கற்பனையும் நிஜமும்

Journalism is the profession that most resembles boxing, with the advantage that the typewriter always wins and the disadvantage that you’re not allowed to throw in the towel.

– Gabriel García Márquez.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய Gobo ஆவணப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மார்க்வெஸின் அம்மா அவரது கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் யார் என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடுகிறார். அது கற்பனையில் எழுதியது என்று மார்க்வெஸ் சொல்வதை அம்மா ஒத்துக் கொள்வதேயில்லை.

இதைப்பற்றித் தனது நேர்காணலில் மார்க்வெஸ் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்

“நிஜத்தோடு கற்பனை கலந்து நான் கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். அவரோ கதையிலிருந்து நிஜ மனிதர்களை மறு உருவாக்கம் செய்துவிடுகிறார்“

மார்க்வெஸ் சொல்வது நிஜம். தனது சொந்த வாழ்க்கையைத் தான் அவர் எழுத்திற்கான கச்சாப் பொருளாகக் கொண்டிருந்தார். அவரது முக்கிய சிறுகதைகள் அவரது வாழ்விலிருந்து உருவாக்கபட்டதே. இதனை அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சொந்த வாழ்க்கையினை விந்தையான நிகழ்வுகளுடன், துல்லியமான நினைவுகளுடன் எழுதுகிறார் என்பதே அவரது எழுத்தின் விசேசம்.

சொந்த வாழ்க்கை என்பதே சமூக பண்பாட்டு நிகழ்வுகளும் வரலாறும் சமய நம்பிக்கைகளும் ரகசிய ஆசைகளும் விநோத கனவுகளும் கொண்டது தான் என்பதையும் உணர்ந்திருக்கிறார். தாத்தா பாட்டியால் வளர்க்கபட்டவர்கள் கதைகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. மார்க்வெஸ் அப்படி வளர்க்கப்பட்டவரே.

மார்க்வெஸின் நாவல்கள் பேசப்பட்ட அளவிற்கு அவரது கட்டுரைகள் பேசப்படவில்லை. பத்திரிக்கையாளர் என்பதால் நிறையச் செய்திக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஹெமிங்வேயிற்கும் இது போன்றே நடந்தது. அன்றாடம் ஒரு செய்திக்கட்டுரை எழுதிக் கொடுக்க வேண்டிய கெடு ஹெமிங்வேயிற்கு இருந்தது. நிறைய எழுதித் தள்ளியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளை இன்று வாசிக்கும் போது புனைவிற்கான கச்சிதமான வடிவத்தையும் நேரடியாகச் சொல்லும் குரலையும் செய்திக்கட்டுரைகள் எழுதுவதன் வழியே அவர் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.  அதே பயிற்சி தான் மார்க்வெஸிற்கும் நடந்திருக்கிறது. அவரது புகழ்பெற்ற நாவலுக்கான விதை. அவரது பல்வேறு சிறுகதைகளுக்கான முக்கிய நிகழ்வுகள் செய்திகளாக எழுதப்பட்டிருக்கின்றன.

The Scandal of the Century and other writings தொகுப்பில் அவரது ஐம்பது செய்திக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மார்க்வெஸ் நிறையச் சினிமா விமர்சனங்களை எழுதியிருக்கிறார். அது போலவே நகரில் நடக்கும் குற்ற நிகழ்வுகள் குறித்தும் சர்வதேச அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்தும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

 உண்மையான நிகழ்வு ஒன்றை விவரித்துவிட்டு அதற்கு இணையாக கற்பனையான இன்னொரு நிகழ்வை எழுதுவதன் வழியே அவர் செய்தியைப் புனைகதையாக மாற்றிவிடும் சுவாரஸ்யத்தைக் காண முடிகிறது.

நோபல் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு Cambio என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கிப் புதிய ஆசிரியர் குழுவோடு நடத்தியிருக்கிறார். அவரது கடைசி நாட்கள் வரை அதில் பத்திக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இது போலவே 1994ல் Gabriel García Márquez Foundation என்ற அமைப்பைத் துவங்கி இளம் பத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி தரவும் பத்திரிக்கையாளர்களின் நலன்களைப் பேணவும் முயன்றிருக்கிறார். மார்க்வெஸின் மரணத்திற்குப் பிறகு கொலம்பிய அரசு அவரது நினைவாகக் கோபோ மையம் ஒன்றை உருவாக்கிய அதன் வழி பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

 மார்க்வெஸின் கதைகளைப் போலவே அவரது செய்திக்கட்டுரைகளின் கடைசிவரியும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது. “Operator, connect me to public opinion.” என்பது ஒரு கட்டுரையின் கடைசி வரி.

.An Understandable Mistake கட்டுரை அவரது சிறுகதை போலவே துவங்குகிறது. போதையில் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்துக் காயமடைந்தவனைப் பற்றிய அக் கட்டுரையில் அவனது மிதமிஞ்சிய குடியும் தலைவலியும் குழப்பமான மனநிலையும் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. தான் எங்கே இருக்கிறோம். எனத் தெரியாத குழப்பத்தில் ஹோட்டல் அறை எப்படி இன்னொரு ஊருக்கு மாறியிருக்கும் என்று யோசிக்கிறான். கட்டுரையின் கடைசிபத்தியில் இடம் பெற்றுள்ள மீனைப் பற்றிய செய்தியை  கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டு போய்விடுகிறது

A Man Arrives in the Rain என்ற அவரது கதையின் தலைப்பு அப்படியே ஹெமிங்வேயை நினைவுபடுத்துகிறது.

ஏதன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்பட்டது தான் முதல் பரபரப்பு செய்தி என்கிறார் மார்க்வெஸ். இனி ஆதாமும் ஏவாளும் என்ன செய்யப்போகிறார்கள். எது அவர்களை வெளியேற்றக் காரணமாக இருந்தது. விலக்கப்பட்ட ஆப்பிளின் சிறப்பு என்ன என்று செய்தி பரபரப்பாக வெளியாகியிருக்கக் கூடும். இந்தச் செய்தி நடந்து எவ்வளவு காலம் கடந்து போயிருக்கிறது. அதற்குப் பதில் சொல்வது கடினம் என்று கட்டுரையில் எழுதுகிறார்

நகைச்சுவையாகத் தோன்றினாலும் செய்தியின் உலகம் இப்படித்தானே தோன்றியிருக்கும்

போப் விடுமுறைக்குச் சென்ற பயணம் பற்றிய கட்டுரை தனித்துவமான வடிவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. அதில் கேமிரா பின்தொட்ர்வது போலவே போப்பினை எழுத்தில் பின்தொடருகிறார். கச்சிதமான சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரையது.

இது போலவே சோபியா லாரனின் திருமணம் பற்றிய செய்திக்கட்டுரையில் அதை ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிகழ்வோடு இணைத்து எழுதியிருப்பது சிறப்பு.

தனது நாவல்களைப் போலவே காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதும் முறையைக் கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறார். துல்லியமான நேரவிபரம் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளை எழுதி அவற்றை ஒன்றோடு ஒன்று வேறுபடுத்தியும் இணைத்தும் காட்டும் விதம். வாசகர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் குறிப்புகள். மற்றும் நகைச்சுவையான விவரிப்பு, இந்தக் கட்டுரைகளைப் புனைவிற்கு நிகராக மாற்றுகின்றன.

இலக்கியம் சார்ந்து மார்க்வெஸ் மிக குறைவான கட்டுரைகளையே எழுதியிருக்கிறார். அவரது வாசிப்பு மற்றும் ஆதர்சமான எழுத்தாளர்கள் பற்றி நேர்காணலில் தான் குறிப்பிடுகிறார். Gabriel Garcia Marquez: The Last Interview நல்லதொரு தொகுப்பு.

தலைப்புக் கட்டுரை மிக விரிவானது. ஒரு இளம்பெண் காணாமல் போன செய்தியிலிருந்து துவங்கி ஒரு குற்றத்தின் முன்பின்னாக நகர்ந்து அதற்கு காரணமாக இருந்த நிகழ்வுகள் மனிதர்கள் அனுமானங்களை கட்டுரை விவரிக்கிறது. ஸ்பானிய சினிமா ஒன்றைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் கட்டுரையது.

0Shares
0