கழுத்து நீண்ட விளக்கு

புதிய சிறுகதை. 26.11.24

.

மழை பெய்யப்போவது போலக் காற்று வேகமாகியிருந்தது.

சாத்தப்படாத ஜன்னல் காற்றின் வேகத்தில் அடிக்கும் சப்தம் கேட்டு படுக்கையிலிருந்து ராமநாதன் எழுந்து கொண்டார். ஜன்னலை மூடிவிட்டுத் திரும்பும் போது பாதித் திறந்திருந்த பிரபுவின் அறையில் சிரிப்புச் சப்தம் கேட்டது. அறைக் கதவைத் தள்ளி ராமநாதன் உள்ளே எட்டிப் பார்த்தார்.

பிரபு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துச் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாகப் பாடம் படிக்கலாமே. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. ஆனால் இதைச் சொன்னால் இந்த இரவில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விடுவான். பின்பு எப்போது வீடு திரும்புவான் என்று தெரியாது. எங்கே செல்லுகிறான். யாரைச் சந்திக்கிறான் என்றும் தெரியாது.

இந்த நகரில் இருபத்தியாறு வருஷமாக வாழ்கிறார். ஆனால் இப்படி இரவில் சந்திக்கக் கூடிய ஒருவர் கூட அவருக்குக் கிடையாது. ஒருவேளை இதே நகருக்குள் வேறு நகரம் ஒளிந்திருக்கிறதோ என்னவோ.

பிரபு தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.

வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு நீண்டகாலமாகிவிட்டது. பிரபு எப்போதும் தனியே தான் சாப்பிடுகிறான். அதுவும் அவசரமாக, தட்டைக் கவனிக்காமல், இதில் சாப்பிடும் நேரம் யாராவது அவனைப் போனில் அழைத்துவிடுகிறார்கள். பாதிச் சாப்பாட்டில் தட்டிலே கைகழுவிவிடுகிறான். அது என்ன பழக்கம். ஏன் எழுந்து போய் வாஷ்பேஷினில் கைகழுவ வேண்டியது தானே.

குடும்பத்தோடு ஒன்றாகச் சாப்பிட்டு எதையாவது பேசிச் சிரிப்பதில் என்ன பிரச்சனை அவனுக்கு என்று ராமநாதனுக்குப் புரியவில்லை.

பிரபு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாம் வகுப்புப் பரிட்சை தான் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. அதைப்பற்றிய கவலையே அவனுக்கு கிடையாது. பரிட்சையைப் பற்றி மட்டுமில்லை. எதைப்பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை. வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதுமில்லை. இப்படி அவன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் அவருக்கு இருந்தன. அதில் எதையாவது சொன்னால் உடனே கோவித்துக் கொண்டு வெளியே போய்விடுவான். இதற்காக மனைவியை விட்டுப் பிரபுவிடம் கேட்கச் சொல்லுவார்.

“நீ எப்போ தான்டா படிப்பே“ என்று சாந்தியும் குறைபட்டுக் கொள்வாள்.

“உனக்கு மார்க் தானம்மா வாங்கணும். அதெல்லாம் எடுத்துருவேன்“

“எவ்வளவு எடுப்பே. “

“அதெல்லாம் சொல்ல முடியாது“

“எந்தக் காலேஜ்ல சேர்ந்து படிக்கப் போறே“

“அது தெரியாது.. ரிசல்ட் வந்தபிறகு பாத்துகிடலாம்“

“எங்களாலே காசு குடுத்துச் சீட் வாங்க முடியாது பாத்துக்கோ“

“அப்போ படிக்க வைக்காதே.. வீட்ல இருக்கேன்“

“வீட்ல இருந்து என்ன பண்ணுவே“..

“ஐடியா இல்லே. அப்போ பாத்துகிடலாம்“

“இப்படி சொன்னா எப்படிறா.. படிக்கிற புள்ள பேசுற பேச்சா இது“

“என்னாலே இப்படித் தான் பேச முடியும்மா. “ என்று பிரபு பேச்சை முறித்துக் கொண்டுவிடுவான்.

••

படிக்காமல் எப்படி மார்க் வாங்க முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் சித்ராவின் மகள் பிரியதர்ஷினி இரண்டு டியூசன் செல்கிறாள். அதுவும் காலை ஐந்து மணிக்கு எழுந்து மேத்ஸ் படிக்கப் போகிறாள். பிரபு ஒரு நாள் கூடக் காலை ஏழு மணிக்கு முன்னால் எழுந்து அவர் பார்த்ததே கிடையாது. சில நாட்கள் இதற்காகவும் கோவித்துக் கொண்டிருக்கிறார்

“நான் தூங்கினதே லேட்டுப்பா. “

“எதுக்கு லேட்டா தூங்குனே. அவ்வளவு நேரம் படிச்சிட்டு இருந்தியா“

“மேட்ச் பாத்துட்டு இருந்தேன். படிக்கிறதுக்கு எல்லாம் முழிச்சிட்டு இருக்க முடியாதுப்பா“

“வீட்ல இருந்தா நீயா படிக்க மாட்டே. ஏதாவது டியூசன்ல சேர்த்துவிடுறேன்.“

“நான் போக மாட்டேன், அதெல்லாம் வேஸ்ட் “

“அப்புறம் எப்படி மார்க் எடுப்பே“

“அது என் வேலை. “

“உன்னை நான் எப்படி நம்புறது. “

“நீங்க சந்தேகப்பட்டா நான் படிக்க மாட்டேன். பெயில் ஆகிடுவேன் “

“சந்தேகம் இல்லைப்பா.. நீ வீட்ல உட்கார்ந்து படிக்கிறதை நான் ஒரு நாள் கூடப் பாக்கவேயில்லையே. அதான்“

“படிக்கிறதைப் பாக்கணும்னா. லைப்ரரிக்கு போங்க. யாராவது படிச்சிட்டு இருப்பாங்க. உங்களுக்காக நான் படிக்கிற மாதிரி நடிக்க முடியாதுப்பா“ என்றான் பிரபு

அவனுடன் சேர்ந்து கொண்டு சாந்தியும் “அவன் படிப்பான். மார்க் வாங்காட்டி கேளுங்க“ என்றாள்.

மார்க் வாங்காமல் விட்டுவிட்டால் பின்பு காரணம் கேட்டு என்ன பிரயோசனம் . எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் எப்படி ஒருவனால் இருக்க முடிகிறது. பலமுறை அவனிடம் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்.

“எனக்கு ஒரு ஐடியாவும் கிடையாதுப்பா. எது கிடைக்குதோ. அது படிப்பேன்“

“அப்படி படிச்சா நல்ல வேலை எப்படிக் கிடைக்கும்“

“எது கிடைக்குதோ. அது தான் நல்ல வேலை“

“அப்போ எப்படிச் சம்பாதிப்பே“

“அது என் பிரச்சனை. சம்பாதிக்காட்டா. உங்க கிட்ட வந்து கேட்க மாட்டேன் போதுமா“

அவனிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நிறையக் கவலைப்பட்டார். பயப்பட்டார். குழப்பமடைந்தார். சாந்தியும் பிரபுவின் படிப்பிற்காகக் கோவில் கோவிலாகப் பிரார்த்தனை செய்தாள். விரதம் இருந்தாள். சில நாட்கள் அவனது அறையில் தீர்த்தம் தெளித்து “நல்லா படிப்பு வரட்டும் சாமி“ என்று வேண்டிக் கொண்டாள். சில நேரங்களில் அம்மாவும் மகனும் பேசி சிரித்துக் கொள்வார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அவருக்குப் புரியாது.

பெற்றோர்களின் எல்லாக் குழப்பங்கள். பயங்கள். சந்தேகங்களுக்கு அப்பால் எப்போதும் போலப் பிரபு தனக்கான உலகில் தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். விருப்பம் போல நடந்து கொண்டான். படிப்பதை ஏன் இவ்வளவு பெரிதாக நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

பிளஸ் டூ படிக்கிற பையன் போலவே நடந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்று ராமநாதன் மிகவும் வருத்தப்பட்டார்.

அவர்கள் வீடு உள்ள தெருமுனையில் இருந்த டியூசன் சென்டரின் வாசலில் வரிசையாகச் சைக்கிள் நிற்பதைக் காணும் போது அவருக்குள் கோபம் பொங்கி வரும். இவர்கள் எல்லாம் முட்டாள்களா. ஏன் பிரபு தனது பேச்சை கேட்க மறுக்கிறான். ஒருவேளை அவனுக்குப் படிப்பு வரவில்லையோ. சகவாசம் சரியாக இல்லாமல் போய்விட்டதா. பத்தாம் வகுப்பு வரை கூடத் தான் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டானே. இப்போது என்னவானது.

••

ராமநாதன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு நாள் தர்மா எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் செல்போன் சார்ஜர் வாங்கப் போன போது அங்கே வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருந்த மேஜை விளக்கினைப் பார்த்தார்.

“ஸ்கூல் பசங்க நிறைய வாங்கிட்டு போறாங்க சார். விலை இருநூறு தான். உங்க பையன் கூடப் பிளஸ் டூ தானே“ எனக்கேட்டார் தர்மா எலக்ட்ரானிக்ஸ் ராஜகுரு. தெரிந்த மனிதர் என்பதால் அக்கறையாகக் கேட்கிறார்.

“டேபிள் சேர் வாங்கிக் குடுத்துருக்கேன். அதுல உட்கார்ந்து எங்க படிக்கிறான்“ என்று சலித்துக் கொண்டார் ராமநாதன்

“இந்த ஸ்டடி லேம்ப்ல நாலு பட்டன் இருக்கு. தேவையான அளவுக்கு வெளிச்சத்தைக் கூட்டிகிடலாம்“ என்று கடைப்பையன் விளக்கி காட்டினான்

கழுத்து நீண்ட அந்த விளக்கு அழகாகயிருந்தது. மருத்துவர்களின் மேஜை மீது அது போன்ற விளக்கைப் பார்த்திருக்கிறார்.

ஒருவேளை ஸ்டடி லேம்ப் வாங்கிக் கொடுத்தால் படிக்கத் துவங்கிவிடுவானோ என்ற எண்ணம் உருவானது. இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்டடி லேம்ப்பை வாங்கிக் கொண்டார். அந்த விளக்கு எரிவது போலவும் பிரபு மேஜையில் அமர்ந்து அதன் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவும் மனதில் ஒரு சித்திரம் வந்து போனது.

வீட்டிற்குப் போனவுடன் சாந்தி “இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க“ என்று கேட்டாள்

“அப்படியாவது படிக்க மாட்டானானு பாக்கத் தான், நான் படிக்கிற காலத்துல இப்படி யாரும் ஸ்டடி லேம்ப் வாங்கிக் குடுத்துப் படிக்கச் சொல்லலை.. எங்க வீட்ல அப்போ குண்டு பல்ப் தான். அதுவும் நாற்பது வாட்ஸ்“. என்றார்

“ நீங்களே அவன் கிட்ட குடுத்துப் பக்குவமாச் சொல்லுங்க“

“இதுல பக்குவமாச் சொல்றதுக்கு என்ன இருக்கு“

“உங்களுக்குப் பேசத் தெரியலை. சும்மா அவன் கிட்ட கோவிச்சிகிடுறீங்க“

“அப்போ நீயே இதையும் குடுத்துரு“

“இந்த கோபத்தைத் தான் நான் சொன்னேன்“.

“நான் ஏன் கோவிச்சிகிடுறேனு யோசிக்கவே மாட்டேங்குறானே“

“அதெல்லாம் அவனுக்குப் புரியாம இல்ல. இப்போ அவனுக்கு ஜாதகத்துல கட்டம் சரியில்லை. சித்திரைக்குப் பிறகு படிக்க ஆரம்பிச்சிருவான்“

“அதுக்குள்ளே பப்ளிக் எக்ஸாம் வந்துரும்“

“இப்படி பேசினா அவனுக்குக் கோபம் வராம என்ன செய்யும். “

“நாம சண்டை போட்டு என்ன ஆகப்போகுது.. அவன் வரட்டும் நான் பேசிகிடுறேன்“

அன்றைக்கு அவர் இரவு பதினோரு மணி வரை விழித்திருந்தார். பிரபு வரவில்லை. காலையில் எழுந்த போது ஸ்டடி லேம்ப் அவனது மேஜை மீது இருந்தது. சாந்தி கொடுத்திருக்கக் கூடும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அவர் சொல்ல முயன்றபோது “எனக்கு தெரியும்பா“ என்று ஒரே வார்த்தையில் பிரபு துண்டித்துவிட்டான்.

ஒவ்வொரு நாளும் ஆபீஸ் விட்டுவந்தவுடன் அவனது அறையினுள் எட்டிப்பார்ப்பார். விளக்கு அதே இடத்தில் அப்படியே இருக்கும். பிரபு அந்த விளக்கை பிளக் பாயிண்ட்டில் கூடச் சொருகியிருக்கவில்லை. ஏன் இப்படியிருக்கிறான் என்று ஒரு நாள் ஆத்திரத்தினை மனைவியிடம் காட்டினார்

“படிக்கும் போது பிளக்கில் சொருகிக்கிடுவான். நீங்க ஏன் அவசரப்படுறீங்க“ என்றாள் சாந்தி

ஒரு மாதம் ஆகியும் அதே இடத்தில் ஸ்டடி லேம்ப் அப்படியே இருந்தது. அதன்மீது படிந்திருந்த தூசியைக் கூடத் துடைக்கவில்லை. வாங்கிய நாளில் இருந்து ஒருமுறைகூட அதைப் பயன்படுத்தவில்லையே. எப்போது படிக்கத் துவங்குவான் என்று எரிச்சலாக வந்தது. அவராக ஒருநாள் ஸ்டடி லேம்பை பிளெக் பாயிண்ட்டில் சொருகி வைத்தார். அப்படியும் அவன் அதைப் பயன்படுத்தவில்லை

இதற்கிடையில் பிரபு எங்கிருந்தோ ஒரு சுழலும் வண்ணவிளக்கை வாங்கி வந்திருந்தான். அந்த விளக்கை மாட்டுவதற்கு இடம் வேண்டும் என்பதற்காக ஸ்டடி லேம்பை கட்டிலின் ஒரமாகக் கழட்டி வைத்துவிட்டான். அந்த விளக்கில் இருந்து சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என ஐந்துவிதமான வண்ணங்கள் ஒளிர்ந்தன.

அறை முழுவதும் சிவப்பு நிறமாக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சாந்தி

“எதுக்கு இந்தக் கலர் லைட்“ என்று கேட்டார் ராமநாதன்

“இந்த லைட்டுல பாட்டுக் கேட்குறது நல்லா இருக்கும்னு சொல்றான்“.

“பாட்டு கேட்டுகிட்டு இருந்தா எப்போ படிக்கிறது“

“அதை நீங்க தான் சொல்லணும். நான் சொன்னா. என்னைக் கோவிச்சிகிடுவான்“

“நான் சொன்னாலும் கோவிச்சிக்கிடுவான்“

“அப்போ சொல்லாதீங்க“

“அப்படி விட முடியாது“.

“அப்போ நீங்களாச்சு. உங்க பிள்ளையாச்சு“ என்றபடியே அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்

பிரபு வண்ணவிளக்கு வாங்கியது அவருக்குப் பெரிய விஷயமாகயில்லை. தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த ஸ்டடி லேம்பை பயன்படுத்தவில்லையே என்று தான் கோபமாக வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமலே அவனிடம் “பப்ளிக் எக்ஸாம் எப்போ ஆரம்பிக்குது“ என்று கேட்டார்

“டிவில சொல்லுவாங்க. கேட்டுக்கோங்க“ என்றான் பிரபு

“உங்க ஸ்கூல்ல சொல்லலையா“

“நான் கேட்கலை“

“ஸ்கூல்ல போய் அப்போ என்ன தான் செய்றே“

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் எதையோ முணுமுணுத்துக் கொண்டான்.

“நான் வந்து உங்க ஸ்கூல்ல கேட்கவா“

“கேட்டுக்கோங்க. அப்படியே எனக்குப் பதிலா நீங்களே பரிட்சை எழுத முடியுமானு கேட்டுட்டு வந்துருங்க“ என்றான்

“நான் படிக்கிற காலத்துல இப்படி இல்லே. தினம் விளக்கு வச்ச உடனே படிக்க ஆரம்பிச்சிடுவேன். நைட் பத்து மணி வரைக்கும் படிப்பேன். “

“அப்படி படிச்சி எவ்வளவு மார்க் வாங்குனீங்க. காலேஜ்ல பிகாம் தானே படிச்சீங்க. “

“அப்போ மார்க் நிறைய வாங்க முடியாது. இப்போ தான் மேத்ஸ் ஆயிரம் பேரு சென்டம் வாங்குறாங்க. நான் அப்பவே மேத்ஸ்ல 87.

“அதை விட நான் அதிகம் வாங்கிடுவேன் போதுமா“

அது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை.

••

ஒவ்வொரு முறை அவனது அறையைச் சுத்தம் செய்யும் போதும் கட்டிலிற்குக் கிழே இருந்த ஸ்டடி லேம்பை ஒரமாக வைத்துவிட்டு சாந்தி சுத்தம் செய்வாள். ஒரு நாள் ஸ்டடி லேம்ப் மீது தூசியடையாமல் இருக்கப் பழையதுணி ஒன்றை அதன் மீது போட்டு வைத்தாள்.

டிவியில் அவர் பார்த்த ஆங்கிலப் படத்தில் ஒரு சிறுவன் ஸ்டடி லேம்ப் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தான். அதைக் காணும் போது அவரை அறியாமல் கண்ணீர் வந்தது. ஆனாலும் பிரபு அந்த விளக்கை ஒருமுறை கூடப் பயன்படுத்தவேயில்லை.

••

இரவு எட்டுமணிச் செய்தியில் பப்ளிக் எக்ஸாம் துவங்குகிற தேதியை அறிவித்தார்கள். சாந்தி மறுநாள் காலை சிவன் கோவிலில் பிரபுவின் பெயருக்கு அர்ச்சனை செய்தாள். அன்றிலிருந்தே ராமநாதன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் எவ்வளவு கட்டணம் என்ற தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினார். வங்கிச் சேமிப்பில் அவ்வளவு பணம் இல்லையே என்ற கவலை கூடுதலாகச் சேர்ந்து கொண்டது. அவரது நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் ஆளுக்கு ஒரு கல்லூரியைச் சிபாரிசு செய்தார்கள்.

பள்ளியிலே சிறப்பு வகுப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னாள் சாந்தி. அதன்பிறகான நாட்களில் காலை ஏழு மணிக்கே பிரபு கிளம்பி போவதைப் பார்க்கும் போது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது.

மாலையில் பள்ளியில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்றன. பிரபு இரவு எட்டரை மணிக்குத் தான் வீடு திரும்பினான். வீட்டில் செய்த இட்லி தோசை எதுவும் அவனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தினமும் பிரைடு ரைஸ். நூடுல்ஸ் எனத் தள்ளுவண்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டான். அதற்குச் சாந்தி கோவித்துக் கொண்ட போது “எதையாவது சாப்பிட்டுப் படிக்கட்டும்“ என்று சமாதானம் சொன்னார் ராமநாதன்

பரிட்சை துவங்குவதற்கு இரண்டு வாரமிருந்த போது பிரபு தனது நண்பனின் அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் என மதுரைக்குக் கிளம்பிப் போனான். அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அவன் கேட்கவில்லை. பள்ளிக்கு உடல் நலமில்லை என்று லெட்டர் கொடுத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டான்.

“பப்ளிக் எக்ஸாமை வச்சிகிட்டு இப்படி ஊர் சுத்துனா.. எப்படி மார்க் வாங்குவான்“ என்று கோவித்துக் கொண்டார்.

சாந்தி அவனுக்காக அன்றாடம் கோவிலுக்குச் சென்று வரத் துவங்கினாள். நேர்த்திக்கடன் போட்டாள். மதுரைக்குச் சென்று திரும்பி வந்த போது அவனது இடது கண் வீங்கியிருந்தது. குளவி கடித்துவிட்டது என்றான்.

“கண்ணிற்கு டாக்டரைப் போய்ப் பார்த்து வந்துவிடலாம். பரிட்சை வரப்போகிறது“ என்றார் ராமநாதன்

“அதெல்லாம் பாத்துகிடலாம்“ என்று பிரபு மறுத்துவிட்டான்

வீங்கிய கண்களுடன் பள்ளிக்குப் போய் வந்தான். வீட்டிற்கு வந்த நேரம் முதல் வண்ண விளக்குகளைச் சுழலவிட்டு பாட்டு கேட்டான். கடிகாரத்தின் முள்ளைப் போல அவரது பயம் முடிவில்லாமல் சுற்றிக் கொண்டேயிருந்தது.

பரிட்சை அன்றைக்குக் காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே போய்விட்டான். அப்படியே ஸ்கூலுக்குப் போய் விடுவானா. அல்லது வீடு வந்து கிளம்பிப் போவானா என்று தெரியாமல் குழம்பிப் போனார்.

“நீங்க விஜயராஜ் வீடு வரைக்குப் போய்ப் பாத்துட்டு வந்துருங்க“ என்றாள் சாந்தி

அவர் விஜயராஜ் வீட்டிற்குப் போன போது அவன் குளித்துப் புதிய ஆடை அணிந்து நெற்றியில் திருநிறு பூசியவனாக இருந்தான். கையில் ஒரு புத்தகம் இருந்தது.

“இங்கே வரலை அங்கிள். டேனி வீட்டுக்குப் போயிருப்பான்“ என்றான்

டேனி வீடு எங்கேயிருக்கிறது என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை.

வீடு திரும்பிய ராமநாதன் “டேனி வீட்டுக்குப் போயிட்டானாம்“ என்று எரிச்சலோடு சொன்னார்

“பரிட்சையும் அதுவுமா சாப்பிடக்கூட இல்லே“ என்று சாந்தி வருத்தப்பட்டாள்

“விஜயராஜ் எல்லாம் காலைல குளிச்சி.. நெற்றி நிறையத் திருநீறு பூசி படிச்சிகிட்டு இருக்கான். நமக்குனு வந்து பொறந்திருக்கானே. “. என்று பிரபுவைத் திட்டினார்

டேனி வீட்டிலிருந்து நேராகப் பள்ளிக்கூடம் போய்விட்டான் பிரபு. பரிட்சை முடிந்தும் வீடு திரும்பி வரவில்லை. இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்த போது பரிட்சை எப்படி இருந்தது என்று கேட்டாள் சாந்தி

“ஈஸிம்மா“ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான் பிரபு

அந்தப் பரிட்சைக்கு மட்டுமில்லை. எல்லாப் பரிட்சைக்கும் இது போல டேனி வீட்டிலிருந்து தான் கிளம்பிப் போனான். எல்லாப் பரிட்சை பற்றியும் ஈஸிம்மா என்று அதே பதிலை தான் தந்தான்

“ரிசல்ட் எப்போ வரும்“ என்று அவனிடம் கேட்டார் ராமநாதன்

“டிவில சொல்வாங்க“ என்றான் பிரபு

அந்தப் பதில் அவரை எரிச்சல்படுத்தியது. கல்லும் கல்லும் உரசிக் கொள்ளும் போது நெருப்பு வருவது போல அவனுடன் எது பேசினாலும் இப்படி ஆகிவிடுகிறதே என்று தோன்றியது.

பரிட்சை முடிந்துவிட்டாலும் எந்தக் கல்லூரியில் சேருவது. அதற்கான விண்ணப்பம் எப்படி வாங்குவது. சில கல்லூரிகள் தனித் தேர்வு நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதற்குப் படிக்க வேண்டுமா என்று ராமநாதன் பல்வேறாக யோசித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின்னான நாட்களில் பிரபு மதியம் வரை தூங்கினான். பின்பு குளித்துவிட்டு மூன்றரை மணிக்கு மதிய உணவு சாப்பிட்டான். பைக்கை எடுத்துக் கொண்டு டேனி வீட்டிற்குச் செல்வான். இரவு இரண்டுமணிக்கு பிறகே வீடு திரும்பினான்.

ஆறாம் தேதி பரிட்சை முடிவுகள் அறிவிக்கபடும் என்று டிவியில் சொன்னார்கள். ஆறாம் தேதி காலையில் அவன் எப்போதும் போல டேனி வீட்டிற்குப் போயிருந்தான். அவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு போய்விடுவார்கள் என்றாள் சாந்தி.

எவ்வளவு மார்க் வாங்கியிருப்பான் என்று தெரியாத குழப்பம், மார்க் குறைவாக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவரை வாட்டியது. இரவு அவருக்குச் சரியான உறக்கமில்லை.

மறுநாள் காலை பத்துமணிக்கு அவனது மதிப்பெண் வந்திருந்தது. 96% சதவீதம் வாங்கியிருந்தான். இதில் கணிதத்தில் நூறு மதிப்பெண். பள்ளியின் செகண்ட் ரேங்க்.

அவரால் நம்பவே முடியவில்லை. வீட்டில் அமர்ந்து ஒரு நாள் கூடப் படிக்காதவன் எப்படி இவ்வளவு மார்க் வாங்க முடிந்தது. நாம் தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையா. அல்லது படிக்கும் முறை மாறிவிட்டதா. விளக்கு வைத்தவுடன் படிக்க வேண்டும் என்பது வெறும் பழக்கம் தானா. ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையின் கற்கும் திறனைப் புரிந்து கொள்ளவில்லையா. அறிவு வளர்ச்சி என்பது இது தானா. அவருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது

தனக்கும் தனது மகனுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளி என்பது வயது மட்டும் சார்ந்ததில்லை. தான் வேறு உலகில் வேறு நம்பிக்கைகளில் வாழுகிறோம். எதிர்காலம் பற்றிய பயம் தான் நம்மை வழிநடத்துகிறது.  ஆனால் இவர்கள் எதிர்காலத்தை  பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. கடந்த காலம் பற்றிப் புலம்புவதில்லை. தனது வீட்டில் தன்னோடு வளர்ந்தாலும் அவன் தனது பையன் மட்டுமில்லையோ என்று அவருக்குத் தோன்றியது. அந்த எண்ணம் மேலும் குற்றவுணர்வை உருவாக்கியது. அதிலிருந்து விடுபடுவதற்காக வீட்டில் பால்பாயாசம் வைக்கும்படி சொன்னார் ராமநாதன்

“அவனுக்குப் பாயாசம் பிடிக்காது. அவன் மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வருவானானு கேட்குறேன்“ என்று மகனுக்குப் போன் செய்தாள் சாந்தி.

“என்ன சொல்றார் அப்பா“ என்று இயல்பாகக் கேட்டான் பிரபு

“உன் மார்க்கைப் பார்த்து அழுதுட்டார்“ என்றாள் சாந்தி

தான் எப்போது அழுதோம் என்று புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராமநாதன்.

அன்று மாலை டேனியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பிரபு. டேனி ஒல்லியாக இருந்தான். இருவரும் ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் டீ சர்ட் போட்டிருந்தார்கள். டேனி அப்பா வாங்கிக் கொடுத்தது என்றான் பிரபு.

“தன்னைவிடவும் டேனி நாற்பது மார்க் குறைவு“ என்று அம்மாவிடம் சொன்னான் பிரபு

டேனி சிரித்தபடியே “இவனை மாதிரி படிக்க முடியாது ஆன்டி“. என்றான்.

“நல்லா சப்தமாச் சொல்லு. அவர் காதுல விழட்டும்“ என்றாள் சாந்தி

அதைக் கேட்காதவர் போல ராமநாதன் நடித்துக் கொண்டார்.

அன்றிரவு வீட்டில் சும்மா கிடக்கும் ஸ்டடி லேம்பை யாருக்காவது கொடுத்துவிடலாமா என்று மனைவியிடம் கேட்டார் ராமநாதன்

“அவன் படிக்கிறதுக்கு வாங்கினது.. அதெல்லாம் குடுக்கக் கூடாது“ என்றாள்.

“அவன் ஸ்டடி லேம்ப் வச்சிப் படிக்கிற ஆள் இல்லை“ என்றார்

“அப்போ அவன் பிள்ளை வந்து படிப்பான். அது பாட்டுக்கும் இருக்கட்டும்“ என்றாள்

தன்னால் அவ்வளவு எதிர்காலத்தை நினைக்க முடியவில்லையே என்று மனதிற்குள் சிரித்தபடியே“ பிரபு ரூம்ல இருக்கிற கலர் லைட்ல பாட்டு கேட்டா நல்லா இருக்குமா“ என்று மனைவியிடம் கேட்டார்.

“ஏன் வயசு திரும்புதாக்கும்“ என்று கேலி செய்தாள் மனைவி.

பிரபுவோடு அவனது அறையில் அமர்ந்து வண்ணவிளக்கு ஒளிர பாட்டு கேட்க வேண்டும் என்று அவருக்குள் ஆசை உருவானது.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

••

0Shares
0