கப்பல் ஏறிய ஒட்டகச்சிவிங்கி 


 


சில நாட்களுக்கு முன்பாக  என் பையன் ஒட்டகச்சிவிங்கி எப்படி இந்தியாவிற்கு வந்தது என்று கேட்டான். அப்போது தான் அது ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த விலங்கு என்பதே நினைவுக்கு வந்தது. உடனே ஆப்ரிக்காவில் இருந்து  கப்பலில் வந்தது என்று சொன்னேன். அவன் எப்போது வந்தது, யார் கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தது என்று கேட்டான்.  பதில் தெரியாத இந்தக் கேள்வி என்னை ஒட்டகச்சிவிங்கிகளின் பின்னால் அலையச் செய்தது.


ஒட்டகச்சிவிங்கி என்ற சொல்லை எவ்வளவோ முறை பயன்படுத்தியிருக்கோம். எப்படி அந்தச் சொல் ஒட்டகச்சிவிங்கிக்கு வந்தது. தமிழ் மக்கள் முதன்முறையாக எப்போது ஒட்டகச்சிவிங்கியை பார்த்தார்கள்.  எப்படி அந்த அதிசயத்தை எதிர் கொண்டார்கள்.


என்னுடைய பத்துவயதில் மிருகக்காட்சி சாலையொன்றில்  முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. எப்படி அதற்கு மட்டும் கழுத்து இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். அமைதியாக ஒட்டகச் சிவிங்கி அருகாமை மரத்திலிருந்து இலைகளை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.  ஒட்டக சிவிங்கியை பார்க்கும் வரை அருகில் உள்ள எவரது கழுத்தையும்  உற்றுப்பார்க்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை.


ஆனால் அதைப் பார்த்த நிமிசத்திலிருந்து என்னோடு வந்த மாணவர்கள், ஆசிரியர், பார்வையாளர்கள் என அத்தனை பேருக்கும் கழுத்து எவ்வளவு உயரமிருக்கிறது என்று கவனித்துக் கொண்டேயிருந்தேன். மிகச் சிறிய கழுத்து கொண்டவர்கள். கழுத்து அமுங்கி போனவர்கள், சாய்ந்த கழுத்து கொண்டவர்கள், ஒல்லி கழுத்தாளர்கள் என்று பார்க்கப் பார்க்க சிரிப்பாக இருந்தது.


சிவிங்கி என்ற பெயரில் ஒரு பறவை. ஒரு வகை மீன், ஒருவகை சிறுத்தை இருப்பதாக தமிழ் அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த பெயர் எப்படி ஒட்டக சிவிங்கிக்கு வந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவுமில்லை.


**
சரித்திரம் விசித்திரங்களால் நிரம்பியது. மன்னர்களின் வாழ்வும் சாவுமே சரித்திரத்தின் பிரதானம் என்பது விலகி இன்று சரித்திரத்தின் அறியப்படாத கிளைவழிகள் கவனத்திற்கு உள்ளாகின்றன. குறிப்பாக சரித்திரம் எப்படி எழுதப்பட்டது, யார் அதை எழுதினார்கள், என்பதே ஆய்வுக்கு உட்படுத்தபடுகிறது. அத்தோடு சரித்திர விடுபடல்கள், இருட்டடிப்புகள், மறைக்கபட்ட உண்மைகள் யாவும் வெளிச்சத்திற்கு வரத்துவங்கிவிட்டன.  


ஜெர்மனிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பெர்டோல்ட் பிரக்ட் தன்னுடைய கவிதை ஒன்றில் சீனச்சுவரை கட்டியவர்கள் எங்கே உறங்கினார்கள். உலகை வெல்ல புறப்பட்ட நெப்போலியனோடு ஒரு சமையற்காரன் கூடவா துணைக்குப் போகவில்லை, பாபிலோனிய தொங்கு தோட்டங்களை உருவாக்கியவர்கள் எங்கிருந்து வந்த மக்கள், என்று சரித்திரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருப்பார்.


வரலாறு கல்வெட்டுகளில் மட்டும் எழுதப்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்வெட்டு தான், சரித்திர சாட்சி தான். அவன் தன் மூதாதையர்களின் இனத்தொடர்ச்சியை, தன் மொழியின் தொடர்ச்சியை கொண்டிருக்கிறான். அதன் சாட்சியாக இருக்கிறான். அவ்வகையில் கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்தும் இன்று வரலாறு மீள் வாசிப்பிற்கு உள்ளாகிறது.


அக்பர் பாபர் மட்டும் சரித்திரம் கொண்டிருக்கவில்லை, தக்காளியில் இருந்து கொய்யபழம் மிளகாய் என அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் கூட வரலாற்றின் சாட்சிகளாக தானிருக்கின்றன.  போர்த்துகீசியத்திலிருந்தும்  சிலியில் இருந்தும் கொண்டுவரப்பட்ட காய்கறிகள், பழங்கள் நம் வாழ்வோடு இணைந்துவிட்டன


தக்காளிக்கு தக்காளி என்ற பெயர் எப்படி வந்தது என்று யோசித்திருக்கிறேன்.  அது தமிழ் சொல்லா இல்லை போர்த்துகீசிய சொல்லில் இருந்து உருவானதா? சங்க இலக்கியத்தில் தக்காளி உண்டா? வேறு ஏதாவது இலக்கியச் சான்று இருக்கிறதா என்று தேடியிருக்கிறேன்.


கிராமப்புறங்களில் இந்தக் காய்கறிகளை சீமைக்காய்கறிகள் என்பார்கள். இன்று கேரட்டும் உருளைகிழங்கும்  பீன்சும் நாட்டுக் காய்கறிகள் ஆகிவிட்டன. பீர்க்கை புடலை அவரை  பாகற்காய் போன்றவை அந்நிய காய்கறிகளாகப் பாவிக்கபடுகின்றன.  உருளைகிழங்கின் பின்னால் பெரிய சரித்திரம் ஒளிந்து கொண்டிருக்கின்றது. மிளகாயின் பின்னால் கடலோடிகளின் கதையிருக்கிறது.


ஆகவே நம் அன்றாட வாழ்வில் பயன்படும் பொருட்களின் சரித்திரம் இன்னமும் எழுதப்படவேயில்லை.  உண்மையில் சமையலறைப் பொருட்களை ஆராய்ந்தால் பல சரித்திர உண்மைகள் வெளிப்படும். பாத்திரங்கள் துவங்கி உணவு பொருட்கள் காய்கறிகள் சமைக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் ஒரு தேசத்தின் ஊடுருவல், கலப்பு உள்ளது.


இது போன்ற கலாச்சாரத்தின் வரலாற்றை வாசிப்பதில் தேடி அறிந்து கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு


**
ஒட்டக சிவிங்கி எப்படி இந்தியாவிற்கு வந்தது என்ற கேள்வியின் பின்னால் சென்ற போது அது ஆப்ரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்திற்கு வணிகம் செய்ய வந்த கடலோடிகளின் வழியாக பரிசாக கொண்டு வந்து தரப்பட்டது. வங்காளத்தில் இருந்து அது மைசூர் அரசிற்கு  பரிசு பொருளாக அளிக்கபட்டிருக்கிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறது  என்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எந்த வருடம், யார் கொண்டுவந்தார்கள் என்று துல்லியமாக அறிய முடியவில்லை.


ஒட்டகச் சிவிங்கி நம் ஊருக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவிற்கு போனது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பதினாலாம் நூற்றாண்டில் சீனா மிகப்பெரிய கடற்பயணத்தை துவங்கியது.  317 கப்பல்கள்.அதில் 27000 ஆட்கள் என்று பிரம்மாண்டமான கடற்பயணத்திற்கு மன்னர் அனுமதி தந்தார். இந்த கடற்பயணத்திற்கு தலைமை ஏற்றவர்  ஷாங்ஹே (Zheng He  )என்ற அரவாணி. அவர் மன்னர் ஜு டேயின் விருப்பதிற்கு உரியவராக இருந்தார்.


ஷாங் ஹேயின் அப்பா போரில் இறந்து போய்விடவே சிறுவயதில் அடிமையாக விற்கபட்ட ஷாங்ஹே ஆண் உறுப்புகள் நீக்கபட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார்.சீன மன்னர்கள் அரவாணிகளின் படை ஒன்றையே வைத்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்பு துண்டிக்கபட்டு அரவாணி ஆக்கபட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரங்களில் காவல் செய்வது. அரசிக்கு மெய்காவல் செய்வது போன்றது. அரவாணிகளாக மாற்றப்பட்ட போதும் அவர்கள் போர்திறனில் வலிமை பெற்றிருந்தார்கள்.


ஷாங் ஹே அப்படி வளர்க்கபட்டிருந்தார். குறிப்பாக இளவரசராக ஜு டேயிருந்த நாட்களில் அவருக்கு சேவகம் புரிந்து வந்த ஷாங் ஹே மெதுவாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போது தான் மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே அண்டை நாடுகளுடன் வணிகஉறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பி ஷாங் ஹே தலைமையில் கடற்பயணம் மேற்கொள்ளும்படியாக அனுமதித்தார். பெரிய பொருட்செலவில் இந்த பயணம் மேற்கொள்ளபட்டது.


கொலம்பஸின் கண்டுபிடிப்புகளுக்கு முன்னால் இவர்கள் பல தேசங்களுக்கு போயிருக்கிறார்கள். கொலம்பஸ் கப்பலை விடவும் அவர்களது கப்பல் பெரியது. பரிசு பொருட்கள், பாதுகாப்பு படகுகள், முறையான வழிகாட்டும் வரைபடங்கள் என்று ஷாங் ஹே ஏழு கடற்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். 28 வருசங்கள், முப்பது தேசங்கள், மூணு லட்சம் கிலோமீட்டர் துரம் அவரது கடற்பயணம் மேற்கொள்ளபட்டிருக்கிறது. இந்த ஏழு பயணங்களின் வழியே அவர் சீனாவிற்கும் பிற தேசங்களுக்குமான நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறார்


இதில் முதல்கடற்பயணத்திலே ஷாங்ஹே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். வங்களாத்திற்கு வந்திருக்கிறார்.  பின்புகேரளாவின் கொச்சிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்த மன்னர்களை சந்தித்திருக்கிறார். இங்கிருந்து இலங்கை, கம்போடியா,  வியட்நாம், என்று கிழக்கு ஆசிய நாடுகளில் கடற்பயணம் மேற்கொண்டிருக்கிறார்


அப்படி இந்தியாவிற்கு வருகை புரிந்த போது ஷாங் ஹே வங்களாத்தில் முதன்முறையாக ஒட்டக சிவங்கியைப் பார்த்திருக்கிறார். அவரால் நம்ப முடியவேயில்லை. சீன புராணங்கள் க்யுலின் என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது . ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தை காண்பது புனிதமானது. கன்பூசியஸின் கூட இதைப்பற்றி மிக உயர்வாக குறிப்பிடுகிறார். அப்பேர்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங்கை நேரில் கண்ட ஷாங்ஹே ஆச்சரியம் அடைந்து அதை  தன்னுடைய நாட்டிற்குப் பரிசாக கொண்டு போக விரும்பினார்.


ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்து ஆப்ரிக்க வணிக குழுவினரை அணுகி தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று சொல்லி அதற்கு மாற்றாக சீனப்பட்டும் நிறைய விலை உயர்ந்த பரிசு பொருட்களும் தந்திருக்கிறார்


ஆப்ரிக்காவில் இருந்து இரண்டு ஒட்டக சிவிங்கிகள் கொண்டுவரப்பட்டு அவை ஷாங்ஹேவிற்கு பரிசாகத் தரப்பட்டிருக்கின்றன. வான் உலகில் உள்ள அதிசயம் ஒன்றை சீனாவிற்கு கொண்டு செல்வதாக மகிழ்ச்சி கொண்டு கப்பலில் அதற்கு தனியான இடம் பாதுகாப்பு அளித்தார். அத்தோடு மன்னருக்கு தான் சொர்க்கத்திலிருந்து ஒரு விலங்கை கொண்டு வருவதாக முன்கூட்டியே கடிதமும் அனுப்பி வைத்தார்.


அதை அறிந்த மன்னர் ஒட்டகச்சிவிங்கியை வரவேற்க தானே நகர வாசலுக்கு வந்து காத்திருந்தார். பல மாத கால கப்பல் பயணத்தில் ஒட்டகசிவிங்கிகள் சோர்ந்து போயிருந்தன. அதை வாசனை திரவியம் நிரம்பிய தண்ணீரில் குளிப்பாட்டி மன்னரின் முன்னால் கொண்டு சென்றார்கள். மன்னரால் நம்ப முடியவில்லை. இப்படியொரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தார்கள் என்று வியந்திருக்கிறார். அதை க்யூலின் என்றே அழைத்திருக்கிறார்கள்.


ஒட்டகசிவிங்கி சீனாவிற்கு தன் ஆட்சிகாலத்தில் வந்திருப்பது கடவுளின் ஆசி தனக்கு நேரடியாக கிடைத்திருப்பதாகவே மன்னர் உணர்ந்து அதை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதற்காக தனியே ஒரு கூண்டு செய்து அதில் ஒட்டக சிவிங்கிகள் அடைக்கபட்டிருக்கின்றன. மன்னர் ஒவ்வொரு நாளும் அதை பார்வையிடுவார். தேவலோகத்தில் இருந்த  மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது. அது உண்மையா  இல்லையா என்ற சர்சை உருவானது. அத்தோடு அதை காண்பதற்காகவே பயணம் மேற்கொண்டார்கள் பொதுமக்கள்.


ஒட்டகச்சிவிங்கி அதிகம் தூங்குவதில்லை. அது நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க கூடிய மிருகம். மற்ற நேரங்களில் விழித்துக் கொண்டேதானிருக்கும். அதிலும் சில நாட்கள் ஒட்டக சிவிங்க பத்து நிமிசங்கள் மட்டுமே தூங்கக் கூடியது. அது மன்னருக்கு மிகுந்த ஆச்சரியம் தந்தது. வான்வுலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று அவர் உறுதியாக நம்பினார். அத்தோடு ஒட்டக சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானை காண்பதும் அவர்கள் நம்பிக்கையை உறுதி செய்தது.


ஆனால் ஒட்டகசிவிங்கியை எப்படி பராமரிப்பது என்று மன்னருக்கு தெரியவில்லை. அது போலவே அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்கு புதிராக இருந்தது. இதற்காகவே அடுத்த கடற்பயணத்தில் ஆப்ரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள்  அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.


ஷாங்ஹே உடனே ஆப்ரிக்காவிலிருந்து கறுப்பு அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பாக மனிதர்களை சீனர்கள் அதன்முன் கண்டதேயில்லை. ஆகவே சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகிவிடுகிறார்கள் என்று நம்ப துவங்கினார்கள். 
ஒட்டகசிவிங்கியை கவனிப்பதற்கு என்று தனியாக அதிகாரிகள் நியமிக்கபட்டார்கள். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டக சிவிங்கி எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகசிவிங்கியை பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். அப்படி தான் சீனாவிற்கு ஒட்டகசிங்கி வந்தது என்று ஷாங்ஹேவின் கடற்பயண குறிப்பு கூறுகிறது.


இதே 1486 ஆம் ஆண்டு  இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்கு பரிசாக  ஒட்டக சிவிங்கி ஆப்ரிக்காவில் இருந்து அனுப்பபட்டு  இத்தாலிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் சீனர்களை போலவே  வியப்புடன் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டகசிவிங்கிக்கு சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை.


கப்பலில் சென்ற ஒட்டக சிவிங்கி தன் பூர்வ நினைவுகளை மறந்து ஏதேதோ தேசங்களில் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறது. இன்று ஒட்டகசிவங்கியை கண்டு வியப்படைபவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.


ஆனால் பலநூற்றாண்டின் முன்பாக ஒரு ஒட்டகசிவிங்கியின் வருகையை சீன அரசும் அதன் மக்களும் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்று யோசிப்பதிலே எண்ணிக்கையற்ற சம்பங்வகளும் முடிவுறாத கதையும் பீறிடுகின்றன. அதுபோலவே கப்பலில் ஒட்டகசிவிங்கியை கொண்டு போன நிகழ்வும் பெரிய நாவலுக்கான அடித்தளம் போலவே உள்ளது.


ஆப்கானில் இருந்து இந்தியா மீது படையெடுத்து வந்த மன்னர் தைமூர் யானைகளை கண்டு மயங்கி தனக்கு ஒரு யானை படை உருவாக்க வேண்டும் என்று நாற்பது ஐம்பது யானைகளை விலைக்கு வாங்கி ஆப்கானிஸ்தான் வரை நடத்தியே கொண்டு சென்றார். யானைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் முடியாமல் அவர் பட்ட சிரமங்களை வரலாற்றின் பக்கங்கள் அதிகம் விவரிக்கவில்லை. ஆனால் அது மிக விரிவான கதை.


இப்படி நம்மோடு இணைந்து வாழும் விலங்குகள், பறவைகளின் பின்னாலும் கடந்தகாலத்தின் மிச்சங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. நாம் பாடப்புத்தகத்தில் மட்டுமே வரலாற்றை படிக்கிறோம். எழுதப்படாத வரலாறு நம் வீட்டின் சமையல் அறையில், பயன்படுத்தும் பொருட்களில் நம் உடையில், நம் வீதிகளில், நம்முடைய பேச்சில், ருசியில் பழக்கவழக்கங்களில் படிந்து இருக்கின்றது. அதை மீட்டு எடுக்கவும் அறிந்து கொள்ளவும் தொடர்ந்த விருப்பமும் உழைப்பும் தேவையாக உள்ளது.


** 


Ref : Zheng He and the Treasure Fleet by Paul Rozario .

0Shares
0