 ல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே. பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டுமே தேசம் சுதந்திரமாக இருக்க முடியும் என்று புதிய அதிபர் ஜெனரல் செமல் நம்புகிறார்.

இதற்காக நாட்டில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறார். ஆனால் பொருளாதார வளமில்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்கிறார்கள்.

துருக்கியால் சிறிய குண்டூசியைக் கூடத் தயாரிக்க முடியாது. பெரும்பான்மை பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக படைத்தளபதி சொந்தமாக ஒரு கார் தொழிற்சாலையைத் துவக்க நினைக்கிறார். இதற்காக உள்நாட்டில் கார் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

நான்கு மாத காலங்களுக்குள் புதிய கார் ஒன்றை உருவாக்கும் பணி கிண்டிஸ் என்ற ரயில்வே பொறியாளர் பொறுப்பில் விடப்படுகிறது. குறைவான நிதியைக் கொண்டு அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு காரை தயாரிக்க எப்படி முனைகிறார் என்பதைப் படம் மிக அழகாகச் சித்தரித்துள்ளது

ஒரு கார் தயாரிப்பதற்கு எவ்வளவு உழைப்பும் இயந்திரங்களும் வடிவமைப்பாளர்களும் தேவை என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

கிண்டிஸ் தனக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்து ரயில்வே பணிமனையிலே ஒரு தொழிற்கூடத்தை உருவாக்குகிறார்.

வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளையும் வாங்கி உபயோகம் செய்யக்கூடாது என்பதால் காரின் அத்தனை உதிரிப்பாகங்களையும் அவர்களே உருவாக்க வேண்டியுள்ளது. பெரிய பொறியாளர்களால் முடியாத விஷயத்தைப் படிக்காத, இரும்பு உருக்கும் ஊழியர் செய்து காட்டி காரை வடிவமைப்பதில் உதவி செய்கிறார். தனித்துவமிக்க ஊழியர்களின் பங்களிப்புக் கார் உருவாவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

இரவு பகலாகக் கிண்டிஸின் குழுவினர்கள் காரை தயாரிப்பதில் முனைகிறார்கள். புதிது புதிதாகத் தடைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜெனரலைப் பிடிக்காத உயரதிகாரிகள் பொய் காரணங்களைக் கூறி நிதித்தட்டுபாடு ஏற்படுத்துகிறார்கள்

கிண்டிஸ் பொறுமையாக, உறுதியான நம்பிக்கையோடு வேலை செய்கிறார். கார் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறுகிறது

ஒரு பக்கம் தொழிற்கூடமே கதி என வேலை செய்யும் ஊழியர்கள். அவர்களை நிர்வாகம் செய்யும் கிண்டிஸ். மறுபக்கம் இவர்களின் குடும்பம். ஒரு காட்சியில் கிண்டிஸ் நள்ளிரவில் வீடு திரும்பும் போது அவர் மனைவி உணவை சூடு செய்து எடுத்து வருவதற்குள் அவர் களைப்பில் உறங்கிவிடுகிறார்.

இளம் இன்ஜினியர் நெசிப் இது போலப் பின்னிரவில் வீடு திரும்புகிறான். கர்ப்பிணியான அவனது மனைவி ஆப்பிள் வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஊரடங்கு உள்ள இரவில் அவன் ஆப்பிள் தேடி அலைகிறான். ஒரு மரத்தில் ஏறி பறிக்க முற்படும் போது கிண்டிஸ் அவனைப் பார்த்து தன்னோடு அழைத்துப் போகிறான். அவர்களின் நட்பு அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது

இன்னொரு காட்சியில் ஊரிலுள்ள தனது மனைவி பிள்ளைகளுடன் பேசும் தொழிலாளி அவர்கள் நீண்டகாலமாகத் தன் வருகைக்காகக் காத்திருப்பதை உணருகிறான். கார் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரும் தன் குடும்பத்தை மறந்து ஒரே கனவை நிறைவேற்றப் பாடுபடுகிறார்கள்

கிண்டிஸ் ஒரு அற்புதமான கதாபாத்திரம். முதுமையில் அவரது நினைவுகளின் பின்னோட்டம் வழியாகவே படம் துவங்குகிறது. நிதி தட்டுப்பாடு. இயந்திரக் கோளாறு, வடிவமைப்புப் பிரச்சனை, அதிகார தலையீடு என அத்தனை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு அவர் வெற்றிகரமாகக் காரை செய்து முடிக்கிறார். ஒரேயொரு காட்சியில் தான் அவர் தன்னை மறந்து கத்துகிறார். தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் காத்திருக்கிறது என அவர் சொல்லும் காட்சி அபாரம்.

அவருக்குப் பக்கபலமாக உள்ள ஊழியர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார். அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். கார் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைப் பார்வையிட ஜெனரல் நேரில் வருகை தருகிறார். அதற்கு முந்திய இரவு உடை மாற்ற தன் வீட்டிற்குச் செல்லும் கிண்டிஸ் உறக்கமற்று சோர்ந்து போயிருக்கிறார் அவரது மனைவி கொஞ்சம் நேரம் தூங்கிவிட்டு செல்லலாமே என்று சொல்கிறாள். அவளிடம் கோவித்துக் கொள்கிறார். அனைவரும் இரவெல்லாம் பணியாற்றிக் கார் இயந்திரத்தை தயார் செய்கிறார்கள்

மறுநாள் ஜெனரல் வருகை தருகிறார். அவர் முன்னிலையில் காரின் இயந்திரத்தைச் சோதனை செய்து காட்டுகிறார்கள். இயந்திரம் வேலை செய்யவில்லை. திக் திக்கென நிமிஷங்கள் நகர்கின்றன. முடிவில் காரின் என்ஜின் ஓடுகிறது. ஜெனரல் பாராட்டுகிறார். இரண்டு கார்களைத் தயாரித்துக் கொண்டு வாருங்கள் என்று புதிய உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

நெருக்கடி கூடுகிறது. இதற்கிடையில் பத்திரிக்கைகள் உள்நாட்டில் கார் தயாரிப்பதாக லட்சக்கணக்கில் பணம் வீணடிக்கிறார்கள் என்று கட்டுரை எழுதுகிறார்கள். இது கார் தயாரிப்பில் உள்ள பணியாளர்களைச் சோர்வடையச் செய்கிறது.

அவர்களுக்குள் கருத்துவேறுபாடு உருவாகிறது. இடைவிடாமல் உழைத்து சோர்ந்து போகிறார்கள். ஒரு இரவில் இளம் என்ஜினியர் நேசிப்பின் மனைவிக்குப் பிரசவ வலி வருகிறது. அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போகிறார்கள். குழந்தை பிறக்கிறது. அந்தச் சந்தோஷம் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. சில நாட்களுக்குப் பிறகு அவள் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வந்த அனைவரையும் மகிழ்ச்சிபடுத்துகிறாள். அத்தோடு கிண்டிஸின் மனைவியும் வீட்டில் தயாரித்த உணவைக் கொண்டுவருகிறாள். அவர்கள் ஒன்று கூடி சந்தோஷமாகச் சாப்பிடுகிறார்கள்

குறிப்பிட்ட நாளிற்குள் அவர்கள் இரண்டு கார்களைச் செய்து முடிக்கிறார்கள் அதன் சோதனை ஒட்டம் நடத்தப்படுகிறது. காரை ரயில் பெட்டி மூலம் நகருக்குக் கொண்டு போகிறார்கள். ஜெனரல் முன்பாகப் புதிய காரின் ஒட்டம் நடைபெறுகிறது அங்கே என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை

சொந்த நாட்டில் கனரகத் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும் என்ற கனவை எப்படிச் சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகக் காட்டியிருக்கிறார்கள். தேர்ந்த தலைமையும் சிறந்த ஊழியர்களும் ஒன்று சேரும்போது எதையும் செய்து காட்டமுடியும் என்பதைப் படம் நிரூபிக்கிறது

அரசின் புதிய முயற்சிகளைத் தடுக்கக்கூடியவர் அதே அரசில் தான் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தேசத்தின் வளர்ச்சியை விரும்புவதில்லை. தங்களின் சுயலாபங்களை மட்டுமே பெரிதாக நினைக்கக்கூடியவர்கள். அதிபரைத் தவறாக வழிநடத்தக்க கூடியவர்கள் இவர்களே என்று ஒரு காட்சியில் ஒரு ஊழியர் சொல்கிறார். அது உண்மையே.

அதிகாரத்திலிருப்பவர்களில் சிலர் தேச வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இவர்கள் எந்தப் புதிய திட்டத்தையும் அனுமதிக்கமாட்டார்கள். என அரசாங்க வட்டாரங்களில் இன்றும் நிலவும் ஒரு மனநிலையை இப்படம் கடுமையாக விமர்சிக்கிறது.

உண்மை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். எதையும் சாதிக்கக்கூடிய திறமையான ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஊக்கபடுத்திப் புதிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைப் படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

கார் தயாரிப்புப் பணியில் மூழ்கி தங்களின் குடும்பத்தை மறந்தவர்களை அவர்களின் வீடும் மனைவி பிள்ளைகளும் புரிந்து கொள்கிறார்கள். துணை நிற்கிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் தருகிறார்கள். அதன் சாட்சியாக உள்ள காட்சிகள் படத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுகின்றன.

ஊடகங்கள் இது போன்ற புதிய முயற்சிகளைக் கேலி செய்வதும் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளை எவ்வளவு காயப்படுத்தும் என்பதற்குப் செய்தித்தாள் வாங்கச் செல்லும் இடத்தில் நடக்கும் உரையாடலே சாட்சி

துருக்கியின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இப்படம் சிறந்த ஒளிப்பதிவும். நடிப்பும் கொண்டிருக்கிறது. உண்மை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படம் மிகை நாடகமின்றிச் சொல்கிறது. அதுவே இதன் தனித்துவம்

•••

0Shares
0