கல்லின் கனவு.

மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ (Michelangelo-Infinito) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.

படத்தின் இயக்குனர் Emanuele Imbucci . மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பவர் Enrico Lo Verso.

ஓவியர்களையும் சிற்பிகளையும் பற்றிய திரைப்படங்களை எப்படி இத்தனை கலை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. தோற்றமும் உடையும் நடிப்பும் ஒளிப்பதிவும் அபாரம். இந்தத் திரைப்படம் மைக்கேலாஞ்சலோவின் முக்கியக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டதின் பின்புலத்தையும் அவரது காலகட்டத்தைச் சேர்ந்த சக கலைஞர்களையும், அதிகார நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்துகிறது.

படத்தின் சட்டகம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்கேலாஞ்சலோ கதையை அவரே சொல்வதன் மூலமாகவும் அவரைப் பற்றி ஜார்ஜியோ வசாரி என்கிற எழுத்தாளன் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் துவங்குகிறோம்

கராரா கற்குவாரியில் வேலை செய்யும் மைக்கேலேஞ்சலோ தன்னுடைய சிற்பங்களின் பிறப்பைப் பற்றி நமக்குச் சொல்கிறார். திரைப்படத்தின் மிக நெருக்கமான இப்பகுதியில் கலையின் ஆதாரம் எங்கேயிருந்து உருவாகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. .

படத்தின் துவக்கக் காட்சியில் பளிங்குப்பாறை ஒன்றின் முன்பாக நின்றபடியே தனது சிற்பத்திற்கான கல் அதுதானா எனத் தேர்வு செய்கிறார். அவரது கைகள் கல்லைத் தடவி அதனுள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைக் கண்டறிகின்றன. மைக்கேலாஞ்சலோவின் ஆளுமையைப் படம் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியச் சிற்பங்களுக்கும் ஐரோப்பியச் சிற்பங்களுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. இந்தியச் சிற்பங்களில் மனித உடற்கட்டு அப்படியே சித்தரிக்கப்படுவதில்லை. மேலும் சிலையின் நளினமும் பாவமும் முத்திரைகள் அரூப வெளிப்பாடும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஐரோப்பியச் சிலைகள் பிரம்மாண்டத்தை முதன்மையாகக் கொண்டவை. துல்லியம் தான் அங்கே கலையின் அளவு கோல். பொதுவான மனிதனின் பாலுறுப்புகளை இந்திய சிற்பங்கள் சித்தரிப்பதில்லை. காமத்தை விளக்கும் சிற்பத்தொகுதிகளில் மட்டுமே அவற்றைக் காண முடியும். இந்தியச் சிற்பிகள் கல்லில் கேட்கும் நாதத்தின் மூலம்தான் சிற்பங்களைச் செய்வதற்கு ஏற்ற கற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பாறைகளை ஆண் கல், பெண் கல், அலிக் கல் என்று மூன்றாகப் பிரிக்கிறார்கள். எந்தக் கல்லில் எந்தச் சிற்பம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையிருக்கிறது.

1965ல் வெளியான The Agony and the Ecstasy திரைப்படமும் மைக்கேலாஞ்சலோ பற்றியதே. அப்படத்தை முன்னதாகப் பார்த்திருக்கிறேன். இர்விங் ஸ்டோன் நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டது. இர்விங் ஸ்டோன் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இப்படத்தில் மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பர் சார்ல்டன் ஹெஸ்டன். நாடகீயமான தருணங்களை மட்டுமே இப்படம் முக்கியத்துவப்படுத்தியிருந்தது.

போப் இரண்டாம் ஜூலியஸ் சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிள் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டித்தருமாறு மைக்கலாஞ்சலோவை அழைத்தார்.

ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடி. ஆனால் அதை ஐந்து உதவியாளர்களைக் கொண்டு வரைந்து முடிக்கக் களத்தில் இறங்கினார். அவருடைய முன்கோபம் காரணமாக உதவியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகிப் போனார்கள். முடிவில் ஒற்றை ஆளாக அவரே வேலையைச் செய்ய வேண்டியதாகியது. மின்சாரமில்லாத காலமது. ஆகவே மெழுகுவர்த்தியின் ஒளியில் அவர் பசி மறந்து ஓவியம் வரைந்து கொண்டேயிருந்தார். படுத்துக்கொண்டே ஓவியம் தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களில் பட்டு பார்வை மங்கும் நிலை ஏற்பட்டது.

‘ஆதாமின் பிறப்பு’ என்ற ஓவியம் இன்றும் ஓவிய உலகம் வியந்து போற்றும் கலைப்படைப்பாகும். கடவுளின் நீட்டப்பட்ட விரல் ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக மைக்கலாஞ்சலோ சித்தரித்திருக்கிறார்.

புகழ்பெற்ற பியேட்டா சிலை, டேவிட் சிலை, சிஸ்டின் ஆலய மேற்கூரை ஓவியங்கள் உருவாக்கபட்டதன் பின்புலத்தை மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

புகழ்பெற்ற டேவிட் சிற்பத்தைச் செய்து முடித்துப் பிறகு அதை எங்கே வைப்பது என்ற கேள்வி உருவானது. இடம் மாற்ற செய்ய ஒரு குழுவின் ஆலோசனை கேட்கப்பட்டது. அந்தக்குழுவில் டாவின்சியும் இருந்தார். அவர்கள் சிலையை. இடப்பெயர்ச்சி செய்வதற்கு ஆலோசனை தந்தார்கள். இந்த நிகழ்வு ஒரு ஆவணப்படம் போலவே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பளிங்குக் கல்லில் மைக்கேலாஞ்சலோ செய்துள்ள டேவிட் சிற்பத்தில் நரம்புகள் கூடத் துல்லியமாகத் தெரிகின்றன. பன்னிரண்டு ஆண்டுகள் மனிதனின் உடற்கூறு இயல் மைக்கேலாஞ்சலோ குறித்துப் படித்திருக்கிறார். அதனால் தான், அவரது சிற்பங்கள் மற்றும ஓவியங்களில் மனிதனின் எலும்பு, தசை, நரம்புகள் அத்தனை நிஜமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.. .

கி.பி. 1489ல் இத்தாலியின் ப்ளோரென்ஸ் நகரில் சிற்பம் பயின்று கொண்டிருந்த காலத்தில் மைக்கேலாஞ்சலோவிற்கு வயது பதினாறு. பளிங்கு சிலை ஒன்றை வடித்துக் கொண்டிருந்தார். அது ரோமானியப் புராணக்கதைகளில் வரும் ஃபான் (Faun) என்ற கடவுளின் முகம்.

அந்தக் கலைக்கூடத்திற்கு வந்த ஃப்ளோரன்ஸ் அரசர் லொரென்ஸோ டி’ மெடிஸி இந்தச் சிற்பத்தின் அழகைக் கண்டு வியந்து மைக்கேலாஞ்சலோ வின் கற்பனை எப்படி ஃபானைக் கிழவனாக உருவாக்கியது என்று வியந்து பாராட்டினார்

அத்தோடு கிழவர்களுக்குப் பற்களில் சில விழுந்திருக்குமே என்று ஆலோசனையும் சொன்னார் லொரென்ஸோ.

அந்த ஆலோசனை சரியென்று உணர்ந்த மைக்கேலாஞ்சலோ உடனே தனது உளியை எடுத்து சிலையின் மேல் தாடைப் பல்லை உடைத்துவிட்டார். இப்போது சிலை மேலும் அழகாக உருமாறியது.

இப்படியாகக் கலைநுட்பங்களைத் தான் கற்றுக்கொண்ட நாட்களைப் படத்தில் நினைவுகூறுகிறார் மைக்கேலாஞ்சலோ

மைக்கேலாஞ்சலோ புவோனரோட்டி 1475 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி டஸ்கனியின் அரேஸ்ஸோவிற்கு அருகிலுள்ள கப்ரேஸில் பிறந்தார். ஆறு வயதில், புளோரன்ஸ் இலக்கணப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்

அவர் பள்ளிப்படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அருகிலுள்ள தேவாலயங்களிலிருந்த ஓவியங்களைப் பார்ப்பதும் அதைத் துண்டு காகிதத்தில் படமாக வரைவதுமாக இருந்தார் . குடும்ப வியாபாரத்தில் அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை உணர்ந்த அவரது தந்தை ஓவியரான கிர்லாண்டாயோவிடம் பயிற்சி பெற அனுப்பி வைத்தார். அப்போது அவருக்கு 13 வயது.

பின்பு சிற்பக்கலை படிப்பதற்காக மெடிசி குடும்பத்தின் உதவியைப் பெற்று சிற்பி பெர்டோல்டோ டி ஜியோவானியிடம் சேர்ந்து கற்றார். அந்த நாட்களில் புகழ்பெற்ற தத்துவவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர் களையும் அவர் சந்தித்து உரையாடினார். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதை ஆகிய நான்கு துறைகளிலும் அவர் தனிப்பெருங்கலைஞராக விளங்கினார். மைக்கேலாஞ்சலோ நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். அது தனி நூலாகவும் வெளியாகியிருக்கிறது.

டாவின்சியும் மைக்கேலாஞ்சலோவும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரது பாணியும் வேறுவேறு விதமானவை. மைக்கலாஞ்சலோ திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்தார்.

மைக்கேலாஞ்சலோவின் பியேட்டா சிலை, டேவிட் சிலை, சிஸ்டின் ஆலய மேற்கூரை ஓவியங்கள், சிஸ்டின் ஆலய பலிபீடத்தில் வரையப்பட்ட கடைசித் தீர்ப்புச் சுவரோவியம் போன்றவை இன்றும் நிகரற்ற கலைப்படைப்புகளாகத் திகழுகின்றன.

1504 ல், தனது புகழ்பெற்ற சிற்பமான டேவிட்டினை செய்து முடித்தார். கோலியாத்தை எதிர்த்துப் போராடத் தீர்மானிக்கும் டேவிட் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டார். அதை மனதில் கொண்டே டேவிட்டை மைக்கேலாஞ்சலோ உருவாக்கியிருக்கிறார் .சிலையில் டேவிட்டின் கம்பீரம். உறுதியான உடற்கட்டு. தீர்க்கமான கண்கள் நம்மை வசீகரிக்கின்றன. கால்விரல்களின் வளைவு கூடத் துல்லியமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

புளோரன்சில் இருந்த காலத்தில் மைக்கேலேஞ்சலோ பலரிடமும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை வரைய ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அதில் பல செய்து முடிக்கப்படவில்லை.

1505 ஆம் ஆண்டில், போப் இரண்டாம் ஜூலியஸ்  ஆணையின்படி ஓவியம் தீட்டுவதற்காக அவர் ரோம் நகருக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இந்தப் பணி ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக இதைச் செய்து முடிக்க நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது.

சிஸ்டைன் தேவாலய ஓவியங்களை வரைய அவருக்கு நான்கு ஆண்டுகள் ஆனது. ஐந்நூறு சதுர மீட்டர் அளவு மேற்கூரையில் முன்னூறுக்கும் மேற்பட்ட உருவங்களை வரைந்திருக்கிறார். இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் யாவும் பைபிளின் ஆதியாகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இதன் நாயகர்களில் ஒருவராகவே மைக்கேலாஞ்சலோ கொண்டாடப்படுகிறார். இந்தக் கலைவரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்குச் சரியான அறிமுகத்தைத் தருகிறது இப்படம்.

••

0Shares
0