கறுப்பு வெள்ளை புத்தகங்கள்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ராகவ் என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது அவரது பத்துவயதான மகள் ஸ்வேதா என்னிடம் கேட்டாள்

“ஏன் அங்கிள் பெரியவங்க படிக்கிற புக் எல்லாம் பிளாக் அண்ட் வொயிட்டில் இருக்கிறது.“

அது தானே. ஏன் பெரியவர்கள் படிக்கும் நாவல், கதை, கவிதைத் தொகுப்பு எதுவும் வண்ணத்தில் இல்லையே.

அச்சுத் தொழிலைப் பொறுத்தவரை இன்றும் புத்தகங்களின் அட்டை மட்டுமே வண்ணத்தில் அச்சிடப்படுகிறது. சில நேரம் புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் பாதி அளவு வண்ணத்தில் அடிக்கப்படுகிறது. முழுமையாக வண்ணத்தில் ஒரு புத்தகத்தை அச்சிட்டால் அதன் விலை ஐந்து மடங்கு அதிகமாகிவிடும் என்பதும் ஒரு காரணம்.

சிறுவர்களுக்காகப் புத்தகம் எழுதும் போது அது வண்ணத்தில் வெளியாக வேண்டும் என்றே ஆசைப்படுவேன். ஆனால் 48 பக்கமுள்ள ஒரு புத்தகத்தை முழுமையாக வண்ண ஓவியங்களுடன் வெளியிட்டால் அதன் விலை இருநூறுக்கும் மேலாகிவிடும். யாரால் அதை வாங்க முடியும் என்ற நிலை உருவாகிவிடுகிறது.

ஆங்கிலத்தில் வெளியாகும் சிறார் நூல்கள் அத்தனை அழகான ஓவியங்களுடன் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்படுகின்றன. அதுவும் வேறுவேறு வடிவங்களில். விலை ஐநூறு முதல் ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அந்தச் சந்தையில் விலையைப் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழ் பதிப்புலகில் ஒரு சிறுவர் நூலை ஐநூறு ரூபாய் விலை வைத்தால் அது நூறு பிரதிகள் விற்பதே சாதனையாகிவிடும்.

தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகள் சிறார் நூல்களை வாங்கி அதன் நூலகத்தில் வைக்கலாம். விருப்பமான மாணவர்களுக்குக் கொடுக்கலாம் என்பதே இதற்கான தீர்வு. அது இன்னும் பெரிய போராட்டம்.

நேஷனல் புக் டிரஸ்ட், சில்ரன் புக் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் சிறார் நூல்களை வண்ணத்தில் வெளியிடுகிறார்கள். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு படிக்க முடியாமலிருக்கிறது

என் பள்ளி வயதில் கிராம நூலகத்திற்குப் புத்தகம் படிப்பதற்காகச் செல்வேன். சிறுவர்களுக்கான பகுதி என்பது ஒரு அடுக்கு மட்டுமே. அதிலும் நேர்த்தியாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் ஒன்றிரண்டே. பெரியவர்களுக்கு ஐந்து வரிசைகள் புத்தகங்கள் இருக்கும்.

ஒரு நாளில் ஒரு புத்தகம் மட்டுமே நூலகத்திலிருந்து பெற்றுச் செல்ல முடியும். பெரியவர்கள் மூன்று உறுப்பினர்கள் ஆகி மூன்று நூல்களைப் பெற்றுச் செல்வார்கள். அப்படி ஏன் சிறுவர்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்று கேட்டிருக்கிறேன். சிறுவர்கள் நிறையப் படிக்கக் கூடாது என்பார் நூலகர். அது ஏன் என்று புரியவே புரியாது

பெரியவர்களுக்கான அடுக்கில் போய்ப் புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதிக்கமாட்டார்.

நூலகம் என்பது ஆண்களுக்கான இடம் என்று தான் சிறுவயதில் நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம் கிராம நூலகத்திற்குப் பெண்கள் யாரும் வர மாட்டார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் கூட யாராவது ஒருவரை அனுப்பித் தான் புத்தகம் எடுத்து வரச் சொல்வார்கள். பள்ளி மாணவர்கள் விடுமுறை நாளில் நூலகம் வருவதைப் போலப் பள்ளி மாணவிகள் ஒரு போதும் வந்ததில்லை. வீட்டில் அனுமதிக்கப்படவில்லை என்பது தான் காரணம்

அந்த நாளில் ஸ்வேதா போலவே நானும் ஏன் பெரியவர்கள் கறுப்பு வெள்ளை புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். அதுவும் பெரிய பெரிய புத்தங்களாக எடுத்துக் கொண்டு போய்ப் படிக்கிறார்கள். சிறுவர்களுக்கான புத்தகம் யாவும் ஒல்லி ஒல்லியாக இருக்கிறது என்று கவலைப்பட்டிருக்கிறேன்

படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்குக் கிராமச்சூழலில் யாரும் கிடையாது. ஆகவே அந்தப் புத்தகம் பற்றிப் பகல்கனவு காணத்துவங்கினேன். புத்தகங்களுக்குள் நுழைவதற்கான வழி என்பது அந்தக் கதையை அப்படியே ஒரு நோட்டில் பிரதியெடுப்பது என்பதே கண்டறிந்தேன். ஒரு கதையை நோட்டில் பிரதியெடுக்கும் போது தேவையான இடத்தில் நாம் நுழைந்து கொண்டுவிடலாம் தானே.

அப்படிக் கடற்கொள்ளையர்களின் கப்பலில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். புதையல் தேடிச் சென்ற சிறுவனைப் பின்தொடர்ந்து ஒட்டகத்தில் சென்றிருக்கிறேன். மாயக்கம்பளத்தில் ஏறி பறக்கும் போது அதைத் தொற்றிக் கொண்டு நானும் பறந்திருக்கிறேன்.

கதை புத்தகங்கள் படித்த பிறகு கிராமம் விசித்திரமான உலகமாகத் தோன்றியது. தெருவில் அலையும் சேவல் ஒரு தேவதையின் சாபத்தில் உருவான இளவரசன் போல மாறியது. தவளையும் காகமும் பூனைகளும் பேசிக் கொள்ளும் என்பது புரிந்தது.

பெரியவர்கள் புத்தகம் படிக்கும் போது உதடு அசைவதில்லை. முகமும் இறுக்கமாக இருக்கும். ஆனால் சிறுவர்களுக்குப் புத்தகத்தைச் சப்தமாகப் படிக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரங்களைப் பெயர் சொல்லி அழைக்க வேண்டும். பாதிப் புத்தகத்தினை மூடி வைத்துவிட்டுச் சிரிக்க வேண்டும்., கதையில் வருவது போல நடந்து கொள்ள வேண்டும். சிறுவர்களுக்குப் புத்தகம் முடிவதேயில்லை.

பெரிய புத்தகங்களைப் படிப்பவர்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் எந்தச் சிறுவனும் அறிவாளியாவதற்காகக் கதை புத்தகம் படிப்பதில்லை. அவன் இந்த உலகிலிருந்து தப்பிக்கவே புத்தகத்தைத் தேடுகிறான். ஒளிந்து கொள்கிறான். ஒவ்வொரு ரகசியமும் ஒரு உலகம் என்பதைப் புத்தகங்களே சிறுவனுக்குப் புரிய வைக்கின்றன.

புத்தகங்கள் எப்போதும் வெளிச்சத்தில் மட்டுமே உயிர்வாழுகின்றன என்று ஒருமுறை தேவதச்சன் சொன்னது நினைவிலிருக்கிறது.

கறுப்பு வெள்ளையில் வெளியான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களைத் தற்போது வண்ணத்தில் வாசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று ஆதங்கமாகவும் இருக்கிறது

ரஷ்யாவிலிருந்து வெளியான சிறார் நூல்களில் புத்தகம் எதைப்பற்றியதோ அது போலவே புத்தகம் வடிவமைப்புச் செய்யப்பட்டிருக்கும். படகு போல ஒரு புத்தகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. குடிசை வீடு போல ஒரு புத்தகத்தை உருமாற்ற முடியும். ஏன் போர்விமானம் போன்ற வடிவத்திலே ஒரு சிறார் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இப்படிப் புத்தகமே விளையாட்டுப் பொருளாகவும் மாறியது மிகுந்த சந்தோஷம் அளித்தது. தமிழில் அது போன்ற வெளியீடுகள் குறைவே.

புகழ்பெற்ற நாவல்களை, செவ்வியல் இலக்கியங்களைத் தற்போது கிராபிக்ஸ் நாவலாக முழுமையான வண்ணத்தில் ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முழுவதையும் கிராபிக்ஸ் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். நானே வாங்கியிருக்கிறேன். அப்படித் தமிழ் நாவல்களைக் கிராபிக்ஸ் வடிவத்தில் வெளியிடலாம் என்பது கனவாகவே இருக்கிறது.

கறுப்பு வெள்ளை புத்தகங்களுக்குப் பழகிப்போன நமக்கு முழுமையாக வண்ணத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் கண்ணை உறுத்தவே செய்கின்றன. சென்ற ஆண்டு ஒரு தொழிலதிபர் தனது நூலைச் சிங்கப்பூரில் அச்சிட்டிருந்தார். ஒரு நூலின் விலை இரண்டாயிரம். அவரது பயண அனுபவங்களை விளக்கக்கூடியது. அபாரமான தயாரிப்பு. ஆனால் இரண்டு பக்கம் படிக்க முடியவில்லை.

ஓவியங்களைப் பற்றிய எழுதிய நூல்களைக் கூட வண்ணத்தில் வெளியிட முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

கறுப்பு வெள்ளையிலிருந்து சினிமா, தொலைக்காட்சி எப்போதோ வண்ணத்திற்கு மாறிவிட்டது. விளம்பரப்படங்கள் வண்ணத்தில் உச்சத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் பதிப்புத் துறையில் இன்னமும் வண்ணம் ஒரு கனவே. வண்ணத்தில் புத்தகம் அச்சிடுவது ஆடம்பரமான செயலே.

புத்தகம் என்பதே கறுப்பு வெள்ளை காலத்து மனிதர்களின் விஷயம் என்று இந்தத் தலைமுறை கேலி செய்கிறார்கள். புத்தகங்களுக்கு வயதாவதில்லை. அதன் தோற்றம் தான் மாறியிருக்கிறது. காகிதம் இல்லாமல் புத்தகம் அச்சிடப்படும் என்று சிறுவயதில் யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அது விநோதமான கற்பனை என்று தான் நினைத்திருப்பேன். இன்றைய மின்னூல்கள் மின்சார விளக்குகள் உருவான மாயம் போலத் தோன்றிவிட்டன. நாம் புத்தகம் படிப்பதற்குப் பதிலாக யாரோ படித்து ஆடியோ புத்தகமாக வெளியிட்டு நம்மைக் கேட்க வைக்கிறார்கள்.

புத்தகம் என்பது காகிதமில்லை. அச்சில்லை. உலகையறிந்து கொள்ள அது ஒரு வழி. ஒரு உணர்வு. ஒரு அறிதல் முறை. ஒரு மாயம். ஒரு காதல். தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தலைமுறைக்குச் சொற்களின் வழியாகவும் தன்னைக் காண முடியும் என்று புத்தகங்களே சொல்கின்றன.

எந்த வடிவத்திற்கு மாறினாலும் புத்தகம் நிகழ்த்தும் மாயம் மாறவேயில்லை. நேரமாகிவிட்டது என அவசரமாகச் செல்லும் முயலைத் துரத்திக் கொண்டு ஓடும் ஆலீஸின் பின்னால் நாமும் ஒடத்துவங்கிவிடுகிறோம் என்பதே உண்மை

••

0Shares
0