கவிதையின் இடம்.

The Ecco Anthology of International Poetry என்ற பன்னாட்டுக் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். இந்தியக்கவிதைகள் இதில் குறைவு. தமிழ்க் கவிதைகள் இல்லவே இல்லை. பெரும்பான்மை உலகக் கவிதைத் தொகுப்புகளிலும் இதே நிலை தான். காரணம் இதன் தொகுப்பாசிரியருக்கு இந்தியக் கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது. மேலும் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதும் குறைவு என்பதால் நவீன தமிழ்க் கவிதையின் மகத்தான பங்களிப்பு இன்றும் உலகின் கவனத்தைப் பெறவேயில்லை.

Antonio Machado, Osip Mandelstam, Vladimir Mayakovsky, Czeslaw Milosz, Eugenio Montale, Nicanor Parra, Cesare Pavese, Octavio Paz , Fernando Pessoa , Vasko Popa Adam Zagajewski Jorge Luis Borges , Bertolt Brecht , Andre Breton , Joseph Brodsky , Cabral de Melo Neto, Ernesto Cardenal, Constantine P. Cavafy, Paul Celan , Aime Cesaire Rene Char Ruben Dario Faiz Ahmed Faiz, Federico Garcia Lorca, Zbigniew Herbert, Jacques Prevert Vladimir Holan, Miroslav Holub, Ko Un,Tomas Transtromer, Marina Tsvetaeva, Paul Valery, Cesar Vallejo, Wis1awa Szymborska போன்ற கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட 600 பக்கங்கள் உள்ள இந்தத் தொகுப்பின் வழியே உலகின் முக்கியக் கவிஞர்கள் பலரையும் அறிந்து கொள்ளமுடிவதோடு இன்றைய கவிதை எதை முன்வைக்கிறது. அதன் மொழி மற்றும் வடிவம் எப்படி இருக்கிறது. இக்கவிதைகளின் தனித்துவமாக எதைக்குறிப்பிட முடியும் என்பதை அறிய முடிகிறது.

கவிதைத்தொகுப்பினை எடிட் செய்வது எளிதான வேலையில்லை. அதற்குத் தீவிரமான கவிதை வாசிப்பும் தனித்துவமிக்கப் பார்வைகளும் வேண்டும். இலியா காமின்ஸ்கி Words Without Borders இதழின் கவிதை ஆசிரியர். ஆனால் தேர்ந்த வாசகரில்லை. அவரது கவிதை ரசனை எளிய வாசிப்பு அனுபவத்திற்கு உட்படுவதாகவே இருக்கிறது.

A Book of Luminous Things: An International Anthology of Poetry / Czeslaw Milosz என்ற தொகுப்பினை நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலாஸ் உருவாக்கியிருக்கிறார். அது தான் உண்மையான கவிதைத்தேர்வு. மிக முக்கியமான தொகைநூல். அதில் அவர் கவிதைகளை வகைப்படுத்தியுள்ள விதமும் தேர்வு செய்த விதம் பற்றி எழுதியும் முக்கியமானது.

இலியா காமின்ஸ்கியின் இந்த தொகுப்பு Words Without Borders இணைய இதழில் வெளியான பல்வேறு கவிதைகளைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இதில் மிகச்சிறந்த கவிதைகளின் எண்ணிக்கை குறைவே.

இந்தத் தொகுப்பினை வாசிக்கும் போது கவிதையின் பாடுபொருட்கள் காலந்தோறும் மாறிக் கொண்டேயிருப்பதைக் காண முடிகிறது.

அனுபவங்களைக் கையாளும் போது கவிதை பெரும்பாலும் அதன் சாரத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. உரைநடையைப் போல அனுபவ வெளியினையும் அனுபவம் நிகழும் மனிதர்களையும் துல்லியமாகச் சித்தரிக்க முற்படுவதில்லை. அது போலவே அனுபவத்தை நிகழ்காலத்தில் பதியச்செய்யவே கதை முனைகிறது. ஆனால் கவிதை ஒரு அனுபவத்தினைக் காலமற்ற வெளியில் பொருத்தி என்றைக்குமான அனுபவமாக உருமாற்ற முனைகிறது இன்று அந்த வேறுபாடுகள். சித்தரிப்புகள் மாறிவருவதைக் காணமுடிகிறது

உலகெங்கும் இன்று கவிதை கதை சொல்லுதலை நோக்கி நகர்ந்துள்ளது. நேரடி உரையாடலைப் போலவே கவிதை எழுதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையினைக் கவிதை அப்படியே பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது. இதைப் பலம் என்பதா இல்லை பலவீனம் என்பதா எனத்தெரியவில்லை.

சிக்கலான படிமங்கள். விநோதமான உருவகங்களிலிருந்து விடுபட்டு நேரடியான, எளிமையான, நவீன தொழிற்நுட்ப சாதனங்களின் தாக்கம் கொண்ட பிம்பங்களை, உவமைகளை மட்டுமே கவிதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக ஒரு உடனடித்தன்மை கிடைக்கிறது. ஆனால் உடனடித்தன்மை கவிதைக்கான தில்லை என்ற மரபான எண்ணம் கைவிடப்பட வேண்டியது தானா என்ற கேள்வி எழுகிறது.

கவிதை மரபானது மூன்று முக்கியப் புள்ளிகளைக் கொண்டது. அதாவது mysticism, Love and eroticism சார்ந்தே உலகெங்கும் கவிதைகள் பிரதானமாக எழுதப்பட்டன.. ரொமாண்டிக் கவிஞர்களின் வருகைக்குப் பிறகு காமத்தின் இடத்தில் இயற்கையை வியத்தல் வைக்கப்பட்டது. ஆகவே தான் வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகளில் காமம் இடம்பெறவேயில்லை. அவர் சிரிப்பையும் காமத்தையும் கவிதையிலிருந்து வெளியேற்றிவிட்டார். அந்த இடத்தில் இயற்கையின் பிரம்மாண்டத்தை. இயற்கையை ஆழ்ந்து அவதானிப்பதை முன்வைத்தார். அது புதிய வகைக் கவிதைப் போக்காக உருமாறியது. ஆனால் இன்று கவிதை இயற்கையின் இடத்தில் உடலைக் கொண்டாடுவதை முன்வைத்திருப்பதைக் காண முடிகிறது. சர்வதேச கவிதைத் தொகுப்பில் நான்கில் ஒரு பகுதி பாலுணர்வு சார்ந்த எழுதப்படுகின்றவையே.

சமூகப்பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்படும் கவிதைகளில் கவிஞன் அதை எப்படி உள்வாங்கியிருக்கிறான்.எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பது முக்கியமானது. அதுவும் காட்சி ஊடகங்களின் வருகைக்குப் பிறகு ஒரு சமூகப்பிரச்சனையை கவிஞன் கையாளுவதற்கு தனியான எத்தனிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் கவிதைக்கும் முழக்கத்திற்குமான வேறுபாடு முக்கியமானது. ஒரு செய்தியை எதிர்கொள்வது போலக் கவிதையை எதிர்கொள்ள முடியாது. கூடாது. கவிதை மொழியில் நிகழ்த்தப்பட்ட உயர்அனுபவம். அது பல அடுக்குகளை கொண்டது. செய்தியைப் போல குறிப்பிட்ட காலத்தோடு அது இணைக்கபட்டதில்லை. முடிந்து போவதில்லை.

பாஷா, ரியோகான், டூபூ, லி பெய். இஷா போன்ற ஜப்பானிய, சீனக் கவிஞர்கள் இன்று மிக அதிகம் வாசிக்கப்படுகிறார்கள். அவர்களின் கவிதை கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர்கள் கவிதை முன்வைத்த இயற்கையின் நுண்மைகள். ஆழ்ந்த மௌனம். செயலற்ற தன்மையின் தன்னியல்பு, இயற்கையோடு ஒன்று கலத்தல் போன்றவற்றை இன்றைய கவிதைகளில் காணமுடிவதில்லை.

மெய்தேடல் கொண்ட கவிதைகளையோ, தத்துவ வெளிப்பாடு கொண்ட கவிதைகளையோ ஏன் இன்றைய கவிஞன் அல்லது வாசகன் தேவையற்றதாகக் கருதுகிறான். அனுபவத்தின் ஆழ்நிலைகளை, தோற்றத்தைத் தாண்டி ஒன்றைப் புரிந்து கொள்வதில் ஏன் அக்கறையில்லாமல் போனது. தத்துவம் எழுப்பிய கேள்விகள். தேடல்கள். கவிதையின் வழியே புதிய நிலையை அடைந்தன என்பதே நிஜம். இன்றைய கவிஞன் தன்னை மெய் தேடல் கொண்டவனாகக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

இன்றைய ஐரோப்பியக் கவிதைகளில் புத்தரும் புத்தரின் போதனைகளும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்தப் புத்தர் மேற்குலகம் அறிந்து கொண்ட புத்தர். நம்மால் அந்தப் புத்த பிம்பத்தை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு poetic universe உண்டு. அவன் அந்த உலகினை தானே உருவாக்கி அதற்குள்ளாகவே சஞ்சரித்துக் கொண்டிருப்பான். தேவதச்சனின் கவிதைகளிலிருந்து அவரது பெயரை எடுத்துவிட்டாலும் அது தேவதச்சன் கவிதை தான் என்பதைக் கவிதை வாசகன் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவான். அது போன்றதே இந்தக் கவிதைப்பிரபஞ்சம். இதில் அவன் தனது சமகால வாழ்க்கையை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக, வரலாற்றை. மறுக்கப்பட்ட நீதியை, சமூக அவலங்களை, தூய கற்பனையை எனப் பல்வேறு கட்டுமானங்களை உருவாக்குகிறான்.

உரைநடை ஆசிரியனை அவனது பால்யகாலமே வழிநடத்துகிறது. ஆனால் கவிஞனை வழிநடத்துவது அவனது இளமைப்பருவம். பெரும்பான்மை கவிஞர்கள் தனது இளமைக்கால அனுபவத்தின் வெளிப்பாடுகளை, நினைவுகளைத் தான் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மொழிக்குள் வராத அனுபவங்களை மொழி வசப்படுத்த முயலுவது கவிதையின் சவால். அதை நவீன கவிதையின் சிறந்த கவிஞர்கள் பலர் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்று அது போன்ற முயற்சிகள் குறைவே. யஹுதா அமிகாய் கவிதைகளில் பெரும்பான்மை பிரத்தியேக அனுபவங்களின் கவிதையாக்கமே .நவீன கவிதை சம்பிரதாயமான அர்த்தம் கொள்வதிலிருந்து விடுபட்டு புதிய புரிதலை யாசிப்பதாக இருந்தது. இன்றைய கவிதைகளை வாசிக்கும் போது மீண்டும் அது சம்பிரதாயமான நேரடி வாசிப்பினை நோக்கி நகர்ந்து வருவதாகவே உள்ளது

To kiss a forehead is to erase memory. என்ற மரினா ஸ்வெட்டேவாவின் வரியைப் போல அசலான கவிதைகளைத் தேடுகின்றவன் நான். இந்தத் தொகுப்பில் எனக்கு இருபதுக்கும் குறைவான கவிதைகளே மிக நெருக்கமாக இருந்தன.

I took poetry from everything ஜோர்ஜ் டி லிமாவின் கவிதை ஒன்று துவங்குகிறது. இப்படி எதைத் தீண்டினாலும் கவிதை அதன் நிறத்தை, வடிவை, உருமாற்றிவிடக்கூடியது. நினைவு கொள்வதற்காக பொருட்களுக்கு பெயரிடுகிறார்கள். அதே சொற்களைக் கொண்டு அந்த வழக்கமான அர்த்தத்தை மாற்றி புதிய அர்த்தங்களை கவிதை உருவாக்க முனைகிறது. ஒருவகையில் அது ரசவாதம்.

நவீன கவிதை என்ற சுதந்திரமான கவிதை வடிவம் உருவான போது அது முன்னெடுத்த விஷயங்களுக்கும் இன்றைய கவிதைகளுக்குமான இடைவெளியை, மாற்றங்களை, வளர்ச்சியை, பின்னடவைக் காணும் போது வியப்பாகவே இருக்கிறது.

காலத்தின் பின்னோக்கிப் போகப்போகச் சிறந்த கவிதைகளைக் கண்டறிய முடியும் என்பதே எனது வாசிப்பில் நான் கண்ட உண்மை. இந்தத் தொகுப்பிலும் அது போல ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகளே இன்றைய வாழ்க்கையைப் பேசுவதாக எனக்குப்படுகிறது.

0Shares
0