கறை படிந்த சட்டை

.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை  ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில்  மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது.

குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை.

கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் ஹான் பெற்றோர் மற்றும் தங்கையுடன் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறான். தந்தை அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

மூன்று நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்லும் வாங் ஹான் விளையாட்டுத்தனமானவன். பள்ளியில் நடைபெறும் உடற்பயிற்சியில் அவன் சிறப்பாகச் செய்வதை அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர் அவனைத் தனியே அழைத்துப் பாராட்டுகிறார். பள்ளியில் நடைபெறப்போகும் விளையாட்டு நிகழ்வு ஒன்றில் அவனை அணித்தலைவராக நியமிக்கிறார்.

இதைக்கேட்டு வாங் ஹான் சந்தோஷமடைகிறான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவன் ஒரு புதுச்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கிறார்.

வாங் ஹான் தனது அம்மாவிடம் தனக்கு ஒரு புதுச்சட்டை வேண்டும் என்கிறான். அவளோ துணி வாங்குவதற்கு ரேஷன் முறை உள்ளதால் நினைத்த நேரம் வாங்கமுடியாது என்று மறுக்கிறாள். வாங் ஹான் பிடிவாதம் பிடிக்கவே அம்மா அவனுக்கு ஒரு வெள்ளை சட்டை தைத்துத் தருகிறாள்.

தனது புதுச்சட்டையை அணிந்து கொண்டு வாங் ஹான் பள்ளிக்குச் செல்லும் காட்சி மிக அழகானது. பள்ளி உடற்பயிற்சி விழாவில் பங்கேற்றுப் பாராட்டுப் பெறுகிறான் வாங் ஹான்.

அன்று பள்ளியை அடுத்த சரிவு ஒன்றில் தொழிற்சாலை அதிகாரியின் சடலம் கிடைப்பதை ஊர் மக்கள் காணுகிறார்கள். கொலை செய்தவன் அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் அண்ணன். அந்த இளைஞனை போலீஸ் தேடுகிறார்கள்.

மாலையில் தனது நண்பர்களுடன் ஆற்றங்கரையில் விளையாடுகிறான் வான் ஹான். அப்போது ரத்த காயத்துடன் ஓடிவரும் கொலையாளி அவனது புதுச்சட்டையைப் பறித்துக் கொண்டு காட்டில் மறைந்து விடுகிறான்.

புதுச்சட்டையை இழந்த வாங் ஹான் அவன் பின்னாலே ஓடுகிறான் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. . இருட்டி விடுகிறது. அழுதபடியே வீடு திரும்புகிறான். அவனது அம்மா கோபத்தில் அவனை அடிக்கிறாள். ஆற்றில் சட்டை தொலைந்துவிட்டது என்று பொய் சொல்கிறான் வாங் ஹான்

இருட்டிலே அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். இருவரும் தேடுகிறார்கள். புதுச்சட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லை

மறுநாள் பகலில் அந்தக் கொலையாளியைத் தேடிப்போய்ச் சந்திக்கிறான் வான்ஹான். சிறுவனின் வேதனையைப் புரிந்து கொண்ட கொலையாளி தான் புதிய சட்டை ஒன்றை வாங்கித் தருவதாகச் சொல்கிறான். அதை வான் ஏற்க மறுக்கிறான்.

கொலையாளியின் அடிபட்ட காயத்திற்கு மருந்து போடப் பச்சிலை பறித்து வந்து கட்டுகிறான் வான். தான் காட்டில் ஒளிந்துள்ளதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்புகிறான் கொலைகாரன்

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அவனைப்பற்றிய சிந்தனையுடன் செல்லும் வான் இந்த ரகசியத்தைத் தன் நண்பர்களிடம் சொல்லிவிடுகிறான். அவர்கள் ஒன்றாகக் கொலைகாரன் இருக்குமிடத்தைத் தேடுகிறார்கள்.

காட்டிற்குள் சிறுவர்கள் செல்லும் காட்சியில் அவர்களின் பயமும் ஆசையும் மிக உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வாங் ஹானின் அப்பா தொழிற்சாலையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். இதனால் வீடே அச்சத்தில் பீடிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் கொலையாளி ஏன் இந்தக் கொலையைச் செய்தான் என்ற உண்மை வெளிப்படுகிறது. அவனைப்பிடிக்கக் காவல்துறைக்குச் சிறுவன் வான் உதவி செய்கிறான். கொலையாளி என்ன ஆகிறான் என்பதே மீதக்கதை.

சிறுவன் வாங் ஹானின் கண்ணோட்டத்தில் முழுப்படமும் விரிகிறது. தந்தையிடம் அவன் ஓவியம் கற்றுக் கொள்வது, இரவில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுவது. தந்தையும் மகனும் ஓவியம் வரைவதற்காகப் பசுமையான சூழலைத்தேடிப் போவது. எதிர்பாராமல் மழையில் மாட்டிக் கொள்வது, தந்தையும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்து பாடுவது. கொலையாளியின் பக்கமுள்ள உண்மை என மறக்கமுடியாத காட்சிகளுடன் மிகுந்த நேர்த்தியாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையும் அழகான பாலமும் காட்டின் வனப்பும் தொழிலாளர் குடியிருப்பும் சிறுவர்களின் பள்ளியும் சிற்றூர் வாழ்க்கையும் மறக்கமுடியாதவை.

வெள்ளை சட்டையில் ரத்தக்கறை படிகிறது. அது ஒரு குறியீடு. கலாச்சாரப் புரட்சியின் பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் குறியீடு போலவே அச்சட்டை சித்தரிக்கப்படுகிறது.

கொலைகாரனின் தந்தையும் சகோதரியும் ஒரு காட்சியில் வாங் ஹானையும் அவனது தந்தையினை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பதும் தன்னை மீறி கொலையாளியின் தந்தை வெடித்து அழுவதும் அபூர்வமான காட்சி.

நிலக்காட்சி ஓவியங்களின் சிறப்பையும் அந்த ஓவியர்களின் தனித்துவத்தையும் பற்றித் தந்தை ஒரு காட்சியில் மகனுக்கு விளக்குகிறார். நிலக்காட்சி ஓவியங்களில் காட்டப்படுவது போலவே வாங் ஹானின் கிராமம் பேரழகுடன் ஒளிருகிறது. ஆனால் அந்தச் சூழலுக்குள் கண்ணுக்குத் தெரியாத அச்சம். பகை. வன்முறை ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைச் சிறுவர்கள் கண்டறிகிறார்கள்.

பெரியவர்களின் உலகம் சிறுவர்களின் உலகம் என இரண்டு தளங்கள் இயங்குகின்றன. பெரியவர்களால் மனதில் உள்ளதைப் பேச முடியவில்லை. விரும்பிய பாடலைப் பாட முடியவில்லை. சூழலின் நெருக்கடியை உணர்ந்து அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வாழுகிறார்கள். சிறுவர்களுக்கோ விரும்பிய உணவும் உடைகளும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சுதந்திரமாக நடந்து கொள்கிறார்கள். சந்தோஷமாக ஓடியாடி விளையாடுகிறார்கள். பெரியவர்கள் பேசுவதை ஒளிந்து கேட்கிறார்கள். பெரியவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக் குழப்பமடைகிறார்கள்.

இயக்குநரின் இளமைப்பருவத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தையே படமாக்கியிருக்கிறார். வாங் ஹானிக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் முழுமையாகப் புரிவதில்லை. ஆனால் சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறான். சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் வெளிப்படையாக இருக்கிறது. பெரியவர்களிடம் அப்படியில்லை. அவர்கள் ரகசியமாகச் செயல்படுகிறார்கள். புதிராக நடந்து கொள்கிறார்கள்.

ஊரில் நடக்கும் சண்டை ஒன்றை சிறுவர்கள் பார்வையிடுவது முக்கியமான காட்சி. அதில் அவர்களுக்கு எதற்காக அந்த சண்டை நடக்கிறது. யார் எதிரி என்று தெரிவதில்லை. ஆனால் அவர்களுடன் சண்டையில் கலந்து கொள்கிறார்கள்.

வான் ஹானின் அம்மா அவனை மிகவும் கண்டிப்புடன் நடத்துகிறாள். கோபத்தில் அடிக்கிறாள். அதே நேரம் அவனுக்கு விருப்பமான உணவை தயாரித்து தருகிறாள். பள்ளி விட்டு வீடு திரும்பியதும் ஹான் சாப்பிடுகிறான். பிறகு இரவு வரை விளையாடுகிறான். அவன் நண்பர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வருத்தமடைகிறான்.

ஹானின் குடும்பம் கலாச்சாரப்புரட்சியின் காரணமாக இடம் மாறி குய்ஷோ மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பமில்லை. அரசின் உத்தரவு. அந்த நெருக்கடி அவர்களின் உறவில் வெளிப்படுகிறது.

டாங் சின்ஜோங்கின் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் நெல்லி குட்டீயரின் எடிட்டிங் பிரமிக்க வைக்கிறது.

வாங் ஹான் சட்டையைப் பறிகொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது நம் பால்யத்தின் நினைவுகள் கொப்பளிக்கத் துவங்கிவிடுகின்றன. இப்படி அழியாத நம் பால்ய நினைவுகளை மீட்டுகிறது என்பதே இந்தப் படத்தை நெருக்கமாக்குகிறது

••

0Shares
0