பள்ளிச் சிறுவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று பையனிடம் கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான்.
இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது .
சிறுவர்களின் மிக முக்கியமான பிரச்சனை தான் முட்டாளா? அறிவாளியா ? என்பதே. அதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நீயொரு முட்டாள் என்ற வசையைச் சந்திக்காத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். இந்தச் சொல்லை குழந்தைகள் வெகுவாக வெறுக்கிறார்கள். பல நேரங்களில் சகமாணவனை முட்டாள் என்று திட்டுவதையே உயர்ந்த வசையாக நினைக்கிறார்கள்.
ஏன் ஒரு மாணவன் முட்டாளாகக் கருதப்படுகிறான். அல்லது எது முட்டாள் தனம். இந்தக் கேள்வி எளிமையானது. ஆனால் இதற்கான பதில் இன்றுவரை தெளிவானதாகயில்லை.
முட்டாள்தனம் என்பதை கவனக்குறைபாடு, புரிந்து கொள்வதில், வெளிப்படுத்துவதில் உள்ள சிரமம் என்று புரிந்து கொள்வதற்கு பதிலாக அதை தீர்க்கமுடியாத ஒரு ஊனம் என்றே பலநேரங்களில் ஆசிரியர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். அது போலவே மாணவர்களும் தான் ஒரு முட்டாள் என்று சுயசந்தேகம் கொள்வதற்கு அவனைப் பற்றிய ஆசிரியர் பெற்றோரின் மதிப்பீடுகளே காரணமாக இருக்கின்றன
குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி குறித்து எழுதப்பட்ட புத்தகங்களை சில வருடங்களாகவே தேடிப்படித்துக் கொண்டு வருகிறேன். தமிழில் நேரடியாக இந்த துறை சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் வெகு குறைவே.
சென்னை மாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஆனால் அவற்றின் கற்றுத்தரும் முறை மற்றும் மாணவர்களை மதிப்பிடுதல், பொதுதிறன், சிறப்புத்திறன்களை கண்டறிதல் தொடர்பான பொது அறிக்கை அல்லது அனுபவ பகிர்வுகள் சார்ந்த புத்தகங்கள் கையேடுகள் எதுவும் கண்ணில் படவேயில்லை.
இவ்வளவு ஆசிரியர்களும் தங்களது பணி அனுபவத்தை என்ன தான் செய்கிறார்கள். வகுப்பிற்கு வெளியே ஆசிரியர்களின் பணி என்ன? வகுப்பிற்குள் அவர்கள் என்ன கண்டறிகிறார்கள். எதை உருவாக்கினார்கள். எதை புரிந்து கொண்டார்கள் என்பது ஏன் தொகுக்கபடவேயில்லை.
தனது கல்லூரி அனுபவம் குறித்து பேராசிரியர் மாடசாமியின் நூலை வாசித்திருக்கிறேன். இந்த வகையில் அது ஒரு முன்முயற்சி. தற்போது வார்த்தை இதழில் பி.ச. குப்புசாமி – ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்று தனது பள்ளி ஆசிரியப் பணியனுபவம் குறித்து தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அது முக்கியமானதொரு பதிவு.
கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் பழமையானவை. ஆங்கில கல்வியை பெரிதும் நகல் எடுப்பவை. நவீன உளவியல் காரணிகளோ, உபகரணங்களோ, குழந்தைகளின் இயல்புணர்வுகளையே அவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.
ஆசிரியர்களைப் போலவே வீட்டில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அமுக்கி வைத்து கற்றுத்தருவதும் மனப்பாட இயந்திரங்களாக அவர்களை மாற்றுவது மட்டுமே
ஆரம்பக் பள்ளிக்கல்வி சார்ந்த பயிற்றுவித்தல் தொடர்பான சிந்தனைகளில் நான் பெரிதும் மதிக்ககூடியவர் ஜான் ஹோல்ட். அவரது எப்படி குழந்தைகள் தோற்றுபோகிறார்கள் (how Children fail ) என்ற புத்தகம் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழில் யுரேகா பதிப்பகம் சார்பில் ஆசிரியரின் டயரி என்ற பெயரில் எம்.பி. அகிலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ( யுரேகா வெளியீடு. 34 ரத்தினம் தெரு, கோபாலபுரம். சென்னை. 86 விலை. 40.)
ஜான் கால்ட்வெல் ஹோல்ட் ஐந்தாம் வகுப்பிற்கான ஆசிரியராக இருந்தவர். 1923 ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர் எக்ஸ்டர் அகாதமி மற்றும் ஐவி லீக் பல்கலை கழகத்தில் பயின்றார். இரண்டாம் உலக போரின் போது நீர்முழ்கிக்கப்பலில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். 1953 முதல் 67 வரை கொலராடோ மற்றும் பாஸ்டன் பகுதி தனியார் பள்ளிகளில் ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். பில்ஹல் என்ற சக ஆசிரியரோடு இணைந்து கற்றுதருதலில் பல புதுமைகளை உருவாக்கியிருக்கிறார்.
1964ல அவரது how Children fail என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது மிகுந்த வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கியது. புதிய கல்விமுறைக்கான ஆதார புத்தகங்களில் ஒன்றாக இன்றும் இந்த நூல் கொண்டாடப்படுகிறது
இதன் வெற்றி அவரை மிக முக்கியமான மாற்று கல்வியல் சிந்தனையாளராக வளர்த்தது. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் கல்விமுறையில் தேவையான மாறுதல்கள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தவர் ஜான்ஹோல்ட்
நான் முதன்முதலாக ஹோல்டை ஒரு கல்வி உளவியல் தொடர்பான நூலின் மேற்கோளாக படித்து அறிந்தேன். அதில் “To parents I say, above all else, don`t let your home become some terrible miniature copy of the school. No lesson plans! No quizzes! No tests! No report cards! Even leaving your kids alone would be better; at least they could figure out some things on their own. Live together, as well as you can; enjoy life together, as much as you can.”
அது என்னை யோசிக்க வைத்தது. அப்படியானால் வீட்டில் பிள்ளைகள் படிக்க கூடாதா? வீட்டுபாடங்களை என்ன செய்வது. எப்படி பிள்ளைகள் மேம்படுவார்கள் என்று யோசனைகள் கிளைவிட்டது. ஆனால் இந்த குரலின் அடிப்படையாக உள்ள உண்மை எனக்கு நெருக்கமாக இருந்தது.
பள்ளியில் மாணவர்கள் புரிந்து கொள்ளத் தவறும் போது தான் வீட்டிலும் வெளியிலும் சிறப்பு கவனம் கொடுக்க நேரிடுகிறது. கற்றுதருதலில் உள்ள கோளாறு தான் வீட்டுபாடம் எழுதுதல் என்ற பெரும்சுமையை உருவாக்கியிருக்கிறது.
இதே ஹோல்ட் இன்னொரு இடத்தில் ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இருந்தால் நலமாக இருக்கும். காரணம் ஒருவர் பாடம் நடத்தவும் மற்றவர்கள் மாணவர்களின் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கவும் முடியும். இருவரும் கலந்து ஆலோசித்து ஒவ்வொரு குழந்தையின் புரிதல் பற்றியும் விவாதித்து கற்று தந்தால் விளைவுகள் பிரமாதமானதாகயிருக்கும். என்று குறிப்பிடுகிறார்.
இதை நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற கற்றுதரும் முறை எப்படி வந்தது. ஏன் அது இன்று வரை கறாராக நடைமுறைபடுத்தபட்டு வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து ஏன் கற்றுத்தரக்கூடாது என்று நினைத்திருக்கிறேன்
ஹோல்டின் இந்த வாசகம் அவரை நோக்கி என்னை உத்வேகப்படுத்தியது How Children Fail, How Children Learn, Escape From Childhood, Teach Your Own போன்ற அவரது முக்கியப்புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். அதில் பெரும்பான்மை என் பால்யத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அருகில் இருந்து கண்டு எழுதியது போலவேயிருந்தது. இது எனது அனுபவம் மட்டுமில்லை பெரும்மை வாசகர்கள் ஹோல்டின் அவதானிப்புகள் தங்களது பால்யத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டவை என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்
ஹோல்டின் இந்த புத்தகம் மிகுந்த அக்கறையோடு எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவர் ஆசிரியப்பணியை புனிதம் என்று கொண்டாடவில்லை. மாறாக ஆசிரியராக இருப்பதை ஆராய்கிறார். அதன் வெற்றி தோல்விகளை வெளிப்படையாக தெரிவிக்கிறார். பள்ளி என்ற அமைப்பின் பின் உள்ள வன்முறையை, கற்றுதருதலில் ஆசிரியர்களின் பொதுபுத்தியை, அவர்கள் மேற்கொள்ளும் மிரட்டல்களை ஒத்துக் கொள்கிறார்.
அதே நேரம் மாணவர்களை நாம் நினைப்பது போல எளிதில் மாற்றிவிட முடியாது. அதற்கு தனிப்பட்ட கவனமும் நீண்ட உழைப்பும் தேவை என்றும் உணர்த்துகிறார். மாணவர்களின் உளவியலை புரிந்து கொள்வது கற்றுதருவதில் முக்கியமானது என்பதே ஹோல்டின் வாதம்.
பள்ளி மாணவர்களின் குறையாக நாம் நினைப்பவை எங்கிருந்து உருவாகின்றன என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் அவசியம் படிக்க வேண்டியது இந்த நூலே .காரணம் இது குழந்தைகளை வெறும் பள்ளி செல்லும் ரோபோக்கள் போல பார்க்கவில்லை. அவர்களது சிறுசிறு அசைவுகளையும் உளச்சிக்கல்களையும் நுட்பமாக அறிந்து அதற்காக காரணங்களை, பதில்களை முன்வைக்கிறது
How Children Fail என்ற புத்தகத்தை நான் பத்து தடவைக்கும் மேலாக படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போது அந்த புத்தகம் எழுப்பும் ஆழமான கேள்விகள் மனதில் வலியை உருவாக்குகின்றன. அடிப்படை கல்வியில் இன்று நடைபெறும் பெரும்பான்மை கோளாறுகள் எங்கிருந்து உருவாகின்றன என்பதை துல்லியமாக சுட்டிகாட்டுகிறார் ஹோல்ட்
ஹோல்ட்டின் கல்விசிந்தனைகளுக்கு பின்பு டால்ஸ்டாய், தோரு, ரூசோ போன்றவர்களின் எண்ணங்கள் இணைந்திருக்கின்றன. அவர் குழந்தைகளின் இயற்கையான திறனை அடையாளம் காண்பதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.
ஹோல்டின் கல்வி குறித்த எண்ணங்களில் முக்கியமானவை இவை
- புரியாதவற்றை தனக்கு புரியவில்லை என்று குழந்தைகள் பயமின்றி சொல்ல வைக்க வேண்டும். அவர்களுக்கு புரியும்வரை விளக்க வேண்டும். புரியாமல் போவதற்கான முக்கிய காரணம் கவனம் சிதறிவிடுவது. பொதுவில் மாணவர்கள் படிக்கும்போதோ, படிக்க முயற்சிக்கும் போதோ சிறிது நேரத்திலே தங்களது கவனத்தை இழந்துவிடுகிறார்கள்.
- தங்கள் கவனம் பாடத்தின் மீது இல்லை என்று கூட தெரியாத சுயஉணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. மாணவர்கள் இதிலிருந்து விடுபட தனக்குப் புரியவில்லை என்றால் உடனே குரல் எழுப்பவேண்டும். அது அவனது புரிந்து கொள்ளும் முயற்சியை மேம்படுத்தும். மோசமான மாணவன் தனக்கு எது புரிந்தது எது புரியவில்லை என்றே தெரிந்திருக்க மாட்டான். அது தவறானது. புரியவில்லை என்பதை உணர வைக்க வேண்டும். கவனம் எடுத்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்
- பலநேரம் கரும்பலகையை பார்த்து எழுதும் மாணவர்கள் தான் என்ன சொல்லை எழுதிக் கொண்டிருக்கும் என்பதை கவனிப்பதில்லை. ஒன்றிரண்டு எழுத்துகளாக மட்டுமே பார்த்து பார்த்து எழுதுகிறார்கள். அதனால் பாதியில் தான் என்ன எழுதினோம் என்பது மறந்து போகிறது. அது போலவே ஒரு சொல்லை எழுத ஆரம்பிக்கும் போது அது எவ்வளவு பெரிய சொல் அதை எழுத எவ்வளவு இடம் பிடிக்கும் என்று அவன் யோசிப்பதில்லை. அதனால் தான் பலநேரம் காகிதத்திற்கு வெளியிலும் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
- மாணவர்கள் பரிட்சையில் ஒரு பதிலை எழுதி முடித்தவுடன் திரும்பி பார்க்க பயப்படுகிறார்கள். இரவு நேரத்தில் சுடுகாட்டினை கடந்து போகின்றவன் திரும்பி பார்க்காமலே ஒடுவது போன்று தான் பரிட்சை எழுதுகிறார்கள். தனக்கு தெரிகிறதோ இல்லையோ ஒரு பதிலை எழுதிவிட்டோம். இத்தோடு தன் வேலை முடிந்துவிட்டது. இனி அதை திருப்பிப் பார்க்க கூடாது என்ற மனோபாவம் பெரும்பான்மை மாணவர்களிடம் இருக்கிறது
- சில நேரம் குழந்தைகள் தனக்கு பதில் தெரிகிறதோ இல்லையோ கைகளை தூக்கி விடை சொல்ல துடிப்பது போல காட்டிக் கொள்வார்கள். அது ஒரு தந்திரம். வேறு யாராவது பதில் சொல்லிவிட்டால் தலையை ஆட்டி ஆமோதிப்பது போல நடிப்பது அல்லது அதை பற்றி முணுமுணுப்பது போன்றவை மாணவர்களின் ஏமாற்றும் முறைகள். ஆசிரியர் தன்னிடம் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்ற பயத்தின் விளைவு. அதையும் மீறி கேள்வி கேட்டுவிட்டால் பதிலை மிக மெதுவான குரலில் சொல்வார்கள். அது சரி என்று ஆசிரியர் சொன்னால் மட்டுமே உரக்கச் சொல்வார்கள். இல்லாவிட்டால் மிக மெதுவாகவே சொல்வார்கள். சரிதானா என்று ஆசிரியர் திரும்பக் கேட்டுவிட்டால் உடனே மாற்றிவிடுவார்கள். அது தனக்கு பதில் முழுமையாக தெரியவில்லை என்று மறைக்கும் எளிய தந்திரமே.
- ஆசிரியர்கள் கேள்விகேட்கும் போது கூடுமானவரை அவர்களிடமிருந்தே பதிலை வரவழைப்பதில் குழந்தைகள் கில்லாடிகள். புரியாதது போல நடித்து நடித்து கிட்டதட்ட பதிலை அவரிடமிருந்தே வாங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொதுவாக கைகொள்ளும் உத்தி ஆசிரியரின் முகத்தை உன்னிப்பாக கவனிப்பது. தான் சொல்லும் பதில் தவறு என்று ஆசிரியர் முகத்தில் சிறிய மாறுதல் தெரிந்தால் உடனே மாற்றிவிடுவார்கள். சலனமில்லாத முகம் கொண்ட ஆசிரியரை மாணவர்களுக்கு பிடிக்காமல் போய்விடுவது இதனால் தான்.
- சில ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களிடம் சரியா சரியா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். அது தவறான அணுகுமுறை. தான் மிக சிறப்பாக கற்றுதருகிறேன் என்று மாணவர்களை பாராட்ட சொல்ல வைப்பதே இது. இதில் மாணவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் சொல்வது அத்தனையும் சரி என்று சொல்லியே பழகிவிடுவார்கள்.
- பொதுவில் சிந்திக்கும் திறன் உள்ள குழந்தைகள் எவரும் பெரியவர்களை திருப்தி செய்வது தங்களது முக்கியமான வேலையில்லை என்று உணர்ந்தவர்கள். பெற்றோர் ஆசிரியரை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கும் குழந்தையே அதிகம் குறுக்குவழிகளை நோக்கி செல்கிறது.
- ஆசிரியரின் கவனம் தன்மீது இருப்பதை பலநேரம் குழந்தைகள் விரும்புவதில்லை. அது அவர்கள் கற்றுக்கொள்வதை ஆழமாக பாதிக்கிறது. தன் இயல்பிற்கு மாறாக ஆசிரியருக்காக அது நடந்து பாவனை செய்யத் துவங்குகிறது. ஆகவே கண்காணிப்பது போல இன்றி குழந்தைகளின் இயல்பைக் கெடுக்காமலே அவர்களுக்கு பாடத்தை புரிய வைப்பது மிக முக்கியமான பயிற்சி. இது கல்வி பயிற்சி நிறுவனங்களில் கற்றுதரப்படுவதில்லை. மாறாக குழந்தைகளை எப்படி அடக்கி வைக்க வேண்டும் என்றே பயிற்சிகள் அதிகம் தரப்படுகின்றன.
- ஆசிரியர்களின் அடிப்படை தவறு என்ன தெரியுமா? அவர்களுக்கு பாடத்தின் மீது இருக்கும் அதே ஆர்வம் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று தப்பு கணக்கு போடுவது தான். கல்வி பெரிய செல்வம். அது வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் உன்னத சாளரம் என்பதெல்லாம் மாணவர்களை பொறுத்தவரை பேத்தல்கள். பள்ளிக்கு சென்றுவருவதை தனக்கு அளிக்கபட்ட தினசரி வேலையாக தான் குழந்தைகள் நினைக்கின்றன.
- பள்ளியில் தனது வேலை கற்றுக்கொள்வது என்று மாணவர்கள் நினைக்கவில்லை. மாறாக முடிந்த அளவு சுலபமாக, கஷ்டப்படாமல் தினப்படி கொடுக்கபடும் வேலையை முடித்து தருவது தான் கல்வி என்று நினைக்கிறார்கள். இது முடியாவிட்டால் தன் மீது பழிவிழாமல் தன் வேலையை எப்படி தள்ளிவிடுவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது அடுத்தவர்கள் உணராத வண்ணம் அவர்களை வேலை வாங்குவதில் குழந்தைகளே கில்லாடிகள்.
- தோல்வி பயம் தான் மாணவனின் மிக முக்கிய பிரச்சனை. அவன் தனது கற்றுகொள்ளும் திறனை இந்த பயத்தால் மூடிக் கொள்கிறான்.
- ஆசிரியர் கேள்விகேட்கும் போது பதில் தெரியாவிட்டால் உங்களுக்கு என்ன மனநிலை ஏற்படுகிறது என்று மாணவர்களிடம் கேட்டால் பெரும்பான்மையினர் சொன்னது முதலில் எச்சிலை விழுங்குவோம். உடம்பெல்லாம் பயம் கவ்விக் கொள்ளும். சில நேரங்களில் மூத்திரம் போக வேண்டும் போலிருக்கும்.
- அளவுக்கு அதிகமான வீட்டுபாடங்கள் மாணவர்களின் இயல்பான கற்கும்திறனை குறைத்துவிடும். பத்துவயதிற்கு குழந்தை தன்னை பற்றிய தாழ்வுமனப்பான்மை கொள்வதற்கு இதுவே முதன்மையான காரணம்.
- குழந்தைகளை திட்டுவதை போலவே பாராட்டுவதையும் அறிந்து செய்ய வேண்டும். மிக உயர்வாக குழந்தையை பாராட்டிவிட்டால் அடுத்த முறை அது மதிப்பெண் குறையும் போது தனக்கு பாராட்டு கிடைக்காது என்பதால் குற்றவுணர்ச்சி கொள்ள துவங்கிவிடும்.
- பள்ளிகளில் நிலவும் பயம் விநோதமானது. ஆசிரியர்கள் பயமுறுத்துகிறார்கள். வகுப்பறைகள் பயமுறுத்துகின்றன. பாடப்புத்தகம், எழுதுதல் போன்றவை பயமுறுத்தி படிக்க வைக்கபடுகின்றன. விளையாட்டு மைதனாம் பயமுறுத்துகிறது. சகமாணவர்கள் கூட சில நேரம் பயமுறுத்துகிறார்கள். இந்த பயம் தான் கற்றுக் கொள்வதன் ஆதார தவறு. இதனால் மனஅழுத்தம் பெரும்பான்மை குழந்தைகளை பற்றிக் கொள்கிறது.
கல்வி பெரிதும் வணிகமாகியுள்ள சூழலில் மாற்றுகல்வி முறைகளும் பயிற்றுவித்தல்களும் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.
நம் குழந்தைகள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்று நமக்கு தெரிகிறது. என்ன படிக்கிறார்கள் எப்படி படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வம் கொள்வதில்லை. ஆனால் அது தான் குழந்தைகள் மீது நாம் காட்டும் உண்மையான அக்கறை. அதை மறந்து படி படி என்று குழந்தையை அடித்து மிரட்டுவது மட்டுமே அவர்களை படிக்க வைத்துவிடாது என்பதே உண்மை.
குழந்தைகளின் பாடப்புத்தகங்களை நீங்கள் வாங்கி படித்து பாருங்கள். அந்த பாடங்கள், நோட்டுகள், பயிற்சிகள் போன்றவற்றை அக்கறை கொண்டு கவனியுங்கள். அதிலிருந்து தான் குழந்தைகளின் கற்றுத்தருதல் வளரக்கூடும்.
***