கரைக்க முடியாத நிழல்

பஷீர் பற்றிய ஆவணப்படம்


வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் Basheer – The Man சென்னையில் திரையிடப்பட்டது. ஆனால் அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


எனது நண்பர்களில் ஒருவர் தனது சேமிப்பில் இருந்த பஷீரைப்பற்றிய ஆவணப்படத்தின் பிரதியொன்றை எனக்காகத் தந்து அனுப்பினார்.


இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கபட்ட ஆவணப்படம் என்ற போதும் இன்றும் அதன் அழகுணர்வும் தேர்ந்த உருவாக்கமும் அதை ஒரு முன்மாதிரி படமாகவே வைத்திருக்கிறது.


பஷீர் கதைகளை தமிழில் வாசிப்பதற்கும் மலையாளத்தில் வாசிப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. குறிப்பாக கதைகளில் வரும் அங்கதம் மற்றும் நுட்பமான நகைச்சுவை தனித்துவமான உரையாடல்கள் தமிழில் உருவாதில்லை. ஆனால் அதையும் மீறி நம்மை கதையோடு ஒன்று சேர்ப்பது பஷீரிடம் உள்ள கதை சொல்லும் தன்மை.


இந்தப் படம் பஷீரின் குரலில் அவரது எழுத்து, வாழ்வு இரண்டையும் பற்றி விவரிக்கிறது.படம் முழுவதும் பஷீரின் ஆளுமை மிகச்சிறப்பாக வெளிப் படுத்தபட்டிருக்கிறது.


 
எம்.ஏ,ரஹ்மானின் இயக்கத்தில் திவாகரமேனோன் ஒளிப்பதிவில் இந்த படத்தைத் தயாரித்திருப்பவர் அப்துல்லா. படத்தின் இரண்டு சிறப்பம்சங்கள் தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் நேர்த்தியான பின்னணி இசை.


குறிப்பாக பஷீரின் விருப்பத்திற்குரிய ஹிந்துஸ்தானி இசைத்தட்டுகள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. அத்தோடு கேரள மரபிசையும், குழலும் கலந்து காட்சிகளை உயர்வடைய செய்கின்றன.பஷீரின் கையெழுத்தில் துவங்குகிறது படம். புகழ்பெற்ற ஒவியரான நம்பூதிரி படம் முழுவதும் பஷீரை வெவ்வேறு இடங்களில் ஒவியம் வரைந்தபடியே இருக்கிறார். சில வேளைகளில் அவரோடு பஷீர் தன் கடந்த காலத்தை விவரிக்கிறார். சில வேளைகளில் பஷீரின் மௌனம் சித்திரமாகிறது. பஷீரின் புனைகதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் நம்பூதிரி ஒவியமாக வரைந்திருக்கிறார். அவற்றைப் பற்றியும் பஷீர் விவரிக்கிறார்படம் முழுவதும் நம்மை ஆக்ரமிப்பது பஷீரின் எளிமையான உரையாடல்கள் மற்றும் நேரடியான வெளிப்பாடு. பஷீர் தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் என்ற பிம்பத்தை உருவாக்கவில்லை.அத்தோடு தன் எழுத்து குறித்து ஆர்ப்பாட்டமாக எதையும் கூறுவதில்லை.


மேல்சட்டையில்லாத விவசாயி போல எளிமையான தோற்றம். எப்போதும் கைவிரல்களின் இடையில் புகைந்து கொண்டிருக்கும் பீடி. உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு. இசையின் மீதான அபார நெருக்கம். மனதின் துக்கத்தை மறைப்பதற்காக அருகில் இருப்பவர்களிடம் தன்னைக் கேலி செய்து பேசத் துவங்கி தான் எழுத்தாளன் ஆனேன் என்று சொல்லும் இயல்பான உண்மைகள்.பஷீர் கடற்கரையில் நடந்து உலவுகிறார். பின்புலத்தில் உள்ள திட்டு திட்டான மேகங்கள். கால்களை நனைக்கும் அலைகள். உலகின் வியப்பை பற்றிய அவரது குரலோடு அந்தக் காட்சி மயக்கமூட்டுகிறது.


பஷீரின் வீட்டின் முன்பாக உள்ள மங்குஸ்தான் மரத்தின் அடியில் அவர் அமர்ந்திருக்கிறார். கைவிரல்கள் அசைந்தபடியே உள்ளன. அவரது மேல்சட்டை அணியாத உடலும் ஏதேதோ நிலப்பரப்புகளைக் கண்டு வந்த கண்களின் ஆழ்ந்த ஊடுருவலும், நடந்து அலைந்த பாதங்களுமாக அவர் தோற்றம் உள்ளது. ஒவியர் நம்பூதிரி அவரைப் படம் வரைகிறார். 


பஷீரின் கை அசைவதை, கால்கள் அசைந்து கொண்டிருப்பதை. கண்கள் மூடித் திறப்பதை, என உடலின் மொழியை அப்படியே சித்திரமாக்குகிறார் நம்பூதிரி. அது ஒரு அரூப நடனம் போலவே வெளிப்படுகிறது. எல்லா உரையாடல்களிலும் பஷீரின் கைகள் அசைவது பொம்மலாட்டத்தின் அசைவுகளை நினைவு படுத்துகின்றது.


பஷீரின் கடந்தகாலம் விவரிக்கபடுகிறது.தன்குடும்ப வரலாற்றைக் கூட கேலியோடு தான் பஷீர் விவரிக்கிறார்.  சிறுவயதில் தன்னுடைய குடும்பம் சந்தித்த வறுமையும், காந்தியை தான் சந்தித்த விஷயத்தையும் நினைவு கூறுகிறார். காந்தியைப் பற்றி நினைவுகூறும் பஷீரின் கண்களில் கடந்தகால சந்தோஷம் அந்த நிமிசத்திலும் கொப்பளிக்கிறது.


பஷீர் தான் உண்டாக்கிய ஒரு குளத்தைக் காட்டுகிறார். அதில் இப்போது தண்ணீரில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் தண்ணீர் வரும், தன் இளமைக் காலத்தைப் போலவே அதில் தாமரை பூக்கும் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்.


பஷீர் உரத்து பேசுவதில்லை. ஆனால் அவர் பேசும் போது உலகம் எத்தனை வியப்பானது. எவ்வளவு புரிந்து கொள்ளபட முடியாத உறவுகள், புதிர்கள் நிரம்பியது என்று அறிந்து கொள்ள முடிகிறது.  தீராத நினைவுகளும், மனித விநோதங்களுமே அவரை எழுத வைத்திருக்கிறது.


படம் முழுவதும் மரங்களின் இலைகளின் ஊடாக கசியும் ஒளியும், விட்டு விட்டு மறையும் நிழல்களுமாக தேர்ந்த ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடற்கரையில் பஷீர் நிற்கிறார். அவரது உருவம் தெரியவில்லை. ஆனால் அவரது நிழல் மணலில் விழுகிறது.அந்த நிழலைக் கரைத்துவிடுவதற்காக அலைகள் வேகமாக வந்து செல்கின்றன. அலைகளால் இழுத்து செல்லவோ, கரைக்கவோ முடியாத நிழலாக பஷீரின் உருநிழல் அப்படியே இருக்கிறது. இன்னொரு அலை வருகிறது. நிழலைத் தொட்டு செல்கிறது.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான படிமம் என்றே சொல்வேன். பஷீரின் இருப்பும் அலைகளால் கரைக்க முடியாத நிழலை போன்றது தான். பஷீரின் வீட்டில் உள்ள சிறிய நூலகம், அவர் படித்த புத்தகங்கள், அவரிடம் உள்ள இசைத்தட்டுகள். அவரது பால்யகால நண்பர்கள். என்று அவர் விருப்பத்தின் வழியே பயணிக்கிறது படம்.


மூவாற்றுபுழா என்ற ஆறும் அதன் கரைகளில் உள்ள தென்னைகளும் கடந்து செல்லும் சிறுபடகுகளின் ஊடே பஷீர் தன் பால்யநாட்களைப் பற்றி பேசுகிறார். ஆற்றோடு கழிந்த தன் பிராயத்தை அவர் பேராசையுடன் நினைவு கொள்கிறார். காலம் மாறிய போதும் மனதில் பிராயம் தன் பசுமை மாறாமல் அப்படியே இருப்பதை அவரது குரல் வெளிப்படுத்துகிறது.


சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நாட்கள். பகத்சிங் மீதான ஈர்ப்பு. சுதந்திர காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என்று அவரது ஆவேசமான நாட்களும் துல்லியமாக விவரிக்கபடுகின்றன. அப்படியே காட்சி மாறி சுதந்திரத்  தியாகிக்கான பென்ஷன் வாங்க பஷீர் அலுவலகத்திற்கு நடந்து போகிறார். வரிசையில் நின்று கையெழுத்து போட்டு பணம் வாங்குகிறார்.


அவரது இலக்கியச்சேவையை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது. அந்தவிழாவில் பஷீர் பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்பதற்காக கேரளாவின் முக்கிய படைப்பாளிகள் அத்தனை பேரும் திரண்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சிலும் தன்னைப் பற்றிய கேலியும் தன் படைப்புகள் குறித்த எளிமையான கூறலுமே அவரிடமிருக்கிறது.


எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆர். எஷர் பஷீரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்தவர். அவர் பஷீரை சந்திப்பதற்காக நேரில் வந்த நிகழ்வுகள் படத்தில் சிறப்பாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன


பஷீரின் கதைகளைப் போலவே இந்தப் படத்திலும் பஷீர் அலைந்து கொண்டேயிருக்கிறார்.சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் ஊடாடுகிறார். தன் படைப்பில் உருவான கதாமனிதர்களை பற்றி வியப்போடு பேசுகிறார்.


மனிதர்கள் மீதும், தன்னைச் சுற்றிய உலகின் மீது அவருக்கு இருந்த ஈரமான அன்பும் நெருக்கமும் இந்த படம் முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அவ்வகையில் சமகாலத்தின் மிக முக்கிய எழுத்தாளரைப் பற்றி உருவாக்கப்பட்ட சிறப்பான ஆவணப்படம் என்பேன்.


**0Shares
0