கற்பனைச் சேவல்

சிறுகதை

அந்த மூன்று பேரும் தன்னிடமிருக்கும் சண்டைச்சேவலை விலை பேசி வாங்கிப் போவதற்காக வந்திருப்பதாகவே காயம்பு நம்பினார்

மூவரும் வெள்ளை வேஷ்டி கட்டியிருந்தார்கள்.அதில் ஒருவருக்குத் தலை நரைத்துப் போயிருந்தது.வயது எப்படியும் ஐம்பதுக்கும் மேலிருக்கும்.இன்னொரு ஆள் கோடு போட்ட சட்டையை மடித்துவிட்டிருந்தான்.திருக்கை மீசை வைத்திருந்தான்.மூன்றாவது ஆள் குள்ளம்.அவன் கையில் ஊதா நிற கைப்பை ஒன்றிருந்தது.அவர்களைப் போன்ற வெளியாட்கள் இந்தக் கிராமத்திற்கு எப்போதாவது தான் வருகிறார்கள்.

காயாம்பு வேம்படி நிழலில் கிடந்த கல்லில் உட்கார்ந்தபடியே அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.காயாம்புவிற்கு எழுபது வயதிருக்கும்.அழுக்கடைந்துபோன வேஷ்டியை கட்டியிருந்தார்.வெற்றுடம்பில் ஒரு காவி நிறத்துண்டை போட்டிருந்தார்.மூன்று பேரும் யாரோ ஆள் வருவதற்காகக் காத்திருப்பது போலச் சாவடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்கள் வீமனுக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் காயம்புவிற்குத் தெரியும்.அவன் இந்நேரம் பனைவிடலிகளுக்குள் குடித்துவிட்டு விழுந்துகிடப்பான்.அந்த ஊரில் சேவல்கட்டிற்க்கு சேவலை பழக்குகிற ஒரே ஆள் வீமன் மட்டும் தான்.

வீமன் ஒரு ஆளுக்குத் தான் சேவலை எப்படித் தேர்வு செய்வது எனத்தெரியும்.அந்த வட்டாரத்தில் யார் சண்டைச்சேவலை வாங்குவதாக இருந்தாலும் வீமன் தான் தரகு செய்வான்.இந்த மூவரும் வீமனை அழைத்து வரச்சொல்லி ஆள் அனுப்பியிருப்பார்கள் போலும்.

அவன் இந்நேரம் எந்தப் பனையடியில் போதையில் விழுந்துகிடக்கிறானோ.வீமனுக்கு இந்த உலகில் சண்டை சேவல்களைத் தவிர வேறு ஒரு துணையும் கிடையாது.சேவலை பார்த்தமாத்திரம் அது எந்த ஊரில் யார் வளர்ப்பு என்று சொல்லிவிடுவான்.அவன் கனவில் கூடச் சேவல்களை அலைந்து கொண்டிருந்தன.

வீமன் சொல்வான் .ரெக்கை இருந்தாலும் சேவல்கள் வானில் பறக்கமுடியாமல் போனதற்குக் காரணம் அது மனிதர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவது தான்.அதிலும் சண்டைச்சேவல்கள் அதை வளர்க்கிற ஆளின் குணத்தைத் தான் கொண்டிருக்கும்“

வீமன் சொன்னது உண்மை.சேவல்களை வளர்க்கிற ஆளால் அதைப் பிரியவே முடியாது.மூன்று பேரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.இப்பொழுது யார் சேவலை வளர்க்கிறார்கள்.இப்படி எங்காவது போய் விலைக்கு வாங்கிச் சண்டைக்கு விட்டால் தான் உண்டு.அதுவும் தன்னிடமிருக்கும் கருப்பனை போன்ற சேவல்கள் வாய்ப்பது எளிதானதில்லையே

வீமனைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் தான் சேவலை கொடுத்துவிடக்கூடாது.வீமன் இனிக்க இனிக்கப் பேசுவான்.சேவலை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக எதையும் செய்து தர தயாராக இருப்பான்.

ஊரில் இருக்கிற களவாணிப்பயல்களில் கைதேர்ந்த களவாணி வீமன்.அவனைப் பேசவே விடக்கூடாது.உடம்பில் சந்தனம் பூசிவிடுவது போலக் குளிர்ச்சியாகப் பேசி சேவலை அடித்துக் கொண்டு போய்விடுவான்.

வீமன் வருவதற்குள் தானே அவர்களைத் தானே துரத்திவிட்டால் என்ன என்று கூடக் காயாம்புவிற்குத் தோணியது

குனிந்து ஒரு கல்லை எடுத்து அவர்களை நோக்கி வீசினார்.அக்கல் சாவடிக்கு முன்பாகவே விழுந்தது.ஊனுகம்பை ஊன்றிக் கொண்டு எழுந்து போய்த் திட்டிவிட்டு வரலாமா என நினைத்தார் .பிறகு அவர்களாக என்ன தான் செயவார்கள் எனப் பார்க்கலாம் என்பது போல வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்து கொண்டார்

சாவடியில் இருந்த மூவரில் ஒரு ஆள் காயாம்புவை பார்த்து மெல்லிய புன்னகையுடன் சிரிப்பது போலத் தோன்றியது. நைச்சியம் பண்ண பாக்கிறான். நாம் சிரித்துவிடக்கூடாது.இவர்களிடம் இரக்கமே காட்டக்கூடாது என முகத்தை உர்ரென வைத்துக் கொண்டார்

மூவரில் ஒரு ஆள் எழுந்து போய் அருகாமை இருந்த வீட்டில் போய் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்

அந்த வீடு ராமபத்ரனுடையது. அவனிடம் கேட்டால் காயாம்புவின் சேவலை பற்றி ஏளனமாகத் தான் சொல்வான். அவனுக்குச் சேவல்சண்டை பிடிக்காது. தானே திருடிக் கொண்டுவந்து தருகிறேன் என்று கைநீட்டி காசு வாங்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ராமபத்ரன் தனது வாசலில் வந்து நின்றபடியே காயாம்புவை கையைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். குள்ளமான ஆள் தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தான். தன்னைப் பற்றி அவதூறு அது என உறுதியாக நம்பினார் காயாம்பு

ஒரு சண்டைச்சேவலை பாதுகாப்பதற்காக எவ்வளவு பிரயாசை பட வேண்டியிருக்கிறது. தன்னைத் தவிர வேறு யாரிடம் அப்படியான சேவல் இருக்கிறது எனக் காயாம்பு அலுத்துக் கொண்டார்

அந்த ஊரிலே இரண்டு பேரிடம் தான் சண்டைச்சேவல்கள் இருந்தன. அதில் காயாம்புவிடம் மட்டும் தான் ஆறேழு சேவல்கள் நின்றன.

இவ்வளவிற்கும் அவர் சேவற்கட்டிற்க்குப் போவது வீட்டில் யாருக்கும் பிடிக்காது. யார் என்ன சொன்னாலும் சரி காயாம்பு கேட்கமாட்டார். அமாவாசை தோறும் பட்டம்புதூரில் நடக்கும் சேவற்கட்டுக்கு கிளம்பி போய்விடுவார்.

சேவல் கொண்டு போவதில் உள்ள இன்பம் அலாதியானது.தோளில் சேவலை உட்கார வைத்துக் கொண்டு பாட்டுபாடியபடியே நடநது போவார். அவரைப்போலச் சேவல் கொண்டுவருபவர்கள் தாதம்பட்டியில் சந்தித்துக் கொள்வார்கள். அங்கே ஒரு காட்டு கருப்பசாமி கோவில் இருந்த்து.வேம்பு அடர்ந்த கோவிலது.அங்கே இளைப்பாற உட்கார்ந்து கொள்வார்கள்

சண்டைக்குச் சேவல் விடுகிற ஆட்களுக்கு என ஒரு பொதுகுணமிருந்த்து. அவர்கள் அதிகம் பேசுகிறவர்களில்லை. தனது சேவலை தவிர வேறு சேவல்களை அவர்கள் பொருட்டாக நினைப்பதேயில்லை. சேவல்களும் ஒன்றோடு ஒன்று பழகுவதில்லை. அதைக் கொண்டுவரும் மனிதர்களும் அப்படிதான்

காயாம்புவும் அப்படிதானிருந்தார்.

அவரிடமிருந்த சேவல்களில் அதிகம் ஜெயித்தது. கருப்பன் என்ற சேவல். அது அவரது வளர்ப்பு பிள்ளையைப் போன்றது. கருப்பனை எப்போதும் தோளில் தூக்கி கொண்டு தான் அலைவார். சேவலோடு நடந்து போவது அலாதியானது. அந்தக் கம்பீரம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்

போட்டி ஆரம்பிக்கும் முன்பாக அவர் கருப்பனுக்குத் தண்ணி கொடுக்க மாட்டார். தண்ணீர் குடித்துவிட்டால் நின்று ஆட முடியாது. நுரையீரல் விரிந்து கொடுக்காது. சண்டைக்குப் போகிற சேவல் மூர்க்கம் கொள்ள வேண்டும். அதற்கு நாம் தான் பழக்கம் சொல்லித்தர வேண்டும்.

ரகசியம் பேசுவது போலச் சேவலிடம் அது எதிர்கொள்ளப்போகும் சேவல்களைப் பற்றிச் சொல்லுவார். அவர் அறிந்தவரை சேவல்கள் கூர்மையாக எதிரியை கவனிக்கக் கூடியவை. எதிர்சேவலின் பலவீனத்தை அறிந்து கொண்டுவிட்டால் ஒரே அடியில் காலி செய்துவிடக்கூடியவை. அதிலும் அவரது கருப்பன் கொண்டையைச் சிலுப்பும் போதே அதன் உக்கிரம் தெரிந்துவிடும்.கருப்பன் எந்தச் சாவலை ஜெயித்தாலும் தோற்ற சாவலின் ரெக்கை ஒன்றை பிடுங்கி எடுத்துக் கொண்டுவிடுவார் காயாம்பு. அது தான் பெருமை.

அப்படி அவரிடம் நிறைய ரெக்கைகள் இருந்தன. சில வேளைகளில் அவற்றை மாலையாகக் கட்டி கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் போல ஆசையாகவும் இருக்கும்

ஊர்ஊராகச் சேவலை சண்டைக்குக் கொண்டு போய் நிறைய அனுபவம் பெற்றிருந்தார் காயாம்பு. சேவல் சண்டைக்குப் பேர் போன வீரன் கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத்தேவன். அவனிடம் தான் அதிகச் சண்டை சேவல்கள் இருந்தன என்றும் அது தோற்றுப்போன நாளில் தான் வெள்ளையத்தேவன் போரில் கொல்லப்பட்டான் என்றும் கூறுவார்கள். ஒரு முறை வெள்ளையத்தேவன் வளர்ந்த சேவல்களின் வம்சாவழியில் வந்த ஒரு சேவலுடன் தனது சேவலை பொருந்தவிட்டார் காயாம்பு. அது ஒரே அடியில் தனது சேவலை வீழ்த்திவிட்டபோதும் பெருமையாகவே இருந்த்து

காயாம்புவிற்கு அந்த வட்டாரத்தில் யார் எல்லாம் சேவல் வளர்ந்தார்கள். எந்தச் சேவல் சண்டையில் எப்படி ஆடும் என்று அத்துபடி.அவரால் கணிக்கவே முடியாத ஆளாக இருந்தது பாண்டிகோவிலில் நடந்த சேவற்கட்டுக்கு சேவல் கொண்டுவந்திருந்த முத்திருளனை தான். அவனது சேவல்கள் சராசரியை விடக் குள்ளமாக இருந்தன. அதன் காலில் கட்டிய கத்தியும் சற்று வளைந்திருந்தது. ஆனால் அந்தச் சேவல் வளறி வீசுவது போல எகிறி பாய்ந்து அடித்தன.அது போல மூர்க்கமாகச் சண்டையிடும் சேவலை காயாம்பு கண்டதேயில்லை. போட்டியில் ஜெயித்த சேவலை முத்திருளன் பட்டர்பங்களா முதலாளிக்கு விலைக்கு விற்றுவிட்டான். இவ்வளவு நல்ல சேவலை வெறும் ஐநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டானே எனக் காயாம்புவிற்கு ஆதங்கமாக இருந்த்து.

முத்திருளனை தேடிப்போய் சேவலின் சூட்சுமம் பற்றிக் கேட்டார் . அவன் சொன்னான்

எந்தச் சேவலையும் தன்னால் சண்டைக்குப் பழக்கிவிட முடியும். சண்டை போடுவதற்குத் தேவை உடற்வாகு இல்லை.பழக்கம்.சேவலை பழக்குகிற விதத்தில் அது தானே சண்டையிடும்

தனக்கு அப்படி ஒரு சேவலை பழக்கி தரமுடியுமா எனக்கேட்டார் காயாம்பு

அதற்கு முத்திருளன் அப்படி ஒரு சேவலை பழக்கி தந்தால் அவர் மகளை அவனுக்குக் கட்டி வைக்க முடியுமா எனக்கேட்டான்

ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் காயாம்பு ஒத்துக் கொண்டுவிட்டார். முத்திருளன் நாலு மாதங்கள் கழிந்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான். சொன்னது போலவே ஐப்பசி பிறக்கும் போது முத்திருளன் வந்திருந்தான். அவன் கொண்டு வந்தது தான் அந்தக் கருப்பன் என்ற சேவல். அது உயரமாகவும்.கொண்டையைச் சிலுப்பிக் கொண்டுமிருந்தது

முத்திருளன் சொன்னான்

இது அபூர்வமான சேவல். இதோட வம்சம் கொண்டயங்கோட்டை.ரத்தம். சொட்ட சொட்ட கழுத்தை அறுத்துப் போட்டாலும் நின்னு அடிக்கும். பொட்டையோட பழகவிடக்கூடாது. விட்டா சேவலை விழுத்தாட்டிரும்.பாத்துக்கோங்க.

கருப்பனை செக்காலையில் நடைபெற்ற சேவற்கட்டில் தான் முதலில் களம் இறக்கிவிட்டார்கள்.ஒரு சுற்று முடிவதற்குள் அது எதிர்சேவலிலை அடித்துக் கழுத்தை அறுத்துவிட்டது.சூடான ரத்தம் பூமியில் சொட்டியதை கையில் தொட்டு பார்த்தார்.அந்தப் பிசுபிசுப்பு காயாம்புவிற்கு வெறி ஏற்றியது.அதிலிருந்து எந்தச் சேவற்கட்டுக்குக் கொண்டு போனாலும் கருப்பன் தான் ஜெயித்தது

சேவலை பழக்கி தந்த கைமாறாகக் காயாம்புவின் இளையமகளைக் கட்டிக் கொண்டு போனான் முத்திருளன். ஊர்பேர் தெரியாத வெறும்பயலுக்குப் பெண் கொடுக்கிறோமோ எனக் காயாம்புவின் மனைவி ஆத்திரப்பட்டாள். அவரது மச்சினன் கூட அந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று கடிந்து கொண்டான்.ஆனால் காயாம்பு கேட்டுக் கொள்ளவில்லை .தனக்குச் சண்டை சேவலை வளர்த்து கொடுத்தவன் என்பதற்காகவே அவனுக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுத்தார்

சேவலை வளர்ப்பதில் காட்டுகிற முரட்டுதனத்தை அவன் பெண்டாட்டியிடமும் காட்டினான். வீட்டில் சித்துபெண்ணாக வளர்க்கபட்ட அமராவதி முத்திருளனை கட்டிக் கொண்டு போய்த் தினமும் அடி உதைப்பட்டாள். குடித்துவிட்டு வந்து ஒருநாள் அவள் காதில் அடித்ததில் செவுள் பிய்நது காதில் ரத்தம் கொட்டியது.

இன்னொரு முறை தனக்குச் சோறு எடுத்து வைக்காமல் உறங்குகிறாள் எனத் தூங்கிக் கொண்டிருந்தவள் காலில் அம்மி குழவியைத் தூக்கி போட்டான் முத்திருளன்.அவனது அடி உதை தாங்காமல் மூன்றுமுறை அம்மா வீட்டிற்குக் கோவித்துக் கொண்டு வந்தாள் அமராவாதி

ஆனால் ஒருமுறை கூடக் காயாம்பு.முத்திருளனை கண்டிக்கவேயில்லை.மாமனாரும் மருமகனும் சேவற்கட்டை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். தகப்பன் தனது கணவனைக் கண்டிக்க மறுக்கிறான். தாய்வீட்டிற்குக் கோவித்துக் கொண்டு போய் வருவது அவமானமாகயிருக்கிறது என்று நினைத்த அமரவாதி ஒருநாள் விடிகாலை மாட்டுதொழுவத்தில் இருந்த உத்திரத்தில் சுருக்கு மாட்டி செத்துப்போனாள்.

அன்றைக்கு நெஞ்சுருக அழுது புலம்பியபோதும் அவருக்கு முத்திருளன் மேல் கோவம் வரவேயில்லை.தன் மகளுக்கு வாய்ந்த வாழ்க்கை அவ்வளவு தான் என முடிவு செய்து கொண்டார்.

அந்தச் சாவோடு காயாம்புவிற்கும் அவரது மனைவிக்குமான பேச்சுவார்த்தையை முறிந்து விட்டது.அதன்பிறகு அவரோடு பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டாள்.எல்லாம் கண்ஜாடை தான்.சிலவேளைகளில் சாப்பாடு வைத்துவிட்டு அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். பார்வையில் என்ன சொல்லுகிறாள் எனக் காயாம்புவிற்குப் புரியும்.

குற்றவுணர்ச்சியோடு அவர் தலைகவிழ்ந்து கொள்வார்.அந்த வெறுப்பு சேவலின் பக்கம் திரும்பியது.சேவலின் சப்தம் கேட்டாலே அவள் எரிச்சல் அடைய ஆரம்பித்தாள்.காரணமேயில்லாமல் அதன் மீது கல்லைவீசி எறிந்தாள்

தான் உயிரோடு இருக்கும்வரை அவரை மன்னிக்கவே மாட்டேன என் காயாம்புவின் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.அப்படிதான் முடிவில் நடந்தும் முடிந்தது. யார் எவ்வளவு வெறுத்தாலும் காயாம்புவிற்குச் சண்டை சேவல்களை விட மனசேயில்லை. அவர் சேவல்களை வளர்ப்பதெற்கென்றே வீட்டிற்குப் பின்னால் தனி இடம் ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.அதற்குள் வீட்டு மனிதர்களைக் கூட அனுமதிக்கமாட்டார்

அவரது உலகம் முழுவதும் சேவல்கள் மட்டுமே இருந்தன.அவரது சேவல்களைப் போல் நின்று சண்டையிடும் சேவல் கிடைக்காது என்பதால் அதை வாங்குவதற்காக ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள்.நிலா ஒளிரும் இரவுகளில் ஒற்றை ஆளாகச் சேவல்களைச் சண்டைக்கு விட்டு பார்த்துக் கொண்டிருப்பார்.சேவலின் தினவு அவருக்குள் ஏதோவொரு பரவசத்தைத் தந்து கொண்டிருந்தது.அது எல்லாம் ஒரு காலம்.இன்றைக்கு அந்தச் சேவல் ஆடிய முற்றத்தில் யாருமேயில்லை.தனியாக உட்கார்ந்தபடியே நடந்த சேவல் சண்டைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார் காயாம்பு

இரண்டு வருஷங்களுக்கு முன்பு வீமன் ஒரு பர்மாகாரனை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். ஆள் மைனர் ஜிப்பா போல ஜிகுஜிகுவென அலங்கார உடை.ஊதா நிற லுங்கி கட்டிய செண்ட் வாசனை தூக்கலாக அடிக்க நின்றிருந்தான்

அந்த ஆள் ரங்கூனில் இருந்து வந்திருப்பதாகவும்.கருப்பனை அவருக்கு விற்றால் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தருவதோடு ஒரு கடிகாரம் இனாமாகத் தருவதாக வீமன் சொன்னான்.

தனக்கு எதற்குக் கடிகாரம்.அதைக் கட்டிக் கொண்டு எங்கே போகப் போகிறேன்.சேவலை விற்க தனக்கு இஷ்டமில்லை என்று காயர்ம்பு விரட்டிவிட்டார்.பர்மாகாரன் ஆயிரத்திற்குப் பதிலாக இரண்டாயிரம் வேண்டுமானாலும் தருகிறேன்.சேவலை எப்படியாவது தனக்குத் தந்துவிட வேண்டும் என்றான்.அவர்கள் பத்தாயிரம் கொடுத்தாலும் சேவல் கிடைக்காது எனக் காயாம்பு சப்தம் போட்டார்

பர்மாக்காரன் சேவலை ஒருமுறை கண்ணில் பார்த்துவிட்டுப் போவதாகச் சொன்னான்.ஆனால் அதற்கும் காயாம்பு மறுத்துவிட்டார்

இது நடந்த நான்கு மாதங்களின் பின்பு கோடை முற்றிய நாளில் ஒரு மதிய நேரம் ஒரு வாடகை டாக்சியில் ஆறு பேர் சேவலை விலை பேச வந்திருந்தார்கள்.காயாம்பு அவர்களுடன் முகம் கொடுத்து பேசக்கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை.கதவை மூடிக் கொண்டு உள்ளே கயிற்றுகட்டிலில் படுத்துக் கொண்டார்.அவர்கள் மாறிமாறி கதவை தட்டிக் கொண்டேயிருந்தார்கள்.கதவை திறக்கவேயில்லை

வெறிபிடிச்ச பயலுகள்.சேவற்கட்டு பற்றி ஒரு மண்ணும் தெரியாது.ஆனா சண்டை சேவல் வாங்க வந்துட்டாங்க என அவர்களைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவர்களில் இருவர் தனது வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிபார்ப்பது போலக் காயாம்புவிற்குத் தோணியது.ஆகவே ஜன்னல் பக்கம் போய் நின்றபடியே மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

எப்படியும் காயாம்பு கதவை திறந்து வெளியே வந்து தானே ஆக வேண்டும் என அவர்கள் மரத்தடியிலே காரை நிறுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்த்து போலவே காயர்ம்புவிற்குத் தோணியது. இரவு வரை அவர் கதவை திறக்கவேயில்லை.இரவில் கதவை திறந்து வெளியே வந்த போது ஒரே இருட்டாக இருந்தது.ஆள் யாரையும் காணவில்லை.

களவாணிப்பயலுகள் ஒடிப்போய்விட்டார்கள் எனத் திட்டியபடியே தெருமுனை வரை நடந்து போய்ப் பார்த்துவந்தார்.ஆள் தடயமேயில்லை.

எதற்காகத் தனது சேவலை மட்டும் இப்படிக் குறிவைக்கிறார்கள்.அந்த வட்டாரத்தில் எத்தனையோ பேரிடம் சண்டை சேவல் இருக்கிறது.அவற்றில் ஒன்றை வாங்கிக் கொண்டு போக வேண்டியது தானே.எல்லாச் சேவல்களும் தனது சேவல் கருப்பனும ஒன்றாகிவிடுமா என்ன

கருப்பன் சண்டை போடுகிற தினுசு கயிற்றில் நடப்பது போல விநோதமாக இருக்கும்.அது மற்ற சேவல்களைப் போலத் தரையில் நின்று சண்டையிடுவதை விரும்புவதில்லை.

தரையில் இறக்கிவிட்டவுடன் ரெக்கையடித்துப் பறந்து தாவ துவங்கும்.கிரி சுற்றுவது எனத் தாவி கொண்டேயிருக்கும்.சில சமயம் ஒரு ஆள் உயரம் கூடப் பறக்க கூடியது அச்சேவல்.அதன் கண்களில் தன்னை மற்ற சேவல்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பரிகாசம் எப்போதும் ததும்பிக் கொண்டுதானிருக்கும். சண்டையிடுவதை விடவும் போக்குக் காட்டுவதில் தான் கருப்பன் கில்லாடி.வேடிக்கை பார்ப்பவர்கள் அதன் துள்ளலை கண்டு ஆரவாரம் செய்வார்கள்.கருப்பன் இதுவரைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் ஜெயித்திருக்கிறான்.எந்தச் சண்டையிலும் அவனது ஒற்றை இறகு கிழே விழுந்த்துக் கிடையாது

அதனாலே அச்சேவலை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பதற்காக வள்ளிகுளத்து ஆட்களும்.மேலபாளையம் ஆட்களும் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள்.ஆனால் அவர் யாருக்கும் கொடுப்பதாகயில்லை என உறுதியாக இருந்தார்.ஒரு முறை சொக்கிகுளத்தில் இருந்த கட்டைகாலன் என்ற திருடனை அனுப்பிக் காயாம்புவின் சேவலை திருடிக் கொண்டு போனார் கஸாலி முதலாளி.

ஆனால் திருடிக் கொண்டு போய்க் கள்ளிக்குடியில் நடைபெற்ற சேவற்கட்டில் விடப்பட்ட கருப்பன் எதிர்சேவலை ஒரு அடி கூட அடிக்கவில்லை.அது சண்டையிட மறுத்து அடிவாங்கியது.

கஸாலி முதலாளி அன்றைக்குத் தோற்றுப்போனார்.வம்பாடு பட்டுக் கட்டை காலனை அனுப்பித் திருடி வந்த்து வீண் என அந்தச் சேவலை கொன்றுவிடச்சொல்லி நாவிதன் சுப்பையாவிடம் கொடுத்து அனுப்பினார்.

அவன் சேவலை கொல்ல மனதின்றி மறுபடியும் காயாம்புவிடமே கொண்டுவந்து சேர்த்தான். அதற்காக நாவிதனுக்குப் பதினெட்டு படி நெல் அளந்தார் காயாம்பு.

காயாம்பு உத்தரவு இல்லாமல் அவரது சேவல் சண்டையிடாது என்று அந்த வட்டாரம் முழுவதும் பேர் ஆகிப்போயிருந்தது. அதன்பிறகு அவர் தனது சேவல்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தோட்டத்து வேலைகளுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்.

சண்டை சேவலை வளர்ப்பது எளிதானதில்லை.அது பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலை.காயாம்பு சேவல்களுடனே வாழ்ந்தார். பலநேரம் மனைவி பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட மறநது அவர் சேவல்களுடனே தனது நாட்களைக் கழித்தார்

அந்த வட்டாரத்தில் காயாம்புவின் சேவலுக்கு நிகரில்லை என்று பேர் ஆகிப்போனது.அதனால் தான் கார் போட்டுக் கொண்டு வந்து சேவலை வாங்க முயற்சிக்கிறார்கள்.அந்த ஆட்கள் தான் நீண்ட காலத்தின் பிறகு இந்த மூன்று பேரை அனுப்பி வைத்திருப்பார்களோ எனத் தோன்றியது.

கருப்பனை எப்படியாவது அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டு போய்விட வேண்டும்.இல்லாவிட்டால் ஏதாவது திருட்டுதனம் செய்து கொண்டு போய்விடுவார்கள் என நினைத்தபடியே அவர் அந்த மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சாவடி திண்ணையில் உட்கார்ந்திருந்த மூவரும் இறங்கி மேலத்தெருவை நோக்கி நடந்து போனார்கள்.அவர்கள் திட்டம் என்னவெனக் காயாம்புவிற்குப் புரிந்து போனது.பெட்டிக்கடைகாரனிடம் பணத்தைக் கொடுத்துக் காயாம்பு அறியாமல் சேவலை திருடிக் கொண்டு போய்விட முயற்சிக்கிறார்கள்.அது தான் அவர்களின் திட்டம்.என்னவொரு திருட்டுதனம்.இதை இப்படியே விடக்கூடாது

பேசாமல் கருப்பனை தூக்கிக் கொண்டு ஏதாவது ஒரு கிணற்றுக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டபடியே எழுந்து வீதியில் நின்று அந்த ஆட்கள் பெட்டிக்கடையில் நிற்கிறார்களா எனப்பார்த்தார்

அவர்கள் மூவரும் காரை வீட்டு சங்கையா வாசலில் செருப்பைக் கழட்டி போட்டு உள்ளே போயிருந்தார்கள்.

இது என்ன புதுச் சூழ்ச்சி எனச் சங்கையா வீட்டினையே பார்த்துக் கொண்டிருந்தார். சங்கையா அவரது மனைவியின் உறவினர்.ஊரில் கொஞ்சம் காசு உள்ளவன்.அ வனை வைத்து சேவலை அபகரிக்கத் திட்டமிடுகிறார்களோ என ஆத்திரமாக வந்த்து.

அவர்கள் கையில் சேவல் சிக்கிவிடக்கூடாது.எப்படியாவது அதைக் காப்பாற்றியாக வேண்டும்.இத்தனை வருஷம் பாதுகாத்தது முக்கியமில்லை.இப்போது கைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகத் தோளில் ஒரு நார்பெட்டியில் சேவலை ஒளித்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறி காளியம்மன் கோவிலை கடந்து ஆலமரத்துப் பாதையில் நடந்து போக ஆரம்பித்தார்.

தன்னை யாரோ பின்னாடியே விரட்டி வருவதைப் போல அவர் வேகவேகமாக நடந்தார்.ஆள் யாரும் வரவில்லை என்று நன்றாகத் தெரிந்தபின்பு அவர் தனது சேவலை தடவியபடியே களவாணிப்பயலுகள்.நல்லவேளை தப்பிச்சேன்.ஒருநாள் ஒரு பொழுது நிம்மதியா இருக்கவிடமாட்டேங்குறாங்க என முணங்கிக் கொண்டார்

ஆலமரத்துபாதையில் ஒரு இடிந்த சத்திரம் ஒன்று இருந்த்து.ஒரு காலத்தில் குதிரைவீரர்கள் தங்கிப்போவதற்காகக் கட்டிய கட்டிடமது.அதன் உள்ளே போய் ஒளிந்து கொண்டு விட்டார்.மாலைவரை அவர் தனது சேவலோடு பேசிக் கொண்டேயிருந்தார்.வெயில் வடிந்து இருட்டுப் பீறிடத்துவங்கியது.மின்மினிகளின் வெளிச்சம் கூட இல்லாத அந்த இடிந்த மண்டபத்தினுள உட்கார்ந்தபடியே அவர் சேவலுடன் பேசிக் கொண்டிருந்தார்.அன்றைக்கு வானில் நட்சத்திரங்களேயில்லை.இரவு எவ்வளவு நேரமாகிப்போனது எனத்தெரியவில்லை.இருட்டில் யாரோ நடந்து வரும் சப்தம்.டார்ச் லைட் வெளிச்சம் நகர்ந்து வருவது தெரிந்த்துத் தன்னைப் பிடிக்க வருகிறார்களோ என நினைத்தபடியே யார்றா எனக் குரல் கொடுத்தார்

“ஆரு அது“ எனப் பதில் குரல் வந்த்து

குரலை வைத்தே அது மாரிச்சாமி எனத் தெரிந்து போனது

“நான் தான் காயாம்பு“ என்றார்.டார்ச் லைட் முகத்திற்கு உயர்ந்தது

“என்ன மாமா இருட்டுக்குள்ளே உட்கார்ந்துகிட்டு என்ன செய்றீங்க“ எனக்கேட்டான் மாரிச்சாமி

“அது ஒண்ணுமில்லே மாப்ளே.நம்ம சேவலை வாங்குறதுக்காக டவுன்ல இருந்து மூணு பேர் வந்துருக்காங்க.அவங்க க்ண்ணில படாம தப்பி ஒளிய தான் இங்கே வந்துருக்கேன்“ என்றார்

“என்ன சேவல்“ எனக் கேட்டான் மாரிச்சாமி

“அதான் கருப்பன்.என் சண்டைசேவல்.அதை எப்படியாவ்து வாங்கிப்போடணும் மானாமதுரைகாரங்க அலையுறாங்கள்ளே“ என்றார்

“அவங்க சங்கையா வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்த ஆட்கள் மாமா.நீங்களா எதையோ கற்பனை பண்ணிகிட்டு இருக்கீங்க .உங்களைத் தேடி யாரு வரப்போறா“ என்றான் மாரிச்சாமி

“அப்போ வீமன் கூட்டிகிட்டு வந்த ஆட்கள் “என இழுத்தார் காயாம்பு

“வீமன் செத்தே ஐந்து வருசமாச்சி.அவன் எப்படி மாமா ஆளை கூட்டிகிட்டு வருவான் “

“வந்தானே.ஒரு பர்மாகாரனை கூட்டிகிட்டு வந்து பணம் கொடுத்து சேவலை கேட்டானே“ எனச் சொன்னார் காயாம்பு

“அதெல்லாம் உங்க மனப்பிரம்மை.யாரும் ஊருக்குள்ளே வரவேயில்லை,நீங்களா கண்டதையும் நினைச்சிகிட்டு இருக்கீங்க “

“இல்லை மாப்ளே.திட்டம் போட்டு என் சேவலை திருட பாக்குறாங்க.ஆள் நடமாட்டம் இருந்துகிட்டே இருக்கு.சேவலை நான் விட்டுதரமாட்டேன் “என்றார் காயாம்பு

“ஏன்மாமா இப்படி இருக்கீங்க.அப்படி என்ன சேவல் மேல பைத்தியம் “என ஆதங்கமாகக் கேட்டான் மாரிச்சாமி

“கருப்பன் லேசான சேவல் இல்ல மாப்ளே.அது முத்திருளன் வளர்ப்பு.இப்படி ஒரு சேவல் இனிமே கிடைக்கவே கிடைக்காது“.என்றார்

“அவனை எல்லாம் ரவை ரவையா வெட்டி கொல்லணும் மாமா.மனுசனா அவன்.அமராவதி எப்பேர்பட்ட பொண்ணு.அதை அடிச்சே கொன்னு போட்டானே“ எனக் கோவப்பட்டான் மாரிச்சாமி

“என் மக கொடுத்து வைக்கலே.அதுக்கு முத்திருளன் என்ன செய்வான் “என்றார் காயாம்பு

“அவனுக்குப் போய் ஏன் மாமா ஏண்டுகிட்டு பேசுறீங்க.சல்லிப்பயல்“ எனச் சடைத்துக் கொண்டான் மாரிச்சாமி

“அப்படிச் சொல்லாதே மாப்ளே.அவனை மாதிரி யாராலும் சேவலை சண்டைக்குப் பழக்கமுடியாது.அது பெரிய கலை. அவன் வளர்க்கிற சேவலுக்கு நடையே வேறுமாதிரி இருக்கும்..இந்தா பாரு .கருப்பனை.இவன் ஒருத்தன் தான் போதும்.இவனை அடிக்க யாரு இருக்கச் சொல்லு “

என டார்ச் வெளிச்சத்தை நோக்கி தனது நார்பெட்டியை தூக்கி காட்டினார்.வெறும் பெட்டி மட்டும் தான் இருந்த்து.உள்ளே சேவல் இல்லை.அவர் சேவல் தன்கூடவே இருப்பது போலக் கற்பனை செய்து கொண்டிருந்தார்

மாரிச்சாமி ஆதங்கமாகக் குரலில் சொன்னான்

“உங்க சேவல் எல்லாம் செத்து பனிரெண்டு வருசமாச்சி.இப்போ ஊர்ல சேவற்கட்டே யாரும் விளையாடுறதில்லே. பிரம்மை பிடிச்ச மாதிரி நீங்களா எதையோ நினைச்சிகிட்டு இருக்கீங்க“.

காயாம்பு அதை நம்பாதவர் போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்

“நான் சொல்றது உங்களுக்கு அர்த்தமாகலையா.இப்போ எந்த ஊர்ல சேவற்கட்டு நடக்குது.அதை எல்லாம் தடை பண்ணியாச்சி“ என்றான் மாரிச்சாமி

அமைதியாக மாரிச்சாமியை பார்த்துக் கொண்டேயிருந்தார் காயாம்பு

“என் சேவல் சாகலை.நான் ஆடவிட்டுகிட்டு தான் இருக்கேன்.இந்தா பாரு.அது கொண்டையை. “என மறுபடியும் இல்லாத சேவலை காட்டினார்

“கோட்டி பிடிச்சமாதிரி பேசாதீங்க மாமா.உங்க சண்டைச்சேவல்களுக்கு எல்லாம் உங்க பொண்டாட்டி தான் விஷம் குடுத்து கொன்னு போட்டாங்க.தெரு பூரா உங்க சேவல் செத்துகிடந்துச்சே மறந்துட்டீங்களா. “

காயாம்பு அமைதியாக இருந்தார்.தாங்க முடியாத வெறுப்பில் ஒருநாள் காயாம்புவின் மனைவி சேவல்களுக்கு விஷமிட்டுக் கொன்றது நிஜம்.மண்ணில் செத்துவிழுந்த சேவல்களை அள்ளி அணைத்தபடியே தாஙகமுடியாத துக்கத்தில் அழுதார் காயாம்பு.ஆற்றாமையோடு தன் மனைவியை அடிப்பதற்காக ஊனுகம்பை தூக்கி கொண்டு ஒடினார்

“கொல்லுய்யா.என்னை அடிச்சி கொல்லு.உனக்குச் சேவல் தான் முக்கியம்“ எனக் கத்தினாள் காயாம்புவின் மனைவி.வெறி அடங்காதவர் போல அவளை அடித்துப் போட்டார் காயாம்பு.அதில் படுத்தவள் தான் பிறகு எழுந்து கொள்ளவேயில்லை.ஊரே அதைப் பற்றிப் பேசிக கொண்டிருந்தது.

நடந்தவற்றை மாரிச்சாமி நினைத்தபடியே காயாம்புவை பார்த்துக் கொண்டிருந்தான்.அவர் நடுங்கிய குரலில் சொன்னார்

“அதுவந்து.அவளுக்கு என் சேவலை பிடிக்கலை.அதான் விஷம்வச்சி கொன்னுட்டா.ஆனா அதுல கருப்பன் சாகலை,என் கருப்பனை யாரும் கொல்லமுடியாது “

“ஆமாம் மாமா.கருப்பன் சாகலை .ஆனா அந்தக் கருப்பனை கழுத்தை அறுத்து தெருவுல போட்டது நீங்க தானே மாமா.அதுவும் மறந்து போச்சா “

“ஆமாம் நான் தான் கொன்னேன்லே.இந்தக் கையாலே தானே கொன்னேன் “எனச்சொல்லும் போது அவரது குரல் தழுதழுத்த்து

“அம்புட்டு ஆசையா சேவலை வளத்துட்டு ஏன் மாமா கொன்னீங்க “எனக்கேட்டான் மாரிச்சாமி

“மாப்ளே.அது வெறும் சேவல்இல்லை. கொலைச்சேவல்.பலிவாங்குறதுக்குன்னே பிறந்தது. அந்தச் சேவலு ஒரு பிசாசு மாதிரி என்னைப் பிடிச்சிகிருச்சி.அதுக்காக எதையும் செய்ற நிலைக்குப் போயிட்டேன்.பொண்டாட்டி பிள்ளை எல்லாம் போயிட்டாங்க.கடைசியில் என்னை ஒண்டி கட்டையா ஆக்கிருச்சி மாப்ளே..ஒருநாள் சேவலை உத்துபாத்துகிட்டு இருந்தேன்.கண்ணுல பரிகாசம் தெரிஞ்சது. என்னை அழிக்கிறதுக்குத் தான் முத்திருளன் அந்தச் சேவலை தயார் பண்ணி கொண்டுவந்து கொடுத்திருக்கான் சேவலை சண்டைக்கு விடுறது வெறும் விளையாட்டு இல்லை.அது ஒரு வெறி.ஒரு சுகம்.பைத்தியக்காரதனம். இனிமே என்ன மிச்சமிருக்குனு ஆத்திரத்தில் என் கையாலே கருப்பன் கழுத்தை திருகிப்போட்டேன்.அவனை நான் தான் கொன்னேன். “என்றபடியே அவர் தன்னை மீறி அழத்துவங்கினார்

இருட்டில் நின்றபடியே வயதான காயாம்பு அழுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொணடிருந்தான் மாரிச்சாமி.பிறகு அவராக ஆசுவாசம் கொண்டது கேட்டான்

“இப்பவும் ஏன்மாமா அதையே நினைச்சிகிட்டு இருக்கீங்க “

“என்னாலே முடியலை மாப்ளே.கருப்பன் என் கூடவே இருக்கிறது மாதிரியே தோணுது.அதை யாராவது திருடிகிட்டு போயிருவாங்கன்னு பயமா இருக்கு.எனக்குக் கருப்பன் வேணும்.அதைச் சண்டைக்கு விடணும்.சேவற்கட்டு திரும்ப நடக்கணும்.என் சேவல் ஜெயிக்கணும். “

“அந்தக் காலம் எல்லாம் எப்பவோ முடிஞ்சி போச்சி.இப்போ யார் கிட்டயும் சேவலும் கிடையாது.சேவற்கட்டும் நடக்குறதுல்லே.நீங்க போயி வீட்ல முடங்கிக் கிடங்க“ என்றபடியே அவன் டார்ச்லைட்டை உயர்த்திக் காட்டினான்.அவர் தலைகவிழ்ந்தபடியே எழுந்து நடக்கத் துவங்கினார்

அவர்கள் கண்மாய்பாதை வழியாகவே நடந்து வந்தார்கள்.வழி எல்லாம் காயாம்பு தன் கற்பனைச்சேவலுடன் ஏதோ பேசிக் கொண்டுவருவது போலச் சப்தம் கேட்டது

ஊரின் நுழைவாயில் வரும்போது காயாம்பு ஆற்றாமையான குரலில் கேட்டார்

“சேவலை வாங்க வந்த ஆட்கள் போயிருப்பாங்களா.பயமா இருக்கு மாப்ளே “

“போயிருப்பாங்க.நீங்க வீட்டுக்கு போயி தூங்குங்க“ என்றான் மாரிச்சாமி

“சேவலை ரொம்ப நேரமா கடகப்பொட்டிக்குள்ளே வச்சிருந்தேன். சொணங்கி போயிருச்சி.அதை ஒட விட்டு பழக்கணும்.இல்லேண்ணா சொகம் கண்டுரும்“ எனத் தனக்குத் தானே பேசியபடியே நடந்தார் காயாம்பு

தனது வீட்டிற்குப் போவதற்காகத் தெருவில் திரும்பிய போது மாரிச்சாமி பார்த்தான்.

ஒடும் சேவலை துரத்தி ஒடுகிறவர் தாவி ஒடிக் கொண்டிருந்தார் காயாம்பு.

கண்ணுக்குத் தெரியாத சேவல் ஒன்று வீதியில் தனியே ஒடிக்கொண்டிருந்தது

••••

0Shares
0