கன்னடக் கதைகள்

எதிர் வெளியீடு கொண்டு வந்துள்ள வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் தொகுப்பை வாசித்தேன். கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மலையாளச் சிறுகதைகள் அளவிற்குக் கன்னடச்சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தின் வழியே தேடி வாசிக்க ஒன்றிரண்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில் சமகாலக் கன்னடக்கதைகள் எப்படியிருக்கின்றன என்று அறிந்து கொள்வதற்கு இது சிறந்த அறிமுகத் தொகுப்பு.

தமிழ் கதைகளோடு ஒப்பிடும் போது இந்தக் கதைகளின் களன்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் யதார்த்த கதைகள். அதுவும் நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகள். கதையின் வடிவம் பற்றிய கவனம் அதிகமில்லை. உரையாடல்கள் அதிகமுள்ள இந்தக் கதைகளில் பெருநகர வாழ்க்கையின் சித்திரங்களே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் ஜயந்த் காய்கிணி எழுதிய இரண்டு சிறுகதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாகத் தண்ணீர் என்ற கதை மிகச்சிறப்பாக உள்ளது. ஜயந்த் காய்கிணியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன. மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார். தண்ணீர் கதை மும்பை நகரின் பெருமழை நாட்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. நுட்பமான விவரிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் அசலான சித்தரிப்பு கதைக்கு வலிமை சேர்க்கிறது.

தமிழில் 1960, 1970களில் எழுதப்பட்ட சிறுகதைகள் போலவே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் காணப்படுகின்றன.

••

நல்லதம்பி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள கன்னட சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலான யாத்வஷேம் வாசித்தேன். ஹிட்லரின் நாஜி வதை முகாம்களின் விவரங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தின் உதவியோடு பிரிந்து போன தனது உறவுகளைத் தேடும் ஒரு பெண்ணின் கதை.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் யூதவெறிக்குப் பயந்து தன் தந்தையோடு பெங்களூரில் தஞ்சம் புகும் ஹ்யானா மோசஸ் என்ற பெண்ணின் கதையே மிக அழகாக எழுதியிருக்கிறார் நேமிசந்திரா.

பக்கத்து வீட்டுகாரர்களின் அன்பைப் பெற்ற ஹ்யானா அவர்களில் ஒருத்தியாக வளருகிறாள். அனிதா என அவள் பெயர் மாற்றம் அடைகிறது. அந்தக் குடும்பத்தில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறாள். தனது யூத அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழும் அவள் நீண்ட காலத்தின் பிறகுத் தனது பிரிந்த குடும்ப உறவுகளைத் தேட ஆரம்பிக்கிறாள். இந்தப் பயணம் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரிவான ஆய்வின் மூலம் எழுதப்பட்ட இந்த நாவல் புதிய கதைவெளியை கொண்டிருக்கிறது. குறிப்பாக அனிதா தன் பிரிந்த உறவுகளை திரும்பச் சந்திக்கும் பகுதி உணர்ச்சிபூர்வமாக உள்ளது. தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழும் பெண்ணின் அகஉலகைத் துல்லியமாக நேமி சந்த்ரா எழுதியிருக்கிறார்.

சிறந்த மொழியாக்கம். நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல் போல வாசிக்கச் சரளமாக உள்ளது.

யூதப்படுகொலை வரலாற்றை மையப்படுத்தி இப்படி ஒரு நாவல் கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியமே.

கன்னடத்திலிருந்து தமிழுக்குச் சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்துவரும் நல்லதம்பி மிகுந்த பாராட்டிற்குரியவர். தமிழின் சிறந்த படைப்புகளையும் இவர் கன்னடத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.

••

0Shares
0