கவிஞனின் நாட்கள்

அனிதா தேசாயின் புகழ்பெற்ற நாவல் In Custody. இதனை மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய வேஷத்தில் சசிகபூர், ஓம்பூரி, ஷப்னா ஆஸ்மி நடித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற உருது கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியை சந்தித்து ஒரு நேர்காணலை மேற்கொள்ளத் தேவன் சர்மா முயல்வதே மையக்கரு.

மிர்பூரில் உள்ள ராம் லால் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரான தேவனுக்கு உருதுக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. வீட்டிலிருந்து தேவன் கல்லூரிக்குக் கிளம்புவதில் படம் ஆரம்பமாகிறது. அவர் மனைவி பள்ளிக்குச் செல்லும் மகனை அனுப்பி வைப்பதில் பரபரப்பாக இருக்கிறார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று தன் அவசரத்தைக் காட்டுகிறார் தேவன். டீக்குடிக்கக் கூட அவருக்கு நேரமில்லை.

உருது கவிஞராக வேண்டும் என்ற தனது வாழ்க்கை லட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனைவி, மகன் எனச் சொந்த வாழ்க்கையின் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார் தேவன்.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். வகுப்பறையில் கூச்சல் போடுகிறார்கள். தேவனும் நன்றாகக் கவிதைகள் எழுதக்கூடியவர். அவரது சக ஆசிரியர், ஏன் உருது மொழியில் கவிதைகள் எழுதுகிறார் எனக் கேட்கிறார். தேவன் உருது மொழியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார். கவித்துவப் பாரம்பரியம் கொண்ட உருது மொழி இன்று கைவிடப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

உருதுக் கவிதைகளைத் தன் மனதிலிருந்து அழகாகப் பாடுகிறார் தேவன். அவரது தந்தை வழியாக அவருக்கு உருதுக் கவிதைகள் அறிமுகமாகியிருந்தன. இந்த நிலையில் தற்செயலாக அவரைத் தேடி வரும் பால்ய நண்பன் முராத் தனது இலக்கிய இதழில் உருது கவிதைகளுக்கெனச் சிறப்பிதழ் கொண்டுவர இருப்பதால் நூர் சாகிப்பின் நேர்காணல் ஒன்றைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறான்.

தனது ஆதர்சக் கவிஞரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கிறதே எனத் தேவன் உடனே ஒத்துக்கொள்கிறார். நூர் சாகிப்பிற்கு ஒரு கடிதம் தருகிறான் முராத். அதைக் கையில் எடுத்துக் கொண்டு போபாலில் வசிக்கும் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியைச் சந்திக்கப் புறப்படுகிறார் தேவன்.

அவரது மனைவி ஏதோ புதிய வேலைக்கு முயற்சி செய்வதற்குத் தான் போபால் போகிறார் போல என நினைத்துக் கேள்வி கேட்கிறாள். அதற்குத் தேவன் கோவித்துக் கொள்கிறார்.

போபாலின் குறுகலான, பழமையான வீதிகளுக்குள் நடந்து பழைய கால வீடுகளைக் கடந்து ஆங்காங்கே விசாரித்து விசாரித்துக் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடி வீட்டினை அடையாளம் காணுகிறார். சிதைந்து போன பழைய காலத்து வீடு. அழுக்காகவும் மோசமாகவும் உள்ள அந்த வீடே அவர் இன்று இருக்கும் நிலையின் அடையாளம் போலிருக்கிறது. வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.

நூர் சாகிப்பின் முதல் மனைவி அவரை விருப்பமில்லாமல் வரவேற்கிறார். நூர் சாகிப் இளம்பெண் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டு வாழுவதும் அவள் வழியாக ஒரு குழந்தையைப் பெற்றிருப்பதும் தெரிய வருகிறது. உடைந்து கிடந்த படிகளின் வழியே ஏறி நூர் சாகிப் அறைக்குப் போகிறார். அந்த அறை இருண்டு போயிருக்கிறது.

பருத்த உடலுடன் வீங்கிய கண்களுடன் போதை கலையாமல் நூர் சாகிப் படுக்கையில் கிடக்கிறார். தான் கொண்டுவந்த கடிதத்தை அவரிடம் நீட்டுகிறார் தேவன்.

நூர் சாகிப்பிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்றாலே பிடிக்காது. ஆகவே எரிச்சலுடன் தேவனைத் துரத்திவிட முயலுகிறார். தேவன் தான் அவரது கவிதைகளை ஆழ்ந்து படித்தவன் எனச் சொல்லி சில கவிதைகளை மனதிலிருந்து பாடிக்காட்டுகிறார். அவரது குரலின் வசீகரத்தில் மயங்கி நூர் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்.

அன்றாடம் ஒரு இளங்கவிஞர்கள் பலரைக் கூட்டி வைத்துக் கொண்டு குடிப்பதும் பிரியாணி சாப்பிடுவதும் கவிதைகள் பாடுவதுமாக நூர் சாகிப்பின் வாழ்க்கை இருப்பதை நேரடியாகக் காணுகிறார் தேவன். உண்மையில் நூர் சாகிப்பைத் தேடி வருகிறவர்கள் குடிப்பதற்காக மட்டுமே வருகிற ஒட்டுண்ணிகள் என்பதைத் தேவன் புரிந்து கொள்கிறார்.

இது போலவே இரண்டாவது மனைவியின் கட்டுப்பாட்டில் தான் நூர் சாகிப் இருக்கிறார். அவள் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்துகிறாள். அடிமை போல நடத்துகிறாள் என்பதையும் காணுகிறார்.

எவ்வளவு பெரிய கவிஞர். எவ்வளவு மோசமாக வீட்டில் நடத்தப்படுகிறார் என்று மனக்கஷ்டமடைகிறார். நேர்காணல் செய்வதற்கு இயலாத சூழலில் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார் தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு தேவனுக்கு நூர் சாகிப்பிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. தன்னை வந்து சந்திக்கும்படி எழுதியிருக்கிறார். இந்த முறை அவரைத் தேடிப் போகையில் நூர் சாகிப்பின் இளம் மனைவி கஜல் பாடல்களைப் பாடுவதைக் கேட்கிறார். அவள் நூர் சாகிப்பின் கவிதைகளைத் திருடி தனது கவிதை எனப் பெருமையாகப் பாடுகிறாள். கைதட்டு வாங்குகிறாள். நிறையப் பணமும் அவளுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்டு தேவன் கோவித்துக் கொள்ளும் போது தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி ஏமாந்து போன விஷயத்தைச் சொல்கிறார் நூர் சாகிப்.

நேர்காணல் செய்வதற்கு நூர் சாகிப் ஒத்துக் கொள்ளவே அதை ஏன் வீடியோவாகப் பதிவு செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனை உருவாகிறது. புதிதாக ஒரு வீடியோ கேமிரா வாங்க பணம் தேடி அலைகிறார் தேவன்.

உருது விரிவுரையாளரான சித்திக் மூலம் அவரது கல்லூரியே உதவி செய்கிறது. ஆனால் அவர்கள் தந்த பணத்தில் டேப்ரிக்காடர் தான் வாங்க முடிகிறது. அதுவும் பழைய ரிக்காடர். அதை இயக்க ஒரு பையனையும் கடைக்காரர் அனுப்பி வைக்கிறார்.

நூர் சாகிப்பை நேர்காணல் செய்வதற்கும் அவரது குரலைப் பதிவு செய்வதற்கும் பணம் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அவரது முதல் மனைவி. வேறுவழியின்றி அதற்குப் பணம் தேடி அலைகிறார் சித்திக் வழியே மறுபடியும் உதவி கிடைக்கிறது. அந்தப் பணத்தினை முதல் மனைவியிடம் கொடுக்கிறார்

அவள் தங்கள் குடியிருப்பிற்குப் பக்கத்திலுள்ள வேசையர் விடுதி ஒன்றில் ஒரு அறையை ஏற்பாடு செய்து அங்கே வைத்து நேர்காணல் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறாள்.

அங்கேயும் நூர்சாகிப்பின் அபிமானிகள் திரண்டு விடுகிறார்கள். குடியும் பிரியாணியுமாகக் கூத்தடிக்கிறார்கள். தேவன் நினைத்தது போல அவரை நேர்காணல் செய்யவோ, கவிதைகளை அவரது குரலில் பதிவு செய்யவோ இயலவில்லை. இடையில் டேப்ரிக்கார்டர் வேறு கோளாறு ஆகிவிடுகிறது. கடன்வாங்கிச் செய்த ஏற்பாடு இப்படி ஆகிவிட்டதே என நிலைகுலைந்து போகிறார் தேவன்.

இதற்கிடையில் உண்மையை அறிந்து கொண்ட இரண்டாவது மனைவி இம்தியாஸ் முதல் மனைவியோடு சண்டையிடுகிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தேவன் மீது கோவித்துக் கொள்கிறாள். கல்லூரி நிர்வாகமும் தேவன் மீது கோபம் கொள்கிறது

வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு கவிஞனை எந்த அளவு ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை உணருகிறார் தேவன். அவருக்கு நூர் சாகிப் மீது பரிதாபமும் வருத்தமும் ஏற்படுகிறது. முடிவில் நூர் சாகிப் தான் எழுதிய கவிதைகளைத் தேவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போகிறார்.

ஒரு இளங்கவிஞனுக்கும் மூத்த கவிஞருக்குமான உறவும் அன்பும் படத்தில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. பணமும் புகழும் நிலையற்றவை என்பதை நூர் உணர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது இளம்மனைவி இம்தியாஸ் இதற்காகவே அவரை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்.

கவிதையின் வழியே தான் என்றும் வாழக்கூடியவன். தன் மனதிலுள்ள கவிதைகளை உண்மையில் அதை நேசிக்கும் ஒருவர் முன்பு தான் வெளிப்படுத்துவேன் என்கிறார் நூர் சாகிப். அவரது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உற்ற தோழனாக மாறுகிறான் தேவன்.

நூர் சாகிப் தன் வீட்டில் புறாக்களை வளர்க்கிறார். அந்தப் புறாக்கள் அவரது தோளில் அமர்ந்து கொள்கின்றன. சுதந்திரம் மற்றும் கவிதையின் அடையாளம் போலவே புறா காட்டப்படுகிறது. அந்தப் புறாக்களைக் கடைசியில் இம்தியாஸ் கூண்டிலிருந்து பறக்கவிடுகிறாள். தன்னுடைய புறாக்கள் தன்னைவிட்டுப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் இனி நம்பிக்கையில்லை என வருந்துகிறார் நூர் சாகிப்

தேவனும் நூர் சாகிப்பும் ஞானி ஒருவரின் அடக்க ஸ்தலத்திற்குத் தொழுகை செய்வதற்காகச் செல்லும் காட்சி மிக அழகானது . மெய்மறந்து அவர்கள் ஒன்றிணைகிறார்கள்.

இது போலவே உருது ஆசிரியரான சித்திக்கின் பழைய மாளிகை இடிக்கப்படும் காட்சியும் ஒரு குறியீடு போலவே இருக்கிறது.

ஒரு நாள் இரவில் தேவன் படுக்கையிலிருந்து எழுந்து கைம்பெண்கள் கையில் விளக்குடன் பிரார்த்தனைக்குச் செல்வதைக் காணுகிறார். அப்போது அவரது மனைவி அவரை ஆறுதல் படுத்தி உறங்க அழைத்துப் போகிறாள். நிர்கதியான அந்தப் பெண்களின் பிரார்த்தனையைப் போன்றதே தேவனின் ஈடுபாடும்.

இன்னொரு காட்சியில் குடித்து வாந்தி எடுத்து மயங்கிக் கிடக்கும் நூர் சாகிப்பைக் கண்டு அவரது இரண்டாம் மனைவி திட்டுகிறாள். அவர் கவிதை எழுதி வைத்திருந்த காகிதங்களை வாந்தியைத் துடைத்துப் போடுவதற்காகத் தேவனிடம் வீசி எறிகிறாள். இதில் தேவன் அதிர்ச்சி அடைகிறார்.

நூர் சாகிப்பின் தோற்றம் பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் போலவே இருக்கிறது. குடி, ருசியான சாப்பாடு. எழுத்து எனப் பால்சாக் போலவே நூரும் வாழுகிறார். பெயரும் புகழுமான தனது கடந்தகாலம் தன்னைவிட்டுப் போய்விட்டது என நூர் வருத்தமான குரலில் சொல்கிறார். குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வாழ முடியாது என்பதே நிஜம். வயதும் நோயும் அவரை முடக்கிவிடுகின்றன.

Clear Light of Day நாவலிலும் அனிதா தேசாய் உருது கவிதைகளின் இன்றைய நிலையைப் பற்றி ஆதங்கமாகவே எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி போலவே இந்தக் கதையிலும் மையக்கதாபாத்திரம் உருதுக் கவிஞராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனிதா தேசாய் தனது நேர்காணலில் “தான் வளர்ந்த பழைய டெல்லியில் இன்றும் உருதுக் கவிதைகள் ஓதப்படுவதைக் கேட்கிறேன். ஆனால் உருது மொழி பயிலுவது பொதுவெளியில் குறைந்து விட்டது. இந்திய பிரிவினை அதற்கு முக்கியக் காரணம். உருதுக் கவிதைகளுக்கென நீண்ட பாரம்பரியம் உள்ளது. மிகச்சிறந்த உருது கவிதைகளை வாசித்திருக்கிறேன்.

உருதுக் கவிதை ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது கிளாசிக்கல் வகையைச் சேர்ந்தது, தூய்மையானது. நீங்கள் ஒரு புதுக்கவிதையை உருது மொழியில் எழுத இயலாது. அதன் பாரம்பரியத்தை. மரபைக் கைவிட்டு கவிதை எழுதுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கவிதை கட்டாயம் மரபுக்குள் இருக்க வேண்டும். நாவலில் வரும் இமிதியாஸ் கவிதைகள் எழுதுகிறவள். அதை நூர் சாகிப் அங்கீகரிப்பதில்லை. அது காலமாற்றத்தின் அடையாளம்.

இந்தக் கதையும் உண்மை சம்பவம் ஒன்றின் பின்புலத்தில் தான் எழுதப்பட்டவை. நூர் சாகிப் எவரது பாதிப்பில் உருவாக்கப்பட்டார் என்ற உண்மையைக் கூற நான் விரும்பவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை நிஜமானது“. என்று சொல்கிறார் .

நாவலில் நூரின் மரணத்தைப் பற்றித் தேவன் கனவு காணுகிறார்.ஆனால் படத்தில் அது காட்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

நூர் மற்றும் தேவன் இருவரும் சிறை வாழ்க்கை போலச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறார்கள். தேவனின் மனைவியிடமும் எதிர்பார்ப்புகள், கனவுகள் இருக்கிறது. ஆனால் அதை அவள் அடக்கிக் கொள்கிறாள். இமிதியாஸ் வெளிப்படுத்துகிறாள். இயலாமையால் கோபம் கொள்கிறாள்.

கவிதை தான் தேவனின் ஒரே ஆறுதல். விடுதலை. சுதந்திர வெளி. ஆகவே அவர் நூரை தேடிச் செல்லும் காட்சிகளில் சந்தோஷமாக இருக்கிறார். இதையே தான் நூரும் வெளிப்படுத்துகிறார்

நூர் சாகிப்பாக நடித்துள்ள சசிகபூரும், தேவனாக நடித்துள்ள ஒம்பூரியும் இமிதியாஸாக நடித்துள்ள ஷப்னா ஆஸ்மியும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நூர் சாகிப் வீட்டிலுள்ள பாட்டி தனித்துவமான கதாபாத்திரம்.

ஒரு காட்சியில் நூர் சாகிப் தேவனிடம் உருதுக்கவிதைகளை இவ்வளவு நேசிக்கும் நீ ஏன் இந்தி ஆசிரியராக வேலை செய்கிறாய் என்று கேட்கிறார். அதற்குத் தயக்கத்துடன் தேவன், என் குடும்பத்திற்காக என்று பதில் சொல்கிறார். அந்தப் பதில் அவருக்கானது மட்டுமில்லை. நூரும் அப்படித் தான் வாழுகிறார்.

உருதுக் கவிஞரைப் பற்றிய படம் என்பதால் சிறப்பான இசை இடம்பெற்றிருக்கிறது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நூரின் நோய்வாய்ப்பட்ட உடல் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. கனவிற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அல்லாடுகிறார் தேவன். அவரைக் கல்லூரி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவில்லை. குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நூர் சாகிப் புரிந்து கொள்கிறார். ஒரு காட்சியில் சித்திக் அவன் ஒரு அதிர்ஷ்டசாலி என்கிறார். அந்த அதிர்ஷ்டம் கவிஞனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு. கவிதைகளின் பாதுகாவலான இருப்பதே தேவனிற்குக் கிடைத்த பரிசாகும்.

கவிஞனின் நாட்கள் கசப்பானவை. அவை கவிதைகளைப் போலக் காற்றில் பறக்ககூடியதாகயில்லை என்ற உண்மையைப் படம் அழுத்தமாகவே சொல்கிறது.

••

0Shares
0