A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே.
1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது.
ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் கவிதைகள் கதைகள் எழுதியிருக்கிறார். The Interior Landscape: Classical Tamil Love Poems, Poems of Love and War: From the Eight Anthologies எனச் சங்க கவிதைகளை மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராமானுஜன் பணியாற்றிய காலத்தில் இவரது முயற்சியின் காரணமாகவே சென்னையில் ரோஜா முத்தையா நூலகம் உருவாக்கப்பட்டது.
Collected Essays of A. K. Ramanujan என்ற இவரது கட்டுரை தொகுப்பு மிக முக்கியமானது.
ஆங்கிலப் பேராசிரியரான ராமானுஜன் தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழக நாட்டுப்புறக் கதைகள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் தொகுத்த A Flowering Tree and Other Oral Tales from India என்ற இந்தியக் கதைகளின் தொகுப்பு வியப்பான நாட்டார் கதைகளைக் கொண்டிருக்கிறது.
ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு கேரளாவிற்கு வேலைக்குப் போய் கொண்டிருந்த சூழலில் மதுரையில் ஒரு வேலை காலியாக உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ராமானுஜன் விண்ணப்பித்திருக்கிறார். மூன்று பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ராமானுஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தெப்பக்குளத்தின் அருகில் இருந்த கல்லூரி வளாகத்தையும் அதன் சிறப்பான நூலகத்தையும், அழகான மரமேஜைகளையும் பற்றி தனது நாட்குறிப்பில் ராமானுஜன் எழுதியிருக்கிறார்
ஏ.கே.ராமானுஜத்திற்கு மதுரையில் உறவினர்கள் இருந்தார்கள். ஆகவே அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார். மதுரையின் வைகை ஆறு குறித்த அவரது ஆங்கிலக் கவிதை பிரபலமானது.
மதுரையின் ருசியான உணவு வகைகளை பற்றியும். மீனாட்சியம்மன் கோவிலின் சிற்பங்கள் மற்றும் ஆயிரம்கால் மண்படம் குறித்தும் வியந்து எழுதியிருக்கிறார். குமாரி கமலாவின் நடனம் பார்த்ததையும் Destination Moon என்ற ஆங்கிலப் படம் பார்த்த நினைவினையும் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்
மதுரை ரயில் நிலையத்தின் பெருங்கூட்டத்தையும், காந்திகிராமத்தின் அழகான சூழலையும். அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற ஆங்கில உரையினையும், குறித்தும் எழுதியிருக்கிறார்.
ராமானுஜன் சுட்டிக்காட்டும் மதுரைக்காட்சிகள் அவரது கவிதைகளைப் போலவே காட்சிப்படிமங்களாக உள்ளன.
மைசூரில் வசித்த தமிழ்குடும்பத்தில் பிறந்தவர் ராமானுஜன். அப்பா கணித பேராசிரியர். வைதீகமான குடும்பமது. 1959 ஆம் ஆண்டில், ராமானுஜன் Fulbright fellowship பெற்று அமெரிக்கா சென்று , இந்தியானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கே மொழியியலில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். 1962 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்து பின்பு 1968 இல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், மாடிசன் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ராமானுஜன் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்
தமிழின் சங்க இலக்கியங்களை மட்டுமின்றிக் கன்னட இலக்கியங்களையும் இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். குறிப்பாக இவர் யு ஆர் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராவை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தது மிகுந்த பாராட்டினைப் பெற்றது.
AK Ramanujan – Journeys/A Poet’s Diary நூலை ராமானுஜன் குறித்துத் தொடர் ஆய்வுகள் செய்து வரும் ரோட்ரிக்ஸ் தொகுத்திருக்கிறார். இப் பணியில் துணையிருந்தவர் ராமானுஜத்தின் மகன் கிருஷ்ணா ராமானுஜன்.. ராமானுஜத்தின் மறைவிற்குப் பிறகு அவரது நாட்குறிப்புகள். மொழிபெயர்ப்புகள். எழுதி வெளியிடப்படாத பிரதிகள் யாவும் சிகாகோ பல்கலைக்கழகத்தால் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதிலிருந்த நாட்குறிப்புகள், கடிதங்கள். ஆவணங்களைக் கொண்டே இந்த நூலை ரோட்ரிக்ஸ் தொகுத்திருக்கிறார்.
இப்புத்தகத்தில் எனக்குப் பிடித்தமான பகுதி ராமானுஜத்தின் கப்பற்பயணம்.
1959ம் ஆண்டு அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ராமானுஜன் மும்பையிலிருந்து நியூயார்க் வரை கப்பலில் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவம் குறித்தும் பயணவழியில் பாரீஸில் அவர் கண்ட ம்யூசியம் மற்றும் கலைகள் குறித்தும் சிறப்பாக எழுதியிருக்கிறார்..
ஒரு அத்தியாயத்தில் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொண்டு அது தரும் அனுபவத்தைக் கவிதையாக எழுத வேண்டும் என ராமானுஜன் முயன்றதை விரிவாக எழுதியிருக்கிறார். புலன்களை போதை எப்படிச் சீர்குலைக்கிறது. மாயத்தோற்றங்களை எவ்வாறு உருவாக்குகிறது. உடலும் மனதும் எப்படிப் பித்தேறிய நிலையை அடைகிறது என்பதை மிகத்துல்லியமாக ராமானுஜன் விவரிக்கிறார்.
ராமானுஜத்தின் குடும்ப வாழ்க்கை, மனைவியோடு ஏற்பட்ட சண்டை, பிரிவு. நோயுற்ற வாழ்க்கை. மறுபடியும் மனைவியோடு ஒன்றாவது என அவரது அகவுலகினையும் இக் குறிப்புகளின் வழியே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
வேலை தேடிய நாட்களில் அவருக்கு இருந்த மனக்குழப்பத்தையும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் வாசிக்கும் போது எல்லாக் காலத்திலும் இளைஞர்களின் மனநிலை ஒன்று போலவே இருப்பதை உணரமுடிகிறது.
மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதால் பொருளாதார வாழ்க்கை குறித்த கவலைகள் அதிகம் அவருக்குள் இருந்திருக்கின்றன. மகிழ்ச்சியான குடும்பத்தை தன்னால் உருவாக்க முடியாது என்ற தாழ்வுணர்ச்சி கொண்டவராக இருந்திருக்கிறார். நல்ல சம்பளம், வேலை வீடு என சகல வசதிகளும் கிடைத்தபோதும் இந்த வாழ்க்கை தனக்கானதில்லை. இவைவாழ்க்கையின் வெளிப்பூச்சுகள் என ராமானுஜன் கருதியிருக்கிறார். வெளிப்படுத்த முடியாத கவலைகள், குழப்பங்கள், துயரம் கொண்டதாகவே அவரது வாழ்க்கை இருந்திருக்கிறது என்பதை இக்குறிப்புகள் அடையாளப்படுத்துகின்றன.
தனது நாட்குறிப்புகளை ஏன் எழுதினேன் என்பதற்கு ராமானுஜன் சொல்லும் காரணம், நான் என்ன நினைக்கிறேன், என்ன உணர்கிறேன், எவ்வாறு நடந்து கொள்கிறேன் என்று சுயமதிப்பீடு கொள்வதற்காகவே இந்த நாட்குறிப்புகளை எழுதுகிறேன். இவை ரகசியங்கள் என்றாலும் மறைத்து ஒளிக்க வேண்டிய விஷயங்களில்லை.
ஒரு கவிஞனின் ஆளுமை எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள இக்குறிப்புகள் பயன்படுகின்றன என்பதே இந்த நூலின் சிறப்பு
••