கவிஞனும் கவிதையும் 2 இரண்டு புகார்கள்

ஐம்பது ஆண்டுகளில் எழுதப்பட்ட ஸ்பானியக் கவிதைகள் தொகுப்பில் ஏஞ்சல் கோன்சலஸின் (Ángel González) கவிதை ஒன்றை வாசித்தேன். கரப்பான்பூச்சி பற்றிய வியப்பூட்டும் கவிதையது.

என் வீட்டிலுள்ள கரப்பான் பூச்சிகள் புகார் செய்கின்றன

நான் இரவில் படிப்பதால் ஏற்படும் வெளிச்சம்

மறைவிடங்களை விட்டு அவர்களை வெளியேற தூண்டுவதில்லை.

அறையைச் சுற்றிவரும் வாய்ப்பை இழக்கிறார்கள்

என அக்கவிதை நீள்கிறது. அதில் கரப்பான்பூச்சி இந்தத் தொந்தரவு குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் உண்மையில் இந்தக் கரப்பான்பூச்சிகள் எந்தத் தேசத்தில் வாழ்கின்றன. இவை செய்தித்தாள்களைப் படிப்பதில்லை என்றும் கவிதை நீள்கிறது.

நம் வீடென்பது நம்முடைய வீடு மட்டுமில்லை. அதில் சில கரப்பான்பூச்சிகள். நூற்றுக்கணக்கான எறும்புகள். ஒன்றிரண்டு எலிகள் பல்லிகள். பத்து பதினைந்து ஈக்கள். எண்ணிக்கையற்ற கொசுக்களுக்கும் அது வீடாக இருக்கிறது. நம் வீட்டுக்கரப்பான்பூச்சிகள் நமது நடமாட்டத்தால் தொந்தரவு அடைகின்றன என்பது உண்மையே.

கவிதை கரப்பான்பூச்சியைப் பற்றியதாகத் தோன்றினாலும் அது நம் உலகம் எது என்பதைப் பற்றியதாகவே நீளுகிறது. நம் உலகம் என்பது நாம் மட்டுமே வாழும் உலகில்லை. கரப்பான்பூச்சிகள் புத்தகம் படிப்பவரைப் பற்றி ஜனாதிபதியிடம் புகார் செய்ய இருக்கின்றன என்ற வரியில் கரப்பான்பூச்சி குறியீடாகிவிடுகிறது. உண்மையில் புத்தகம் படிக்கும் மனிதர் பற்றிய யாரோ புகார் சொல்லிக் கொண்டே தானிருக்கிறார்கள். வெளிச்சம் இக்கவிதையில் தொந்தரவு தருவதாக மாறியிருக்கிறது. இருளுக்குள் நடமாட விரும்புகிறவர்களுக்கு வெளிச்சம் தொந்தரவாகத் தானே இருக்கும்.

கரப்பான்பூச்சிகள் செய்திதாட்களைப் படிப்பதில்லை என்ற வரியின் மூலம் அவை நாட்டுநடப்பு அறியாத ஜீவிகள் என்று புரிகிறது. கவிதைசொல்லி சில வேளைகளில் தான் கரப்பான்பூச்சிகளை விரும்புவதாகவும் அதற்குக் காரணம் தெளிவாக அறியமுடியவில்லை என்றும் சொல்கிறார். நமது அன்றாடத்தில் இப்படி இரண்டு தளங்கள் மட்டுமில்லை. ஆறேழு தளங்கள் இயங்குகின்றன. கரப்பான்பூச்சிகள் என்றாலே என் மனதில் பதற்றம் மற்றும் அவசரம் என்றே பதிவாகியிருக்கிறது. நிதானமான கரப்பான்பூச்சியைக் காண முடியாது. தனது மீசையால் ஒரு பயனும் கிடையாது என்றபோதும் கரப்பான்பூச்சிகள் நீளமான மீசையைக் கொண்டிருக்கின்றன. அதைக் காணும் போது மனதில் ஓவியர் டாலியின் நினைவு வந்து போகிறது

ஏஞ்சல் கோன்சலஸின் கவிதைகள் இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளைப் புரட்டிப் போடுகின்றன. அவற்றைக் கேலியோடு எதிர்கொள்கின்றன. தனது அடையாளம் குறித்த கேள்வியைப் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பொருட்களின் மீது எதிரொலித்து விடைதேடுகின்றன. ஸ்பானிய கவிதையின் தனிக்குரலாக இவரது கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.

இறந்தவர்களைப் பற்றிய புகாராக நீளும் அவரது இன்னொரு கவிதை மிக அழகானது. அதில்

இறந்தவர்கள் சுயநலமானவர்கள்:

அவர்கள் நம்மை அழவைக்கிறார்கள்.

அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை,

என்ற வரிகள் மரணத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த இறுக்கத்தைக் கலைத்துப் போடுகிறது. நம்மை அறியாமல் நகைக்க வைக்கிறது. அதே நேரம் இறந்து போனவர்களின் பிடிவாதத்தை அழகாக வெளிப்படுத்துகிறது

நாம் அவர்களைக் குழந்தைகள் போலச் சுமக்க வேண்டும்

கல்லறைக்கு

என்ற வரியில் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள வாஞ்சை வெளிப்படுகிறது. உண்மையில் இறந்தவர்களை நாம் தான் குளிக்க வைக்க வேண்டும். உடை மாற்றிவிட வேண்டும். தூக்கிச் சுமக்க வேண்டும். அவர்கள் குழந்தை போலத் தான் நடந்து கொள்கிறார்கள்.

அவர்களின் முகங்களில்

நம்மைக் குற்றம் சாட்டுவது

அல்லது எச்சரிப்பது போல

வழக்கத்திற்கு மாறான விறைப்பு

என்ற வரிகளின் வழியே அவர்கள் எதையோ நமக்கு உணர்த்த விரும்புவது புலப்படுகிறது. இறந்தவரின் முகம் எதையோ பறிகொடுத்தது போலாகிவிடுவது எதனால்.

இறந்தவர்களைப் பற்றிய மோசமான விஷயம்

நீங்கள் அவர்களைக் கொல்ல எந்த வழியும் கிடையாது

என்ற வரி தருவது வெறும் அபத்தம் மட்டுமில்லை. இறந்தவர்களில் சிலர் காலத்தால் மன்னிக்கப்படாதவர்கள். அவர்கள் மரணத்தின் வழியே தப்பித்துக் கொண்டுவிடுகிறார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை

அவர்கள் உணரவேயில்லை.

என்பதன் மூலம் கவிஞர் சாவு குறித்து நமக்குள் இருந்த பயத்தைக் கலைத்துவிடுகிறார். மரணம் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தும் இக்கவிதை வாழ்வு எப்படிப்பட்டது என்பதன் வரைபடத்தையே உருவாக்குகிறது.

ஏஞ்சல் கோன்சலஸ் மிக முக்கியமான ஸ்பானிய கவிஞர். சிறந்த இசை விமர்சகர். வழக்கறிஞராகப் பணியாற்றியவர். ஏழு தொகுதிகளாக இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. தனது 82 வது வயதில் உடல்நலக்குறைவால் ஏஞ்சல் கோன்சாலஸ் இறந்தார்.

இரண்டு கவிதைகளும் நாம் அறிந்த காட்சிகளை நிகழ்வுகளை அறியாத விதத்தில் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகக் கவிதையின் குரல் மற்றும் வெளிப்படுத்து விதம் அபாரமாக உள்ளது. மேஜிக் செய்பவன் தனது கையில் சீட்டுக்கட்டினை வைத்து மாயவிளையாட்டுக்காட்டுவது போலச் சொற்களின் வழியே பரவசத்தை ஏற்படுத்துகிறார் ஏஞ்சல் கோன்சலஸ்

0Shares
0