கலையின் மீதான பசி

ஃபிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் சிறுகதையில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு மனிதன் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறான். அவனொரு பட்டினிக்கலைஞன். அதாவது பணம் செலுத்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகப் பட்டினி கிடப்பவன்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவனைப் போன்ற பட்டினிக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் காட்சி நடத்தியிருக்கிறார்கள். பொதுவாகத் திருவிழா, கண்காட்சியிலோ, அல்லது அரங்கம் ஒன்றிலோ இவர்களின் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்குக் கட்டணம் உண்டு.

இவர்கள் அதிகப் பட்சம் நாற்பது நாட்கள் வரை பட்டினி கிடப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்காகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். இப்படியான பட்டினிக்கலைஞர்களில் ஒருவர் கூடப் பெண் கிடையாது.

பட்டினிகிடப்பவன் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்பதே நிஜம். அவன் கடவுளுடன் பகடையாடுகிறான் என்றே பார்வையாளர்கள் நினைத்தார்கள். தொடர்ந்து பட்டினி கிடந்து சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். சிலர் ஐந்தாறு நாட்களில் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு வெளியேறுவதும் நடந்திருக்கிறது.

பட்டினிக்கலைஞர்களுக்கான வரவேற்பு குறைந்து போன காலத்தைக் காஃப்காவின் கதை விவரிக்கிறது.

கதையின் முதல்வரியிலே இதைக் காஃப்கா குறிப்பிட்டுவிடுகிறார். கதையில் பட்டினிக்கலைஞன் சர்க்கஸ் ஒன்றின் கூடாரத்திற்கும் விலங்குகள் உள்ள பகுதிக்கும் இடையே ஒரு கூண்டில் அடைக்கப்படுகிறான். அவனை வேடிக்கை பார்க்க சிறுவர்களும் பெரியவர்களும் திரண்டிருக்கிறார்கள்.

அவன் ரகசியமாக எதையேனும் சாப்பிட்டுவிடுகிறானா என்று கண்காணிப்பதற்காகப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் நியமிக்கபடுகிறார்கள்.

காஃப்காவின் கதையில் அப்படித் தேர்வு செய்யப்படுகிறவர்கள் கசாப்பு கடைக்காரர்கள். பட்டினிக்கலைஞனை கண்காணிக்க மூன்று கசாப்புகடைக்கார்ர்கள் காத்திருக்கிறார்கள் என்பதில் அவரது கேலி வெளிப்படுகிறது.

உண்மையில் அது கேலி தானா. உலகம் எப்போதுமே இப்படித் தானே நடந்து கொள்கிறது. இரக்கமற்றவர்கள் முன்னால் தானே கருணைக்கான வேண்டுதல் நடைபெறுகிறது. கசாப்புக்கடையாளர்களின் பெருந்தன்மையை எப்படிப் புரிந்து கொள்வது.

பட்டினிக்கலைஞர்கள் தன்னை வருத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையாளர்களை ஏமாற்றுவதில்லை. மோசடி செய்வதில்லை. மாறாக அவர்கள் உடலை வசப்படுத்துகிறார்கள். சிங்கத்தைச் சர்க்கஸில் பழக்குவது போல உடலைத் தன்கட்டுக்குள் கொண்டுவர பழக்குகிறார்கள். உடல் எளிதானதில்லை. அது எழுப்பும் குரலை அவர்கள் பட்டினி எனும் சவுக்கை கொண்டு அடக்கிவிடுகிறார்கள் சிங்கம் பணிவதைப் போல உடலும் பணிந்துவிடுகிறது. நாற்பது நாட்கள் முடிந்த பிறகும் பட்டினிக்கலைஞன் உண்ணாவிரதத்தை தொடரவே விரும்புகிறான். நிர்வாகி அதை அனுமதிப்பதில்லை.

கதையில் வரும் பட்டினிக்கலைஞன் உண்ணாவிரத்தை ஒரு கலையாகக் கருதுகிறான். அவன் பார்வையாளர்களின் நம்பிக்கையை மதிக்கிறான். அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான்.

பட்டினிக்கலைஞனுக்குக் காவலாக இருப்பவர்கள் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீ ரகசியமாகச் சாப்பிடலாம் என்பது போலச் சீட்டு விளையாடுகிறார்கள். அச்செயல் அவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. கண்காணிப்பை விடவும் இச் செயல் கேவலமானது என நினைக்கிறான்.

அவன் எந்தச் சூழ்நிலையிலும், வலுக்கட்டாயமாக வற்புறுத்தினாலும், சிறிதளவு கூடச் சாப்பிடமாட்டான் என்ற நம்பிக்கையை அவர்கள் அவமதிப்பதாகவே நினைக்கிறான்.

இரவெல்லாம் அவனைக் கண்காணிக்கும் அந்தக் காவலர்கள் களைப்பில் அசதியில் உணவருந்துவதை அவன் காணுகிறான். அப்போது கூட அவனுக்குச் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதில்லை. அவனுக்குப் பிடித்த உணவு என்ற ஒன்றே கிடையாது.

அவனைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் மாறிவிட்டது. ஆனால் அவன் மாறவில்லை. அவன் தனது பட்டினியைக் கலையாக்க முடியும் என நம்புகிறான். உலகம் பட்டினிகிடப்பவனை ஒரு போதும் கலைஞனாகக் கருதாது. அவனது பட்டினியைப் புரிந்து கொள்ளாது. பட்டினியை கலையாக்குவதன் மூலம் அவன் மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் தேடுகிறான், கூடவே வருவாயையும். நடனம் போல இதுவும் உடலால் நிகழ்த்தப்படும் கலை என்றே நினைக்கிறான்.

ஃபிரான்ஸ் காஃப்காவின் கதைகளில் பசி முக்கியமான கருப்பொருளாக விளங்குகிறது. காஃப்கா தன்னையே கதையில் வரும் பட்டினிக்கலைஞனாக மாற்றியிருக்கிறார் என்றும் தோன்றுகிறது.

காஃப்காவின் கதை பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு அடுக்கு கூண்டில் இருப்பவனுக்கும் வேடிக்கை பார்க்கும் உலகிற்குமானது. வரலாற்றில் இந்தக் கூண்டு ஆஷ்விட்ஸ் போன்ற நாஜி முகாம்களாக உருமாறியதைக் காணுகிறோம்.

இன்னொரு அடுக்கில் பசிக்கும் உணவிற்குமான உறவை பற்றியது. செபாஸ்டியன் லெலியோ இயக்கிய தி வொண்டர் திரைப்படத்தில் அயர்லாந்தின் கிராமப்புறம் ஒன்றில் ஒரு சிறுமி பல நாட்களாக சாப்பிடாமலே உயிர்வாழுகிறாள். அவள் மீது சந்தேகம் கொள்ளும் ஊர்மக்கள் அதனைக் கண்டறிய ஒரு செவிலியை அனுப்புகிறார்கள். அந்தக் கதை பசியைப் பற்றிய வேறு பார்வையை நமக்கு உருவாக்குகிறது. காஃப்காவிடமும் இது போன்ற அணுகுமுறையே வெளிப்படுகிறது.

மூன்றாவது தளத்தில் பட்டினி கிடப்பவனை வேடிக்கை பார்க்கும் சிறுவர்களைப் பற்றியது. அவர்களுக்கு இது என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தும்.

நான்காவது இந்த நிகழ்ச்சியை நடத்துகிற ஏற்பாட்டாளன், அவனது திட்டமிடல். அவன் எடுக்கும் புகைப்படங்கள். அவனது விளம்பரங்கள். சோர்வில்லாத படி இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் தந்திரம் பற்றியது. அவன் அடுத்தவனின் துயரை கொண்டாட்டமாக மாற்றுகிறான் . அவனுக்குப் பட்டினி என்பது வருவாய்க்கான திறவுகோல்.

ஐந்தாவது அடுக்கில் முக்கியமானது நீண்ட நாட்களாகப் பட்டினிகிடந்தவன் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சாப்பிட அழைக்கபடும் போது மயக்கமடைவது. அந்தப் பகுதி வாசிப்பில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உலர்ந்த இலை போலாகிவிட்ட பட்டினிக்கலைஞனின் கை எலும்புகளை நம்மால் காண முடிகிறது. அவனைச் சுற்றிலும் கேட்கும் உரத்த இசை. உற்சாகக் கூச்சல்கள் எத்தனை போலியானது என்று நன்றாக உணர முடிகிறது.

ஆறாவது அடுக்கில் பட்டினி கலைஞனுக்குப் பதிலாக ஒரு சிறுத்தை கூண்டில் அடைக்கபடுவதும், கூட்டம் அதனை ரசிப்பதும் பற்றியது.

விலங்கை விடவும் சமூகம் மனிதனை கீழாக நடத்துகிறது. அவனைக் காட்சிப்பொருளாகி அவனது கண்ணீரை, வேதனையை, அவலத்தைக் கைதட்டி ரசித்துக் கொண்டாடுகிறது.

பட்டினி எப்படிக் கலையாகும். அப்படிப் பட்டினி வேடிக்கை பார்க்கபடுகிறது என்றால் அந்தச் சமூகம் மோசமானதில்லையா. அடுத்தவரின் பசி என்பது கேலிக்குரிய விஷயமா.

காஃப்கா இந்தக் கேள்விகளை எழுப்புவதில்லை. வாசிக்கும் நம்மை எழுப்பச் செய்கிறார்.

கதையில் வரும் பட்டினிக்கலைஞனுக்குப் பெயர் கிடையாது. அவன் ஒரு குறியீடு. அது போலப் பட்டினி கிடப்பது வயிற்றுப் பிரச்சனையாக மட்டுமின்றி. அங்கீகாரம், புகழ், வருவாய் இன்மை என்றும் புரிந்து கொள்ளலாம். தான் மற்றவர்களைப் போலக் கிடையாது என்று ஒரு கலைஞன் சமூகத்திற்கு நிரூபிக்க முயற்சிக்கிறான். அதன் ஒரு வழி தான் பட்டினிக்கலைஞனாவது.

மக்கள் ஏன் கலைஞர்களைச் சந்தேகப்படுகிறார்கள். கலையை உண்மையானதில்லை என்று நினைக்கிறார்கள். தன்னை வருத்திக் கொள்ளாத கலைஞர்கள் என்று உலகில் எவரேனும் இருக்கிறார்களா.

ஃபிரான்ஸ் காஃப்காவின் சிறுகதை 1922 ஆம் ஆண்டு வெளியானது. அவர் பட்டினிக் கலைஞரான ஜியோவானி சுசியால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதினார் என்கிறார்கள்.

காஃப்காவின் கதை வெளியான பிறகு, பெர்லினில் பட்டினி கலைஞர்கள் அதிகமானார்கள். 1926 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆறு பட்டினிக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெரிய உணவகங்களில் இது போலக் கூண்டுகளில் பசிமறந்தவர்களாக அமர்ந்து பட்டினிக்கலைஞர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.

பட்டினிக்கலைஞன் உண்ணாவிரதம் இருப்பதை எளிதான விஷயம் என்று சொல்கிறான். அது தன்னை வருத்திக் கொள்வது எளிது என்பதையே உணர்த்துகிறது.

அவன் துன்பத்தைக் கலையாக்க மாற்றுகிறான், உலகிடம் பகிர்ந்து கொள்கிறான். உலகம் பிறர் துயர்களைக் கலையின் வடிவில் அறிந்து கொள்கிறது. துன்பத்தின் ஒருதுளி கூடக் கலக்காத கலை என்று எதுவுமில்லை. துன்பம் என்பது ஒரு சுடர். விநோத வெளிச்சம்.

பொழுதுபோக்கின் மீதான அளவில்லாத மோகம் மற்றும் கலைத்தன்மையை நிராகரிக்கும் போக்கின் அடையாளமே கூண்டில் இடம்பெற்ற சிறுத்தை. மக்களுக்கு அது பயங்கரமான புதிய பொழுதுபோக்காக மாறுகிறது. பின்னொரு நாள் அதுவும்கைவிடப்பட்டுப் பட்டினிக்கலைஞனின் நிலையை அடையும். அப்போது இன்னொரு புதிய பொழுதுபோக்கிற்காக மக்கள் காத்திருப்பார்கள்.

இக்கதையில் பட்டினிக்கலைஞன் தான் செய்யும் கலையினை ‘முழுமையாக்க’  பட்டினியால் சாகத் தயாராகிறான். அப்படித்தான் ஃபிரான்ஸ் காஃப்காவின்  சொந்த வாழ்க்கையும் அமைந்திருந்தது.

0Shares
0