கர்ணமோட்சம்

நான் கதை வசனம் எழுதிய கர்ணமோட்சம் என்ற குறும்படம் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படவிழாக்களில் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றதோடு அதிகமான விருதுகளையும் பெற்றிருக்கிறது.


கர்ணமோட்சம் குறும்படத்தை சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மாணவர் முரளி மனோகர் இயக்கியுள்ளார்.


அப்படம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.


அதைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. அத்துடன் திருப்பூரில் நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளது.


மேலும் சென்னையில் உள்ள அஸ்விதா என்ற அமைப்பு நடத்திய நடத்திய குறும்படப் போட்டியிலும் சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்றுள்ளது.


தற்போது தினமணியும் நெய்வேலி புத்தகசந்தையும் இணைந்து நடத்திய குறும்பட   போட்டியில் பதினைந்தாயிரம் ருபாய் பணத்துடன் கூடிய முதல் பரிசை கர்ணமோட்சம் வென்றிருக்கிறது.


சென்னையில் உள்ள திரைப்படக்கல்லூரியில் திரைக்கதை பயிற்சிமுகாம் ஒன்றினை 2006 ஆம் ஆண்டு நடத்தினேன். அப்போது முரளிமனோகர் எனக்கு அறிமுகமானார். இலக்கிய வாசிப்பிலும் உலக சினிமாவின் மீதும் தீவிர ஆர்வம் கொண்ட இளைஞர். மாணவருக்கான குறும்படம் ஒன்றை இயக்க வேண்டிய சூழலில் அவருக்காக நான் எழுதிதந்த கதையே கர்ணமோட்சம். அதை மிகுந்த கவித்துவத்துடன் இயக்கியிருந்தார்.


படத்தின் இசையமைப்பளார் இரா.பிரபாகர். இவர் சிறந்த இசையமைப்பாளர். நிறைய தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்திருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.  முக்கிய வேஷத்தில் நடித்தவர் கூத்துபட்டறையில் பயின்ற ஜார்ஜ்.


தற்போது இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துவரும் முரளி மனோகர்,, ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் மெஸ் நடத்திய மணியம்  பற்றி அக்காலம் என்ற பெயரில் ஒரு ஆவணப்படமும் இயக்கியிருக்கிறார்


தொடர்ந்த வெற்றிகளைப் பெற்று வரும் அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.



கர்ணமோட்சம் படத்தினை காண விரும்புகின்றவர்களுக்கு


https://vodpod.com/watch/228133-karna-motcham



 

0Shares
0