ஹயாவோ மியாசாகியின் தி பாய் அண்ட் தி ஹெரான் அனிமேஷன் படத்தின் உருவாக்கம் குறித்த ஆவணப்படமே Hayao Miyazaki and the Heron. இரண்டு மணி நேரம் ஒடக்கூடியது.
2013 இல் மியாசாகி திரையுலகிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவை அறிவித்தார். அவர் இப்படி அறிவிப்பது புதிதில்லை. திரும்பவும் புதிய படம் ஒன்றைத் துவங்கிவிடுவார் என்று அவரது நண்பர்கள் கேலி செய்தார்கள். அதை உண்மையாக்குவது போலவே சில மாதங்களுக்குப் பின்பாக ஹெரான் கதையினைப் படமாக்கும் ஆசையை வெளிப்படுத்தினார் மியாசாகி.
அதிலிருந்து துவங்கி பத்து ஆண்டுகள் இந்தக் கனவு எப்படி நனவாகிறது என்பதை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள்
மியாசாகியின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கோவிட் தொடர்பான தாமதங்களை எதிர்கொண்டது, படத்தின் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் என அவரது வாழ்வையும் சினிமாவையும் ஒரு சேர ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் மியாசாகி பயணிக்கிறார், மேலும் அவற்றைப் பிரிக்கும் கோட்டினை அழித்தும் விடுகிறார். வானில் இடி இடிப்பதைக் காணும் போது இறந்து போன தனது நண்பன் இடியாக மாறிவிட்டதாகச் சொல்கிறார் மியாசாகி. இப்படி அன்றாட வாழ்க்கையைக் கற்பனையால் அளவிடும் அவரது பார்வைகளும் செயல்பாடுகளும் புதிதாக இருக்கின்றன.
எண்பது வயதிலும் சினிமாவின் மீது மியாசாகி கொண்டுள்ள ஈடுபாடு வியப்பளிக்கிறது. அவரது ஸ்டுடியோ கிப்லி செயல்படும்விதம். அங்குள்ள இளம் வரைகலை ஓவியர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது.
அனிமேஷன் படங்கள் என்பது வெறும் கற்பனையில்லை. அதற்குள் சொந்த வாழ்வின் பிரதிபலிப்புகள் மறைந்திருக்கின்றன என்பதை இப்படம் சிறப்பாக உணர்த்துகிறது.
ஒரு திரைக்கதையுடன் தொடங்குவதற்குப் பதிலாக, மியாசாகி ஒரு ஓவியத்துடன் தனது படத்தைத் துவங்குகிறார், பின்னர் படத்திற்கான முழுமையான ஸ்டோரி போர்டுகளை உருவாக்கி, அதைக் கொண்டு இறுதி திரைவடிவத்தை உருவாக்குகிறார். கையால் வரைந்த பின்பே கணிணி உதவி கொண்டு படமாக்குகிறார். படம் அவரது பணி நெறிமுறைகளைப் துல்லியமாக விளக்குகிறது. அனிமேஷன் படத்தில் ஐந்து வினாடிகள் இடம்பெறும் காட்சியை முடிக்க அவர்களுக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது.
சிறுவயதிலிருந்தே மியாசாகி தாயின் அன்பிற்காக ஏங்கியவர். நோய்வாய்ப்பட்ட அவர் 10 வயதுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர் கணித்தார்கள். ஆனால் எப்படியோ பிழைத்துக்கொண்டார். தனது வாழ்விற்கான நோக்கமே ஓவியம் வரைவது தான் என்று நம்பினார். அந்த எண்ணம் அவரது எண்பது வயதிலும் அப்படியே உறுதியாக வெளிப்படுகிறது.
ஒரு தாவரம் வளர்வது போல நிதானமாக, கண்ணுக்குத் தெரியாமல் தி பாய் அண்ட் தி ஹெரான் படமும் வளர்க்கிறது. இதற்கிடையில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இறந்து போகிறார்கள். உடன் பணியாற்றிய கலைஞர்கள் இறந்து போகிறார்கள். நீண்டகாலம் வாழ்வதன் வேதனையை அவர் அனுபவிக்கிறார். இத் துயரம் அவரை முடக்கிப் போடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு மீண்டும் சினிமாவிற்குள் கரைந்து போகிறார்.
அவரது மேஜையின் அடியில் வரைந்து திருப்தியில்லாமல் கிழித்துப் போட்ட காகிதங்கள் குவிந்துகிடக்கின்றன. அது வெறும் சலிப்பில்லை. முழு திருப்தி வராமல் எதையும் செய்யக்கூடாது என்பதன் அடையாளம்
படம் முழுவதும் மியாசாகியின் உதட்டில் ஒரு சிகரெட் இருக்கிறது. பென்சிலும் சிகரெட்டும் தான் அவரது பிரிக்க முடியாத பொருட்கள். அவரது பிறந்தநாளைச் சிறுவர்கள் ஒன்று கூடிக் கொண்டாடுகிறார்கள். எண்பது வயதிலும் நல்ல ஆரோக்கியத்துடன் உடல்வலிமையோடு இருக்கிறார். விறகு உடைக்கும் காட்சிகளில் அவரது உடல்வலிமை சிறப்பாக வெளிப்படுகிறது. அவரது வேகமான நடைப்பயிற்சி மற்றும் அந்திச் சூரியனை ரசிக்கும் மனநிலை, வெந்நீர் குளியல், நண்பர்களுடன் பயணம் செய்வது என உடல் அளவிலும் மனதளவிலும் அவர் உற்சாகமாகவே இருக்கிறார். ஆனாலும் மரணம் குறித்த எண்ணம் அவரை ஆட்டுவிக்கிறது.
மியாசாகி மற்றும் அவரது மறைந்த நண்பர் இசாவோ தகாஹாட்டாவிற்கும் இடையேயான உறவை படம் ஆழமாக ஆராய்கிறது
இசாவோவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடுகிறார். அவரோடு பழகிய இனிய நாட்களை நினைவு கொள்கிறார். இருவரும் ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். ஒன்றாகத் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார்கள். தனது நெருக்கமான நண்பன் என்று அவரைக் குறிப்பிடுகிறார். இந்த நினைவுகளைத் திரட்டி படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றாக மியாசாகி மாற்றுகிறார்.
தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தின் பல காட்சிகள் அவரது சொந்த வாழ்வில் நடந்தவை. அதைப் புரிந்து கொள்வதற்கான கையேடு போல இந்த ஆவணப்படம் உள்ளது.
அவருடன் நீண்டகாலமாகப் பணியாற்றும் தயாரிப்பாளர் மற்றும் ஓவியர்களின் துணையும் நட்பும் படத்தில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி பாய் அண்ட் தி ஹெரான் படம் தியேட்டர்களில் வெளியாகும் நாளின் போதான அவரது மனநிலை. ஆஸ்கார் விருதை வென்ற தருணம். தொலைக்காட்சியில் அதை நேரடியாகக் கூட மியாசாகி காண்பதில்லை. அறிவிப்பு வரும் போது அவர் கழிப்பறையில் இருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற செய்தி அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறது. தனது வேலை முடிந்துவிட்டது என்பதைப் போலச் சிரிக்கிறார்.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு மூன்றாம் முறையாகத் தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தைப் பார்த்தேன். இப்போது படம் மிகவும் சோகமாகவும் ஆழ்ந்த தத்துவார்த்த வெளிப்பாடு கொண்ட படமாகவும் உணர்ந்தேன். முதன்முறையாக இப்படத்தை ஐமாக்ஸ் திரையில் பார்த்த போது அடைந்த மகிழ்ச்சியை இப்போது அடைய முடியவில்லை. மாறாக ஒரு கலைஞன் தனது சொந்தவாழ்வின் துயரங்களை எப்படிக் கலையாக உருமாற்றுகிறான். எப்போது அது உன்னதமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
படத்தின் ஒரு காட்சியில் அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியங்களைக் கொண்டு வந்து காட்டி வியக்கிறார்கள். ஆனால் மியாசாகியிடம் அந்த வியப்பு இல்லை. அவருக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் பணியின் மீது மட்டுமே கவனம் குவிந்திருக்கிறது. தான் விரும்பியபடி கதாபாத்திரத்தை உருவாக்கப் போராடுகிறார். தூக்கத்திலும் அதே சிந்தனையில் உழலுகிறார். அவரது விருப்பத்தை உடன் பணியாற்றுகிறவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிறப்பாகத் துணை செய்கிறார்கள்.
படத்தின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தடைகள் குறித்த என மியாசாகி வருந்தும் போது அவரது தோற்றத்தை மாற்றினால் புறஉலகிலும் மாற்றம் வந்துவிடும் என்கிறார் நண்பர். உடனே தனது தாடி, மீசையைச் சவரம் செய்துவிட்டு புதிய தோற்றத்தில் வருகிறார் மியாசாகி. அந்த முகத்தில் முதுமையின் ரேகைகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொள்கிறார் மியாசாகி. அது தான் அவரது வெற்றியின் அடையாளம்.
மேதைகளுக்கு ஒய்வு கிடையாது. அவர்கள் தனது முந்தைய படைப்பை விடவும் சிறப்பான ஒன்றை செய்துவிட முடியும் எனப் போராடுகிறார்கள். முடிவில் வெற்றியும் பெறுகிறார்கள். அதன் சாட்சியமே மியாசாகி.
மியாசாகியின் 80 வயதை நாம் பார்க்கிறோம். அவரது கைகள் நடுங்கத் தொடங்குகின்றன. ஆனால் அவர் ஒய்வை விரும்பவில்லை. புதிய முயற்சிகளில் இறங்குகிறார். வேலையே அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
தி பாய் அண்ட் தி ஹெரான் இசையமைப்பாளர் கென்ஷி யோனேசு தனது சிறுவயதிலிருந்து ஆதர்ச நாயகனாக உள்ள மியாசாகியை சந்தித்து உரையாடும் போது அவரை ஒரு துருவ நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார். அது உண்மையான பாராட்டு.
குழந்தைகளுடன் விளையாடும் போது மியாசாகி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். மாறும் பருவகாலங்களை ரசிப்பது. தனது அலுவலகத்தில் வளர்ந்து நிற்கும் மரத்தை வியந்து பார்ப்பது, கொரோனா காலத்தில் யாரும் இல்லாத விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது. மழைக்குள் குடையோடு வேகமாக நடப்பது என அழகான தருணங்களால் நிரம்பியிருக்கிறது இந்த ஆவணப்படம்.
••